டாலஸ்: தமிழிசை விழா
மார்ச் 21, 2015 அன்று டாலஸ் அவ்வை தமிழ் மையம் தமிழிசை விழாவை ஃப்ரிஸ்கோ உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மையத் தலைவர் திரு. விவேக் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். வீணா இசைப்பள்ளி, நாகலட்சுமி இசைப்பள்ளி, கர்நாட்டிகா இசைப்பள்ளி, சப்தஸ்வரா இசைப்பள்ளி, லலிதா இசைப்பள்ளி மற்றும் கோஸ்பல் தேவாலய இசைக்குழு ஆகியவற்றில் பயிலும் 90 குழந்தைகள் பங்கேற்று 32 தமிழ்ப் பாடல்களைப் பாடினர். பக்திப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள், இசையறிஞர் பாடல்கள் எனப் பல பிரிவுகளிலிருந்தும் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக தமிழிசைப் பாடல்கள் ஒலித்தன.

தமிழிசைக் காவலர் திரு. பால் பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இவர் டாலஸ் தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை (FeTNA), தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆகியவற்றை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர். தமிழிசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், உ.வே.சா. ஆகியோர்பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநர்கள் ஜெகநாதன், பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, மேலாண்மை பொன்னுசாமி உள்ளிட்டோரின் தமிழ்ப்பணிகளை ஃபெட்னா வழியாக அமெரிக்காவாழ் தமிழர்க்கு அறிமுகம் செய்துவைத்தவர். தமிழிசைக்கென அறக்கட்டளை உருவாக்கி ஆய்வுகளையும், தமிழிசைப் பேரகராதி உள்ளிட்ட நூல்களையும் வெளியிட உதவியவர். தெற்காசிய ஆய்வு மற்றும் தகவல் நிறுவனத்தை (South Asia Research and Information Institute) நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி ஆய்வுக் கருத்தரங்குகள் நடத்திவருபவர்.

பால் பாண்டியன் தனது சிறப்புரையில் தொல்காப்பியம் முதல் சங்க நூல்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் இசைக்குறிப்புகள், இசைக்கருவிகள் பற்றிய தகவல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். இசைக்கு மொழி தேவையில்லாவிட்டாலும், மொழிக்கு இசை வேண்டும் என்பதால்தான் தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என மூன்று கூறுகளாக வளர்ந்ததாகக் குறிப்பிட்டார். இசைப்பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

பங்கேற்றுப் பாடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் பெயர் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. திரு. மாசிலாமணி, டாலஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் திருமதி. கீதா அருணாச்சலம், அவ்வை தமிழ் மைய நிர்வாகிகள் விவேக் வாசுதேவன், மோகன் தண்டபாணி, சங்கர் சண்முகசுந்தரம், கேசவன் ஸ்ரீரங்கம், ஜெபா செல்வராஜ், ஸ்ரீதர் இராகவேந்திரன் கோப்பைகளைக் கையளித்தனர். செயலாளர் திரு. மோகன் தண்டபாணி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளைத் திருமதி. அனிதா சங்கர் மற்றும் திருமதி. உமா விவேக் தொகுத்து வழங்கினர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com