எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. 1934 ஏப்ரல் 24ம் நாளன்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்புவரையே பயின்றார். வீட்டுச்சூழல் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறிய இவருக்கு இவரது மாமா ஆதரவாக இருந்தார். விழுப்புரத்தில் அவரது கவனிப்பில் வளர்ந்தார். கம்யூனிசக் கொள்கைகளில் மிக்க ஆர்வமுடையவர் அவர். ஜே.கே.வுக்கு பாரதியும், கம்யூனிச சித்தாந்தங்களும் அவர்மூலம் அறிமுகமாயின. அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்தபின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ.யின் ஜனசக்தி அலுவலகத்தில், அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கையை விற்றும் செலவிட்டார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் நட்பு இவரது சிந்தனையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. 1949ம் ஆண்டு சி.பி.ஐ.மீது தடை விதிக்கப்பட்டது. அதனால் ஜெயகாந்தன் சில மாதங்கள் தஞ்சையில் காலணிக்கடை ஒன்றில் பணிபுரிந்தார்.
இந்த எதிர்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையின் முக்கியக் காலகட்டமாக அமைந்தது. மளிகைக்கடைப் பையன், மருத்துவர் உதவியாள், மாவு மெஷினில் டிரைவர் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரையில் சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில் உதவியாளர், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரனிடம் உதவியாளனாக இருந்தது, ப்ரூஃப் ரீடர், பத்திரிகை உதவியாசிரியர் என ஜெயகாந்தனின் மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்கள் அவரது சிந்தனைக்கு வலுவும் வளமும் ஊட்டின. 'சரஸ்வதி', 'தாமரை', 'கிராம ஊழியன்' போன்ற பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகத் துவங்கின.
ஜெயகாந்தன் எழுத்தாளர் பரம்பரையில் வந்தவரோ இலக்கிய உலகில் புகுந்து சாதனை நிகழ்த்த எண்ணிச் செயல்பட்டவரோ அல்ல. அவரது வாழ்க்கை அனுபவங்களும் சிந்தனைகளுமே படைப்புகளாகப் பரிணமித்தன. இலக்கிய இதழ்களில் மட்டுமல்லாமல் வெகுஜன இதழ்களிலும் அவரது எழுத்துக்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அவரது படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்து, திரைப்படம் எனத் தனது களங்களை அவர் விஸ்தரித்துக் கொண்டார். 'பாதை தெரியுது பார்' படத்தின்மூலம் பாடலாசிரியராகத் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். அவரது நாவல்களான 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'உன்னைப்போல் ஒருவன்' போன்றவை திரைப்படமாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் 'உன்னைப்போல் ஒருவன்' நாவலுக்குத் திரைப்பட வடிவம் கொடுத்து மூன்று வாரங்களில் படத்தை இயக்கி வெளியிட்டது அக்காலத்தில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அது தேசிய விருது வென்றது.
'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'கங்கை எங்கே போகிறாள்?', 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'ஜயஜய சங்கர' என்று இயற்றமிழின் பல்வேறு வடிவங்களில் அவர் சாதாரண மனிதர்களின் உலகம் முதல் அறிவுஜீவி வாழ்வின் அழுத்தங்கள்வரை தனது விசாலமான பார்வையை ஓட்டினார். சமுதாய முரண்பாடுகள், சிக்கல்கள், போராட்டங்கள், நகர்ப்புறத் தொழிலாளர் வர்க்கம், சேரி மாந்தர்களின் அவலவாழ்க்கை, தனிமனித பலம், பலவீனம், ஆன்மீக விசாரணை என ஜெயகாந்தனின் படைப்புகள் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டதாக அமைந்தன. அதனாலேயே அவை வெளிவந்த காலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தின.
ஜெயகாந்தனின் படைப்புலகம் வாழ்க்கைமீதான காதலையும் மனிதநேயத்தையும் ஆழ்ந்து பேசுவது. ஜெயகாந்தன் காலம் என்று தனித்துக் குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவரது படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஆணித்தரமாக தமது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டன. ருஷ்யன், பிரெஞ்சு, செக் ஆங்கிலம், ஜெர்மன், உக்ரேனிய மொழிகளிலும், பல இந்திய மொழிகளிலும் அவரது படைப்புக்கள் மொழிபெயர்ப்புக் கண்டன. 'சாகித்ய அகாதமி விருது', சோவியத் நாட்டின் 'நேரு விருது', தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் 'ராஜராஜன் விருது, 'கலைஞர் விருது', 'ஞானபீட விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரைத் தேடிவந்தன. பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் நவீன தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனைக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமைந்தவர் ஜெயகாந்தன் என்பதில் சற்றும் ஐயமில்லை.
சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த ஜெயகாந்தன் சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜே.கே. மறைந்திருக்கலாம். ஆனால் அவரது படைப்புகள் என்றும் உயிர்ப்போடு உலவுபவை. அவற்றில் அவர் வாழ்கிறார். எவர்க்கும் அஞ்சாமையை நெறியாகக்கொண்டு வாழ்ந்த, எழுத்தாளர்களின் எழுத்தாளரான ஜெயகாந்தனுக்குத் தென்றலின் அஞ்சலி! |