'கவிஞரேறு', 'பாவலர்மணி', 'பாவலர் மன்னன்', 'புதுமைக்கவிஞர்' என்றெல்லாம் போற்றப்பட்டவர் வாணிதாசன். இயற்பெயர் ரங்கசாமி. இவர், புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் ஜூலை 22, 1915 அன்று திருக்காமு-துளசியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பரம்பரை வைணவக் குடும்பம். ராமானுஜரின் சிறப்புப் பெயரான எதிராஜுலு என்ற பெயரும் இவருக்குண்டு. தாத்தா வில்லியனூரின் மேயராகத் திகழ்ந்தவர். தந்தை புதுச்சேரி அரசில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். ஏழுவயதில் தாயை இழந்துவிடவே தங்கை ஆண்டாளுடன் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்தார். வில்லியனூரில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். குழந்தைகளை வளர்க்கக் கஷ்டப்பட்ட தந்தையார் சில ஆண்டுகளுக்குப் பின் உறவுக்காரப்பெண் செல்லம்மாளை மணந்தார். செல்லம்மாள், மற்றொரு அன்னையாகவே இவரை வளர்த்தார்.
தந்தைக்குப் பணிமாறுதல் நிகழ்ந்ததால் வாணிதாசன் புதுச்சேரி நகரப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அது அவரது வாழ்வின் திருப்புமுனையானது. அங்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இவருக்கு வகுப்பாசிரியராக இருந்தார். அவர்மூலம் தமிழார்வம் முகிழ்த்தது. ஆங்கிலம், ஃப்ரெஞ்சு இரண்டிலும் மையத்தேர்வில் புதுச்சேரியின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். இவர் தமிழில் தேர்ச்சி பெறும் ஆர்வத்தில் பாரதிதாசன் நடத்திய தனிப்பாட வகுப்பில் சேர்ந்தார். பாரதிதாசனைப் போலவே பாடல்கள் எழுதவேண்டும், கவிஞனாகவேண்டும் என்ற வேட்கை எழுந்தது. தமிழ் இலக்கண, இலக்கியங்களின் மீது கவனம் செலுத்தி நன்கு பயின்று தேர்ந்தார். தமிழ்த்தேர்வில் பெற்ற வெற்றியும், பாரதிதாசனின் ஊக்குவிப்பும் இவரை எழுதத் தூண்டின. சிறுசிறு கவிதைகளை எழுத ஆரம்பித்தார்.1935ல் ஆதிலட்சுமி அம்மையுடன் திருமணம் நிகழ்ந்தது. நன்மகவுகளும் வாய்த்தன. 1937ல் புதுச்சேரியை அடுத்த உழவர்கரையில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. பணிக்கிடையே ஓய்வுநேரத்தில் கவிதைகள் எழுதத் துவங்கினார். முதல் கவிதை சி.பா. ஆதித்தனார் தலைமையில் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'தமிழன்' இதழில் 1938ம் ஆண்டில் வெளியானது. பாரதி நினைவு நாளையொட்டி இவர் எழுதியிருந்த அந்தக் கவிதை "பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆடடா" என்பதாகும். தொடர்ந்து 'தமிழன்' இதழில் கவிதைகள் எழுதினார். 'ரங்கசாமி' என்ற பெயரைச் சுருக்கி 'ரமி' என்ற புனைபெயரில் அவர் பாடல்களை எழுதினார். அதன் ஆசிரியர் மேதாவி "உங்கள் ஆசிரியர் பாரதிக்கு தாசன் என்பதால் 'பாரதிதாசன்' என்ற பெயரில் எழுதினார். பாரதி என்றாலும் வாணி என்றாலும் ஒரே பொருள்தான். நீங்கள் 'வாணிதாசன்' என்ற பெயரில் எழுதலாமே" என்று ஆலோசனை கூறினார். அதுமுதல் ரங்கசாமி 'வாணிதாசன்' ஆனார். 'பொன்னி', 'காதல்', 'குயில்' போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி கவனம் பெற்றன.
இயன்றபோதெல்லாம் பாரதிதாசனுடன் நேரம் செலவிட்டார். அவருடன் நெருக்கம் அதிகமாகியது. திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பாரதிதாசன் தான் தலைமை தாங்கிய சீர்திருத்தத் திருமணங்களுக்கு வாணிதாசனை உடனழைத்துச் சென்றார். அங்கு வாழ்த்திப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. 1944ல் அறிஞர் அண்ணா நடத்திவந்த திராவிட நாடு இதழில் வாணிதாசன் எழுதிய "விதவைக்கொரு செய்தி" என்ற கவிதை அவரது கவித்திறனை உலகுக்கு அடையாளம் காட்டியது. அதனை மிகவும் ரசித்த அண்ணா, அதனை முகப்பட்டையில் வெளியிட்டதுடன் வாணிதாசனைப் பாராட்டிக் கடிதம் எழுதி, தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். வாணிதாசன் கவிதைகள் 'ஆனந்த விகடன்', 'செண்பகம்', 'திருவிளக்கு', 'நெய்தல்', 'பிரசண்ட விகடன்', 'முரசொலி', 'முத்தாரம்', 'மன்றம்', 'தென்றல்' போன்ற இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. 'காதல்', 'கலைமன்றம்' போன்ற இதழ்களில் அவரது மொழிபெயர்ப்புக் கதைகள் வெளியாகின. மேலே பயின்று வித்வான் தேர்வெழுதி தேர்ச்சிபெற்றார். 1948ல் புதுச்சேரி கல்வே கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. பொருளாதார நிலையும் மேம்பட்டது. 1950ல் புதுச்சேரியில் பாரதிதாசன் 'அழகின் சிரிப்பு' என்ற பெயரில் ஒரு கவியரங்கை நடத்தினார். அதில் அக்கால முன்னணிக் கவிஞர்கள் பலருடன் வாணிதாசனும் பங்கேற்றார். கவிஞர் முடியரசனுக்கு முதல் பரிசும் வாணிதாசனுக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது.
வாணிதாசன் தீவிர தமிழ்ப்பற்று கொண்டவர். மாதரி, ஐயை, நக்கீரன், எழிலி, முல்லை, இளவெயினி, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி எனத் தனது மகவுகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டி மகிழ்ந்தார். குறுங்காப்பியங்கள் இயற்றுவதிலும் ஆர்வம் மிகுந்திருந்தது. அவர் எழுதிய 'தமிழச்சி', 'கொடிமுல்லை' போன்ற காப்பிய நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. சொற்சுவையும், பொருட்சுவையும் மிக்க அவற்றை புதுக்கோட்டை செந்தமிழ் நிலையம் பதிப்பித்து தமிழுக்குச் செழுமை சேர்த்தது. அவர் எழுதிய 'தொடுவானம்' அவரது இசைப்பாடல் எழுதும் திறமைக்குத் தக்க சான்றாகும். அதில் பண், தாளம் போன்ற இசைக்குறிப்புகளுடன் 51 இசைப்பாடல்களை எழுதியிருந்தார். நூலின் மற்றொரு சிறப்பாகப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடமொழிப் பகுப்பிற்கு பதிலாக எடுப்பு, மேல் எடுப்பு, அமைதி என்னும் தனித்தமிழ்ச் சொற்களை அவர் கையாண்டிருந்ததைச் சொல்லலாம்.
'எழிலோவியம்' என்ற நூல் காடு, கடல், நிலா, மலை, முகில், ஞாயிறு எனப் பல்வேறு தலைப்புகளிலான பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலைப் படித்த திரு.வி. கலியாண சுந்தரனார், "வாணிதாசர் ஒரு பெரும் உலகக்கவிஞர் ஆதல் வேண்டும் என்பது என் வேட்கை" என்று புகழ்ந்துரைத்தார். குழந்தைகளுக்காக எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டது 'குழந்தை இலக்கியம்'. 'தீர்த்தயாத்திரை', 'இன்ப இலக்கியம்', 'சிரித்த நுணா', 'இரவு வரவில்லை', 'பாட்டு பிறக்குமடா' போன்ற தொகுப்புகள் இவரது முக்கியமான கவிதை நூல்களாகும். பிற கவிதைகள் தொகுக்கப்பட்டு 'வாணிதாசன் கவிதைகள்' என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளியாகின. இவரது கவிதைப் படைப்பின் உச்சம் என 'எழில் விருத்தம்' நூலைச் சொல்லலாம். இது இவருக்குப் பெரும் புகழையும் பரிசுகளையும் ஈட்டித் தந்தது. 'விருத்தப் பாவியல்' என்னும் இலக்கண நூலுக்கு இலக்கியமாக எழுதப்பட்ட நூல் இது. இவரது யாப்பிலக்கணப் புலமையும், மொழியாளுமையும் இந்நூலின்மூலம் வெளிப்பட்டன.
இவரது கவிதைகளை பாரதிதாசன், நாவலர் சோமசுந்தர பாரதியார், திரு.வி.க, மயிலை சிவமுத்து, கி.ஆ.பெ. விஸ்வநாதம் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் பாராட்டியுள்ளனர். "தமிழ்நாட்டிற்கு பாரதிதாசரும் வாணிதாசரும் இரு கண்மணிகளாக இருந்து இக்காலத்துக்கு வேண்டிய வகையில் பாட்டின் மூலமாகச் செய்துவரும் தொண்டு பெரிதும் பாராட்டத்தக்கது" என்கிறார் மயிலை சிவமுத்து. இவரது கவிதைகள் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (சாகித்ய அகாதமி வெளியீடு), புதுத்தமிழ்க் கவிமலர்கள் (தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக்கழகம்) போன்ற தொகுப்பு நூல்களில் இடம் பெற்றுள்ளன. மாப்பசானின் சிறுகதையை 'பெரிய இடத்துச் செய்தி' என்ற பெயரில் தமிழில் தந்திருக்கிறார். ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும், இந்திய மொழிகள் சிலவற்றிலும் இவரது சில பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் உருவாக்கிய 'தமிழ்-பிரெஞ்சு கையகரமுதலி' குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு எனப் பல மொழிகள் தெரிந்த வாணிதாசனின் புலமையைப் பாராட்டி, 1954ல் ஃப்ரெஞ்சு குடியரசுத் தலைவர் அவருக்கு 'செவாலியே விருது' வழங்கினார்.
34 ஆண்டுகள் தமிழாசிரியர் பணியாற்றி ஓய்வுபெற்ற வாணிதாசனுக்கு 'தமிழ்நாட்டுத் தாகூர்', 'தமிழ்நாட்டு வேர்ட்ஸ்வார்த்' போன்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. பாரதிதாசன் பரம்பரையின் முக்கிய கவிஞரான இவர், உடல்நலிவுற்று ஆகஸ்டு 7, 1974ம் நாளன்று மறைந்தார். மறைவிற்குப் பின் இவரது நூல்களைத் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது. பாவேந்தர் விருது அளித்தும் கௌரவித்தது. வாணிதாசனை கௌரவம் செய்யும் விதமாக புதுவையில் இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுவையரசு இவரது நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளதுடன் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ளது. இவரது நினைவுநாள் அரசு விழாவாகப் புதுவையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசுப் பொதுமருத்துவமனை அருகே உள்ள பாரதி பூங்காவில் இவருக்கு முழு உருவச்சிலை அமைத்து சிறப்புச் சேர்த்துள்ளதுடன், தற்போது மணிமண்டபம் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
வாணிதாசனுடைய படைப்புகளில் சில இன்னமும் நூல் வடிவம் பெறாமல் உள்ளன. அவையும் வெளியானால் அது கவிதையுலகிற்கு மேலும் வளம் சேர்ப்பதுடன், அவருடைய முழுப் பங்களிப்பை மதிப்பிடவும் உதவிகரமாக இருக்கும். இவரது படைப்புகள் என்ற இணையதளத்திலும் தமிழ் இணையப் பல்கலையிலும் படிக்கக் கிடைக்கின்றன. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களுள் வாணிதாசனுக்கு முக்கிய இடமுண்டு. இவ்வாண்டு அவரது நூற்றாண்டு.
(தகவல் உதவி: சாகித்ய அகாதமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் - வாணிதாசன் நூல் மற்றும் வாணிதாசனின் கவிதை நூல்கள்)
பா.சு.ரமணன் |