ஜோதிர்லதா கிரிஜா
முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜோதிர்லதா கிரிஜா. இவர் திண்டுக்கல்லை அடுத்துள்ள வத்தலகுண்டில் 1935ம் ஆண்டு பிறந்தார். தந்தை பள்ளியாசிரியர். இளவயதிலேயே சுதந்திரச் சிந்தனை கொண்டவராக வளர்க்கப்பட்டார். தீவிர வாசிப்பு அனுபவத்தினாலும் அறிவார்ந்த சிந்தனைப் போக்கினாலும் எழுத்தார்வம் சுடர்விட்டது. தினமணி கதிருக்குச் சில சிறுகதைகளை எழுதி அனுப்பினார். அதன் ஆசிரியராக இருந்த துமிலன், "நீ மிகவும் சிறிய பெண்ணாக இருக்கிறாய். பெரியவர்களுக்கான கதைகளை எழுதுவதற்கு உனக்கு வயது போதாது" என்று குறிப்பு அனுப்பி, அவற்றைத் திருப்பி அனுப்பிவிட, குழந்தைகளுக்காக எழுதுவது என்று முடிவுசெய்தார். சிறார்களுக்கான இவரது முதல் சிறுகதை 1950ல், இவரது பதினைந்தாவது வயதில் 'ஜிங்லி' சிறுவர் இதழில், ரா.கி. ரங்கராஜன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகிய இதழ்களுக்கு எழுதத் துவங்கினார். இவரது எழுத்துத் திறனைக் கண்டு வியந்த தமிழ்வாணனும், ஆர்.வி.யும், அழ.வள்ளியப்பாவும் இவரது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டனர்.

பெரியவர்களுக்காக இவர் எழுதிய முதல்கதை ஆனந்தவிகடனில் 1968ல் வெளியானது. "அரியும் சிவனும் ஒண்ணு" என்னும் தலைப்பிலான அக்கதை கலப்புமணம் பற்றிய கதைக்கருவைக் கொண்டது. "அதிர்ச்சி" என்னும் மற்றொரு கதையும் அதே இதழில் வெளியானது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி உட்படப் பல முன்னணி இதழ்களுக்கு எழுதினார். முற்போக்கு எண்ணமும், பெண்ணியச் சிந்தனையும் கருவாகக் கொண்ட இவரது படைப்புகள் வாசகர்களாலும், பிரபல எழுத்தாளர்களாலும் உற்று கவனிக்கப்பட்டன. இவரது படைப்புகளுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒருங்கே கிடைத்தன. அஞ்சாமல் தொடர்ந்து தீவிரமாக எழுதினார்.

பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணைக் கொடுமை, திருமணப் பிரச்சனைகள், பணியிடங்களில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளால் ஏற்படும் துயர்கள், பாலியல் சிக்கல்கள், ஆண்களின் அடக்குமுறைகள், வன்முறைகள், மறுமணம், பொருந்தாத் திருமணம் போன்ற சமூகத்தின் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையக்கருவாகக் கொண்டு பல கதை, கட்டுரைகளை எழுதினார். "நாங்களும் வாழ்கிறோம்" என்ற புதினம் பெண்களுக்குக் கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் கூறுகிறது. ஜாதிப் பிரச்சனையோடு, கல்வியின் இன்றியமையாமையையும் வலியுறுத்துகிறது "தனிமையில் இனிமை கண்டேன்". பெண்களின் வாழ்க்கை சீர்குலைய முக்கியக் காரணமான வரதட்சணை பற்றிப் பேசும் 'மன்மதனைத் தேடி' நாவல் அதற்கான தீர்வையும் முன்வைக்கிறது. ஏழைப் பெண்களுக்கு பணக்காரச் சீமான்களால் ஏற்படும் பிரச்சனைகளைப் பேசுகிறது "போராட்டம்" புதினம்.

மலேசிய தமிழ்நேசன் இதழில் தொடராக வெளிவந்த "இல்லாதவர்கள்" நாவல் குறிப்பிடத் தகுந்த ஒன்று, ஏழை மக்களை, உயர்வர்க்க சமூகம் எந்த அளவுக்கு சுயநலத்திற்குப் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிந்துவிடுகிறது என்பதை மனதை உருக்கும் விதத்தில் அதில் எழுதியிருக்கிறார் ஜோதிர்லதா கிரிஜா. "துருவங்கள் சந்தித்தபோது", "வித்தியாசமானவர்கள்", "அன்பைத் தேடி", "அம்மாவின் சொத்து," "மகளுக்காக", "இப்படியும் ஒருத்தி" "தொடுவானம்", "மறுபடியும் பொழுது விடியும்", "கோபுரமும் பொம்மைகளும்", "மணிக்கொடி" போன்ற இவரது படைப்புகள் குறிப்பிடத் தகுந்தன. 'துருவங்கள் சந்தித்தபோது…' தினமணி கதிர் நாவல் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றதாகும். சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அமைந்த "மணிக்கொடி" கல்கி பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்றது. இதே நாவலுக்கு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் இலக்கியப் பரிசும் கிடைத்தது. சென்னை வானொலியில் நாடகமாக ஒலிபரப்பானது. "மறுபடியும் பொழுது விடியும்" நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் 1999ம் ஆண்டின் சிறந்த தமிழ் நூலுக்கான முதல் பரிசு கிடைத்தது.

பெண்களின் பிரச்சனைகளை காத்திரமாகக் கூறும் ஜோதிர்லதாவின் எழுத்து வெறும் உரத்த குரலாக மட்டும் நின்றுவிடாமல் அதற்கான தீர்வையும் சொல்கிறது. தீர்வை நோக்கி வாசகரை சிந்திக்கவும் விவாதிக்கவும் வைக்கிறது என்பதுதான் அவரது எழுத்தின் பலம். பெண்களுக்கான பல பிரச்சனைகள் உண்மையில் பெண்களை மட்டுமல்ல; ஆண்களையும் சேர்த்தே பாதிக்கிறது என்பதை பல படைப்புகளில் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் ஜோதிர்லதா கிரிஜா. "இன்றும் நாளும் இளைஞர்கள் கையில்", "உடன் பிறவாத போதிலும்", "பெண்களின் சிந்தனைக்கு" போன்றவை இவரது சிந்திக்கத் தூண்டும் கட்டுரைத் தொகுதிகளாகும்.

நாவல், குறுநாவல், கட்டுரைகளோடு தீவிரத்தன்மை கொண்ட பல சிறுகதைகளையும் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருக்கிறார். குமுதத்தில் வெளியான "கொலையும் செய்வாள்" என்ற சிறுகதை வெளியான காலத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய ஒன்றாகும். தன்னைக் கொன்று அதன்பின் மறுமணம் செய்துகொண்டு சுகமாக வாழநினைக்கும் கணவனையும், நிறைய வரதட்சணை கிடைக்கும் என அதற்காக ரகசியத் திட்டம் தீட்டும் மாமியாரையும் ஒரு பெண் கொலை செய்வதுதான் கதை. "காவு" என்ற சிறுகதை திரைப்படப் பாடலாசிரியர்களைக் கண்டித்து எதிர்த்து எழுதப்பட்டதாகும். கவிஞர் கண்ணதாசனைக் குறிவைத்து எழுதப்பட்ட அக்கதை கண்ணதாசன் இதழிலேயே வெளியானது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய அம்சங்கள் கொண்ட பல சிறுகதைகளை இவர் கண்ணதாசனில் எழுதியிருக்கிறார். ஆண்களின் போலித்தனத்தை உரித்துக் காட்டும் "கவரிமான் கணவரே" முக்கியமான சிறுகதை. பெரிய பதவிகளில் இருந்துகொண்டு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், எப்படியெல்லாம் ஊழல் செய்து அலுவலகப் பணத்தைச் சுரண்டுகிறார்கள் என்பதையும், ஆனால் அவர்களே தங்களின் கீழ் பணிபுரியும் சாதாரண ஊழியர்களின் சிறு குற்றங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் எப்படியெல்லாம் கொடுமையாகத் தண்டிக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி இவர் எழுதியிருக்கும் "இளிக்கின்ற பித்தளைகள்" சிறுகதை இன்றைக்கும் மாறாத காட்சியாக உள்ளது. "வாரிசுகள் தொடர்வார்கள்", "அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே ஓர் அந்தரங்கம்", "நான் ஒண்ணும் நளாயினி இல்லை" போன்ற சிறுகதைகள் முக்கியமானவை. இவரது "நியாயங்கள் மாறும்", "தலைமுறை விரிசல்" போன்ற சிறுகதைகள் இலக்கியச்சிந்தனை விருது பெற்றவை. சிறுகதைகள் தொகுக்கப்பட்டு "வெகுளிப் பெண்", "வாழத்தான் பிறந்தோம்", "புதிய யுகம் பிறக்கட்டும்" எனப் பல தலைப்புகளில் வெளியாகியுள்ளன.

"பொன்னுலகம் நோக்கிப் போகிறார்கள்" எனும் இவரது நாடகம் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இவர் எழுதிய "தாயின் மணிக்கொடி" என்னும் சிறாருக்கான நூல், உக்ரெய்ன் மொழியில் பெயர்க்கப்பட்டு, 1987ல் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலை இலக்கிய விழாவில் வெளியிடப்பட்ட பெருமையை உடையது. "புரட்சிச் சிறுவன் மாணிக்கம்" என்ற சிறார் நூலும் முக்கியமானது. சிறுவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஐந்திற்கும் மேற்பட்ட புதினங்களையும் இவர் எழுதியுள்ளார்.

தபால் தந்தி இலாகாவில் பணியாற்றி வந்த ஜோதிர்லதா கிரிஜா, நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவே விருப்ப ஓய்வு பெற்றார். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் நிறைய எழுதியிருக்கிறார். ஃபெமினா தொடங்கி பிரதிபா இந்தியா, ஈவ்ஸ் வீக்லி, வுமன்ஸ் இரா என பல இதழ்களில் 36க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். THE POET இதழில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை 'The story of Jesus Christ' என்ற தலைப்பில் மரபுக்கவிதையாக எழுதியிருக்கிறார். 'Pearls from the Prophet' என்ற தலைப்பில் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை மரபுக் கவிதைகளாகத் தந்திருக்கிறார். Voice of Valluvar, Gandhi Episodes, Ramanayana in Rhymes, Mahabharatam போன்றவற்றையும் ஆங்கிலத்தில் பாடல்களாக எழுதியிருக்கிறார். ஆதித்ய ஹ்ருதயத்தை ஆங்கிலத்தில் 'Song on the Sun God' என்று தந்துள்ளார். பகவான் சத்ய சாயிபாபா பற்றி இவர் எழுதியிருக்கும் 'The Living God at Puttaparthi' நூல் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். முல்லா நஸ்ரூதினின் கதையை 'The Inscrutable Mulla Nasrudin Episodes in rhyming verses' என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். கிரண் பேடியின் 'As I See' நூலின் பெரும்பகுதியை இவர் சாருகேசி, ப. சுந்தரேசன் ஆகியோருடன் இணைந்து தமிழில் பெயர்த்திருக்கிறார். வங்காளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

630க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 25 புதினங்கள், 60 குறுநாவல்கள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள், மூன்று நாடகங்கள் என எழுதிக் குவித்திருக்கும் ஜோதிர்லதா கிரிஜா இன்றும் தொடர்ந்து தினமணி, துக்ளக் போன்ற இதழ்களிலும், திண்ணை போன்ற இணையதளங்களிலும், முன்னணி ஆங்கில இதழ்களிலும் எழுதி வருகிறார். தனது படைப்புகளுக்காகத் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, லில்லி தேவசிகாமணி அறக்கட்டளைப் பரிசு, அமுதசுரபி நாவல் போட்டிப் பரிசு, ஜே.ஆர். வாசுதேவன் இலக்கியப் பரிசு, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் பரிசு, கம்பம் பாரதியார் சங்கப் பரிசு, கம்பன் கழகப் பரிசு, பன்முக எழுத்தாளர் விருது என பலவற்றையும் பெற்றுள்ள இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com