தீப்தி நவரத்னா: மதநல்லிணக்க இசை
மார்ச் 1, 2015 அன்று Ohabei Shalom ஆலயத்தில் நடைபெற்ற பாஸ்டன் யூத இசைத் திருவிழாவில், இந்து பக்தியிசையைத் தீப்தி நவரத்னாவும் யூதர் துதியிசையைத் திரு கேன்டர் ஷ்லாஸ் அவர்களும் இணைத்து வழங்கி செவிக்கு விருந்தளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இதன் அழகை உணர்ந்து, பயின்று சிறப்பாக இசை வழங்கினர். தீப்தி நவரத்னா நெஞ்சையள்ளும் அழகிய குரலுக்குச் சொந்தக்காரர். நம் பாரம்பரிய இசையின் செழுமை இவரது இசையில் உள்ளது. பல குருக்களிடம் கர்நாடக சங்கீதம் பயின்றதால் அதீத இசைஞானம் உடையவர். சமகாலப் பாடல்களைக் கலாரீதியாகப் பரிசோதனை செய்துவருகிறார். இவரது இசை முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களைக் கொண்டது. உலக இசை மற்றும் சமகால இசை வளர்ச்சிக்காக நியூ இங்கிலாந்து இசை கன்சர்வேடரியில், முதன்முதலாக ஒரு தென்னிந்தியருக்கு பரிசுத்தொகை மற்றும் நிதிநல்கை அளிக்கப்பட்டது இவருக்கே ஆகும். இவர் Carnatic Alchemy Project திட்டத்தின் கலை இயக்குனர். இதன் முக்கிய இலக்கு, பல கலாசாரங்களுக்கு இடையேயுள்ள பண்பட்ட இசைக்கூறுகளை மேம்படுத்தலும், சமகால இசையின் பரிமாணங்களை விரிவாக்கலும் ஆகும்.

தீப்தி சமகால இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் உலக இசையைப் புதிய திசைகளில் நகர்த்தியதற்காகப் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். நரம்பியல் முனைவர் பட்டம் பெற்ற இவர் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆசிரியர்.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்.

© TamilOnline.com