Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
லட்சுமணன் கோடு
- சித்ரா வைத்தீஸ்வரன்|மே 2003|
Share:
Click Here Enlargeஎனது தோழிக்கு, இல்லையில்லை எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு இக்கட்டான நிலைமை. எனது தோழி பார்க்க மிக அழகாக இருப்பாள். நன்றாக படித்து, நல்ல பதவியில் இருக்கிறாள். 20, 16 வயதில் அவளுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். என்னிடம் மிகவும் ஆசையாக இருப்பாள். அவள் கணவரும் நல்லவர். அதிகமாக பேசமாட்டார். தன் வேலை உண்டு, வீடு உண்டு என்று இருப்பார்.

என் தோழி எப்போதுமே பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பாள். அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் போக நேரிடும். அப்படிப் போயிருந்தபோது ஒரு பெரிய நிறுவனத்தின் அதிபரைச் சந்தித்திருக்கிறாள். அந்த சந்திப்புக்குப்பிறகு அந்த மனிதர் அவள் தொழிலில் அக்கறை காட்டி அடிக்கடி e-mail அனுப்ப ஆரம்பித்தார். இதைத் தன் தொழிலின் வெற்றியாகக் கருதி என் சிநேகிதியும் பெருமையாக இருந்தாள்.

பிறகு அவள் பிறந்த நாள், பண்டிகை நாள் என்று பூச்செண்டுகள் அனுப்ப ஆரம்பித்தார். தொடர்ந்து அடிக்கடி அவளைப் புகழ்ந்து 2, 3 வரிகள் எழுதி பூச்செண்டுகள் அனுப்பிக் கொண்டே இருந்தார்.

சமீப காலமாக, அந்த மனிதரைப் பற்றி என் தோழியும் என்னிடம் அடிக்கடி பேசுகிறாள். அவளிடம் ஏதோ ஒருவகையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. முன்பெல்லாம் தன் பெண்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பவள், இப்போதோ 'அந்த நல்ல?!' மனிதரைப் பற்றியே தான் பேசுகிறாள். அடுத்த மாதம் ஒரு conferenceல் அவரைச் சந்திப்பதற்குத் திட்டம் போட்டிருக்கிறாள். அவரோ வேறு மதம். திருமணம் ஆகி அவருக்கும் வயதுவந்த குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அவள் அளவுக்கு நான் படிக்கவில்லை. அவளை விட 4,5 வயது சின்னவளும்கூட. இருந்தாலும் எனக்கு வாழ்க்கை அனுபவம் இருக்கிறது. இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. முன்பெல்லாம் அவள் வீட்டுக்கு வருவதையும், 'போன்' செய்வதையும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போதோ அவள் குரலைக் கேட்டாலே உடம்பெல்லாம் வியர்க்கிறது. எப்படி புத்தி சொல்வது என்றே தெரியவில்லை. ஒருவேளை நானே விபரீதக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேனா என்றும் தெரியவில்லை. எப்படியாவது என் தோழியையும், அவளுடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பது போல மனதுக்குள் ஒரு பரபரப்பு, பதட்டம்....எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

அன்புள்ள...

நட்பிற்கு நீங்கள் ஒரு அருமையான இலக்கணம். பதட்டமே படாதீர்கள். வேலையின் நிமித்தம் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பல பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனுபவம் தான் உங்கள் தோழிக்கும் ஏற்பட்டிருக்கிறது.

எல்லா உறவுகளிலும் ஒரு ''லட்சுமணன் கோடு'' இருக்கிறது. அந்தக் கோடு எங்கே தொடங்கி எங்கே முடிய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை முறை மற்றும் குடும்பக் கோட் பாடுகளைப் பொறுத்தது.

உங்கள் பயமும், அக்கறையும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது. அது நியாயமே. உங்கள் தோழி, தான் அறியாமலே கொஞ்சம் கொஞ்ச மாக அந்த மனிதரிடம் ஈடுபாடு கொண்டு வருகிறாள். எப்போதும் கணவன், குழந்தைகள், வேலை என்றே உழலும் பல பெண்களுக்கு, தனக்குரிய முக்கியத்துவத்தை யாராவது கொடுக்கும்போது அது 'போதை மருந்து' போல் வேலை செய்கிறது.

என்னுடைய அனுபவத்தில் இது ஒரு 'passing phase' என்றுதான் சொல்வேன். உங்கள் தோழி ஒன்றும் முட்டாள் இல்லை. இந்த வயதில் தன்னுடைய குடும்ப அமைதியையும், சந்தோஷத்தையும், சமூக அந்தஸ்தையும் பலிகொடுத்து விட்டு, இந்தத் தற்காலிக ஈடுபாட்டை நிரந்தர உறவாக நிச்சயம் மாற்றிக் கொள்ள மாட்டாள். அவளுடைய 'லட்சுமணன் கோடு' அவளுக்கும் தெரியும்.

எந்தச் சூழ்நிலையிலும் உங்களிடம் இருக்கும் பயத்தை வெளிப்படுத்தாதீர்கள். அவள் சொல்ல வருவதைத் தடுத்தாலோ, அல்லது உங்கள் தொடர்பை முறித்துக் கொண்டாலோ, அவள் மனதில் ஏற்படும் 'வெறுமை'யினால், இந்தப் புதிய உறவை மேலும் எப்படி பலப்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் அவளை எண்ண வைக்கும்.

இந்த conference போய்விட்டு அவள் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, அவள் குழப்பத்தில் இருந்து உங்கள் அறிவுரையைக் கேட்டால், அப்போது, உங்கள் வயது, பயம், எல்லாம் மறந்து ஒரு ஆசானாகச் செயல்படுங்கள். அதுவரை பொறுத்து இருங்கள். மறுபடி எழுதுங்கள். வாழ்த்துகள்.

அன்புடன்,
சித்ரா வைதீஸ்வரன்

*****
சித்ரா வைதீஸ்வரன் அவர்கள் சமூகவியல் மற்றும் தொடர்பியல் துறையில் உயர்கல்வி பயின்றவர். அமெரிக்காவுக்கு வந்து குடியேறுவதற்கு முன்பு பல இந்திய ஊடகங்கள் பணியாற்றியிருக்கிறார். இருபது வருடங்களுக்கும் மேலாக உளவளத்துணையாளராகவும் (Counseling) செயல்பட்டுவருகிறார். சென்னையில் தன் நண்பர்களோடும், சில சென்னை சாரிட்டி கிளப் உறுப்பினர்களோடும் இணைந்து ''செளஜான்யா'' என்ற பெயரில் 'குடும்ப உளவளத்துணைச் சேவை'யை செய்து வந்திருக்கிறார். மேலும் இவர், மலேசியாவுக்கான சர்வதேச அமைப்பில் இரண்டு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார்.

அச்சமயத்தில் மலேசிய வானொலியில் ''சித்ராவுடன் சில நிமிடங்கள்'' என்ற வாரநிகழ்ச்சியை அளித்திருக்கிறார். சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது கூட சுய அதிகாரத்துவம் (self empowerment) குறித்த வகுப்புகளை PETALS என்ற பெயரில் நடத்தியிருக்கிறார். (PETALS- Personal Empowerment -Training And Learning Skills) தற்சமயம் "Low Voices but High Transmission" என்ற Self-Empowerment பொருள் குறித்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு வந்த பிறகு மேம்பாடு மற்றும் தொடர்பியல் துறையிலுள்ள சில சர்வதேச அமைப்புகளுக்கு தனிப்பட்ட ஆலோசகராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
Share: 




© Copyright 2020 Tamilonline