Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஒரு பனிநாள் விவாதங்கள்
பொழுதுகள் விடியட்டும்!
- S.L.V. மூர்த்தி|ஏப்ரல் 2018|
Share:
மதுரை தியாகராஜர் எஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டல். சரவணனுக்குத் தூக்கமே வரவில்லை. அவன் கம்ப்யூட்டர் சயன்ஸ் இறுதியாண்டு படிக்கிறான். நாளைக்கு டி.சி.எஸ். கம்பெனி கேம்பஸ் செலக்‌ஷனுக்கு வருகிறார்கள். ரிட்டன் டெஸ்ட், குரூப் டிஸ்கஷன், நேர்காணல் என்று மும்முனை வடிகட்டல். ஆரம்பச் சம்பளமே இருபத்தி ஐயாயிரம் ரூபாய்.

அப்பா வீரபாகுவுக்குத் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஃபர்னிச்சர் கடையில் மேனேஜர் வேலை. நாற்பது வருஷ அனுபவம். சம்பளம் பத்தாயிரம்தான். முதலாளி அப்துல் காதர் அங்கிளையும் குற்றம் சொல்லக்கூடாது. அவர் வியாபாரத்துக்கு இதற்குமேல் தரக் கட்டுப்படியாகாது. "வீரபாகு, வீரபாகு" என்று அப்பாவைத் தம்பிபோல் அன்போடு நடத்துவார். அப்பாவிடம் முழுப் பொறுப்பையும் தந்துவிட்டார். காலையிலும், மாலையிலும் ரெண்டு மணி நேரம் மட்டுமே கடைக்கு வருவார். கடைச்சாவி அப்பா கையில்தான். அப்பா காலை ஒன்பது மணிக்குக் கடை திறப்பார். ராத்திரி எட்டு மணிக்கு மூடுவார்.

அப்பாவுக்குச் சின்ன வயசு முதலே ஆஸ்த்மா பிரச்சனை. அதுவும், மழைக்காலம் வந்துவிட்டால், லொக் லொக் என்று இருமுவார். மூச்சுத் திணறுவார். ஆனால், அவர் லீவு எடுத்து சரவணன் பார்த்ததே கிடையாது. அம்மா பாஞ்சாலி அடிக்கடி சொல்லுவாள், "இவரு தலையில்தான் கடை ஓடுகதாப் பிள்ளைவாள் நெனப்பு."

சரவணனுக்கு இப்போது ஒரே ஒரு ஆசைதான் – நாளைக்கு டி.சி.எஸ். செலக்‌ஷன் ஆகிவிடவேண்டும். முதலில் திருவனந்தபுரத்தில் டிரெய்னிங். அது முடிந்தவுடன், பெரும்பாலும் சென்னையில் போஸ்ட்டிங். படிப்புக்காக அப்பா வங்கியில் வாங்கியிருக்கும் படிப்புக் கடன் தவணையைத் தவறாமல் கட்டவேண்டும். சென்னையில் சிங்கிள் பெட்ரூம் வாடகைக்கு எடுக்கவேண்டும். அப்பாவைக் கடை வேலையை விடச் சொல்லவேண்டும். அப்பா, அம்மாவைச் சென்னைக்குக் கூட்டிக்கொண்டுவந்து தன்னோடு தங்கச் சொல்லவேண்டும். சனி, ஞாயிறுகளில் அவர்களை மெரீனா பீச், சத்யம் தியேட்டர், சரவண பவன் சாப்பாடு என்று அழைத்துப்போகவேண்டும். அப்பாவும், அம்மாவும் இதுவரை எதையுமே அனுபவித்ததில்லை. அவனுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள். அந்தத் தியாகத்துக்கு அவனுடைய சிறிய நன்றிக்கடன்.

டி.சி.எஸ். சாஃப்ட்வேர் எஞ்சினியர் ட்ரெய்னீ வேலை, வீரபாகு, பாஞ்சாலி வாழ்க்கையில் வசந்தம். சரவணன் காத்திருக்க வேண்டியதெல்லாம் ஒரு நாள், ஒரே ஒரு நாள்.

*****


ஐந்து வருடங்களாக ரவி காத்திருக்கும் அந்தப் பொன்னான நாள் நாளை புலரப்போகிறது. நடந்ததை நினைத்துப் பார்த்தால், கனவுபோல் இருக்கிறது. சென்னை வெங்கடேஸ்வரா எஞ்சினியரிங் காலேஜில் படித்தது, ஜார்ஜியா யூனிவர்சிட்டியில் அட்மிஷன் வாங்கியது, ஆப்பிள் கம்பெனி வேலை. ஐஃபோன் தயாரிப்புக்காகச் சீனாவில் இரவும், பகலுமாக உழைத்தது. யாராவது ஐஃபோன் உபயோகித்தால், அவன் மனசுக்குள் பெருமை பிரவாகமெடுக்கும், 'என்னுடைய ஏராளம் தூக்கமில்லாத ராத்திரிகள், வியர்வை, உழைப்புத்தான் இப்போ உங்கள் சந்தோஷம்.' கம்பெனியும் அவனை நன்றாகக் கவனித்துக்கொண்டது. கைநிறையச் சம்பளம், போனஸ், கம்பெனி ஷேர்கள். சேர்ந்த சில மாதங்களிலேயே கிரீன் கார்டுக்கு ஸ்பான்சர் செய்தார்கள். கிரீன் கார்டு வந்து இன்றோடு ஐந்து வருஷங்களாகிறது. நாளைமுதல் அமெரிக்கக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ரவியின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. அம்மா, அப்பா இரண்டு பேருமே வேலை பார்த்தார்கள். வேலை, அது தொடர்பான பயணம், கிளப், நட்பு வட்டம், பார்ட்டி என்று விசாலமான வட்டம். இதில், மகன் தவிர்க்கமுடியாத இணைப்பு. பாட்டியோடுதான் அதிக நேரம் செலவிட்டான். அப்பா அம்மாவோடு நெருக்கமான பிணைப்பு இல்லை. ஆகவே, பிறந்த நாட்டுக் குடியுரிமையை இழக்கிறோமே என்னும் ஒருவிதக் குற்ற உணர்ச்சி தவிர, வேறு தனிப்பட்ட சோகங்கள் இல்லை. அதே சமயம், அமெரிக்கனாகும் நாளுக்காக அவன் ஏங்கியிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் – சந்தியா.

பங்களூரு போய்க் கொண்டிருந்தபோது, சதாப்தி ரெயிலில் பக்கத்துப் பக்கத்து சீட்கள். குசல விசாரிப்பு. பிறகு அடிக்கடி சந்திப்பு. சந்தியா ரவியைக் கவர முக்கியக் காரணம், அவள் தனித்துவம். இலக்கியம், ஓவியம் என்று வித்தியாச ஈடுபாடுகள். "படம் வரைவேன்" என்று சொன்னாள். ஏதோ கிறுக்கலாக இருக்கும் என்று நினைத்தான். பார்த்தான், பிரமித்தான். கண்களில் ஒற்றிக்கொள்ளும் அழகு. அப்போது கவிழ்ந்தவன்தான். "ஐ லவ் யூ" சொன்னான்.

அமெரிக்காவில் படிப்பை முடித்து வேலை கிடைத்தவுடன் கல்யாணம், ஃப்ரீமான்ட்டில் தனிக் குடித்தனம் என்று வாக்குத் தந்தான். அப்போது தெரியாது, அவன் ஆசை ஆசையாக வாங்கிய கிரீன் கார்ட் பூஜைவேளைக் கரடியாக இருக்குமென்று. கிரீன் கார்ட் இருந்தால், மனைவியைக் கூட்டிக்கொண்டு வர முடியாதென்று தெரிந்தது. சந்தியா காத்திருக்கத் தயாராக இருந்தாள்.

இப்போது கவுன்ட் டவுன் ஸ்டார்ட்டட். சிட்டிசன்ஷிப் அப்ளிக்கேஷன், அமெரிக்கன் பாஸ்போர்ட், இந்தியா விசிட், திருமணம், தம்பதிகள் அமெரிக்கா வருதல், தனிக் குடித்தனம். ரூம் ரூமாக சந்தியாபெயின்டிங்க்ஸ். அத்தனைக்கும், நாளைக்கு அட்டகாச ஆரம்பம்.

*****


துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் – முத்தையா கந்தசஷ்டி கவசத்தை ராகத்தோடு பாடத் தொடங்கினார். நல்ல பக்தர்தான். ஆனால், சமாளிக்கவே முடியாத பிரச்சனைகள் வரும்போது மட்டுமே, கையறுநிலையில் கந்தசஷ்டி கவசம் படிப்பார். இப்போது அப்படி ஒரு சூழ்நிலை.

அல்லல் படுத்தும் அடங்காமுனியும்,
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளி வாய்ப்பேய்களும் குறளைப்பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்சசரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட...

என்னும் வரிகளைப் பாடும்போது, முத்தையா குரலில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. இரண்டு கொள்ளிவாய்ப் பிசாசுகள் அவர் கண் முன்னால் வந்து ஊழிக் கூத்தாடினார்கள். ஒன்று ஆண், இன்னொன்று பெண். ஆண், அவர் தம்பி அருணாச்சலம். பெண், தங்கை மீனா.
ஒரு நிமிடம். கந்தசஷ்டி கவச வரிகளையே மறந்தார். "படு பாவிங்களா, உங்களுக்கு என்னவெல்லாம் உதவி செய்திருக்கேன்? ஏமாத்திட்டீங்களே?"

முத்தையா சொந்த ஊர் செட்டிநாட்டில் கானாடுகாத்தான். அப்பா முருகப்பன் நகைக்கடன் பிசினஸ். சூதுவாது தெரியாதவர். வசதியான வாழ்க்கை. அவர் போதாத காலம். மச்சான் ஆனந்தனோடு கூட்டுச் சேர்ந்தார். முருகப்பனுக்குத் தெரியாமல், மச்சான் நகைகளைத் திருடினார். சினிமா தயாரிப்பில் இறங்கினார். பணம் கரைந்தது. அடகு வைத்தவர்கள் நெருக்கினார்கள். முருகப்பன் மானஸ்தர். நிலபுலங்கள், பாரம்பரிய மரச் சாமான்களை விற்றார். போதவில்லை. வீடு ஜப்திக்கு வந்தது. மனைவி வள்ளி, சின்னக் குழந்தைகள் முத்தையா, அருணாச்சலம், மீனா ஆகியோரைத் தவிக்கவிட்டு, முருகப்பன் அகால மரணம்.

வள்ளி பக்கத்துப் பள்ளத்தூரில் குடியேறினார். கணவர் நல்ல குணத்தால் குடும்பத்துக்கு வந்த கறையைத் துடைக்கும் வெறி, ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப்போட்டுச் செலவழிக்கும் சிக்கனம். முத்தையா எஞ்சினியரிங் டிப்ளமா படித்தார். சென்னையில் வேலை கிடைத்தது. தம்பி, தங்கைகளைப் படிக்கவைத்தார். தம்பி ஆடிட்டர். தங்கை ஆங்கில இலக்கியப் பட்டதாரி. கல்லூரி லெக்சரர். இந்தக் கடமைகள் முடிந்தபிறகுதான் முத்தையா திருமணம் செய்துகொண்டார். அடுத்து, தம்பி, தங்கைகள் திருமணந்தையும் நடத்தினார். மூத்த மகன் பொறுப்புணர்ச்சி, குடும்பம் தலைதூக்கிய மனத்திருப்தி, வள்ளி மனதில்.
அம்மாவின் கடைசி நிமிடங்கள். நிறைவேறாத ஆசை அவருக்கு இருப்பது வாரிசுகளுக்குத் தெரிந்தது. கணவரோடு வாழ்ந்த கானாடுகாத்தான் வீட்டை வாங்கும் ஆசை. நிறைவேற்றுகிறேன் என்று முத்தையா சத்தியம் செய்துகொடுத்தார். அத்தனை பணம் இந்தியாவில் இருந்தால் சேமிக்க முடியும் என்னும் நம்பிக்கை இல்லை. யார் யார் உதவியையோ வாங்கினார். அமெரிக்கா வந்துவிட்டார். நல்ல வேலையும் கிடைத்தது.

ஆறு வருடங்களுக்கு முன்னால், கானாடுகாத்தான் வீட்டை வாங்கிவிட்டார். தம்பியும், தங்கையும் பைசாகூடத் தரவில்லை. மொத்தமும் முத்தையா உழைத்துச் சம்பாதித்த டாலர்கள். ஆனால், சில மாதங்களிலேயே, தம்பி அருணாச்சலம் அங்கே வாடகை இல்லாமல் குடியேற விரும்பினார். முத்தையா சம்மதித்தார். தொடங்கியது பிரச்சனை. தங்கை மீனாவும் அங்கே தங்க விரும்பினார். அருணாச்சலம் மறுத்தார். உரசல் ஆரம்பம். முத்தையா ஊருக்குப் போனபோது, அவருக்கே அவர் வீட்டில் தங்க முடியவில்லை. தம்பி ஊரிலேயே இருந்ததால், அவருக்குப் பல அரசியல் தொடர்புகள். இதற்கு நடுவில் ஒரு ஆச்சரியம். தங்கை மீனாவுக்கு ஏதோ பணம் கொடுத்து அருணாச்சலம் சரிக்கட்டினார். இப்போது இருவரும் முத்தையாவுக்கு எதிராக...

முத்தையாவுக்கு வேறு வழி தெரியவில்லை. வீட்டைக் காலி செய்யுமாறு தம்பிக்கு நோட்டீஸ் விட்டார். தம்பி மசியவில்லை. கீழ்க் கோர்ட், மேல் கோர்ட் என்று இழுத்தடிப்பு. இப்போது ஹைகோர்ட்டுக்கு வழக்கு வந்துவிட்டது. நாளை தீர்ப்பு. 'காக்க, காக்க, கனகவேல் காக்க' என்று மனமார முத்தையா வேண்டிக்கொண்டார்.

*****


"உங்கள் மகன் கெவின் மயக்கம் போட்டு விழுந்துட்டான். உடனே வாருங்கள்.'

சான் ஹோசே பேக்கர் பள்ளியிலிருந்து ஜூலிக்கு வந்தது ஃபோன். காஸ்ட்கோ கடையில் கஸ்டமர்கள் கலைத்துப்போட்டிருந்த ஜீன்ஸ்களை மடக்கிவைத்துக்கொண்டிருந்த ஜூலி பதறினாள். சூப்பர்வைசரிடம் ஓடினாள். பெர்மிஷன் வாங்கிகினாள். பேக்கரை நோக்கிக் காரில் பறந்தாள். மனம் முழுக்கப் பதட்டம்.

கெவின் ஜூலியின் எட்டு வயது மகன். மகன் மட்டுமல்ல, நிகழ்காலச் சந்தோஷம், எதிர்கால நம்பிக்கை எல்லாமே அவன் மட்டும்தான். மைக்கலோடு நடந்த காதல் திருமணத்தின் நினைவுச் சின்னம். மைக்கலுக்குப் பிடிக்காத விஷயம் வேலை பார்ப்பது என்று கல்யாணம் நடந்த சில மாதங்களிலேயே ஜூலிக்குத் தெரிந்தது. ஒரு இடத்திலும் தொடர்ந்து வேலை பார்ப்பது கிடையாது. சீட்டைக் கிழித்துவிடுவார்கள். கெவின் பிறந்தபிறகு இருவருக்கும் அடிக்கடி சண்டை. ஒருநாள் காலை பயங்கர வாக்குவாதம். மாலை ஜுலி வீடு திரும்பியபோது, மைக்கல் வீட்டில் இல்லை. அன்று போனவன் திரும்பி வரவேயில்லை. "சிங்கிள் மதர்" என்னும் பட்டத்தோடு ஜூலி கெவினை வளர்த்துக்கொண்டிருக்கிறாள்.

கழிந்த மூன்று நாட்களாகக் கெவின் தலைவலி என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஹோம் ஒர்க் செய்யாமல் இருக்க அவன் செய்யும் பாசாங்கு என்று முதலில் நினைத்தாள். இப்போது தோன்றுகிறது, உடனேயே அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும்.

மனம் முழுக்கப் பிரார்த்தனை. "கர்த்தரே, குழந்தைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் காப்பாற்றும்."

ஸ்கூலுக்குள் ஓடினாள். அங்கே, கெவின் சிரித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் மேரி டீச்சர்.

"'மயங்கி விழுந்தவுடனே முகத்தில் தண்ணீர் தெளிச்சோம். கண் முழிச்சிட்டான். ஆனா, சோர்வா இருக்கான். தலைவலி இருக்குதாம். எதற்கும் டாக்டர் கிட்டே காட்டிடுங்க."

கனிவோடு சொன்னார் மேரி.

ஜூலி ஆஸ்பத்திரிக்குக் காரை ஓட்டினார். செக்கப். அட்மிஷன். பலமணி நேரம். ரத்தப் பரிசோதனைகள், தலை, உடல் ஸ்கேன்கள்.

நர்ஸ் வந்து சொன்னார், "மேடம், பையன் மூளையில் ஒரு கட்டி இருக்கு. பயப்படாதீங்க. அது சாதாரணக் கட்டியாக்கூட இருக்கலாம். அப்போ, மருந்து குடுத்தாப் போதும்."

"சாதாரணக் கட்டியா இல்லைன்னா?"

"சர்ஜரி பண்ணவேண்டியிருக்கும். மனசைக் குழப்பிக்காதீங்க. சீஃப் வந்தவுடனே ரிப்போர்ட்ஸைப் பர்ர்த்துட்டு, உங்களுக்கு விவரமாச் சொல்லுவார்."

"சீஃப் எப்போ வருவார்?"

"நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு வருவார். அவருக்கு ஒரு சர்ஜரி இருக்கு. அது முடியப் பத்து மணியாகும். உங்களுக்குப் பத்தரை மணிக்கு முதல் அப்பாயின்ட்மெண்ட் போடறேன்."

"தாங்க் யூ வெரி மச்."

மனம் முழுக்கக் கவலை. பதில் நாளை கிடைக்கும்.

*****


கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை. சரவணன், வீரபாகு, பாஞ்சாலி, ரவி, சந்தியா, முத்தையா, ஜூலி, கெவின் இவர்களுக்குப் பொழுதுகள் இனிதாக விடியட்டும். நாளை என்பது ஒரு நம்பிக்கைதானே!

S.L.V. மூர்த்தி,
மௌன்டன்வியூ, கலிஃபோர்னியா
More

ஒரு பனிநாள் விவாதங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline