முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 8)
பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினி தம்பி கிரண் வீட்டிற்கு அம்மா அனுப்பிய உணவைக் கொடுக்க வந்தாள். அங்கே கிரண் ஒரு முப்பரிமாண ப்ரிண்ட்டரில் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்க்கிறாள். அது ப்ரிண்ட்டரில் தயாரானது என்று அவள் நம்ப மறுக்கவே, கிரண் புதிதாகப் பதித்துக் காட்டி வியப்பளிக்கிறான். ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வரவே இருவரும் சூர்யாவோடு அங்கே விரைந்தனர். அங்கு அவர்களை அகஸ்டா க்ளார்க் தன் ஆராய்ச்சிக்கூடத்தைச் சுற்றிக்காட்டினாள். குட்டன்பயோர்கின் தொழில்நுட்பத்தை விளக்கும்படி சூர்யா கேட்டுக்கொள்ளவே, அகஸ்டா உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளுறுப்புகளின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும் என்பதை விளக்குகிறாள். முதலில், உயிரியல் சார்பற்ற பொருட்களைப் பதிக்கும் நுட்பங்களை விவரித்தாள். பின்னர், திசுக்களை உடல் நிராகரிக்காமல் இருக்க ஒவ்வொருவருக்கும் தனித்துவமாகப் பதிக்க வேண்டியுள்ளது என்பதை விளக்கினாள். பிறகு...

*****


ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியாக எப்படி திசுக்களைத் தயாரித்து பதிக்கமுடியும் என மலைப்போடு கிரண் கேட்க, எவருக்கென திசு தயாரிக்கப் படுகிறதோ, அவரின் ஸ்டெம் உயிரணுக்களை வைத்தே தனித்துவத்தோடு திசு உருவாக்கப்படலாம் என ஷாலினியே இடைபுகுந்து விளக்கியதும் அவளைப் பாராட்டிய அகஸ்டா திசுப்பதிப்பு நுட்பங்களை மேலே விளக்கலானாள். "இம்மாதிரியான திசுப் பதிப்புக்களை மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ மாற்று அங்கங்களைத் தயாரிக்க மட்டுமல்லாமல், வேறுபல விதங்களிலும் பயன்படுத்தலாம்."

சூர்யா தலையாட்டினார், "ஆமாம், ஏதோ பரிசோதனைகளுக்குப் பயனாகலாம் என்றுகூடப் படிச்சிருக்கேன்."

அகஸ்டா, "மிகவும் சரி. அதுவும், அதிநூதனமான பரிசோதனை முறைகளுக்குப் பலனளிக்கிறது. அதில் மிக முக்கியமானது இம்மாதிரி பதிக்கப்பட்ட திசுக்களை மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களை (cosmetics) மிருகங்களின்மேல் பரிசோதிப்பதை விடுத்து சரியான அங்கங்களுக்கான திசுக்களைத் தயாரித்து அவற்றிலேயே நேரடியாகப் பரிசோதிக்கலாம். இதனால், மிருக சோதனை தேவை குறைவாகிறது. அது நல்லதுதானே!"

ஷாலினி கண்ணில் நீர்தளும்ப ஆமோதித்தாள். "ஆமாம் அகஸ்டா, நீங்க சொல்றது ரொம்பச் சரி. நானும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவள்தானே? நான் என் துறையில் மிருக சோதனைகளை நிறையப் பாத்திருக்கேன், அது மட்டுமில்லை, செஞ்சிருக்கேன். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிக வேதனையாத்தான் இருக்கும். என்ன செய்யறது. சரியான மருந்தைக் கண்டு பிடிக்கணும்னா, இந்தக் கண்றாவியெல்லாம் செஞ்சுதானே தீரணும்னு என்னையே தேத்திக்குவேன். அதைத் திசுப்பதிப்பால குறைக்க முடியும்னு நீங்க சொல்றது எனக்கு ஆறுதலாயிருக்கு."

அகஸ்டா ஷாலினியைத் ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தாள். "ஷாலினி உங்களுக்கு ரொம்ப இளகின மனசு. அதனாலதான் இப்படி வேதனைப் பட்டிருக்கீங்க. கவலைப்படாதீங்க. இன்னும் சில வருஷத்துல இந்தத் திசு சோதனை நடைமுறைக்கு வந்துடும்."

கிரண் குறுக்கிட்டு, "மருந்துக்குன்னா வேணா பரவாயில்லை. இந்த ஒப்பனைப் பொருட்களுக்காக மிருக சோதனை செய்யறது அதைவிட மனவேதனை தருது. அதையும் தவிர்க்கலாங்கறது ரொம்பப் பிரமாதம்!" என்றான்.

அகஸ்டா தலையாட்டினாள். "ரைட் யூ ஆர் கிரண்! ஒப்பனைப் பொருட்களை சோதிக்கும் திசுப்பதிப்பு முறைகள் மருத்துவ சோதனைகளைவிட இன்னும் சீக்கிரமே வர ஆரம்பிச்சுடும்."

சூர்யா "திசுப்பதிப்பை பரிசோதனை முறைகளுக்கு எப்படிப் பயன்படுத்தறீங்க? அதுவும் அதிநூதன முறைன்னு வேற சொன்னீங்க?" என்று கேட்டார்.

அகஸ்டா முறுவலித்தாள். "அதுபத்தி கேட்பீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். சொல்றேன்" என்று விளக்க ஆரம்பித்தாள். "ஸ்டெம் உயிரணுக்களைக் கலந்துவச்சு வெவ்வேற அங்கங்களின் திசுக்களைத் தயாரிக்கலாம்னு சொன்னேன் இல்லயா? அந்தமாதிரி பலப்பல விதமான மிருக மற்றும் மனிதத் திசுக்களை, ஆயிரக்கணக்கில சின்னச்சின்ன மைக்ரோவில்லைகள் அளவுக்குப் பதிக்கலாம். அந்தந்த வித ஸ்டெம் உயிரணுக்களை மூலமா வச்சு, வளர்த்து அந்தத் திரவத்தை ஹைட்ரோ ஜெல் என்னும் பொருளோடு கலந்து ஒரு பரப்பின்மேல பதிச்சுடுவோம். அப்புறம் அந்த ஜெல்லை அகற்றிட்டா, ஒரு சிறிய அடிபரப்பின்மேல் பலநூறு வெவ்வேறு விதமான திசுவில்லைகள் பதிக்கப்பட்டிருக்கும். அம்மாதிரி பரப்புக்கள் மேல், சோதிக்கப்பட வேண்டிய மருந்தையோ, ஒப்பனைப் பொருளையோ ஒரு சிறுதுளி வைத்து தேவையான நேரத்துக்கப்புறம் என்ன விளைவு ஆகியிருக்குன்னு பார்க்கலாம்" என்று விளக்கியவள் அப்படிப்பட்ட திசு பதிக்கப்பட்ட வில்லை ஒன்றை எடுத்துக் காட்டினாள். "இது ரொம்பப் பழசு, சோதனைகளுக்கு இப்பப் பயனாகாது. ஆனா எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்க உதவும்" என்றாள்.

அந்த வில்லையை விளக்கின்கீழ் வைத்து நன்கு பார்த்த கிரண் குதூகலித்தான். "வாவ்! கம்ப்யூட்டர்லதான் பல செயலிகளை (processors) வச்சு ஒரே நேரத்துல பல வேலைகளைச் செய்யமுடியும்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா, மருந்து சோதனைலயும், ஒரே சமயத்துல பல்லாயிரக் கணக்கான சோதனைகளைச் செய்யலாங்கறீங்க. பிரமாதம் போங்க!"

ஷாலினி முறுவலித்தாள். "ஆமாம், கிரண், எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு! அகஸ்டா விவரிச்ச இந்த திசுப்பரப்பு வழி முறையால மிருக சோதனைகள் தவிர்க்கப்படறதோடு, மருந்துகளைச் சீக்கிரம் சோதிக்க முடியும். அதுனால இப்ப பல வருஷக் கணக்குல தாமதமாகற மருந்து சோதனைகளை குறுகிய காலத்தில் செய்து, சீக்கிரமா நோயாளிகளிடம் கொண்டு சேர்க்கலாம்."

