கொலையும் செய்யும் நுண்ணுயிர் கிருமி E Coli
தற்போது பரபரப்பாக பேசப்பட்ட மருத்துவ அறிக்கையில், E Coli என்று சொல்லப்படும் ஒரு வித நுண்ணுயிர் கிருமியினால் ஏற்படும் பின்விளைவுகள் ஆராயப்பட்டன. செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொலைகாட்சிகளிலும், தின நாளேட்டிலும் பரவலாக பேசப்பட்ட இந்த நோய் பற்றி இங்கு காணலாம். சில மாதங்களுக்கு முன் 'Rota Virus' என்ற நுண்ணுயிர் கிருமியினால் ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு பற்றி அறிந்து கொண்டோ ம். இந்த மாதம் E coli பற்றி அறிவோம்.

E coli
E Coli என்று சொல்லப்படும் இந்த நுண்ணுயிர் கிருமி, பாக்டீரியா இனத்தை சார்ந்தது. இதில் நான்கு விதங்கள் உண்டு. அவற்றில் Enterohemarhagic (EHEC) என்ற வகை கடும் வயிற்றுபோக்கை ஏற்படுத்த வல்லது. இதில் குறிப்பாக E Coli- 0157:H7 என்ற வகை அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. இந்த வகை நுண்ணுயிர் கிருமி, பல பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

திடீர் தோன்றல் (Outbreak)
மாமிசங்களை பதப்படுத்தும் முறைகளில் FDA இயக்கியுள்ள சட்ட திட்டங்கள் மூலம் இந்த நோய் பரவுவது வெகுவாக குறைந்துள்ளது. என்றபோதும் கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் கனெக்டிகட் உட்பட எட்டு மாநிலங்களில் இந்த நோய் பரவலாக காணப்பட்டது. குறிப்பாக விஸ்கான்சின் மாநிலத்தில் மரணம் ஏற்பட்டது செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. இந்த திடீர் தோன்றல் கீரை வகைகள் மூலம் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் 'FDA' நிறுவனம் கடைகளில் விற்கப்படும் கீரை வகைகளை கழுவி, நன்கு சமைத்து உண்ணுமாறு அறிவித்துள்ளது.

நோயின் அறிகுறிகள்
1. இரத்தம் கலந்த பேதி
2. வயிற்று வலி
3. ஒன்றாக உணவு அருந்தியவர்கள் பலர் நோய்வாய்ப்படலாம்.
4. குறிப்பாக சில உணவுகள் - மாமிசம், காய்கறிகள் போன்றவை சரியாக சமைக்கப் படாத போது இந்த உணவு நச்சூட்டு (Food poisoning) ஏற்படுகிறது.

அடைவுக்காலம் (Incubation Period) ஒரு நுண்ணுயிர் கிருமி, நம் உடலில் நுழைந்து, நோயை உருவாக்க எடுத்துக்கொள்ளும் காலகட்டத்திற்கு அடைவுக்காலம் என்று சொல்வதுண்டு. அதாவது, E Coli உள்ள உணவை உண்ட பின்னர், வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான இடைவெளி மூன்று முதல் நான்கு நாட்களாகும். ஒரு சிலருக்கு இது 9 நாட்கள் வரையிலும் நீடிக்கலாம். இந்த கால இடைவெளிக்குப் பின்னர், இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்படும். குறிப்பாக, வயிற்று வலியும் ஏற்படலாம். இவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதில்லை. அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திரவச்சத்து குறைவதினால் ஏற்படும் பின் விளைவுகளை முன்பே கண்டோ ம். இதைத் தவிர, மலத்தில் இரத்தம் கலந்திருக்கு மேயானால், உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. ஒரு சிலருக்கு, எந்த அறிகுறியும் இல்லாது, குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பின் விளைவுகளால் பரிசோதிக்கும் போது கண்டுபிடிக்கப்படலாம். இந்த நோய் தாக்கினால், பல வேளைகளில் மருத்துவமனையில் சேர வேண்டி வரும். குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் நோயாளிகளுக்கு மரணம் ஏற்படலாம். குறிப்பாக வயது முதிர்ந்தவருக்கு இந்த சாத்தியக்கூறுகள் அதிகம்.

Antibiotic கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், நுண்ணுயிர் கிருமியினால் மரணம் நிகழ்வது அதிகமாக குறைந்துள்ளன. ஆனால் இந்த நோய் 'toxin mediated' என்பதால் இன்னமும் மரணங்கள் நிகழ்கின்றன.

பின்விளைவுகள்
இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 'Hemolytic Uremic Syndrome' என்று சொல்லப்படும் ஆபத்தான பின் விளைவு ஏற்படலாம். இந்த syndrome, சிறுநீரக குறைபாடு, இரத்தசோகை, மற்றும் platelet என்று சொல்லப்படும் இரத்த அணுக்கள் குறைபாடு ஆகியவற்றை உள்ளடக்கும். மேலும் TTP என்று சொல்லப்படும் இரத்த சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு சிறுநீரகம் கெடலாம். இதனால் 50% நோயாளிகளுக்கு, Dialysis என்ற சிறுநீரக சிகிச்சை தேவைப்படலாம். 5 முதல் 10% நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை காலம் முழுதும் தேவைப்படலாம். ஒரு சிலருக்கு, நரம்பு அல்லது மூளை பாதிக்கப்படலாம்.

நோய் கண்டுபிடிப்பு
இந்த நுண்னுயிர் கிருமி நோயாளியின் மலத்தை பரிசோதிக்கும் போது கண்டு பிடிக்கப்படுகிறது. பலத்த பின் விளைவுகள் இருப்பதால், CDC நிறுவனம் இதை கட்டாயப்படுத்தி வருகிறது. இருந்த போதும், தற்காலத்தில் அமெரிக்காவில் பல பரிசோதனைக் கூடங்களில் இந்த பரிசோதனை எல்லா நோயாளிகளின் மலங்களிலும் செய்யப்படுகிறது. ஒரு சில கூடங்களில் மருத்துவர் ஆணை இருந்தால் மட்டுமே செய்யப்படுகிறது. வேறு சில கூடங்களில் இரத்தம் கலந்து மலங்களில் செய்யப்படுகிறது.

குணப்படுத்தும் முறை
இந்த நோய் தன்னாலே ஒரு வார காலகட்டத்தில் ஓய்ந்து விடும் தன்மை உடையது. அந்த காலகட்டத்தில், நோயாளிகளுக்கு தேவையான, ஆதரவான தீர்வை (supportive treatment) மட்டுமே மருத்துவமனை வழங்குகிறது. பின் விளைவுகள் ஏற்படாமல் இருக்க தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதையும் மீறி பின்விளைவுகள் ஏற்படும்போது, தக்க தருணத்தில் கண்டுபிடித்து, தேவையான சிகிச்சை வழங்கப்படுகிறது. பல மருத்துவ ஆய்வுகள், இந்த நோயை குணப்படுத்த நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் (Antibiotics) உபயோகிப்பதை அனுமதிப்பதில்லை. Antibiotics உபயோகிப்பதால் பின் விளைவுகள் அதிகமாகலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சில ஆய்வுகள் antibiotics கொடுப்பதால் பின் விளைவுகள் இல்லை என்று தெரிவிக்கின்றன.

தடுப்பு முறை
முன்னர் சொன்னது போல், உணவுப்பொருட்களை நன்கு சமைத்து உண்ணவேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவி உண்ண வேண்டும். கழுவிய காய்கறிகள், கீரைகள் என்று கடைகள் அறிவித்தாலும், வீட்டில் ஒரு முறை கழுவி உண்பது நல்லது. குறிப்பாக சாலட், காய்கறிகள் dip போன்ற வகைகளில் சமைக்காமல் உண்ணும்போது கவனமாக இருத்தல் அவசியம்.

மேலும் விவரங்களுக்கு www.cdc.gov வலைதளத்தை அணுகவும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com