Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
அவலநிலை அல்ல, அமோகம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்|ஜனவரி 2017|
Share:
அன்புள்ள சிநேகிதியே

என்னுடைய சோகக்கதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இத்தனை துக்கத்தையும் தாங்கிக்கொண்டு எப்படிச் சமாளிக்கிறேன் என்று நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என் பிரச்சனையைத் தீர்க்க உங்களால் என்ன முடியும் என்று தெரியவில்லை; அந்த அளவிற்கு எனக்குச் சோதனைகள். கடவுள் என்னை அழகாகப் படைத்தார். அறிவாளியாகப் படைத்தார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செல்லப்பெண். ஒரு அக்கா. நான் சிறியவளாக இருக்கும்போதே கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விட்டாள். பிரிந்தாலும் என்மீது அப்பா, அம்மா பாசம் காட்டுவதைப் பார்த்துப் பொறாமைப்படுவாள். இரண்டு அண்ணன்கள். நான் வளரும்போதே 'அங்கே போகாதே; இங்கே இருக்காதே' என்று சதா கன்ட்ரோல் பண்ணிக்கொண்டே இருப்பார்கள். ஒரு தங்கை. நிறைய வயது வித்தியாசம். அவள் வளரும்போது நான் ஹாஸ்டலில் வெளியூரில் படித்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் காலத்தில் பெண்கள் எஞ்சினியரிங் படிப்பதென்பது மிகக்குறைவு. நான் படித்து முடிக்கும் காலத்தில் ஆண்கள் என்னைப் பின்தொடர்வார்கள். ஒழுங்காகப் படிக்கவிடாமல் காதல், அது, இது என்று பேசுவார்கள். எப்படியோ அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட, எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை என் அப்பா, அம்மா சம்மதத்துடன் கல்யாணம் செய்துகொண்டேன். (அவரும் என்னைக் காதலித்தவர்தான்). நான் அவரைவிட நிறையச் சம்பாதித்தேன். ஆகவே பணத்தட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. எங்களுக்கு ஒரே பையன். அவனுக்கு ஐந்து வயதாகும்போது என் கணவர் மிடில் ஈஸ்ட்டுக்கு வேலைக்குப் போனார். நான் single parent ஆக இருந்து, வேலை பார்த்துக்கொண்டே என் பையனைப் பல வருடம் வளர்த்தேன். என் கணவரிடம் பலமுறை சொல்லிப் பார்த்தேன் இந்தியா திரும்பும்படி. ஆனால், அவர் கேட்கவில்லை. என்றைக்குமே என் சொல்படிக் கேட்பது கிடையாது. இந்த ஆண்கள் எல்லாருமே காதலிக்கும்போது அப்படிக் கெஞ்சுகிறார்கள். பிறகு அப்படியே 'உல்டா' அடிக்கிறார்கள். பையன் காலேஜ் போகும் சமயத்தில் எப்படியோ ஒருமாதிரி திரும்ப வந்து சேர்ந்தார். வந்தவுடன் பயங்கரக் குடிப்பழக்கம். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். இதற்கிடையில் என் அப்பா திடீரென்று ஹார்ட்-அட்டாக்கில் போய்விட்டார். அம்மாவையும் தங்கையையும் என்னிடம் கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். அண்ணன்மார்களால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவரவர்கள் கல்யாணம் செய்துகொண்டு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என்று செட்டில் ஆகிவிட்டார்கள். அப்பா இறந்தபோதுகூட மனைவிகள் யாரும் வரவில்லை. அண்ணன்கள் வந்து சொத்து பத்தை நோட்டம் பார்த்துவிட்டு முதலைக் கண்ணீர் வடித்துவிட்டுப் போனார்கள். தங்கையை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். ஆனால் அவள் பி.எஸ்சி. முடித்து காதல் கல்யாணம் செய்துகொண்டாள். எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. என்ன செய்வது? ஒரு அக்கா தன்னை வளர்த்து ஆளாக்கியிருக்கிறாளே என்ற நன்றிகூட இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். வேறு வழியில்லாமல் அவர்கள் வீட்டு ஜாதி முறைப்படித் திருமணம் செய்துவைத்தேன். என் அம்மாவின் அத்தனை நகைகளையும் அவளே வாங்கிக்கொண்டாள். என் பையன் மேலே படிக்க அமெரிக்கா போனான். அவனுக்குப் படிப்பு முடிந்து டிகிரி வாங்கும் சமயத்தில் நான் போக ஆசைப்பட்டேன். டிக்கெட் எடுத்து எல்லாம் தயாராக இருக்கும்போது அம்மா அசதியில் படுத்தார்கள்; அப்படியே போய்விட்டார்கள். என் அதிர்ஷ்டத்தைப் பாருங்கள். என்ன செய்வது? அதன் பின் போகக் கைகூடி வரவில்லை.

அடுத்த வருடம் போகலாம் என்று பார்த்தால், என் அருமை மகனே வேலை எடுத்துக்கொள்ளும் முன்பு இந்தியா வந்தான். ஒரு ஐடியாவுடன்தான் வந்திருக்கிறான். அவன் பள்ளிக்கால ஸ்வீட் ஹார்ட்டாம்! என் கை, காலைப் பிடித்துக் கெஞ்சினான். அந்தக் குடும்பம் என் கணவர் வகையில் சொந்தக்காரர்கள்தான். ஒரு மாதிரியானவர்கள். எனக்கு அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது. அவர்கள் வீட்டுப் பெண்ணைக் கட்ட எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனால், அப்பாவும் பிள்ளையும் ஒன்று சேர்ந்துகொண்டார்கள். என் பையனுக்கு எவ்வளவோ பெரிய பெரிய இடத்திலிருந்தெல்லாம் பெண் கேட்டு வந்தார்கள். அதை நான் யாரிடமோ சொல்லிவிட்டேன் என்று மருமகளும் அவள் குடும்பமும் கோபித்துக்கொண்டார்கள். நான் உண்மையைச் சொன்னதற்கு அந்தச் சின்னப்பெண் என்னிடம் அவ்வளவு சண்டை போட்டாள். அமெரிக்கா போய்க் குடித்தனம் வைக்க அந்த அம்மாள் கிளம்பிப் போனார்கள். பையனைப் பெற்றவளாக என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு வருடம் கழித்து என் பையன் மெள்ளக் கூப்பிட்டான். "நான் உப்புப் போட்டுச் சாப்பிடுகிறேன் எனக்கு ரோஷமிருக்காதா?" என்று கேட்டேன். நான் அப்போது போகவில்லை. என் கணவருக்குப் போகவேண்டுமென்று ஆசை. போன வருஷம் பேரன் பிறந்தான். அதைச் சாக்கிட்டு, என்னை ஒரு மாதிரி கன்வின்ஸ் செய்து என் கணவர் அமெரிக்கா கூட்டிக்கொண்டு போனார். இரண்டு மாதம்தான் இருந்தோம். அங்கே போயும் சமையல் அறையைத்தான் கட்டி ஆளவேண்டி இருந்தது. மருமகள் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குளிர் தாங்க முடியவில்லை. கிளம்பி வந்துவிட்டோம்.

இந்த வருடம் குழந்தைக்கு முடி கொடுத்து, காது குத்த நேர்ந்துகொண்டு அவர்கள் இந்தியா வந்தார்கள். எல்லாரும் ஒன்றாகக் கோயிலுக்குப் போனோம். பையன் பத்து நாளில் திரும்பிப் போனான். மருமகள் ஒரு மாதம் லீவு எடுத்து அவள் அம்மா வீட்டிலேயே இருந்தாள். அந்த நேரத்தில் என் கணவருக்கு மிகவும் உடம்பு சரியில்லாமல் போய், பெரிய பிரச்சனை என்றார்கள். நீங்களே சொல்லுங்கள், குடியால்தானே இதெல்லாம் வருகிறது? ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து பதினைந்து நாள் நான் தன்னந்தனியாக அப்படி அவதிப்பட்டேன். முடிவில் போய்ச் சேர்ந்தார். என் பையன் மீண்டும் லீவு போட்டுவிட்டு இந்தியா வந்தான். இரண்டு, மூன்று நாட்கள்தான் தங்கினான். என்னை வரசொல்லிவிட்டுக் கிளம்பிப் போய்விட்டான். நான் தன்னந்தனியாக நிற்கிறேன். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வியாதியை வரவழைத்துக் கொண்டு என்னை நடுக்கடலில் விட்டுவிட்டுப் போய்விட்டார், என் கணவர். எனக்கு வாய்த்த மருமகளோ, 'வசதிப்படும் என்றால் வாருங்கள். உங்கள் மகன் உங்களை அழைத்துவரச் சொன்னார்' என்று கடமைக்காக அழைத்தாள். 'வேண்டாம் தாயே' என்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு இங்கேயே தங்கி விட்டேன். தனிமைதான் வாழ்வில் மிஞ்சி நிற்கிறது.

