யுதிஷ்டிரனுக்கு அப்போதுதான் இளவரசுப் பட்டம் கட்டப்பட்டிருக்கிறது. மக்கள் அதற்குள்ளாகவே தருமபுத்திரனை அரசனாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இந்தச் சமயத்தில் தருமபுத்திரனுக்கு வயது 31, துரியோதனனுக்கு 30.
மூத்தவனுக்குக் கண்ணில்லை என்பதற்காக அரசு இரண்டாவது மகனுக்குப் போனது. இரண்டாவது மகன் அரசைத் தன் அண்ணனையே முன்னிறுத்தி ஆண்டான். பிறகு சமய சந்தர்ப்பத்தால் அவன் வனம் புகுந்தபோது, அரசை யாரிடம் ஒப்படைப்பது என்ற சிக்கல் ஏற்பட்டது. திருதிராஷ்டிரனிடம் முழுமையாக ஒப்படைக்க முடியாது, ஏனெனில் அவனுக்குள்ள உடற்குறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்ததாகப் பொறுப்பை விதுரரிடம் ஒப்படைக்கலாம் என்றால், அவரோ அதற்குச் சம்மதிப்பதாக இல்லை. எனவே பொறுப்பை இரண்டாகப் பிரித்துக் கொடுத்தான் பாண்டு. விதுரர் ஆட்சியை திருதிராஷ்டிரனிடம் முழுமையாக ஒப்படைத்து, தான் பின்னால் நின்றுகொண்டு, அண்ணன் எடுக்கும் முடிவுகளைச் செயல்படுத்துவது மட்டுமே தன்னுடைய கடமை என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நிதி அவருடைய பொறுப்பிலிருக்கிறது. ராணுவமோ பீஷ்மருடைய பொறுப்பிலிருக்கிறது. திருதிராஷ்டிரன் அரசன் என்று அறிவிக்கப்பட்டு, அரசு 'ரிமோட் கன்ட்ரோலில்' இயங்கிக் கொண்டிருந்தாலும், முடிவுகளை எடுக்கும் உரிமை என்னவோ திருதிராஷ்டிரனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (திருதிராஷ்டிரனிடம் 'இருக்கிறது' என்று சொல்லவில்லை; 'ஒப்படைக்கப்பட்டிருக்கிறது' என்றேன்.)
இப்படி 'இந்தப் பக்கமும் இல்லாமல் அந்தப் பக்கமும் இல்லாமல் அரசுரிமை என்னும் கேள்வி ஊசலாடிக் கொண்டிருக்கும் சமயத்தில், இறுதி முடிவை எடுக்க வேண்டியவர்கள் யார்? மக்களல்லவா? திருதிராஷ்டிரனுக்கே இந்த உறுத்தல் இருக்கத்தான் செய்தது. இன்னும் சற்று நேரத்தில் "குழந்தாய்! பாண்டுவினால் முன்னே ஆதரிக்கப்பட்ட அந்நகரத்து* ஜனங்கள் யுதிஷ்டிரனுக்காக நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் ஏன் கொல்லார்கள்?" என்று கேட்கப்போகிறான். (மேற்படி, பக்கம் 584) (*வாரணாவதத்து மக்கள்). ஒரு தெளிவுக்காக, இதே வாக்கியத்தை கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில் பார்க்கலாம். "Thus benefited of old by Pandu, shall not, O child, the citizens slay us with all our friends and relatives now on account of Yudhishthira?" நாம் பாண்டவர்களை வாரணாவதத்துக்கு 'அனுப்பினால்'-அதாவது நாடுகடத்தினால்-மக்கள் யுதிஷ்டிரனுக்காகப் பரிந்து எழுந்து நம்மைக் கொன்றே போட்டுவிடுவார்கள்' என்பதே, திருதிராஷ்டிரன் 'நியாயவானாக' யுதிஷ்டிரன் பக்கம் அவ்வப்போது சாய்வதற்குக் காரணமாக இருந்தது. இந்த நிலையில்தான், திருதிராஷ்டிரனுக்கு ஆலோசனை சொல்வதற்காக சகுனியின் அமைச்சனான கணிகன் தருவிக்கப்படுகிறான். 'எதிரிகளை எவ்வாறேனும் கொன்றுவிட வேண்டும்' என்று கணிகன் வலியுறுத்துகிறான். கணிகன் அவ்வாறு கேட்பதற்கு முன்னால் துரியோதனன் இன்னொரு 'எமோஷனல் த்ரெட்டை' கையில் எடுக்கிறான். அவனுடைய கேள்வியைப் பாருங்கள்:
