Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
தூது
க்ரீன் கார்டு
கூண்டு
இரண்டாவது மனைவி
பெரிய அப்பச்சியும் செண்பகச் சிப்பியும்
- ரமேஷ் கோபாலகிருஷ்ணன்|நவம்பர் 2003|
Share:
சுவிட்சர்லாந்து நாட்டின் பனி படர்ந்த மலைநகரம் டிசினோ. டிசினஸ் நதி ஓடும் நதிக்கரை ஓரத்து நகரம். இங்கு வந்து வாழ்க்கை நகரத் துவங்கி ஆறு வருடங்கள் கண் இமைப்பதற்குள் பறந்துவிட்டன. வால்நட் மரப்பூக்களின் வாசனையோடு மாலை நேரப் பனிக்காற்று உடலைச் சிலிர்க்க வைக்கிறது. டிசினஸ் நதி அலைகளால் கதிரவன் துயில் கொள்ள மெல்லத் தாலாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிறது. டிசினோ கலை அரங்கம் இங்கிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில்தான். இன்று சுவாமி தர்மகீர்த்தி அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு. தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாடு. நிகழ்ச்சி துவங்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இந்த நதிக்கரையில் தனியாகக் காலாற நடப்பதில் எனக்கு எப்பொழுதுமே அலாதியான ஆனந்தம். மெல்லிய சூட்டில் ஒரு கேப்பசினோவை (மெக்ஸிகன் காபி) வாங்கி வைத்துக் கொண்டேன். வழி எங்கும் சின்னக் குழந்தைகள் பெரிய பஞ்சு மிட்டாய்களோடு நதியின் அலைகளில் கால்களை நனைத்து உலகத்தையே மறந்து கொண்டு இருக்கின்றன.

நான் இந்த இடத்தைப் பெரிதும் நேசிக்கக் காரணம் இந்த இடத்தைச் சுற்றி நிகழும் மெல்லிய உணர்வுகள். வால்நட் மரப்பூக்களின் வாசனை ஆகட்டும், துள்ளிக் குதிக்கும் இந்த நதி அலைகள் ஆகட்டும், தெருக்களில் நிறைந்து கிடக்கும் பாசிமணிக் கடைகள் ஆகட்டும்... இவகைளில் ஏதேனும் ஒன்று எங்கள் கிராமத்து வாழ்க்கையின் நினைவு மொட்டுக்களில், எங்கள் பலா மரத்து வாசனையையோ, கொழுமம் ஆற்றின் சந்தனத் துறையையோ, குமரலங்கம் சந்தையையோ, ஏதேனும் ஒன்றைச் சத்தமின்றி அவிழ்த்து விட்டுப் போகும். அதுவும் பெரிய அப்பச்சி உடம்பு முடியாமல் படுக்கையில் சேர்ந்த இந்த ஆறு மாத காலமாய் எங்கள் ஊரின் நினைவுகள் அடிக்கடி தலைகாட்டுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

அப்பா பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொழுமம் ஆற்றோரம் உள்ள உரலப் பட்டியில்தான். கரும்பும் பருத்தியும் கடலையும் எப்பொழுதும் மண்ணை மறைத்து விளைந்து நின்று மணம் பரப்பும் பூமி. அப்பாவோட அப்பா அதாவது எங்க அப்பச்சி கூடப் பிறந்தவங்க பெரிய அப்பச்சி எல்லோருக்கும் மூத்தவுங்க. அப்பச்சி ரெண்டாவது. சங்குலட்சுமி பாட்டி மூணாவது. அப்புறம் பால்பாட்டி (பாலாம்பிகைங்கிற பேர் இப்படி நிலைச்சிடுச்சு.)

கிராமத்துல எங்க வீடு பெரிய தொட்டி கட்டு வீடு. எப்பவும் குளிர்ச்சியாக இருக்கணும்னு முழுவதும் குயவன் ஓடு வேய்ந்த வீடு. மொத்தம் முப்பத்தேழு சென்டுன்னு அப்பா சொல்லி இருக்கார். முதலில் பெரிய திண்ணைக் கட்டு பதினோரு தூண்களுடன். அப்புறம் பெரிய நடுக்கட்டு. வலது பக்கம் பெரிய பூஜை அறை. இடது பக்கம் பெரிய கூடம். இது தான் அப்பச்சியும் பெரிய அப்பச்சியும் பொன் வேலை செய்யற பட்டறை. அப்புறம் பெரிய சமையல்கட்டு. பின்னாடி ஒரு ஒண்டுக்கட்டு. அப்புறம் கோரைப் புற்களோடு நாணல் தண்டுகளும் வாழைமட்டையும் மடித்து வேயப்பட்ட மாட்டுக் கொட்டகை. அப்புறம் புழக்கடை. புழக்கடையில் பெரிய பலா மரம், இருபத்து மூன்று தென்னை, எப்பவும் நாலஞ்சு கற்பூரவல்லி வாழை, பன்னீர்த் துளசி மாடம், பெரிய வட்டக்கல் கிணறு, பெரிய அப்பச்சியின் பூஜைகளுக்காக நிறையப் பூச்செடிகள் எனச் சிறிய தோட்டமே புழக்கடைக்குள். ஊர்க்காரங்க எங்களை சிப்பித்தோப்புக்காரங்கன்னுதான் கூப்பிடுவாங்க. ஏன்னா, எங்களுக்குப் பெரிய தென்னந்தோப்பு ஒண்ணு இருக்குது. அதுக்குப் பேருதான் சிப்பித்தோப்பு. இந்தப் பேரு வழக்கம்கூட எங்க பெரிய அப்பச்சி கொண்டு வந்ததுதான்.

பெரிய அப்பச்சி கல்யாணம் செஞ்சுக்கலை. அப்பச்சிக்குப் பிறந்தவங்க பெரியப்பா எல்லோருக்கும் மூத்தது. அப்புறம் அப்பா... அப்புறம் சித்தப்பா... அப்புறம் ரெண்டு அத்தைங்க... சங்குப்பாட்டியையும் பால்பாட்டியையும் ரெண்டு தாரங்களா பொன்னுத் தாத்தாவுக்குக் கொடுத்தது. இப்ப எங்க வீட்டுல பொன்னுத் தாத்தா பையன் சாரங்கன் மாமா அவங்கதான் குடும்பத்தோட இருக்காரு. அவங்கதான் பெரிய அப்பச்சியையும் கவனிச்சிக்கிறாங்க. அப்பச்சி தவறிப் போய் ஒரு இருபது வருசம் இருக்கும். நாங்க எல்லோரும் படிப்பு, வேலைன்னு அப்படியே பொள்ளாச்சி வந்து சேர்ந்துட்டோம். பெரியய்யா பசங்க, பெரியக்கா, தங்கச்சி, தம்பின்னு யாராவது இடையிடையே போயி பெரிய அப்பச்சியைப் பார்த்துட்டு வர்றாங்க.

பெரிய அப்பச்சிக்கு வயசு கிட்டத்தட்ட தொண்ணூறுக்கு மேல இருக்கும். கண்ணுல வெளிச்சம் சுத்தமா மங்கிப் போச்சு. காது மட்டும் கொஞ்சம் சத்தமாப் பேசினா நல்லா கேட்கும். ஞாபக சக்தி இன்னும் நல்லா இருக்கு. பெரிய அப்பச்சி தான் விவரம் தெரிஞ்சு எங்க மூணு தலைமுறைக்கும் முதல் அடையாளம். எங்க கொள்ளுத் தாத்தா சின் வயசிலேயே தவறின பிறகு, தங்கச்சிங்களுக்குக் கல்யாணம் பண்ணி, தம்பியை வளத்து ஆளாக்கி குடும்பத்தையே தாங்கி நின்னதாலோ என்னவோ, எங்க குடும்பத்துல எல்லோருக்கும் பெரிய அப்பச்சி கிட்ட மரியாதையும் பாசமும் அதிகம். பெரிய அப்பச்சி நல்லா நடமாடிக்கிட்டு இருந்த காலகட்டத்துல, குடும்பத்தின் கெளரவமான தருணங்களில் எல்லாம் பெரிய அப்பச்சிக்குத்தான் என்றுமே முதலிடம்.

எங்க பெரியக்காவுக்கு அமிர்தவில்லித் தாயார்ன்னு பேர் வச்சு தாயாரம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சது, எங்க பெரியய்யா வீட்டுக்கு கிணத்துக்கால் போட்டது, பெரிய அண்ணன் ஆரம்பிச்ச நகைக்கடையில் முதல் தாலியை எடுத்து இரும்புப் பெட்டியில் வைத்தது, எனக்கு காலேஜிக்குப் பணம் கட்ட நூற்றி ஒரு ரூபாய் ஆசீர்வதித்துக் கொடுத்தது... இப்படி எனக்கு விவரம் தெரிஞ்ச சமயத்தில் எல்லாம் பெரிய அப்பச்சி ஒரு ஆதர்சன உறவாகவே கொண்டாடப்பட்டு இருக்கிறார் எங்கள் குடும்பத்தில் எல்லோராலுமே.

நாங்க எல்லோரும் பெள்ளாச்சிக்கு வந்துட்டாலும் பெரும்பாலான ஆடிப்பெருக்கும், கன்னிப்பொங்கலும் உரலப்பட்டியில்தான். அப்ப எல்லாம் உரலப்பட்டி ஒண்ணும் அவ்வளவு பெரிய ஊர் இல்ல. கிட்டத்தட்ட ஒரு இருநூறு இருநூத்தம்பது வீடுகள் இருக்கும். எண்ணி வெச்சா மாதிரி அஞ்சு தெரு. ஊருக்குத் தெற்கில் காளியாத்தா கோவில். வாய்க்கால் மேட்டிற்குப் பக்கத்தில் கோணங்கிச் செட்யார் பல சரக்குக் கடை. சந்தை கூடும் தேர்முட்டியில் மணி அய்யர் கபே. அதுவும் புதன், வியாழன் சந்தை நாட்களில் மட்டும். பக்க்ததில் சண்முகச் செட்டியார் எண்ணெய்க்கடை, ஏட்டு நாயக்கரின் தவிட்டுக் கடை. அப்புறம் சின்னச் சின்னதாய்க் கடைகள். தேர்முட்டிக்குப் பக்கத்தில் ஓட்டப் புள்ளையார் கோயில். கோயிலைச் சுற்றி பெரிய அரச மரம். மரத்தைச் சுற்றிலும் பெரிய மேடை. இந்த மேடையில் எப்பொழுதும் பத்துத் தலைகளாவது இருந்துக் கொண்டே இருக்கும். இவை எல்லாமே எங்கள் ஊரின் அந்தக் கால அடையாளங்கள்.

எங்க வீடு இருக்கிறது ரெண்டாவது தெருவில். வடக்குப் பார்த்த வாசல் எங்ளோடது. பக்கத்துல வலது பக்கம் ஏட்டு நாயக்கர் வீடு. இடது பக்கம் சண்முகச் செட்டியார் வீடு. கோமளவல்லி, நெட்டை கணேசன், பரந்தாமன், கெளரி மனோகர், சண்முக நடராஜன், வள்ளிமயில் - இவங்க எல்லோருமே எங்கள் ஊரைச் சேர்ந்த எனது பால்ய கால நண்பர்கள். இவர்களில் சண்முக நடராஜன் அவங்க வீட்டுச் செக்கில் இருந்து கொண்டு வரும் எள்ளுச் சக்கை எங்களிடையே மிகப் பிரபலம். கசப்புக் கலந்த எள்ளுச் சக்கையோடு அச்சு வெல்லம் கடித்து சாப்பிட்டால், எள் உருண்டை எல்லாம் தோற்றுப் போகும்.

நாங்க எப்ப ஊருக்குப் போனாலும் அன்னிக்குச் சாயங்காலம் புளி அரிசி வடை கட்டாயம் இருக்கும். பெரிய அப்பச்சிக்கு புளி அரிசி வடைன்னா ரொம்ப இஷ்டம். அதுவும் சங்குப் பாட்டியின் கைவண்ணத்தில். பெரிய அப்பச்சி நல்ல சாப்பாட்டுப் பிரியர். எதையம் ரசிச்சு நிதானமாச் சாப்பிடுவார். சமையலில் நல்ல கைத்தேர்ந்தவரும்கூட. சாமை அரிசி சாதமும் பலாக்காய் குழம்பும் பெரிய அப்பச்சியின் கைப் பக்குவத்தில்... அப்பப்பா... இப்ப நெனச்சாலும் நாவெல்லாம் சுவை ஊறுகிறது. சுத்து வட்டாரத்துல தாலிக்குப் பொன் உருக்க வரும் பொழுதெல்லாம் பெரிய கூட்டமா பத்து முப்பது பேரு வருவாங்க. பெரிய அப்பச்சிதான் பொன்னை உருக்கி காமாட்சி விக்ரகம் முன்னாடி கும்பிட்டு தாலி செய்ய ஆரம்பிப்பார். அப்பொழுது ''பூத்தவளே... புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காப்பவளே...'' என்று அவர் உள்ளம் சிலிர்க்கப் பாடும் பொழுது நாங்கள் மெய்மறந்து போய் இருக்கின்றோம். வந்திருக்கும் அத்தனை கூட்டத்துக்கும் வறுத்த நிலக்கடலையும் அச்சு வெல்லமும் பெரிய தாம்பரத் தட்டுகளில் சுக்கும் திப்பிலியும் போட்ட மல்லி காபி பெரிய வெண்கல டம்ளர்களில். எங்களுக்கும் இலவச இணைப்பாய். ஊரில் இருக்கும் பொழுது எங்க எல்லோரையும் பெரிய அப்பச்சி ஒரு தடவையாவது கொழுமம் ஆத்துக்குக் கூட்டிட்டுப் போய்டுவாரு. வீட்டிலேயே நல்லெண்¦ணையை (சண்முக நடராஜன் வீட்டில் வாங்கியது) காதில நெறைய விட்டு, தலையிலயும நிரம்பத் தடவி, பெரிய பித்தளைச் சொம்பு நிறைய சீயக்காய் தூளை எடுத்துக்கிட்டு கூட்டிட்டு போவாரு. அன்னிக்கு எங்களுக்கெல்லாம் பெரிய அப்பச்சி கையால்தான் குளியல். எப்ப ஆத்துக்குப் போனாலும் நாங்க மீன் பிடிக்காம வர மாட்டோம். புகையிலையையும் சுண்ணாம்புத் தூளையும் கலந்து பொடியாக்கி ஆற்றில் வீசி வேஷ்டியால் பெரிய அப்பச்சி மீன் பிடிப்பதே பெரிய அழகு. அசைவம் சாப்பிடறதை பெரிய அப்பச்சி சின்ன வயசிலேயே நிறுத்திடுச்சு. அதனால வீட்டுல அசைவம் சமைக்கிறது கிடையாது. பிடித்து வந்த மீனை எல்லாம் எடுத்துட்டு வந்து எங்க வீட்டுக் கிணத்துல விட்டுடுவோம். இப்படி எங்க ஊரைப் பத்தி நினைக்கும் போது பெரிய அப்பச்சி இல்லாமப் பிரிச்சுப் பார்க்க எங்ககிட்ட பெரிசா எந்த நினைவுகளுமே இல்லை.
கலையரங்கத்துள் மெல்ல கூட்டம் சேர ஆரம்பித்து இருந்தது. எல்லாம் தெரிந்த முகங்கள். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் ஓர் ஓரமான இருக்கையைத் தேர்வு செய்து கொண்டேன். என் நினைவுகளை சலனப்படுத்த விரும்பாதவனாய்... சுவாமிஜியும் வந்து அமர்ந்தார். பாகவத புராணத்தில் கஜேந்திர மோட்சத்தை விவரிக்க ஆரமபித்து இருந்தார். ஆனால் என் மனமோ பெரிய அப்பச்சியின் நினைவுகளில் இருந்து நழுவ மறுத்தது.

சின்ன வயசுல பெரிய அப்பச்சி ஏன் கல்யாணம் பண்ணிக்கலேன்னு எனக்குத் தோணினது கிடையாது. ஆனா கொஞ்சம் விவரம் தெரிஞ்ச வயசுல அடிக்கடி இது தோணியிருக்கு. அப்பாகிட்ட இதப்பத்தி ஒருசில தடவை கேட்டிருக்கேன். அப்பா எப்பவும் பிடி கொடுத்து பதில் சொன்னதே கிடையாது. அம்மாகிட்டதான் பதில் தெரிஞ்சது. அதுவும் நிறைய சந்தர்ப்பங்களில் ரொம்பத் தொந்தரவு செய்து நச்சரித்த பிறகுதான். எங்க பெரியக்காவுக்கோ, பெரியப்பா பசங்களுக்கோ இந்தக் கேள்வி தோணி இருக்குமா இல்ல அவங்களுக்கு இது முதல்லயே தெரியுமான்னு எனக்கு நிஜமா தெரியலை.

பெரியய்யாவோட பேத்தி சங்கரிதுர்க்கை சமைஞ்ச சடங்குக்கு வந்து இருந்தபொழுது, நானும் அம்மாவும் மொட்டை மாடியில் தனியா இருந்த போதுதான் இதச் சொன்னாங்க. ''உங்க பெரிய அப்பச்சி அந்தக் காலத்துல நம்ம ஊர்ல துறுதுறுன்னு இருந்த இளவட்டமாம். வீட்டுல மூத்த புள்ள. இவரு பொறந்து ரொம்ப நாள் கழிச்சுதான் உங்க அப்பச்சி, பாட்டிமாருக எல்லாம் பொறந்தாங்க. நல்ல வசதியான குடும்பம். அதனால செல்லம் ரொம்ப அதிகம். அந்தக் காலத்துல நம்ம ஊருல எல்லாம், கரும்புத் தோட்டங்கள்ள ஆலை போட வெளியூர்க்காரங்கதான் வருவாங்களாம். அதுவும் இங்க மூணாறு தாண்டி இருக்கிற மலைநாட்டு ஆளுங்கதான் அதிகமா வருவாங்களாம். அப்ப நமக்கு இருந்த கரும்புத் தோட்டத்துல ஆலை போட, மலை நாட்டிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தாங்களாம். அந்தக் குடும்பத்துல ஒருத்தங்கதான் செண்பகச் சிப்பி. அதாவது உங்க பெரியப்பத்தா. (முதன் முதலில் இந்த உறவு முறையைக் கேட்டபொழுது எனக்கு உடல் சிலிர்த்து அடங்கியது என்பது உண்மை) நல்லா செவேர்னு, லட்சணமா இருப்பாங்களாம். அவங்கள கட்டிக்கணும்னு உங்க பெரிய அப்பச்சி ரொம்ப இஷ்டப்பட்டாரு போல. அவங்களும் இஷ்டப்பட்டாங்கன்னுதான் உங்க அப்பா சொல்லியிருக்கார். ஆனா உங்க கொள்ளு பாட்டிக்கு இதுல கொஞ்சம்கூட இஷ்டம் இல்லை. அதுவும் வீட்டுல ரெண்டு பொண்ணுங்க இருக்கும் போது. இது இப்படி இருக்கும்போது ஊரு கலைஞசு போயிடுச்சாம். (அந்தக் காலத்துல எலி விழுந்து சாகும்போது, பிளேக் பரவாமல் இருக்க ஊரு கலைஞ்சு போகும்னு அப்பத்தா சொல்லியிருக்கு.) ஊரு மறுபடியும் கூட ஏழெட்டு மாசம் ஆயிடுச்சாம். உங்க பெரியப்பத்தா குடும்பமும் ஊரை விட்டுப் போயிட்டாங்க போல.

ஆனா உங்க பெரிய அப்பச்சிக்கு அவ்வளவு சுளுவா அவங்கள மறக்க முடியல போல. அவங்களைப் பத்தி ஏதாவது விவரம் கிடைக்குமான்னு ஒரு தரம் மலை நாட்டுக்குக்கூட போய் வந்திருப்பாங்க போல. இது எல்லாமே நமக்குத் தெரிஞ்ச ரொம்ப கொஞ்ச விஷயங்கள்தான். உண்மையில என்ன நடந்ததுன்னு அவருக்கு மாத்திரம்தான் தெரியும். இதுக்கெல்லாம் பின்னாடி அவரு கல்யாணமே வேண்டாம்னு நின்னுட்டாராம். உங்க கொள்ளுப்பாட்டி எவ்வளவு சொல்லியும் உறுதியா வேண்டாம்னுட்டாராம்..'' இதற்குப் பிறகு நான் அந்த இரவு முழுதும் தூங்கவில்லை என்பது நிஜம்.

எப்பவும் கன்னிப் பொங்கல் அன்னிக்கு கொழுமம் ஆத்து சந்தனத்துறைல கன்னிமார் சாமி கும்பிடுறது எங்க குடும்ப வழக்கம். வரிசையான கூழாங்கற்களை (ஒன்பது என்று ஞாபகம்) வைத்து மஞ்சள்பூசி பொட்டு வைத்து படையல் செய்து கும்பிடுவோம். எங்க பெரியப்பச்சிதான் எங்க வம்சத்துல கல்யாணம் ஆகாமப் போன கன்னிப் பொண்ணுங்க பேரைச் சொல்லி விருத்தமா பாடுவார். ஆத்துக்குப் போகும் பொழுதெல்லாம் எங்கள் கவனம் தண்ணீரிலேயே இருக்கும் என்பதால், இந்தப் பெயர்களோ விருத்தமோ சுத்தமாய் ஞாபகம் இல்லை. பெரிய அப்பச்சியின் நடமாட்டம் குறைந்த பிறகு அவர் இதுக்கெல்லாம் ஆத்துப் பக்கம் வருவதில்லை. கிட்டத்தட்ட ஏழெட்டு வருசங்களுக்கு முன்பு ஒரு கன்னிப் பொங்கல் அன்னிக்கு சாமி கும்பிடப் போகும் போது, பெரிய அப்பச்சி சாரங்கன் மாமா கிட்ட ஒரு விக்ரகத்தை செண்பகச் சிப்பின்னு கூப்பிடுங்கன்னு சொன்னாராம். இந்த ஏழெட்டு வருசமா அந்த கன்னிமாரு பேரு சொல்லிப் பாடுற விருத்தத்தல செண்பகச் சிப்பின்னும் ஒரு பேரு இருக்குது..

சுவாமிஜியுடன் கலந்துரையாடல் ஆரம்பமாகி இருந்தது. இவ்வளவு நாளும், எவ்வளவு ஆசைகளைத் துறந்து கண்ணியமா வாழ்ந்து இருக்கிறார்! பெரிய அப்பசியை நினைக்கையில் என் மனம் மலைத்துப் போனது. இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தணும்னா செண்பகச் சிப்பி, எங்க பெரியப்பத்தா, எவ்வளவு உயிரோட்டமா எங்க பெரியப்பச்சியோட வாழ்க்கைல கலந்திருக்கணும். என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி நின்றது. ஏதோ ஓர் கேள்விக்கு சுவாமிஜி பதில் சொல்லிக் கொண்டு இருந்தார். நான் கேள்வியை சரியாக உள் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் பதில் இதுதான்...

''ஆசாபாசாங்களைத் துறந்து மனிதனின் உணர்வுகள் அறுபட வேண்டும். அப்பொழுது தான் உதிரமும் துருப்பிடிக்கும்...'' பெரிய அப்பச்சியை நினைத்துக் கொண்டேன். அவரது உணர்வுகள் அவ்வளவு சீக்கிரம் அறுபடும் என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னமும் பல கேள்விகள் என் நெஞ்சினுள், பெரிய அப்பச்சியைப் பற்றி... பெரிய அப்பத்தாளைப் பற்றி... ஆனால் அவற்றிற்கு எல்லாம் பதில் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

ரமேஷ் கோபாலகிருஷ்ணன்
More

தூது
க்ரீன் கார்டு
கூண்டு
இரண்டாவது மனைவி
Share: 




© Copyright 2020 Tamilonline