கருவுறும் காலம்
அன்னையர் தினம் கொண்டாடும் இந்த மே மாதத்தில் மகப்பேறு குறித்த சில விஷயங்களைப் பார்க்கலாம்.

கருத்தரித்தல்
தற்காலத்தில் கருத்தடைக்கான வழிகள்மூலம் கருவுறுவதைத் தள்ளிப்போடுவதைப் பார்க்கிறோம். அதனால் கருவடைவதற்கு முன்னால் மருந்துகளை நிறுத்திவிடவேண்டும். கருத்தடை முறைகளை நிறுத்திய மாதமே கருவுறும் வாய்ப்பு உண்டு. கரு உருவாவதற்கு முன்னரே தாயின் உணவு சத்துள்ளதாய் இருக்க வேண்டும். குறிப்பாக உணவில் போதிய ஃபோலிக் அமிலம் (Folic Acid - B வைட்டமினின் ஒருவகை) இருப்பது மிக அவசியம். இது பச்சைக் காய்கறிகளில் அதிகம் உள்ளது. இதைத்தவிர இரும்புச்சத்தும் அவசியம். அதனால் கர்ப்பகால வைட்டமின்கள் உட்கொள்வது அவசியம். எடை சரியாக இருப்பது முக்கியம். கூடுதல் எடை இருப்பவர்கள் கருத்தரிப்புக்கு முன்னரே உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் எடைகுறைப்பது நல்லது. கருத்தரித்த பின்னர் எடை குறைக்க முயல்வது நல்லதல்ல. கருவிற்கும் சேர்த்துக் கூடுதல் கலோரிகள் சாப்பிடவேண்டும்.

மாதவிடாய் 28 முதல் 30 நாட்களுக்குச் சரியாக வருமேயானால், அதில் இறுதியில் இருக்கும் 14 நாட்கள் நிரந்தரப் பகுதியென்றும் முதலில் இருக்கும் நாட்கள் வேறுபடும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அதனால் மாதவிடாய் வந்த நாளில் இருந்து 14-16 நாட்களில் முயற்சித்தால் கருவுறும் வாய்ப்பு அதிகம். இந்த கருமுட்டை வெளிப்படும் (Ovulation) நாளைக் கண்டுபிடிக்கத் தற்போது மருந்துக் கடைகளில் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது.

கருத்தரித்த பிறகு
முதல் மூன்று மாதங்கள்: இது கருவின் வளர்ச்சிக் காலம்; குறிப்பாக மூளை, நரம்புகள், உடலுறுப்புகள் இவை உருவாகும் மாதங்கள். கருவுண்டாகி இருப்பது 6 வாரங்களுக்குப் பிறகே தெரியுமென்பதால், அதற்கு முன்னரே நல்ல பழக்கங்கள் மிகவும் அவசியம். புகைபிடித்தல், மது அருந்துதல் அறவே கூடாது. இவை கரு சரியாக வளர்ச்சியுறாமல் பாதிக்கும். சத்துள்ள ஆகாரம் தேவை. சைவ உணவுக்காரர்கள் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு எல்லாம் அளவாக உண்ணவேண்டும். அசைவம் உண்பவர்கள் மாமிசம் உண்ணலாம். சில மீன் வகைகளைத் தவிர்க்க வேண்டும். இது உடலில் பாதரசத்தின் (மெர்க்குரி) அளவு அதிகரிக்காமல் இருப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கை. சீன உணவுகளில் சேர்க்கப்படும் அஜினொமோட்டோவைத் தவிர்க்க வேண்டும். கூடுதலாகக் காபி அருந்துவது நல்லதல்ல. முடிந்தவரைக்கும் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. அவசியமானால், அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே, மருந்துகள் உட்கொள்ளலாம்.

இந்த மூன்று மாதங்களில் வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்றவை அதிகம் ஏற்படும். இது கரு நல்லவிதமாக வளர்வதன் அறிகுறி. சில உணவுகள் பிடிக்காமல் போவதும், சில உணவுகள் பிடிப்பதும் இயற்கை. இந்த விருப்பு வெறுப்புகளில் சத்துள்ள உணவைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். 3 அல்லது 4 நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை உண்ணவேண்டும். போதிய தண்ணீர் அருந்தவேண்டும். வைட்டமின் மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

முதல் 2 மாதத்திற்குள் மகப்பேறு மருத்துவரிடம் செல்லவேண்டும். அவர் ரத்தப் பரிசோதனை செய்வார். இதைத்தவிர வயிற்றுப் பகுதியை மீயொலி (Ultrasound) சோதனை செய்யலாம். கருவின் இதயத்துடிப்பு தெரியவரும்.

இரண்டாவது மூன்று மாதங்கள்: இந்த மூன்று மாதங்களில் கரு வேகமாக வளரும். தாயின் வயிறும் பெரிதாகும். உடல் எடை கூடும். கருத்தரித்த 9 மாதங்களில் 20-40 பவுண்டு போடலாம். பசி அதிகமாக எடுக்கலாம். வாந்தி எடுப்பது குறையலாம். குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க மிக முக்கியமான மீயொலி வருடல் இருபது வாரங்களில் செய்ய வேண்டும். ரத்தத்தில் நீரிழிவு நோய் இருக்கிறதா என்ற பரிசோதனையும், மரபணுக்கள் மூலம் வரும் சில குறைபாடுகள் இருக்கிறதா என்ற பரிசோதனைகளும் இந்தக் காலகட்டத்தில் செய்வர். நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், தாயின் உடல்நிலை மிகவும் தரமானதாக இருக்கும் காலம் இது.

இறுதி மூன்று மாதங்கள்: இந்த மாதங்களில் கரு வேகமாக வளர்ந்து, தாயின் வயிறு விரிவாகும். இதனால் முதுகுவலி ஏற்படலாம். தூக்கம் தடைப்படலாம். நடக்கும் வேகம் குறையக்கூடும். கால் வீங்கலாம். குழந்தையின் தலை திரும்பக்கூடும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். வேலை செய்யும் தாய்மார்கள் எளிதில் களைப்படையக் கூடும். குழந்தையின் அசைவுகள் அதிகமாகும். கருப்பை சுருங்கி விரிவடைந்து வழியும் ஏற்படலாம். இந்தக் காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனை இரண்டு வாரத்திற்கு ஒருமுறையும், இறுதி மாதத்தில் வாராவாரமும் நடக்கும். 39 வாரங்களுக்குப் பிறகு மகப்பேறு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

தடங்கல் இல்லாது, நோயின் அறிகுறிகள் இல்லாது நல்ல முறையில் நடக்கும் கருத்தரிப்புப் பற்றி அறிந்தோம். இதில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போலச் சில பிரச்சனைகள் உருவாகலாம். இவற்றை உடனுக்குடன் கண்டுபிடித்து தகுந்த முறையில் வைத்தியம் செய்துகொள்ள வேண்டும். தாயின் வயது அதிகமாக இருந்தாலும், சில நோய்கள் இருந்தாலும், அதிகமான கண்காணிப்பு தேவைப்படும்.

மேலும் விவரங்களுக்குப் பாருங்கள்: www.mayoclinic.org

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com