மூத்த ஓவியரும், ஓவியப் பிதாமகராக சக ஓவியர்களால் மதிக்கப்படுபவருமான கோபுலு (91) சென்னையில் காலமானார். கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவங்கி, பத்திரிகை ஓவியர், விளம்பர நிறுவன இயக்குநர் என உயர்ந்த கோபுலு, 1924ல் தஞ்சையில் பிறந்தவர். இயற்பெயர் கோபாலன். தந்தை ஸ்டேஷன் மாஸ்டர். ஓவிய ஆர்வத்தால் பள்ளிப்படிப்புக்குப் பின் தஞ்சை ஓவியக் கல்லூரியில் பயின்றார். ஆனந்தவிகடன் ஓவியர் மாலியின் அறிமுகத்தால் விகடனில் கார்ட்டூனிஸ்டாகச் சேர்ந்தார். கட்டுரை, சிறுகதை, தொடர்கதை, தீபாவளி மலர்கள் என விகடனில் ஆயிரக்கணக்கில் வரைந்தார். 'துப்பறியும் சாம்பு', 'தில்லானா மோகனாம்பாள்' போன்ற தொடர்களுக்கு இவர் வரைந்த ஓவியங்கள், பத்திரிகையின் விற்பனை பெருகக் காரணமாயின. கோபுலுவின் ஓவியங்கள் பிற ஓவியர்களின் பாணியிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. கோட்டோவியத்தில் உச்சபட்ச சாதனை நிகழ்த்தியவர் அவர். எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கோபுலுவின் ஓவியங்கள், சமயத்தில் எழுத்தாளரின் எழுத்தைவிடச் சிறப்பாக அமைந்து அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தன. சாவி, ஜெயகாந்தன், தேவன், கொத்தமங்கலம் சுப்பு, மணியன், துரோணன், கலைஞர் மு. கருணாநிதி எனப் பலரது எழுத்துக்களை தனது தூரிகையால் மேலும் மிளிரச் செய்தார் கோபுலு. குறிப்பாக சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' நாவலுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் மிகச்சிறப்பானவை. நகைச்சுவை உணர்வு கொப்பளிப்பவை. ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கரையில் இருக்கும் சங்கர மண்டபத்துச் சிற்பங்களும், தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கன் ஆலயத்து ஹரி பக்தர்கள் சிற்பங்களும் கோபுலுவின் ஓவிய மாதிரிகளை அடிப்படையாக வைத்து வடிக்கப்பட்டவையே! 'அட்வேவ்' என்ற விளம்பர நிறுவனத்தைத் தொடங்கி அதன்மூலமும் பல சாதனைகளை நிகழ்த்தினார். தமிழக அரசின் 'கலைமாமணி', 'முரசொலி அறக்கட்டளை விருது', காஞ்சிப் பெரியவர் வழங்கிய 'சித்ர ரத்னாகர' உட்படப் பல்வேறு கௌரவங்களையும் பெற்றிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் மனைவியை இழந்த கோபுலு, அண்மையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். ஏப்ரல் 29 அன்று காலமானார். சாதனைச் சிகரத்திற்கு தென்றலின் அஞ்சலி!
(கோபுலு தென்றலுக்கு வழங்கிய நேர்காணலை வாசிக்க: தென்றல், நவம்பர், 2010) |