அகஸ்டாவின் விவரணையைக் கேட்டுக்கொண்டே வில்லையைத் தீவிரமாக ஒரு லென்ஸ் வைத்து ஆராய்ந்தபடி இருந்த சூர்யா யோசனையிலிருந்து விடுபட்டு "ஊம்... சீக்கிரமா செய்யறது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் அதிக அளவிலயும் சோதனை செஞ்சு தீயவிளைவு ஆபத்துக்களுக்கான வாய்ப்பையும் குறைக்கலாம் இல்லயா? அது மட்டுமல்லாமல், ஸ்டெம் உயிரணுக்களை வச்சு திசு பதிக்கறதுனால, ஒருவருடைய தனிப்பட்ட அங்கத் திசுக்களுக்கான சோதனைகளையும் தனித்தனியா செஞ்சு இன்னும் அவரவர்க்குத் தனிப்பட்ட முறையில் (individual specific) சோதனைகள் செய்யலாம்னு தோணுது. இது இன்னும் அதிகப் பலனளிக்குமோ?"

அகஸ்டா மீண்டும் கைதட்டினாள். "பிரமாதம் சூர்யா. எங்க துறையை இவ்வளவு சீக்கிரம் நல்லா புரிஞ்சுகிட்டீங்களே! நான் அடுத்துச் சொல்ல இருந்த ரெண்டு விஷயத்தையும் கச்சிதமா பிட்டுப்பிட்டு வச்சிட்டீங்க! தற்போது நடக்கும் மருந்து சோதனைகள், பொதுவா பல மனிதர்களை வச்சு நடத்தப்படுது. அதுனால, ஒரு தனிநபருக்கு என்னமாதிரி பக்கவிளைவு வரக்கூடும்னு உத்தரவாதம் கிடைக்கறதில்லை. ஆனா, இதுல தனிநபர் திசுவின் பயாப்ஸியில் இந்த முறையில பல சோதனைகளை நடத்தி பக்கவிளைவுகளைக் கச்சிதமா அறியலாம்."

ஷாலினி குதூகலித்தாள். "சூர்யா சொன்னபடி யோசிச்சா, இன்னொரு நல்லபலனும் இருக்கு. ஒவ்வொருத்தருக்கு மருந்து ஒவ்வொரு அளவு தேவைப்படும். சகிப்புத்தன்மை வேறுபடும். இந்த முறையில அவங்க திசுக்களையே பதிச்சு, அவங்களுடைய சகிப்புக்கேற்ப மருந்து அளவையும் சரியா கணிக்கலாம்."

அகஸ்டா முறுவலித்தாள். "சரியா சொன்னீங்க ஷாலினி. உங்க துறை நிபுணத்துவத்தைக் காட்டிட்டீங்க! திசுப்பதிப்பு சோதனை முறையில் இம்மாதிரி நெறய நற்பலன்கள் கிடைக்கப் போகுது. கூடிய சீக்கிரம் நடைமுறைக்கு வரும்னு நான் நம்பிக்கையோட எதிர்பார்க்கறேன். வரணும்! பார்க்கலாம்."

அடிப்பரப்பை நுணுகி ஆராய்ந்து முடித்த சூர்யா கேட்டார், "இந்தமாதிரி சோதனைகளில் ஷாலினியின் துறை மட்டுமில்லாம, என்னோட பழைய துறை நுட்பமும் கலந்திருக்கும் போலிருக்கே? அதாவது ஒவ்வொரு திசு வில்லையும், ஒரு மின்வில்லை மேல பதிச்சிருக்கா மாதிரி இருக்கு?"

அகஸ்டா பலமாகப் பாராட்டினாள். "அப்பப்பா, எதுவும் உங்க கவனிப்பிலேந்து தப்பிக்க முடியாது போலிருக்கே சூர்யா. சூப்பர் ஃபன்டாஸ்டிக்! நீங்க சொன்னது சரிதான். ஒவ்வொரு திசுவில்லையும் ஒரு மின்வில்லை மேலதான் பதிக்கப்படுது. அந்த மருந்துகளும், ஒப்பனைப் பொருட்களும் திசுக்களில் உண்டாக்கும் விளைவுகளைப் படமெடுத்து ஆராய்வது (imaging inspection) மட்டுமன்றி, அவற்றின் ரசாயன மாறுதல்களை நேரடியாக அளவெடுக்கும் திறன் படைத்த மின்வில்லைகள் அவை..."

ஷாலினி குறுக்கிட்டாள். "இந்த மாதிரி வில்லைகளை வச்சு நோய் அறிகுறிகள் கண்டறியற நுட்பங்கள் இப்பவே மருத்துவத் தொழிலில் நடைமுறைக்கு வந்தாச்சு சூர்யா! ஒரு துளி ரத்தத்தை மட்டும் எடுத்து, பல நோய்களுக்கான அறிகுறிகள் என்னென்ன இருக்குன்னு அளவெடுத்துக் காட்டற வழிமுறைகளை, வால்க்ரீன்ஸ் (wallgreens) போன்ற மருந்தகங்கள் தங்கள் கடைகளில் உள்ள சிறுமருத்துவ மையங்களில் (microclinics) பயன் படுத்த ஆரம்பிச்சாச்சு!"

கிரண் தலையாட்டினான். "ஆமாம். எனக்குக் கூட அது ரொம்ப வசதியாப் போச்சு. லொங்கு லொங்குன்னு ஆஸ்பத்திரி சோதனை மையத்துல போய் காத்திருந்து அவ்வளவு ரத்தத்தை எடுத்து, நேரத்தையும் வீணாக்கறத்துக்குப் பதிலா, இந்த முறை எதோ இன்சூரன்ஸுக்கு டக்குன்னு மூலைக்கடையில போய் சோதனையை முடிச்சேன். ஒரு சின்ன ஊசி குத்தி ஒரு சொட்டு ரத்தம் அவ்வளவுதான். எதாவது ப்ராப்ளம் அறிகுறிகள் இருந்தா மட்டும் ஆஸ்பத்திரிக்குப் போய் இன்னும் தீவிரமான சோதனை செஞ்சா போதும்னுட்டாங்க. ஐயா என்ன படு ஹெல்த்தியாச்சே! ஒரு அறிகுறியும் இல்லை!"

ஷாலினி புருவத்தை நெறித்தாள். "ரொம்ப பீத்திக்காதே கிரண்! எதாவது வந்துடப் போகுது! அம்மா கிட்ட சொல்லி திருஷ்டி கழிக்கணும்! மேலும், அப்பப்போ முழு சோதனை செஞ்சுக்கறது நல்லதுதான்."

அகஸ்டா ஆமோதித்தாள். "ஷாலினி சொல்றதும் சரிதான். தீவிர சோதனைகளை மொத்தமாக தவிர்ப்பது சரியில்லை. ஆனா, இம்மாதிரி திசுப் பதிப்பையும், இன்னும் மிக முன்னேறிய மின்வில்லை நுட்பங்களையும் சேர்த்துப் பயன் படுத்தினா, சூர்யா சொன்ன படி, தனி மனிதர்களுக்குத் தேவையானக் குறிப்பிட்ட பரிசோதனைகளை நிச்சயமா தற்போதைய நிலையை விட அதிக அளவில செஞ்சு தீய விளைவு வாய்ப்புக்களை நிச்சயமா குறைக்க முடியும்."

அகஸ்டா உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு நுட்பங்களைப் பற்றி மேற்கொண்டு விவரித்தது, நம் துப்பறியும் மூவருக்கும் மிக சுவாரஸ்யமாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது.

குட்டன்பயோர்கின் சிறப்பு நுட்பங்கள் என்ன, அதில் எழுந்த பிரச்சனை என்ன, முப்பரிமாண மெய்ப்பதிவு முடிச்சின் சிக்கல்களை சூர்யா எவ்வாறு அவிழ்த்தார் என்பதை இனி வரும் பகுதிகளில் காண்போம்!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com