"ராஜரே! இந்த ராஜ்யத்தை முன்னமே நீர் அடைந்திருப்பீராயின், ஜனங்களுக்கு விருப்பம் இல்லாமலிருந்தபோதும் நாங்கள் நிச்சயமாக ராஜ்யத்தை அடைவோம்" (if thou hadst obtained the sovereignty before, we would certainly have succeeded to it, however much the people might be unfavourable to us-கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பு.) மக்களுடைய ஆதரவா! அது யாருக்கு வேண்டும்! 'இந்த அரசைமட்டும் நீர் (திருதிராஷ்டிரன்) முதலிலேயே அடைந்திருந்தால், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்களல்லவா அரசுரிமையை அடைந்திருப்போம்!' மூத்தபிள்ளைதான் அரசுரிமை படைத்தவன் என்பது ஏற்கமுடியாத வாதம். இதற்கான சான்றுகளை 'மூத்தவனே அவனி காத்தவனா' என்ற தலைப்பில் பேசியிருக்கிறோம். பீஷ்மருடைய தந்தையான சந்தனு, அவனுடைய தந்தையான பிரதீபனுக்கு மூன்றாவது மகன். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிப்போம்.
மக்களுடைய ஆதரவிருந்தாலும் இல்லாவிட்டாலும் இது நான் அடைந்திருக்க வேண்டிய அரசு என்று துரியோதனன் வழக்காடத் தொடங்கியிருக்கும் இங்கிருந்துதான் பாண்டவர்களை வாரணாவதத்துக்கு எப்படி 'அனுப்பி வைப்பது' என்ற சூழ்ச்சி உருவாகத் தொடங்குகிறது. சில காலத்துக்கு அங்கே போய் இருந்துவிட்டுத் திரும்புமாறு திருதிராஷ்டிரன்தான் அனுப்பி வைக்கிறான்-அதாவது, இளவரசுப் பட்டம் கட்டப்பட்டுவிட்ட தருமபுத்திரனை. இதுவரையிலான விவரங்கள் மகாபாரதத்தின் பெரும்பாலான பதிப்புகளில் இடம்பெற்றுள்ளன. ஒரு முக்கியமான குறிப்பை அனைவரும் ஒன்றுபோல விட்டுவிடுகிறார்கள், அல்லது ஓரிரு வரிகளுக்குள் சுருக்கிவிடுகிறார்கள். இதனால் இந்தச் செய்தி பலருக்கும் தெரியாமலேயே போய்விடுகிறது.
துரியோதனன் திருதிராஷ்டிரனிடம் மேற்கண்டவாறு முறையிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், சகுனி தன்னுடைய அமைச்சனான கணிகனை அங்கே அழைத்து வந்து திருதிராஷ்டிரனுக்குக் கெட்ட போதனைகளைச் சொல்லச் செய்கிறான். இந்த இடத்தில் கணிகனை வரவேற்றுப் பேசும் திருதிராஷ்டிரனுடைய பேச்சில், பாண்டவர்மீது இதுவரையில் தென்பட்டிராத வெறுப்புக்குறி வெளிப்படுகிறது. திருதிராஷ்டிரன் சொல்கிறான்: "பிராமணஸ்ரேஷ்டரே! பாண்டவர்கள் எப்போதும் கர்வமுள்ளவர்களாய் இருக்கின்றனர். அவர்களை நான் வெறுக்கிறேன். கணிகரே! அவர்கள் விஷயத்தில் சந்திவிக்ரஹங்களைச் செய்வதற்கு மிக்க நிச்சயமான உபாயத்தை நீர் எனக்குச் சொல்லும். நீர் சொல்வதைச் செய்வேன்" என்றான் (ஆதிபர்வம், ஸம்பவ பர்வம்; அத்: 153, பக்: 572), இதில் 'சந்திவிக்ரஹங்களைச் செய்வதற்கு' என்பதற்கான பொருள் விளங்காததால் இதே வாக்கியத்தை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்த்திருப்பதைப் பார்த்தால், அவருடைய மொழிபெயர்ப்பு இப்படி இருக்கிறது: 'O best of Brahmanas, the Pandavas are daily overshadowing the earth. I am exceedingly jealous of them. Should I have peace or war with them? O Kanika, advise me truly, for I shall do as thou biddest.' அதாவது, 'நான் அவர்களோடு போர்தொடுப்பதா அல்லது அமைதியை மேற்கொள்வதா' என்று இதற்குப் பொருள்படுகிறது.
துரியோதனனாவது சூதாட்டத்துக்குப் பிறகுதான் பாண்டவர்களோடு போர்தொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறான். திருதிராஷ்டிரனோ, அதற்கு மிகப்பல வருடங்களுக்கு முன்னரேயே அந்த ஆலோசனையில் இறங்கியாயிற்று. போர் தொடங்கிய போது யுதிஷ்டிரனுக்கு வயது 91 வருடம், இரண்டு மாதம், ஒன்பது நாள் என்று டாக்டர் கே.என்.எஸ். பட்நாயக் கணக்கிடுகிறார். திருதிராஷ்டிரன், பாண்டவர்களோடு போர் தொடுப்பதா வேண்டாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டபோது யுதிஷ்டிரனின் வயது 31. ஆக, போருக்கு அறுபது வருடங்களுக்கு முன்னமேயே திருதிராஷ்டிரனுக்குப் போர் பற்றிய சிந்தனை இருந்திருக்கிறது.
விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. 'பகைவர்களை' அதாவது பாண்டவர்களை எந்த வகையிலாவது கொன்றுவிட வேண்டும் என்பதே கணிகனுடைய நீண்ட உபதேசத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது. 'ஸாமம் முதலிய உபாயங்களினால், வசப்பட்டுப் போன சத்துருவைக் கொன்றுவிட வேண்டும். சரணமடைந்தவன் என்று அவனிடத்தில் தயை செய்யத்தகாது. அப்படிச் செய்தால்தான் பயமற்றிருக்கலாம்' (மேற்படி, பக்: 574) என்ற கருத்து கணிகனுடைய ஆலோசனையில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. ஸாம, தான, பேத தண்டம் ஆகிய உபாயங்களைப் பயன்படுத்தி, இப்போது நம்வசத்தில் சரணடைந்திருப்பவர்களான பாண்டவர்களைக் கொல்லவேண்டும் என்று சொல்லும் கணிகன், எந்தெந்த சமயங்களில் எந்தெந்த உபாயத்தைப் பயன்படுத்திக் கொல்லாம் என்றும் விவரிக்கிறான். கணிகன் இவ்வாறு சொன்ன பிறகு சதித்திட்டம் உருவாகிறது. "துரியோதனனும் கர்ணனும் ஸுபலபுத்திரனான சகுனியும் துச்சாஸனனும் ஆகிய அந்த நால்வரும் கணிகருடைய அபிப்பிராயம் முழுதும் கேட்டபிறகு, ஒரு கால் ஆலோசனை செய்தனர். அவர்கள் கௌரவனாகிய த்ருதராஷ்டிர மஹாராஜாவின் ஸம்மதம் பெற்றுக்கொண்டு, குந்தியையும் அவள் புத்திரர்களையும் எரித்துவிடவேண்டும் என்று நிச்சயம் செய்துகொண்டனர்." (மேற்படி, அத்: 154, பக்: 582). "Then the son of Subala (Sakuni), king Duryodhana, Duhsasana and Kama, in consultation with one another, formed an evil conspiracy. With the sanction of Dhritarashtra, the king of the Kurus, they resolved to burn to death Kunti and her (five) sons. என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு.
ஆக, பாண்டவர்களை உயிரோடு எரிப்பதற்கு திருதிராஷ்டிரனுடைய முழுச்சம்மதமும் இருந்திருப்பது வெளிப்படையாகவே பேசப்படுகிறது. இந்தப் பகுதியை விட்டுவிட்டும், சுருக்கியும் பதிப்பிப்பதால் இந்த உண்மை கண்ணுக்குத் தென்படுவதில்லை.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |