Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2003 Issue
ஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
பங்குகள் பட்ட பாடு - (பாகம் - 3)
- கதிரவன் எழில்மன்னன்|பிப்ரவரி 2003|
Share:
முன் கதை:

Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சட்ட வழக்கு நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிந்ததால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.

கிரண் வேலை புரியும் ஹார்வி வில்கின்ஸன் பங்கு வர்த்தக நிறுவனத்தில் கம்ப்யூட்டர்களை வைத்து நடத்தப் பட்ட பல மோசடிகள் கண்டு பிடிக்கப் பட்டன. நிறுவனத்தின் கம்ப்யூட்டர் பாதுகாப்புப் பிரிவினரால் யார் செய்தனர் என்று கண்டு பிடிக்க இயலவில்லை. மோசடி நடத்தியவரை பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு, கெட்ட பெயர் பரவி விடும். அதனால் நிறுவன அதிபர் ஹார்வி கிரணைத் துப்பறிய அழைத்தார். கிரண் நிறுவனத்தின் ஸா·ப்ட்வேர் குழுவில் வேலை புரியும் கண்ணன், சுரேஷ் இருவரிடமும் ப்ரோக்ராம் ஸோர்ஸ் கோட் (source code) கேட்டு அதை ஆராய்ந்து விட்டு, தன்னால் கண்டு பிடிக்க இயலாது, சூர்யாவால் தான் இயலும் என்று கூறினான். ஹார்விக்கு வெளி மனிதரை விசாரிப்பில் நுழைக்க விருப்பமில்லை. மேலும் சூர்யாவின் இளமையும் மிடுக்கான தோற்றமும் அவருடைய தயக்கத்தை இன்னும் அதிகப் படுத்தின! கிரணுக்காக சும்மா சில நிமிடம் பேசிவிட்டு ஒதுக்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனால் ரிக்கைத் தவிர யாருக்கும் தெரியாத அவருடைய பார்க்கின்ஸன்ஸ் நோயைப் பற்றி சூர்யா சில நொடிகளில் அறையில் பார்த்ததை வைத்தே யூகித்து விடவே ரிக் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்து சூர்யாதான் தன் சிக்கலை அவிழ்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்! கிரண் நிறுவனத்தின் ஸெக்யூரிட்டி பிரிவினர் கண்டு பிடிக்க முடியாத படி எப்படி ப்ரோக்ராம்கள் மாற்றப் பட்டு மோசடி செய்யப் பட்டது என்று விளக்கினான். அப்படி நுட்பமாக செய்யப் பட்டிருப்பதால் ஸெக்யூரிட்டி மற்றும் ஸா·ப்ட்வேர் பிரிவினருடன் பேசித்தான் கண்டு பிடிக்க முடியும் என்று கூறி அவர்களுடன் பேச ரிக், கிரண் இருவருடனும் சென்றார்.

******


சூர்யா முதலில் பாதுகாப்புப் பிரிவினருடன் பேச வேண்டும் என்று கூறினார். அங்கு போகும் வழியில், "கிரண், இந்த நிறுவனத்துல பயன் படுத்தற ஸா·ப்ட்வேர் பத்தி கொஞ்சம் சொன்னேன்னா எனக்கு யார் எப்படி செஞ்சிருக்கலாம்னு யோசிக்கறத்துக்கு உதவும்" என்றார்.

கிரண் ஆரம்பித்தான். "சரி சொல்றேன். டெஸ்க் டாப், நோட்புக் கம்ப்யூட்டர் எல்லாத்துலயும் வழக்கமான ஆ·பீஸ் ஸா·ப்ட்வேர் இருக்கு. ஆனா அது பத்தி நீங்க கேக்கலைன்னு எனக்குப் புரியுது. இந்த நிறுவன பிஸினஸ்க்குக் குறிப்பா எது இருக்குன்னு கேக்கறீங்க. அது பொதுவா நாலு விதமா பிரிச்சு சொல்லலாம். ஒண்ணு ட்ரேடிங் அன்ட் ட்ரான்ஸாக்ஷன்ஸ். ரெண்டாவது வெல்த் மேனேஜ் மென்ட். மூணாவது அக்கவுன்ட் மேனேஜ்மென்ட். இதெல்லாம் எங்க பிஸினஸ்க்கும் வாடிக்கையாளர் களுக்குமானது. மற்ற படி பே-ரோல் மாதிரி கம்பனிக்குள்ள விவகாரம் நடத்தற பொதுவான ஸிஸ்டமும் இருக்கு..."

சூர்யா இடை மறித்து, "உள்ள பயன் படுத்தற சிஸ்டத்தைப் பத்தி நமக்கு இந்த விஷயத்துல ஒண்ணும் கவலை இல்லைன்னு நினைக்கிறேன். அந்த மத்த மூணு விதத்தைப் பத்தி இன்னும் கொஞ்சம் விவரம் சொல்லு" என்றார்.

கிரண் ஆரம்பிக்கும் முன் ரிக் பெருமையுடன் விளக்க ஆரம்பித்தார். "சூர்யா, இந்த ·பைனான்ஷியல் சர்விஸஸ் துறையிலேயே கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் ரொம்பப் பயன் படுத்தறாங்க. மிகப் பல புதுமையான முன்னேற்றங்கள் இந்த நிதித் துறைக்கான தேவைகளுக்காக உண்டாக்கப் பட்டவை. மேலும் பணம் புரளும் விஷயங்கறதுனால, பணம் செலவு பண்ணவும் நாங்கத் தயங்கறதில்லை. பலப் பலக் கம்ப்யூட்டர் கம்பனிகள் நிதித் துறைக்கு வித்துத்தான் வளர்ந்திருக்கு. இங்க silicon valley-யிலேயே நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். அப்படிப்பட்ட நிதித்துறையிலும் கூட எங்க ஹார்வி வில்கின்ஸன் நிறுவனந்தான் தொழில் நுட்பத்தை பிஸினஸ் கருவியாப் பயன் படுத்தறதுல முதல் இடம் வகிக்குதுன்னே சொல்லலாம்.

"கிரண் சொன்ன ஸா·ப்ட்வேர் விதங்கள் மட்டுமில்லாம, ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் எல்லாத்திலயுமே நாங்க ரொம்ப சமீபத்துல வெளியிடப் பட்ட பொருள்களைத்தான் பயன் படுத்தறோம். அது மட்டுமில்லை. ஸா·ப்ட்வேர்னு வரும் போது ஒரு படி மேலயே போயிட்டோம்னுதான் சொல்லணும். வேற நிறுவனங்க மாதிரி வெளி யிலிருந்து மட்டும் வாங்கிப் அப்படியே பயன் படுத்தாம, அதை எங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி ரொம்ப மாத்திப் பயன் படுத்தறோம். மேலும், அந்த மூணு பிஸினஸ் ஸிஸ்டத்துலயும் நாங்களே எழுதின ப்ரோக்ராம்களும் நிறைய இருக்கு."

சூர்யா வியப்புடன், "நீங்களே எழுதறீங்களா? என்ன அவசியம்? வாங்கறதை உங்களுக்குன்னு கஸ்டமா மாத்தறது எனக்குப் புரியுது. புதுசா நீங்களே எதுக்கு எழுதணும்?" என்றார்.

ரிக் பெருமிதத்துடன் சிலிர்த்துக் கொண்டார். "ரொம்ப நல்ல கேள்வி சூர்யா! ஆரம்பத்துல எங்களுக்குத் தேவையானது நிறைய வெளியில கிடைக்கலைன்னுதான் எழுதினோம். ஆனா போகப் போக வெளியிலிருந்து வாங்கி மாத்த முடிஞ்சுது. ஆனா, இப்பவும் சில விஷயங்கள் எங்கத் துறைக்கே ரொம்பக் குறிப்பா இருக்கறதுனால வெளியில கிடைக்கிறதில்லை. மேலும் சிலது எங்க தொழில் ரகசியம். அதை வெளியில யாருக்கும் தெரியாம பாதுகாக்கணும்னா நாங்களேதான் எழுதணும். கன்ஸல்டிங் நிறுவனங்கள் கூட அதைப் பாக்க முடியாது. எங்க நிறுவனத்துல வேலை செய்யற வங்கதான் பாக்க முடியும்!"

சூர்யாவின் வியப்பு வளர்ந்தது! "தொழில் ரகசியமா? அது என்ன?"

கிரண் சிரித்தான். "அதுதான் ரகசியமாச்சே? அதை எப்படி சொல்றது. அப்படியே சொல்லிட்டாலும் உங்களை இங்கயே ஒரு அறையில வச்சு பூட்டிடணுமே!"

ரிக் புன்னகையுடன், "சே, சே! அந்த அளவுக் கெல்லாம் ஒண்ணுமில்லை! ஆனாலும் நாங்க அதை ரொம்பக் கவனமாப் பாதுகாக்கறோம். எங்க நிறுவனத்துல ஒரு கம்ப்யூட்டர் ஸா·ப்ட்வேர் ஆராய்ச்சிக் குழு இருக்கு. அதுல பல Ph.D. பட்டம் பெற்றவங்க இருக்காங்க. கம்ப்யூட்டர் ஸயன்ஸ் ஆளுங்களுடன், பொருளாதார நிதித் துறைல Ph.D. பட்டம் வாங்கின முனைவர்களும் இருக்காங்க."

கிரண் புகுந்து, "ஆமாம், அங்க போனா விர்ர்ன்னு எப்பவும் ஒரே ப்ரொப்பெல்லர் தலை சத்தம்தான் போங்க!" என்றான்.

ரிக் செல்லமாகக் கடிந்து கொண்டார். "உனக்கு வேற வேலையே இல்லை கிரண்! நல்லாப் படிச்சவங்களைக் கிண்டல் பண்றதே ஒரு பொழுது போக்கு! சூர்யா, அந்தக் குழு நிதித் துறையிலேயே பிரமாதமான குழு. அவங்க ரொம்ப அலசி ஆராய்ஞ்சு, எந்த ஸ்டாக், எந்த பான்ட், எந்த விதமான பொருளாதார நிலையினால எப்படி பாதிக்கப் படுதுன்னு காட்ட பல கம்ப்யூட்டர் மாடல்களை ஏற்படுத்தியிருக்காங்க..."

கிரண், "ஆமாமாம்! சூப்பர் மாடல் க்ளாடியா ஷி·பர் மாதிரி அழகா இருக்கும்!" என்றான்.

ரிக் களுக் என்று சிரித்தார். "இவனுக்கு சரியான குறுக்கு புத்தி! அது அந்த மாதிரி மாடல் இல்லை. ரொம்பக் கஷ்டமான பொருளாதார கணிதப் பூர்வமான புள்ளிவிவர மாடல். Econometric Statistical Model-னு நீங்க கேள்விப் பட்டிருக் கலாமே, அது. நாங்க அந்த வழிமுறைககளுக்கு பேடன்டுகள் நிறைய வாங்கியிருக்கோம். மத்த நிதி நிறுவனங்க சும்மா காபி அடிச்சுட முடியாது! அந்த மாடல்களையும் அல்கரிதங்களையும் எங்க ஸா·ப்ட் வேர் எழுதற குழு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமா மாத்துது. கண்ணன், சுரேஷ்னு ரெண்டு பேர் அதுக்கு குழுத் தலைவங்க. கிரணுக்கு அவங்களை நல்லாத் தெரியும். கிரண் சொன்ன ட்ரேடிங், வெல்த், அக்கவுன்ட் ஸிஸ்டம் மூணுலயும் அந்த மாதிரி மாடல் வச்சு பயன்படுத்தறோம்."

சூர்யா சற்றே சிந்தித்து விட்டு, "நான் என் போன வேலைல, உற்பத்திக் குறைகளை மாடல் செஞ்சு அதை நீக்க வழி பாத்திருக்கோம். அதுனால ட்ரேடிங்ல ஸ்டாக், பான்ட் விலைகள் எப்படி மாறும்னு கணிக்க மாடல் பயன் படுத்தறது எனக்குப் புரியுது. ஆனா, வெல்த், அக்கவுன்ட் மேனேஜ்மென்ட்ல எப்படி மாடல் பயன்படுத்தறீங்க?" என்றார்.

ரிக் பாராட்டினார். மிகப் பெருமையுடன், "சபாஷ், சூர்யா. நல்ல கேள்வி! நல்லாப் புரிஞ்சுகிட்டீங்க. சாதாரணமாப் பாக்கப் போனா அதுக்கெல்லாம் மாடல் சார்ந்த ப்ரோக்ராம் தேவையில்லைதான். மத்த நிறுவனங்கள் பயன்படுத்தற ஸா·ப்ட்வேர் சாதாரண மானது, மாடல் கிடையாது. எனக்குத் தெரிஞ்ச வரை, ஹார்வி வில்கின்ஸன் மட்டும்தான் அந்த மாதிரி பயன்படுத்துது."

அவர் அத்துடன் நிறுத்தி விட்டதால் கிரண் இடை புகுந்தான். "ரிக், நீங்க அடிக்கற தம்பட்டத்துல சூர்யா காது பொத்துகிச்சு! சஸ்பென்ஸ் போதும். மாடல் எதுக்குப் பயன்படுதுன்னு சொல்லிடுங்க!" என்றான்.

தன் பெருமை உலகத்திலேயே சங்கமமாகி அங்கேயே உலாவிக் கொண்டிருந்த ரிக் திடுக்கிட்டு நிஜ உலகுக்குத் திரும்பினார்! "ஓ, ரொம்ப சாரி சூர்யா! நான் எதோ எங்க பெருமையைப் பத்தியே ரொம்ப பேசிட்டேன். நாங்க ஒவ்வொரு கஸ்டமர்

அக்கவுன்ட்டுலயும் இருக்கற பங்குகள், பத்திரங்கள், ஆப்ஷன்ஸ் அன்ட் ·ப்யூச்சர்ஸ், விலை உயர்ந்த தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், ரியல் எஸ்டேட் மூலதனங்கள், கம்மாடிட்டீஸ், ரொக்கத்துல வர வட்டி எல்லாத்தையுமே வச்சு ஒரு அஸ்ஸெட் வளர்ச்சி மாடல் செஞ்சிருக்கோம்."

சூர்யா, "அவ்வளவு விதங்களா?! அய்யோ, தலையே சுத்துதே!" என்றார்.

கிரண், "நமக்கு தலை சுத்தத்தான் செய்யும்! அதுக்குத்தானே கம்ப்யூட்டர் கிட்ட மாடல் பண்ணி விளையாடுடா கண்ணுன்னு விட்டுடறோம்!" என்றான்.

ரிக் ஆமோதித்தார். "கரெக்ட். இதெல்லாத்தையும் வச்சு மனுஷங்களால கணிக்க முடியாது. அதுவும், ஒவ்வொரு விதத்துலயும் பல நூறு இல்ல ஆயிரம் அயிட்டங்களோட விலைகள், அதோட வருங்கால மதிப்பீடுகள், அதுல ஒண்ணு மாறிச்சுன்னா, இன்னொண்ணு எப்படி மாறும்னு கணிச்சுக் காட்டறது இதெல்லாம் கம்ப்யூட்டர் மாடல்னால தான் முடியும். அதுவும் ரொம்ப கடினமான Bayesian Statistical Correlation மாடல் வச்சுத்தான் பாக்க முடியும். நீங்க ட்ரேடிங்குக்கு மாடல் பயன்படுத்த முடியும்னு சொன்னீங்க இல்லயா? கஸ்டமர் வெல்த் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்ல இருக்கற ஒவ்வொரு அயிட்டத்துக்கும் அதே மாடலைப் பயன் படுத்தி, அது காட்டற விலையை வெல்த் மாடல்ல போட்டு, மொத்த அக்கவுன்ட் மதிப்பீட்டை எப்படி உயர்த்த முடியும்னு எங்க கம்ப்யூட்டர்கள் கணிச்சுகிட்டே இருக்கு. அது குடுக்கற சிபாரிசுகளை எங்க வெல்த் எக்ஸ்பர்ட்டுகள் செய்யறதா வேண்டாமான்னு முடிவு பண்ணி ட்ரேடர்ஸ்க்கு அனுப்புவாங்க." என்றார்.

சூர்யா வியந்து போனார். "வாவ்! பிரமாதமாத்தான் இருக்கு! அப்புறம் அந்த அக்கவுன்ட் மேனேஜ் மென்ட்? அதுக்கு எதுக்கு மாடல்?" என்றார்.

ரிக், "அதுவும் வெல்த் மாடல் மாதிரிதான், ஆனா வாடிக்கையாளர்கள் எந்த மாதிரி பங்குகள், பத்திரங்களை வாங்கி விக்கறாங்கன்னு ஒரு சரித்திரப் பட்டியலைப் போட்டு, அவங்க அக்கவுன்ட்ல இருக்கறது மட்டுமில்லாம, அதே மாதிரியான மத்த பங்குகளையும் மாடல் செஞ்சு சிபாரிசு குடுக்கும். சில முறை, அத வச்சு ஒரே மாதிரியான பங்கு பத்திரங்களை வித்து வாங்கி 30-நாள் வாஷ்-அவுட் விதி முறைல மாட்டிக்காம வரி குறைக்கவும் முடியும்."

கிரண் கண் சிமிட்டி, "ஆமாம், அங்கிள் சாமுக்கு அந்த பார்ட் மட்டும் பிடிக்காது!" என்றான்.

ரிக் தொடர்ந்தார். "இந்த மாதிரி ரொம்ப அட்வான்ஸ்டான ஆடோமேடட் சிஸ்டம் வேற நிதி நிறுவனங்களில கிடையாது. சில எக்ஸ்பர்ட்டுகளை வச்சு மேனுவலாத்தான், சில ப்ரீமியர் வாடிக்கை யாளர்களுக்குத்தான் நிறைய விலைக்குச் செய் வாங்க. ஆனா நாங்க எல்லா வாடிக்கையாளர் களுக்கும் மிகக் குறைச்சல் விலையில இந்த வசதிகள் குடுக்கறோம். அதுனாலதானே, எங்க வாடிக்கையா ளர்கள் பட்டியல் மாசா மாசம் அட்டகாசமா வளர்ந்துகிட்டே போகுது!"

சூர்யா பாராட்டினார். "ரொம்ப பிரமாதம். ·ப்ன்டாஸ்டிக்! ரிக், உங்க தொழில் நுட்ப அறிவும் அதை வியாபரத்துக்குப் பயன்படுத்தற சாமர்த்தியமும் என்னை ரொம்ப வியக்க வைக்குது!"

திடீரென ரிக்கின் முகம் வாடியது. பெருமூச்சுடன், "ஹ¥ம்... ஆனா இந்த மோசடியினால ரொம்ப கெட்ட பேர் வந்துட்டா... சே! என் கிட்ட மட்டும் அந்த திருட்டு ராஸ்கல்கள் கிடைக்கட்டும். திருகியே போட்டுடறேன்!" என்று பொறுமினார்.

சூர்யா சமாதானம் செய்தார். "நான் தான் புடிச்சுடலாம்னு சொல்றேன் இல்லே?! கவலைப் படாதீங்க. சரி, நீங்க சொன்ன படி பாத்தா அந்த மூணு சிஸ்டத்துல ட்ரேடிங்ல மோசடி இல்லை ஆனா மீதி வெல்த், அக்கவுன்ட், மட்டுமில்லாம உள் சிஸ்டத்துலயும் மோசடி செஞ்சிருக்க முடியும் போலிருக்கே?!" என்றார்.

ரிக் திடுக்கிட்டார். கிரணும் வாய் பிளந்தான். இருவரும் கோரஸாக "வாட்?! எப்படி சொல்றீங்க?!" என்றனர்.

சூர்யா , "ரொம்ப ஒண்ணும் விசேஷம் இல்லை... நீங்க சொன்ன மோசடி ரெண்டு விதம்: பென்னி ஷேவிங், அப்புறம் கோஸ்ட் ட்ரேன்ஸேக்ஷன். மாடல் ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்கும் போலிருக்கு. அதுல கை வச்சிருக்க முடியாது. ஆனா அத பயன் படுத்தற சுத்தி இருக்கற ஸா·ப்ட்வேரை மாத்த முடியும்னு தோணுது. கோஸ்ட் ட்ரேன்ஸெக்ஷன் ட்ரேடிங் சிஸ்டத்துல பண்ண வாய்ப்பில்லை. அது வெறும் சிபாரிசு குடுக்குது. ஆனா வெல்த், அக்கவுன்ட் சிஸ்டம் ரெண்டுலயும் வாங்கி விக்கற ரெகார்டுகளைப் போடறதுனால ரெண்டுலயும் பொய் ட்ரேன்ஸேக்ஷன் சேக்க முடியும்."

கிரண் குதித்தான். "ரைட்! பாக்கப் போனா அதுக்கு ஒரு ப்ரோக்ராம்ல மாத்தினாப் போதும். அந்த ரெண்டு சிஸ்டமும் வாடிக்கையாளர்கள் அக்கவுன்ட்ல புது ட்ரேன்ஸேக்ஷன் சேக்கறதுனால, ஒரே ப்ரோக்ராமை தான் அதுக்குப் பயன்படுத்துது. Object Oriented Programming! கண்ணன்தான் Code Reuse-ன்னுட்டு அப்படி பண்ணி வச்சிருக்கான்."

சூர்யா தொடர்ந்தார். "அது மாத்தின மோசடியாளர்களுக்கும் சுலபமாக்கிடுச்சு. ஆனா நமக்கும் கண்டு பிடிக்க கொஞ்சம் சுலபமாக்கும்னு நம்பறேன்."

ரிக், "சரி, ஆனா அது ரெண்டு சிஸ்டம் தானே? மூணு சிஸ்டத்துல மோசடி பண்ணியிருக்க முடியும்னு சொன்னீங்களே?" என்று கேட்டார்.

சூர்யா பதிலுக்கு, "வெல், அது மோசடி வகையைப் பொறுத்தது. பென்னி ஷேவிங் டாலர்ஸ் வகு படற எந்த ஸா·ப்ட்வேர்ல வேணா பண்ண முடியும் இல்லையா? அதுக்கு வேண்டியதெல்லாம் ப்ரோக்ராம் முடியறத்துக்கு முன்னாடி, எதோ ஒரு இடத்துல, பென்னி பின்ன மீதங்களைக் கூட்டி வச்ச சின்ன தொகையை அந்த மோசடி அக்கவுன்டுக்கு சேத்துடணும். அது ட்ரேடிங்ல நடக்கறதா தோணலை. ஏன்னா அது சிபாரிசும், எலக்ட்ரானிக் லிங்க் வழியா அனுப்பறதையும் தான் செய்யுது. கமிஷன் கணக்கு ட்ரேன்ஸேக்ஷனோட சேத்து மீதி ரெண்டு சிஸ்டத்துலதான் நடக்குதுன்னு நினைக்கிறேன்." என்றார்.

கிரணுக்குத் தாங்க முடியவில்லை. "பாஸ், அப்ஸொல்யூட்லி ரைட்! கொன்னுட்டீங்க போங்க! அப்படித்தான் கமிஷன் கணக்கு நடக்குது. ஒரு லைன் code கூட பாக்காம நெத்தியடி அடிச்சிட்டீங்க!" என்று வெடித்தான்!

ஆனால் ரிக்குக்கு இன்னும் குழப்பம் முழுதாகத் தெளியவில்லை. "ஆனா, உள் சிஸ்டம்...?" என்று இழுத்தார்.

கிரண் இடையில் தாவினான். "அது ரொம்ப சிம்பிள் ரிக்! பே-ரோல், அக்கவுன்ட் பேயபிள், அக்கவுன்ட் ரிஸீவபிள் எல்லாத்துலயும் ரொக்கக் கணக்கு வகுக்கறது இருக்கும். அதுல எல்லாத்துலயும் பென்னி ஷேவ் பண்ணியிருக்கலாமே?! அப்படித்தானே நினைக்கறீங்க சூர்யா?!" என்றான்.

சூர்யா புன்னகையுடன் ஆமோதித்தார். "எக்ஸாக்ட்லி. அதுனாலதான் சொன்னேன்."
கிரண், "ஆக மொத்தம், கோஸ்ட் ட்ரேன்ஸேக் ஷனுக்கு ஒரு ப்ரோக்ராம் பாத்தாப் போதும். பென்னி ஷேவிங்க்குக்கு மூணு சிஸ்டம்ல பயன்படற எல்லா ப்ரோக்ராமையும் பாக்கணும். ட்ரேடிங் சிஸ்டத்தைக் கண்டுக்காம கழட்டியே விட்டுடலாம்!" என்றான்.

சூர்யா, "அந்த ரெண்டு மாதிரி மோசடிக்கு ட்ரேடிங்கை பாக்க வேண்டாம். ஆனா வேற எதாவது மாதிரி செஞ்சிருக்காங்களான்னு அப்புறம் நோண்டிப் பாக்க வேண்டியிருக்கலாம்." என்றார்.

ரிக் மித மிஞ்சிய வியப்புடன், "ஸ¥பர்ப் சூர்யா! நாங்க கொஞ்சம் சொன்னதை மட்டும் வச்சு கிட்டே இவ்வளவு தெளிவு படுத்திட்டீங்க! இன்னும் பாதுகாப்புக் குழு, ஸா·ப்ட்வேர் குழு ரெண்டு கிட்டயும் பேசிட்டீங்கனா, ஒட்டு மொத்தமா பிடிச்சிடுவீங்க! எனக்கு இப்ப ரொம்ப நம்பிக்கை வந்திடுச்சு!" என்றார்.

கிரண், "அ..., அ..., அ..., நான் சூர்யாவைக் கூப்பிடலாம்னச்சே அவ்வளோ தயங்கினீங்க?! இப்ப குதிக்கறதைப் பாரு!" என்று சீண்டினான்.

ரிக் புன்னகையுடன், "ஏய் கிரண், போதும்! நான் தான் அதுக்கு ஏற்கனவே மன்னிப்புக் கேட்டுக் கிட்டேனே. வாங்க போய் விஷயத்தை தீர்க்கற வேலையைப் பார்க்கலாம்" என்றார்.

அதற்குள் அந்தப் பிரிவினரின் தரைக்கு சேர்ந்து வாசல் அருகே வந்து விடவே, தன் பாட்ஜ் கார்டைக் கதவருகே அசைத்து திறந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே ஒரே களேபரமாக இருந்தது! அது ஒரு விஸ்தாரமான அறை. க்யூப்களோ, உள்ளறைகளோ இல்லை. அறையின் ஒரு மூலையில் ஒரு பிரும்மாண்டமான பாதுகாப்புப் பெட்டகம் இருந்தது. ஆங்காங்கு மேஜைகளும் நாற்காலிகளும் இருந்தன. அவற்றில் சிலர் அமர்ந்து கம்ப்யூட்டர் திரையைக் கூர்ந்து பார்த்த வண்ணம் இருந்தனர். அவ்வப்போது சிவப்பாக ஒரு செய்தி பளிச்சிட்டதும் அவசரமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினர்.

அறையின் ஒரு சுவர் முழுவதும் பெரிய பெரிய கம்ப்யூட்டர் திரைகளில் எழுத்துக்களும், படங்களும் பச்சை, மஞ்சள், சிகப்பு வண்ணங்களில் மினுக்கிக் கொண்டிருந்தன.

அறையின் நடுவில் ஒரு பெரிய மேஜையின் முன் ஒரு நாற்காலியில் காந்தி கண்ணாடி போட்டுக் கொண்டு, நரைத்த கட்டை மீசையுடன் ஆஜானுபாகுவான ஒரு வழுக்கைத் தலையர் அமர்ந்திருந்தார். அவர் மேஜையின் ஒரு மூலையில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் திரை ஒரு ஜெட் விமானத்தின் காக்பிட் கன்ட்ரோல் பேனல் போன்ற ஒரு அமைப்பைக் காட்டியது. அதில் பலப் பல gauge-களும், சார்ட்டுகளும், ட்ரா·பிக் சிக்னல் போன்ற விளக்குகளும் மினுக்கிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்து, அவ்வப்போது அவர் தொலைபேசியிலோ அல்லது இன்னொரு மேஜையிலிருந்தவர்களிடமோ சிறு சிறு வாக்கியங்களாகக் துப்பிக் கொண்டிருந்தார்!

"...அதோ அந்த சான் ·ப்ரான்ஸிஸ்கோ லைன்ல டாஸ் அட்டாக் வரா மாதிரி இருக்கு பாத்தாச்சா?... ஆங்... இங்க பாருங்க இன்னொரு கோஸ்ட் ட்ரான்ஸேக்ஷன்! அந்த டேட்டா புடிங்க..."

அதற்குள் அவர் மேஜைக்கு ரிக், சூர்யா, கிரண் மூவரும் வந்து விடவே குரைப்பதை விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்து எழுந்து ரிக்குடன் கை குலுக்கினார். " ஹை ரிக்! வாங்க வாங்க! எங்க் இப்படி அபூர்வமா..." என்றவர், சூர்யாவையும் கிரணையும் பார்த்து விட்டு பாதியிலேயே கடித்து விழுங்கிக் கொண்டு, ரிக்கைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார்.

ரிக் அறிமுகப்படுத்தினார். "இவர்தான் மைக் ஜான்ஸன். கம்பனியோட சீ·ப் ஸெக்யூரிட்டி ஆ·பீஸர். மைக், உங்களுக்கு கிரணை ஏற்கனவே தெரியும். அவர் சூர்யா. கிரணோட நெருங்கிய நண்பர். ஹை-டெக் கம்பனில எக்ஸக்யூடிவா இருந்துட்டு இப்ப ப்ரைவேட் டிடெக்டிவ் வேலை செய்யறார். அவர் நிறைய ஹை-டெக் கம்பனிகளில நடக்கற மோசடிகளை விசாரிச்சு யார் குற்றவாளின்னு கண்டு பிடிச்சிருக்கார். நாம கொஞ்ச நாளா முயற்சி பண்ணியும் யார் செஞ்சதுன்னு கண்டு பிடிக்க முடியாததுனால கிரண் அவரை அழைச்சிட்டு வந்திருக்கான். இதுல உங்களுக்கு மனஸ்தாபம் எதுவும் இருக்காதுன்னு நம்பறேன்!" என்றார்.

மைக் ஜான்ஸன் அட்டகாசமாக சிரித்தார். "மோர் த மெர்ரியர் ரிக், மோர் த மெர்ரியர்! இத்தனை ஆயுதங்களையும் வச்சு கிட்டு என்னால கண்டுபிடிக்க முடியலைங்கறது எனக்கு அவமானமாத்தான் இருக்கு! ஆனா இவ்வளவு நாள் தேடியும் முடியலைங்கறப்போ, இது கம்ப்யூட்டர் செக்யூரிட்டி யால கண்டுபிடிக்க முடியறா மாதிரித் தெரியலை. மனுஷங்களை குடாய்ஞ்சுதான் கண்டுபிடிக்கணும்! இந்த நிஜ உலகத் துப்பறிவாளர் சூர்யாவின் உதவியை நான் ரொம்பவே வரவேற்கிறேன்." என்று கூறி சூர்யாவின் கையைப் பிடித்து நசுங்கிவிடும் படி அழுத்திக் கை குலுக்கினார்.

சூர்யா வலி நீங்க கையை உருவி விட்டுக் கொண்டே பேசிய முதல் சில வார்த்தைகள் மைக் ஜான்ஸனுக்கு அவர் வாழ்நாளிலேயே பெற்றிராத அதிர்ச்சியை அளித்தன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline