பிப்ரவரி 21, 2015 அன்று விரிகுடாப் பகுதி கலைக்கூடம் (BAFA) 'திருக்குறள் போட்டி-2015' நிகழ்ச்சியை நடத்தியது. காலை 8:00 மணிக்கு ஃப்ரீமான்டின் ஃபாரஸ்ட் பார்க் தொடக்கப்பள்ளியில் நடந்த இந்தப் போட்டியில் குறட்பாக்கள் 6337 முறை பொருளோடு ஒப்பிக்கப்பட்டன.
அதேநாள் மாலை பரிசளிக்கும் விழா குழந்தை சாரா கெளசிக் பாடிய கடவுள்வாழ்த்துடன் துவங்கியது. தொடர்ந்து வைஷ்ணவி, அனன்யா அகஸ்தீஸ்வரன், ரிஷன் சபர்ஜித் ஆகியோர் திருக்குறள்பற்றிச் சிறப்புரையாற்றினர். திருமதி. பிந்து பிரதாப்பின் மாணவியர், திருமதி. ரூபா சுரேஷின் சன்ஹிதி குழுவினர், திரு. ஆறுமுகம் அப்பாதுரையின் விஸ்வேதா குழுவினர் வழங்கிய நடனங்கள் மனதைக் கவர்ந்தன. திரு. கோபி சிறார் குழுவின் ஃப்யூஷன் இசை சுவையாக இருந்தது. திரு. வெங்கடேஷின் திரையிசைக்குப் பின்னர் விழாமலரில் இடம்பெற்றுள்ள கவிப்பேரரசு வைரமுத்துவின் அணிந்துரையைத் திரு. வாசுதேவன் நஞ்சன்குட் வாசித்தார். விழாவின் வெற்றிக்கு உழைத்த தன்னார்வத் தொண்டர்கள் விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.
டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் 'குறளரசி' திருமதி. கீதா அருணாச்சலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த வருடம் 1330 குறள்களையும் ஒப்பித்த பெருமைகொண்ட இவருடைய சிறப்புச் சொற்பொழிவு நாமும் குறள் அனைத்தையும் மனனம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தை விதைத்தது. அதைவிட, தம் குழந்தைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் ஆர்வத்தை அதிகரித்தது.
தென்றல் பத்திரிகையில் 'கதிரவன் எழில்மன்னன்' என்ற பெயரில் எழுதிவரும் திரு. பிரபாகர் சுந்தர்ராஜன் மற்றொரு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். திருக்குறள் போட்டி ஆரம்பித்தது முதல் அவர் ஆதரவைத் தொடர்ந்து அளித்துவருகிறார். சான் ஃபிரான்ஸிஸ்கோ இந்தியத் தூதரக அதிகாரி திரு. திரவியம் பாஸ்கர் அவர்களின் தமிழார்வப் பேச்சு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் பெரும் நம்பிக்கையை அளித்தது.
நிகழ்ச்சிக்குச் சிகரம் வைத்தாற்போல பத்மஸ்ரீ ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் இவ்விழாவில் கெளரவிக்கப்பட்டார். வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத் துணைத்தலைவர் திரு. JP ஃபிரான்சிஸ், பாரதி தமிழ்ச் சங்க நிர்வாகத் துணைத்தலைவர் திருமதி. நித்தியவதி சுந்தரேஷ், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நிகழ்த்தவுள்ள பேரவைத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு. தில்லை குமரன் ஆகியோர் சிறப்புரைகள் வழங்கினர். திருக்குறள் விழா மலரைத் திரு. திரவியம் பாஸ்கரன் வெளியிட, கீதா அருணாச்சலம் பெற்றுக்கொண்டார்.
அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற குழந்தைகளுக்கும். ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற சிறுமிக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியைத் திருமதி. சுகிசிவம் தொகுத்து வழங்கினார்.
திருமுடி, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |