அன்று ஞாயிற்றுக்கிழமை. பூஜையை முடித்துவிட்டு ஹாலுக்குள் பிரவேசித்த ராகவனை, அவனது மொபைல் ஃபோன் தனது இனிய சங்கீதத்தால் அழைத்தது. ஃபோனைக் கையில் எடுத்து டிஸ்ப்ளேயில் யார் என்று பார்த்தான் "அம்மா காலிங்" என்று கண்களைச் சிமிட்டியது அந்தக் குட்டிமொபைல். அழைப்பை நிராகரித்துவிட்டு செய்தித்தாளில் மூழ்கினான்.
"என்னங்க... யாரோட ஃபோன்?" சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த மனைவி மாலதி கேட்டாள்.
"இதென்ன கேள்வி. அது என்னோட ஃபோன்தான்" சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் ராகவன்.
"ஐயோ! நான் கேட்டதோட அர்த்தம் யார் கூப்பிட்டாங்கன்னு?"
"வேறே யாரு, உன்னோட மாமியார்தான்."
பேசிக் கொண்டிருக்கும் போதே இரண்டாவது முறையாக ஃபோன் அலறியது. மாவுக்கையுடன் ஃபோனை நோக்கி ஓடிவந்தாள் மாலதி.
"மாலு, அந்த ஃபோனை அட்டெண்ட் பண்ணாதே..." சொல்லச் சொல்ல மாலதி ஃபோனை எடுத்துக் காதில் வைத்தாள்.
"அத்தே... நல்லா இருக்கீங்களா? உங்க கண்புரை இப்போ எப்படியிருக்கு? ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டிருந்தீங்களே, ஜானகியும், குழந்தைகளும் நல்லா இருக்காங்களா?"
ராகவன் இடையில் கிசுகிசுத்தான், "மாலு. அம்மா கேட்டா நான் வெளியே போயிட்டேன்னு சொல்லு." மாலதி ராகவனை முறைத்துக்கொண்டே அத்தையிடம் பேசினாள். "சொல்லுங்க அத்தே. அவரா..."
"இல்லைன்னு சொல்லு..." ராகவன் கையால் சமிக்ஞை காட்டினான். "இருக்கார் அத்தே... இப்பத்தான் பூஜையை முடிச்சு வெளியேவந்தார். நேத்தே சொல்லிட்டிருந்தார். உங்ககிட்டே பேசி ரொம்ப நாளாச்சு, இன்னைக்கு கூப்பிடலாம்னு சொல்லிட்டிருந்தார். அதுக்குள்ளே நீங்களே கூப்பிட்டுட்டீங்க. இருங்க அத்தே. குடுக்கறேன்."
மாலதியை முறைத்துக்கொண்டே ராகவன் மொபைலை காதில் சொருகினான். "அம்மா, நல்லா இருக்கீங்களா? உங்களை வந்து பார்க்கறதுக்கு நேரமே கிடைக்கறதில்லேம்மா. ஆஃபிஸில் ரொம்ப வேலை ஜாஸ்திம்மா. உங்களைப் பார்க்காம என்னமோபோல இருக்கும்மா. உங்களுக்கு அசௌகரியம் ஒண்ணும் இல்லையே?"
"இல்லை ராஜா. வயசான காலத்தில வர்ற சின்ன சின்னப் பிரச்சனைதான். எனக்கு உன்னைப் பார்க்காமத்தான் என்னமோபோல இருக்கு. கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடுச்சு நீ இங்க வந்திட்டுப் போயி. ஒரு எட்டு வந்திட்டுப் போடா ராஜா..."
"இல்லைம்மா. நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நாளைக்கு நான் அங்கே வர்றதாத்தான் இருந்தேன். என்ன ஆனாலும் சரி நாளைக்கு நான் கண்டிப்பா வரேம்மா..."
ஃபோனை வைத்த ராகவன் சமையலறையில் இருந்தே மாலதியைக் கூப்பிட்டான். "மாலு..."
"இதோ வந்திட்டேங்க..."
அருகில் வந்த அவளை முறைத்தான். "நான் உங்கிட்டே ஃபோனை அட்டென்ட் பண்ண வேண்டாம்னு சொன்னேனோ இல்லையோ? அதையும் மீறி எடுத்தே. அதுக்கப்புறமும் 'நான் இல்லைன்னு’ சொல்லச்சொன்னேன். ஆனா நீ என்னோட வார்த்தைக்கு எதிராத்தான் எல்லாமே செஞ்சிட்டு வர்றே. இது உனக்கே நல்லாயிருக்கா?"
"ஏங்க... நீங்க ஒரு குடும்பத் தலைவர். நீங்களே இப்படி பொறுப்பில்லாமல் ரெட்டைவேஷம் போடலாமா?"
"என்ன சொல்லறே மாலு, நான் ரெட்டைவேஷம் போடறேனா?"
"பின்னே இல்லாம. பெத்த தாயைப் போயி பார்க்கிறது கிடையாது, அவங்க ஃபோன் பண்ணினா அட்டென்ட் பண்றது கிடையாது. தப்பித்தவறி இந்த மாதிரி சூழ்நிலை வந்து அட்டெண்ட் பண்ணினா, அப்பமட்டும் நாக்கில சர்க்கரையை வெச்சிட்டுப் பேசறது. இதுக்குப் பேர் என்னங்க? நீங்க செய்யறது உங்க மனச்சாட்சிக்கு விரோதமா தெரியலையா?"
"மாலு. அவங்களைப்பத்தி நீ சரியா புரிஞ்சுக்கலை. எல்லா மாசமும் ஏழாந்தேதி ஆச்சுன்னா டாண்ணு அம்மாகிட்டேயிருந்து ஃபோன் வந்திடும். ஏன்னா என்னோட சம்பளம் அஞ்சாம் தேதிங்கிறது அவங்களுக்கு நல்லாவே தெரியும். இந்த நேரத்தில கூப்பிட்டாத்தான் என்கிட்டேயிருந்து ஏதாவது கிடைக்கும்னு கரெக்டா ப்ளான் பண்ணித்தான் கூப்பிடுவாங்க "அந்தக் கிழவிக்கு சரியான பணத்தாசை. மகன்கிட்டேயிருந்து முடிஞ்ச அளவுக்குக் கறக்கணும். அதை அப்படியே மகளுக்கு தாரை வார்க்கணும். நான் ஒருத்தன் ஏமாளி கிடைச்சேன் பாரு."
பேசிக்கொண்டிருந்த ராகவனையே கண் இமைக்காமல் பார்த்தாள் மாலதி "என்ன அப்படிப் பார்க்கறே?"
"இல்லே நீங்க தானா இப்படிப் பேசறது? குழந்தைகளுக்கு உபதேசம் குடுக்கும்போது கூட, 'அம்மா பேச்சை மீறக்கூடாது, அம்மா என்ன சொன்னாலும் கேட்கணும்’னு உபதேசிக்கற நீங்க? எப்படீங்க இப்படி மாறிப் போறீங்க? உங்களைக் கூப்பிட்டது பக்கத்துவீட்டுக் காரங்களோ, இல்லே நம்ம தூரத்து உறவினர்களோ இல்லைங்க. உங்களைப் பெத்த அம்மா. அவங்களுக்குத் தேவையானதை, ஒரே மகனான நீங்க செய்யாம வேறே யார் செய்வாங்க? என்னதான் பூஜை புனஸ்காரம் பண்ணினாலும் பெத்த அம்மாவை கண்கலங்க வெச்சா நீங்க செய்யற பூஜை, தர்மம் இதெல்லாம், கடவுளுக்கு ஒரு தூசு மாதிரி. தெய்வ திருப்திக்கு ஆளாக மாட்டீங்க, தெய்வ குத்தத்துக்குதான் ஆளாவீங்க. அந்தப் பாவம் நமக்கு வேண்டாங்க."
"மாலு நீ இப்பவும் வெகுளியா இருக்கே. கொஞ்சம் சுயநலமா யோசிச்சுப் பாரு. நம்ம குழந்தையோட ஸ்கூல் அட்மிஷன் நேரத்தில் பணம் இல்லாம அவதிப்பட்டு எங்க கேட்டும் பணம் கிடைக்காம, வேறே வழியில்லாம கடைசியா உன்கிட்டே இருந்த ஒரேயொரு தாலிச் செயினைக் கொண்டு போயி சேட் கடையில் அடமானம் வெச்சு அட்மிஷன் ஃபீஸைக் கட்டினோம். கொஞ்சம் யோசிச்சுப் பாரு? என்னோட தங்கச்சி ஜானகி விதவிதமான டிசைன்ல நகை வெச்சிருக்கா. பணத்துக்கும் தட்டுப்பாடு இல்லை. 'அண்ணி, நீங்க மூளிக்கழுத்தா இருக்கிறது எனக்குப் பிடிக்கலை. இந்தச் செயினைப் போட்டுக்குங்க. சௌகரியம்போல திருப்பிக்குடுங்க’ன்னு சொல்லத் தோணிச்சா? சரி அதை விடு. நீ கொஞ்சம் முன்னால சொன்னியே. மூணாவது மனுஷரல்ல, பெத்த அம்மா, கடமை, அப்படி இப்படின்னு... அதே அம்மாவோட கழுத்திலேயும் ரெண்டு பவுனுல செயின் தொங்குது. அதுவும் நான் செஞ்சு போட்டது. பெத்த மகன் கஷ்டப்படறானே. வயசான காலத்தில எனக்கு எதுக்கு இந்தச் செயின்? அவனோட கஷ்டம் தீரட்டும்னு மனசில தோணிச்சா? மூணுமாசமா நீ ஆஃபீஸுக்கு வெறும் மஞ்சக்கயிறைக் கழுத்தில போட்டுட்டு போகும்போது என்னோட மனசில இருக்கிற வேதனை மத்தவங்களுக்கெல்லாம் புரியாது மாலு. ஒண்ணு புரிஞ்சுக்கோ. இந்த உலகத்தில ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு வாழற புருஷன், பெண்டாட்டியைத் தவிற மத்த எல்லாருமே சுயநலவாதிகள்தான். ஏன் நம்மளோட மகன் உட்பட. இந்த கஷ்டத்து கூட இனியோரு இடி. வீட்டு ஓனர் இந்த மாசத்திலிருந்து வாடகையை 500 ரூபாய் ஏத்திட்டார். மூவாயிரம் வாடகை குடுக்கறதுக்கே ததிகிணத்தோம் போடறோம். இப்ப ஐநூறு சேர்த்து அழவேண்டிய கட்டாயம்..."
"ஏங்க நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்கக் கூடாது... எங்க ஆஃபீஸ் பக்கத்தில இருக்கிற ஆடிட்டருக்கு அக்கவுண்டஸ்ல என்ட்ரி போடறதுக்கு பார்ட் டைமா ஒரு ஆள் வேணும்னு கேட்டிருந்தார். ஆஃபீஸ் டைம் முடிஞ்சு சாயந்திரம் 6 மணியிலிருந்து 8 மணி வரைதான் வேலை. நான் வேணும்னா அப்படியே பார்ட் டைம் வேலை பாக்கட்டுங்களா? மாசம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் கிடைக்கும்."
"வேண்டாம்மா. நீ இப்ப படற கஷ்டமே போதும். இதுக்குமேலே நான் உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது. நம்ம தரித்திரம் என்னைக்குமே தீராது. ஏன்னா என்னோட ஜாதகம் அப்படி." அவன் கண்களில் கண்ணீர் துளிகள் உருண்டோடின. மாலதி பதறினாள்.
"ஐயய்யோ என்னங்க நீங்க. சின்னச் சின்ன விஷயத்துக்கு இப்படி உடைஞ்சு போறீங்க? குடும்ப வாழ்க்கைன்னாலே சுகம், துக்கம், லாபம், நஷ்டம், கஷ்டம் இப்படி எல்லாம் வரத்தாங்க செய்யும். சுகமான வாழ்க்கை வாழும்போது, அதை சந்தோஷமா அனுபவிச்சுட்டு, கஷ்டம் வரும்போது மட்டும் அழறது, வாழ்க்கையை வெறுக்கிறது இதெல்லாம் எந்தவிதத்தில் ஞாயம்? வர்றதை வர்ற இடத்தில் வெச்சு ஃபேஸ் பண்ணுவோம். நீங்க உங்க கடமையை செய்யுங்க. அம்மா பாவம். ஒரேயொரு மகன், தங்கச்சியை விடுங்க, ஆண்மகனா நீங்க ஒருத்தர்தானே, வயசான காலத்தில மகன் காப்பாத்துவான்ங்கற நம்பிக்கைதானே அவங்களுக்கு. அந்த நம்பிக்கையில மண் அள்ளிப் போடலாமா? நாளைக்கு லீவுதானே! நல்ல மகனா போயி அம்மாவைப் பார்த்திட்டு, உங்களால முடிஞ்சதை அவங்களுக்கு செஞ்சுட்டு வாங்க. போகும்போது, இட்லிப் பொடி செஞ்சு வெச்சிருக்கேன், மறக்காம எடுத்திட்டுப் போயி அம்மாவுக்குக் குடுங்க. எனக்கும் வரணும்னு ஆசைதான். ஆனா தேவையில்லாத பஸ் செலவு. வேண்டாம்! இனியொரு நாள் சௌகரியம் போல போயிக்கலாம். நீங்கமட்டும் போயிட்டு சாயந்தரத்துக்குள்ளே வந்திடுங்க." அவன் நெற்றியில் மென்மையாக தன் இதழைப் பதித்தாள் மாலினி.
மாடி ஜன்னல்வழியே குழந்தை ஆதித்யாவுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த ராகவனின் தங்கை ஜானகி, தூரத்தில் ராகவன் நடந்து வருவதைப் பார்த்ததும், "அம்மா. அண்ணன் வர்றாங்க. ஆதிக்குட்டி, மாமா வர்றாங்க, வந்த உடனேயே மாமா மடிமேலே ஏறித் தொந்தரவு பண்ணக்கூடாது. சமத்தா இருக்கணும், என்ன?" என்று செல்லமாக அதட்டி வைத்தாள்.
வேர்த்து விருவிருத்து உள்ளே நுழைந்த ராகவனுக்கு ஃபேனை 5-ல் சுழலவிட்டு, குளிர்ச்சியாக மோர் கொண்டுவந்து கொடுத்தாள் ஜானகி.
"வாடா கண்ணா, வரவர நீ ரொம்ப இளைச்சுப் போறே. உன்னோட உடம்பைப் பார்த்துக்கக் கூட நேரமில்லாம அப்படியென்னடா வேலை உனக்கு? சதா எனக்கு உன்னோட நினைப்புதாண்டா கண்ணா. மருமகளும் பேரக்குழந்தைகளும் சௌக்கியமா ராசா?"
"ஏண்ணா, அண்ணியையும் விஷ்ணுவையும் கூட்டிட்டு வந்திருக்கலாமல்ல. பார்த்து ரொம்ப நாளாச்சுண்ணா."
"ஏன் நீயும் மச்சானுமா அம்மாவைக் கூட்டிட்டு அங்க வரலாமல்ல?"
"எங்கண்ணா, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் லீவு. அந்த நாளிலே வீட்டு வேலைக்கே நேரம் போதறதில்லை."
"அதே நிலமைதான் அவளுக்கும். உனக்காவது வேலைக்குப் போயே ஆகணும்னு அவசியம் இல்லை. மச்சானோட ஒர்க்ஷாப் வருமானமே போதுமானது. ஆனா அவளுக்கு அப்படியில்லை. அவளும் நானும் வேலைக்குப் போனாத்தான் ஒருவேளை கஞ்சியாவது முடங்காம குடிக்கமுடியும்."
"கவலைப்படாதேண்ணா. உங்க நல்ல மனசுக்கு, எல்லாமே நல்லதே நடக்கும். அம்மாகிட்டே பேசிட்டிருங்க. ரெண்டு மூணு துணி இருக்கு. துவைச்சு காயப்போட்டிட்டு வந்திடறேன்." ஜானகி வெளியேறவும், அம்மா எழுந்து அவசர அவசரமாக பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.
வார மலரைப் புரட்டிக் கொண்டிருந்த ராகவனை, அவன் அம்மாவின் "கண்ணா" என்ற குரல் திசைதிருப்பியது.
"என்னம்மா...?"
இந்தா இதை உன்னோட பேண்ட் பாக்கெட்டில் வை. ஜானகிக்குத் தெரியவேண்டாம் சின்ன சுருக்குப்பையை அவன் கையில் திணித்தாள் அம்மா. வாங்கி பேண்ட்பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்ட ராகவன், "என்னம்மா இது? என்ன இருக்கு அதுக்குள்ளே?"
"கண்ணா மாசாமாசம் நீ என்னைப் பார்க்கவரும்போது, என்னோட செலவுக்கு பணம் குடுப்பியே, அதைச் செலவு பண்ணாம சீட்டு போட்டதில இருபதாயிரம் ரூபாய் கிடைச்சது. அவளுக்குத் தெரியாம பத்திரமா எடுத்து வெச்சிருந்தேன். தெரிஞ்சா ஆயிரத்தெட்டு செலவை கண்ணுமுன்னால வெப்பா. பாவம் என்னோட மருமகள் மூளிக்கழுத்தா கிடக்கறா. இந்த பணத்தைக் கொண்டுபோய் அவளோட நகையைத் திருப்பு. என்னோட கழுத்தில கிடக்கிற நகையை கழற்றிக் குடுத்திருப்பேன். ஆனா அந்த நகை என்னோட கழுத்தில இருக்கிறதினாலதாண்டா, இந்த வீட்டில எனக்கு ஒரு மதிப்பு இருக்கு, மூணுவேளை சாப்பாடு கிடைக்குது. நீ எனக்கு செஞ்சுபோட்ட இந்தச் செயின்தாண்டா இந்த அம்மாவுக்கு உயிர்க்கவசம். என்னோட கடைசி காலத்தில் இதை என்னோட மருமகளுக்குத்தான் குடுப்பேன். இப்ப இந்தப் பணத்தை வெச்சுக்கோ. எனக்கு வர்ற விதவை பென்ஷன் பணத்தில வேறொரு சீட்டும் போட்டிருக்கேன். இன்னும் மூணுமாசத்தில் அதுவும் முடிஞ்சிரும். கிடைச்சவுடனே நான் உன்னைக் கூப்பிடறேன். வந்து வாங்கிக்கோ ராசா."
பேசிக் கொண்டேயிருந்த அம்மாவின் புரை விழுந்த கண்களைப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின. திக்கித்திணறி வார்த்தை வராமல் பேசினான், "அ...ம்...மா... உன்னோட கண் ஆ...ப்ரேஷன் செ...ய்யணும்...னு சொன்னியே."
"அது கிடக்கட்டும் கண்ணா. ஒரு கண்ணிலதானே புரை. இன்னொரு கண் நல்லாத்தானே இருக்கு. இதைவிட முக்கியம் உன்னோட பிரச்சனைதான்."
தன்னையும் அறியாமல் தாயின் மடியில் சாய்ந்தான் ராகவன்.
ப்ரியா பாலா, கோவைபுதூர், கோயம்புத்தூர் |