"அம்மா, நான் சீக்கிரம் என் வீட்டுக்குப் போகணும். பிரசாத் ஆபீஸ் நண்பர்களை சாப்பிடக் கூப்பிட்டிருக்காரு. போய் சமைக்கணும். ஆமா இது என்ன பார்சல் மேஜை மேல? அமேசான்ல நீ ஏதாச்சும் வாங்கினயா?"
"இல்ல, உமா இது உங்க அப்பா தனக்குப் படிக்க வாங்கின புத்தகங்கள். எல்ஏ டைம்ஸ் ரெவ்யூல பார்த்தாராம். டக்குனு கிரெடிட் கார்டுல வாங்கிட்டாரு."
"அப்பா எப்பதான் திருந்தப்போறார் அம்மா? அவருக்குப் படிக்க எங்க நேரம் இருக்கு? இருக்கிற நேரத்திலயும் நெட்ல மலைக்கள்ளன், மதுரை வீரன்னு பழைய தமிழ்ப்படத்தைத் தேடிப் பார்க்கவே சரியா இருக்கு. எங்களை எல்லாம் வளர்த்து படிக்கவெச்சு கல்யாணம் பண்ணி செட்டில் பண்ணிட்டீங்க. எதுக்கு இப்ப இவ்ளோ பெரியவீடு உங்க ரெண்டு பேருக்கு? வீட்டைப் பெருக்க, மெழுக, பராமரிக்கனு ஏகப்பட்ட ஆளுபடைக்கு எதுக்கு வீண்செலவு செய்யறீங்க? பேசாம இந்த வீட்டை வந்த விலைக்கு வித்திடுங்க. வர பணத்தை பேங்க்ல போடுங்க. எங்க வீட்டுகிட்ட நாங்க வாங்கியிருக்கிற வாடகைவீடு இப்ப காலியாத்தான் கிடக்கு. அங்க குடி வந்துடுங்க. உங்களுக்கு அந்த ரெண்டு பெட்ரூம் வீடு போதும். அடிக்கடி உங்களை வந்து பார்த்துக்க எனக்கும் வசதியா இருக்கும்.. என்னா நான் சொல்றது?"
"பண்ணலாம்மா. அப்பாகிட்ட பேசறேன். இந்த வீட்ல முப்பது வருஷமா சேர்த்த சாமான் இருக்கு. இடம்விட்டு மாறணும்னாலே மலைப்பா இருக்கு. அதுக்கெல்லாம் முதல்ல ஒருவழி பண்ண வேண்டாமா? எல்லாத்தையும் உங்க வீட்ல கொண்டுவந்து போட்டுடலாமா?"
"நோ வே. எங்களுக்கு இந்தக் குப்பையெல்லாம் வேண்டாம். முக்கியமா சமச்சு சாப்பிட சில பாத்திரங்கள் மட்டும் வெச்சிண்டு பாக்கி எல்லாத்தையும் ஃபர்னிச்சரோட ஸால்வேஷன் ஆர்மிக்குப் போடுங்க. அப்பாவோட தமிழ் புத்தகத்தையெல்லாம் தூக்கி எறிஞ்சிடுங்க. அவரோட இங்கிலீஷ் புத்தகத்தையெல்லாம் லைப்ரரிக்கு தானமா கொடுங்க. இப்பல்லாம் லைப்ரரில எல்லா புத்தகமுமே ஆன்லைன்ல சுலபமா இரவல் வாங்கி கம்ப்யூட்டர்லேயே பார்க்க முடியுது. அடுத்த மாசத்துக்குள்ள எல்லாத்தையும் காலி பண்ணிட்டு வாடகை ஃப்ளாட்டுக்கு வந்துடுங்க. அப்புறமா இந்த வீட்டை சுத்தம் பண்ணி, பெய்ண்ட் அடிச்சு விற்கப் போட்டுடலாம். நேரமாச்சு, நான் வரேன்."
அவள் போய் பத்து நிமிஷத்தில் சண்முகம் வந்தார். தங்கம் நடந்ததைச் சொன்னாள். "உமா வந்திருந்தா. ஒரு மாசத்துக்குள்ள வீடு எல்லாத்தையும் காலி பண்ணச் சொல்லியிருக்கா. முதல்ல அப்பா புத்தகங்களைத் தூக்கிப் போடற வழியப் பாருங்கன்னா."
"வீடு முழுக்க நீ குப்பை சேர்த்திருக்கே. என்னோட ரெண்டு அலமாரி புத்தகம் மட்டும் உங்க கண்ணை உறுத்தறதாக்கும். ரெண்டு அலமாரி காலியாச்சுன்னா போதுமா? வீடு காலியாயிடுமா?"
"அதில்லைங்க. புத்தகம் எல்லாம் தூசி படிஞ்சு வருஷக்கணக்கா அப்படியே இருக்கு. அதில எத்தனை புத்தகத்தை நீங்க எடுத்துப் படிக்கிறீங்க?"
"நீ சொல்றதுலேயும் ஒரு நியாயம் இருக்கு. தங்கம், நம்ம கலாசாரத்துல புத்தகத்தைக் கலைமகளா நினைக்கிறோம். காலில் பட்டால்கூடக் கண்ணில் ஒத்திக்கிறோம். சுலபமா எடுத்து எறிஞ்சுட மனசு வரதில்லை. ஆனா காலத்தின் கட்டாயத்தாலே செய்யணும் போலத்தான் இருக்கு. செய்யத்தான் போறேன். ஏதோ சாதாரண வார, மாதப் பத்திரிக்கைன்னா தூக்கி எறிஞ்சிடலாம். இதெல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கிச் சேர்த்த தமிழ்ப் பொக்கிஷங்கள். சட்டுனு எறியமுடியாது. சென்னையில் கொண்டுபோய்க் கொடுத்தாலும் பட்டாணி , பக்கோடா மடிச்சுக் கொடுத்து வீணடிப்பான். தவிரவும் நாம புத்தகத்தை விரும்பிப் படிக்கற ஆளுக்கு நல்லவிதமாப் பயன்படற மாதிரி கொடுக்கணும். அமெரிக்கால நிறையப் பேர் தமிழர்கள் இருந்தாலும் தமிழ் படிக்க ஆர்வமில்லாம டிவி, ஃபுட்பால், பேஸ்பால், கிரிக்கெட்ன்னு அலையறாங்க. தமிழ்ச் சங்கத்தை கூப்பிட்டுக் கேட்கிறேன். இப்ப நிறைய தமிழ்நாட்டுப் பசங்க ஐ.டி. வேலைக்கு வந்திருக்காங்க. அவங்களுக்குத் தமிழ் படிக்க ஆர்வம் இருக்கலாம். தமிழ்ச் சங்கப் பத்திரிக்கையில ஒரு விளம்பரமும் போடறேன். இப்பவே பத்து புத்தகம் பொறுக்கி எடுத்து மேஜைமேல வைக்கிறேன். நான் இல்லாதபோது கூட யாராச்சும் கேட்டா தாராளமா எடுத்துக் குடு."
சொன்ன சூட்டோடு பத்து பத்தகங்கள் தேர்ந்தெடுத்து வரவேற்பறை மேஜையில் வைத்தவுடன் தங்கம் மகிழ்ந்து போனாள். ஒரு வாரம் கழித்து "தங்கம், விளம்பரத்துக்கு ரெஸ்பான்சே இல்லையே. யாராச்சும் புத்தகம் கேட்டு போன் பண்ணினாங்களா?" என்றார்.
"ரெண்டு மூணு கால் வந்திச்சு. இப்பல்லாம் ஐடியில இருக்கிற பசங்க தமிழுக்கு பதிலா இந்தி, ஃப்ரெஞ்ச்தான் படிச்சாங்களாம். தமிழ் படிச்சு வந்த சில தடிப்பசங்க "கம்பரசம்" இருக்கா "கமலாவின் காதல்" இருக்கானு கேட்கறாங்க. அவங்க கேட்கிற புத்தகத் தலைப்பைக் கேட்கவே எனக்கு வெக்கமா இருக்கு" என்றாள் தங்கம்.
"அவங்க ரசனை அவ்ளோதான். கடை விரித்தேன், கொள்வாரில்லைன்னு போக வேண்டியதுதான்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறையிலிருந்த புத்தக அலமாரியைப் போய்ப் பார்வையிட்டார்.