பையன் அமெரிக்கா போனபோது எப்படியும் அவனுடன் இருக்க வேண்டும் என்று வேலையை ரிசைன் செய்திருந்தேன். கன்சல்டன்ஸி ஒன்றிரண்டு செய்து கொண்டிருந்தேன். அதுவும் இப்போது முடியவில்லை. மனதில் ஒரு போராட்டம். என் கணவர் இறந்துபோனபோது துக்கத்துக்கு வந்துபோனவர்கள், திரும்ப என்ன, எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. எல்லோருக்கும் எவ்வளவோ செய்திருக்கிறேன். கடவுள் நம்பிக்கை அவ்வளவு உண்டு. யாருமே உதவிக்கு வரவில்லை. என் தனிமையைப் போக்க நாயை வளர்க்கிறேன். அதுதான் பாசத்தைக் கொட்டுகிறது. ஒரு வேலைக்காரி இருக்கிறாள், பரவாயில்லை. இந்தப் புயல் சமயத்திலும் வந்து வேலை செய்துவிட்டுப் போனாள். நாயைப் பார்த்துக்கொள்ள ஒரு பையன் உதவிக்கு இருக்கிறான். இப்படியே போய்க் கொண்டிருக்கிறது. நடக்க முடியவில்லை. ஆர்த்ரைடிஸ். வெளியில் அதிகம் போக முடியவில்லை. எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள். என் வாழ்க்கை மட்டும் காலியாக இருக்கிறது. மனிதர்களிடம் அப்படி ஒரு ஏமாற்றம் .போன வருஷம் அமெரிக்கா வந்தபோது கிடைத்த தென்றல் இதழ்களை ஆர்வமாகப் படித்தேன். அதனால் உங்களுக்கு எழுதுகிறேன். என்னைப் போன்ற சோதனைகளைச் சந்திக்கிற நொந்துபோன உள்ளங்களுக்கு உங்களால் எப்படி மருந்துபோட முடியும்?

இப்படிக்கு
...................
அன்புள்ள சிநேகிதியே,

நீங்கள் எழுதிய குறிப்பிலிருந்து உங்களைப் போன்ற பாக்கியசாலிகள் எத்தனைபேர் இருக்கமுடியும் என்று இப்போது யோசிக்கிறேன்.

* அழகு, அறிவு, செல்வத்துடன் பிறப்பு.
* அந்தக் காலத்திலேயே எஞ்சினியரிங் கல்வி கற்கும் வாய்ப்பு.
* ஆசையாக ஆசையாகக் காதலித்து மணம்புரிந்த கணவர்.
* பெயர் சொல்ல ஒரு பிள்ளை.
* அவனும் குடும்பப் பெருமையைப் குலைக்காமல் நன்றாகப் படித்து அமெரிக்காவில் வேலை பார்க்கிறான்.
* கவலைப்பட வைக்காமல் காலாகாலத்தில் கல்யாணம் செய்துகொண்டு, குடும்பம் பெருக ஒரு பேரப் பிள்ளையும் இருக்கிறான்.
* உங்கள்மீது பாசத்தைப் பொழிந்த பெற்றோர்கள்.
* தங்கள் கடமையைச் செய்துகொண்டிருக்கும் சகோதர, சகோதரிகள்.
* வயதான காலத்தில் பணப்பிரச்சனை இல்லாத நிலைமை.
* பாசம் காட்டும் நாய்.
* பார்த்துக்கொள்ள வேலைக்காரர்கள்.
* சுதந்திரமாகச் செயல்பட முடிந்த வாழ்க்கை.

இன்னும் நிறைய என் மனதிற்குத் தோன்றுகிறது. நீங்கள் பிறருக்கு என்ன குறிப்பாகச் செய்தீர்கள் உங்கள் சக்தியையும் மீறி என்பது தெளிவாகப் புரிபடவில்லை. செய்திருக்கலாம். இருந்தாலும் நாம் பிறருக்குச் செய்ததை மணலிலும், பிறர் நமக்குச் செய்ததைக் கல்லிலும் எழுதி வைத்தால், நமக்கு நன்றி சொல்பவர்களைவிட நாம் நன்றி சொல்பவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். நன்றி சொல்லச் சொல்ல உறவின் தன்மைகள் உற்சாகமாக இருக்கும். அவலநிலை என்ற எண்ணம் போய் அமோக நிலையில் இருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் இருப்போம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்
Share: 




© Copyright 2020 Tamilonline