நாகூர் ஹனிஃபா
"இசைமுரசு" என்று போற்றப்பட்டவரும், இஸ்லாமிய பக்திப் பாடகருமான நாகூர் ஹனிஃபா (90) சென்னையில் காலமானார். 1925ல் ராமநாதபுரத்தில் பிறந்த ஹனிஃபா மேடைப்பாடகராக வாழ்வைத் துவக்கினார். ஆரம்பக் காலங்களில் திருமண வீடுகளில் கச்சேரிகள் செய்தார். பின்னர் இஸ்லாமிய பக்திப்பாடகராக உயர்ந்தார். இஸ்லாமியப் பாடல்களை உலகமுழுவதும் ஒலிக்கச்செய்தார். அவரது "இறைவனிடம் கையேந்துங்கள்" என்ற பாடல், சமயங்கடந்து அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட பாடல். இந்துசமயப் பாடகர் விட்டல்தாஸ், வீரமணி ராஜூ போன்றோரும் விரும்பித் தங்கள் கச்சேரிகளில் அப்பாடலைப் பாடினர். 'குலேபகாவலி', 'பாவமன்னிப்பு', 'ராமன் அப்துல்லா' போன்ற படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் ஹனிஃபா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய கொள்கைப் பிரசாரர்களுள் ஒருவராக விளங்கினார். அரசியல், ஆன்மீகம் என இருதுறைகளிலும் சேர்த்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஹனிஃபா, எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சென்னை கோட்டூர்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.



© TamilOnline.com