அப்பொழுதுதான் பூகம்பம் வெடித்தது.
"தங்கம்? எங்க போச்சு நேமிநாதம்?" என்று உரத்த குரலில் கத்தினார் சண்முகம்.
"ஏமி நாதமா கேட்டீங்க? அப்படின்னா என்னங்க? தெலுங்கா?" என்றாள் தங்கம்.
"நேமிநாதம் ஒரு தமிழிலக்கணப் பொக்கிஷம். காக்கிக் கலர் பேப்பர் அட்டை போட்டு வெச்சிருந்தனே அதான். குணவீர பண்டிதர்னு ஒரு புலவர் பன்னிரண்டாம் நூற்றாண்டுல எழுதின புத்தகம்மா அது. அருமையான வெண்பாக்கள்ல தமிழ் இலக்கணம் முழுக்க எழுதியிருக்காரு. ம்..ம். உனக்கு இதெல்லாம் புரியாது. எங்க போச்சு அந்தப் புத்தகம்?"
"தெரியாதுங்க. நேத்து என் சினேகிதி சரோஜா வந்திருந்தா. நியூ ஜெர்சியில அவளோட சம்பந்தி மரபுக்கவிதை எழுத தமிழ் இலக்கணப் புத்தகம் தேடிட்டு இருக்காராம். இலக்கண புத்தகம் இருக்கானு கேட்டுச்சு. நீயே தேடிப்பாருன்னேன். ஒரு புத்தகம் எடுத்திட்டுப் போனா. ஒருவேளை அவ எடுத்திட்டுப் போன புத்தகம் அதுவா இருக்கலாமோ?"
"உனக்கு அறிவு இருக்கா? கொடுக்கறதுக்குனு எடுத்து வெச்சிருக்கனே மேசைமேலே பத்து புத்தகம். அதைக் குடுக்கறதுதானே. வேற எதாச்சும் வேணுன்னா என்னையில்ல முதல்ல நீ கேட்கணும். உனக்குனு செல்ஃபோன் வாங்கிக் குடுத்திருக்கன்ல. என்னைக் கேட்டு ஒரு வார்த்தை சொல்லணும், ஒரு கால் போடணும்னு தோணுல உனக்கு? என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. அந்தப் புத்தகம் எனக்கு வேணும் இப்பவே."
"சரோஜா வீட்டுக்கு ஃபோன் போட்டுக் கேட்கிறேன். அவள் வீட்ல இருப்பாளான்னு தெரியலயே."
"பரவாயில்ல .. செல்ஃபோன்ல கூப்பிடு. என் புருஷனுக்கு இலக்கணத்துல ஒரு சந்தேகம். அதைச் சரி பார்க்கதான் அந்தப் புத்தகத்தைக் கேட்கிறார்னு சொல்லு."
தங்கம் செல்ஃபோனில் சரோஜாவிடம் பக்குவமாகப் பேசிமுடித்தாள். "புத்தகம் இன்னமும் அவ கார்லதான் இருக்காம். இந்தப் பக்கமாதான் மார்க்கட்டுக்கு போயிட்டு இருக்காளாம். வர வழியில இங்கயே வந்து தரேன்னா."
சண்முகம் அமைதியானார். சரோஜா வந்து புத்தகத்தைக் கொடுக்க, வாங்கிக்கொண்டு "ஒரு நிமிசம். கொஞ்சம் உட்காருங்க. இப்பவே வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். சில நிமிடங்களில் அதே புத்தகமும் கையில் பேனாவுமாய் வெளியே வந்தார்.
"ஓக்கே. ரெஃபரன்ஸ் பார்த்தாச்சு. உங்க சம்பந்தி பேரு என்னா சொன்னீங்க? தில்லை கண்ணனா?" என்று கேட்டு "மரபுப் பாவெழுதி மாபெரும் புகழைடைய மனம்நிறைந்த வாழ்த்துடன், தில்லை கண்ணனுக்கு நெல்லை சண்முகம் அன்புடன் கொடுத்தது" என்று எழுதி, நூலில் தேதியும் கையெழுத்தும் போட்டு, "இந்தாங்கம்மா உங்க சம்பந்திக்கு இதை என் அன்பளிப்பாக் கொடுங்க" என்று சரோஜாவிடம் புத்தகத்தை நீட்டினார்.
"பரவாயில்லீங்க.புத்தகம் விலை ரூவா நூத்தியிருவதுதான்னு போட்டிருக்கு. நான் ஊர்லேயிருந்து தபால்ல அனுப்பச் சொல்றேன்" என்ற சரோஜாவிடம், "இல்லம்மா. புதிசா வாங்க வேணாம்.சுண்டைக்காய் கால்பணம் சுமை கூலி முக்காப் பணம்னு ஆயிடும். சும்மா வெச்சிங்க" என்று கொடுத்தார். "எங்க சம்பந்தி இங்க வரதுக்கு இன்னும் ரெண்டு வாரம் ஆகும். அதுக்குள்ள இன்னும் கொஞ்சம் படிக்கணும்னாலும் மெதுவாப் படிச்சிட்டு தாங்க" என்ற வேண்டுகோளையும் மறுத்தார்.
அவள் புத்தகத்தோடு போனபிறகு தங்கம் முகம் சிவந்து அழுகையுடன் "சே..என்ன ஆளு நீங்க. இதைவிட மோசமா நீங்க என்னை கேவலப்படுத்தி இருக்கமுடியாது. நீங்கதான் ஆம்பிளை, எதைத் தூக்கி எறிஞ்சாலும் நீங்கதான் செய்யணும்னு காட்டிட்டீங்க இல்ல. நீங்க கொடுத்ததாக் காட்டிக்க உங்க கையெழுத்தும் போட்டாச்சு. கேவலம் ரெண்டு டாலர் பொறாத இலக்கணப் பொத்தகம்.... சரோஜா ஊரெல்லாம் சொல்லி சிரிக்கமாட்டாளா, தங்கத்துக்கு தன் வீட்லயே குப்பை போடக்கூட அனுமதியில்லனு?"
சண்முகம் அமைதியாக சிரித்துக்கொண்டு "ரெண்டு டாலர்னா சரி தங்கம், நூறு மில்லியன் டாலரை எறியலாமா, சொல்லு" என்றார்.
"என்ன சொல்றீங்க? நூறு மில்லியன் டாலரை எறியறதா?" என்றாள் தங்கம் வியப்புடன்.
சண்முகம் பையிலிருந்து ஒரு சீட்டை எடுத்துப் பார்த்து திருப்தியுடன் பைக்குள் வைத்துக் கொண்டார்.
பிறகு சொன்னார், "மெகா மில்லியன்ஸ் லாட்டரில இந்தத் தடவை நூறு மில்லியன் டாலர் ஜாக்பாட். குலுக்கல் அடுத்த வாரம். இந்த லாட்டரிச் சீட்டு வாங்கி அந்த நேமிநாதம் புத்தக மேலட்டைக்குள்ள ஒளிச்சு வெச்சிருந்தேன். வெச்ச இடம் தெரிஞ்சா நம்ப பொண்ணரசி கிழிச்சிப் போட்டுருவால்ல. எத்தனை சீட்டு கிழிச்சிருக்கா நான் லாட்டிரி ஆடக்கூடாதுன்னு. புத்தகத்தை ஒருத்தருக்கு தானமாக் கொடுத்திட்டு அதுல லாட்டிரி சீட்டு வெச்சிருந்தேன் திரும்பக் குடுன்னா யாராச்சும் கொடுப்பாங்களா? வாயப் பொத்திட்டு இரு. இனிம எந்தப் பொத்தகத்தையும் என்னைக் கேக்காம வீசிடாதே. இப்ப எதில என்ன வெச்சிருக்கேன்னு உனக்கு சொல்லமாட்டேன். உன் ஓட்டை வாயை வெச்சிக்கிட்டு தம்பட்டம் அடிச்சிருவே. அப்புறம் வம்புதான். இந்தத் தடவையாவது லாட்டிரி அடிக்குதான்னு பார்க்கலாம். எனக்கு ஜாதகத்துல இப்ப ராகுதசை நடக்குது. கூரையைப் பிய்த்துக் கொட்டுவான் ராகு தன் தசையில், கூடையில் அள்ளி மாளாதுனு கோயமுத்தூர் ஜோசியர் சொல்லியிருக்காரு!"
எல்லே சுவாமிநாதன் |