Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
விஜயா டீச்சர்
வீட்டுக்கு வந்த இசைக்குழு
தேவைகள்
- பூர்ணிமா செண்பகமூர்த்தி|நவம்பர் 2014|
Share:
"போதும் நீ அவரோடு பேசிட்டு இருந்தது. நீ இங்கே நிக்கிறத யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க?" சசி கேட்டாள்.

"என்ன நினைப்பாங்கன்னு எனக்கு தெரியும். என்ன வேணும்னாலும் நினைக்கட்டும்" என்று நான் கூற, அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தோம்.

"இதைக் கண்டிப்பா செஞ்சுதான் ஆகணுமா?" சசி கேட்டாள்.

"ஆமாம், நான் இதைக் கண்டிப்பா செய்யத்தான் போறேன். நாளைக்கு உறுதியா இங்க வரத்தான் போறேன். நான் நினைச்ச மாதிரி எல்லாம் நடக்கத்தான் போகுது!"

"எதுக்கும் அம்மா, அப்பா கிட்ட ஒரு வார்த்தை இதைப்பத்தி பேசிடுடி, அவங்க என்ன சொல்வாங்களோ!"

"அவங்ககிட்ட பலமுறை சொல்லியும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க, இதுக்குமேல் அவங்களோட என்னால போராட முடியாது."

"நீகூட இதை தடுக்கலையானு அம்மா என்னைக் கேப்பாங்க, எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்குடி."

"அம்மா கேட்டால், உனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்று சமாளிச்சிக்கோ."

"சரி. உன் தங்கச்சிக்கு இது தெரியுமா?"

"அவ சின்னப் பொண்ணுடி, இதெல்லாம் புரிஞ்சிக்கிற பக்குவம் இருக்காது. வேணாம் அக்கான்னு அழுவா. அவளை அப்புறம் சமாதானப்படுத்திக்கிறேன்."

"ம்...நான் சொன்னாலும் நீ கேக்க மாட்டேங்கற, உன் விருப்பப்படி செய்... சரி, நீயா இவ்ளோ வேலை செய்யறியே? அருளுக்கு இதைப்பற்றி தெரியுமா?"

"இல்ல! இன்னும் சொல்லல! சொன்னால், வேணாம்னு சொன்னாலும் சொல்லுவான். நாளைக் காலையில அவனைப் பார்த்து சொல்லிக்கிறேன்."

"சரிடி! நான் வீட்டுக்குக் கிளம்பறேன். நீ பார்த்துப் போ. நான் உனக்கு நாளைக்கு ஃபோன் பண்றேன்."

"சரிடி பை! டேக் கேர்!"

"பை!"

பேருந்தில் ஏறினேன்.. சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் ஜன்னலோர காட்சிகள் போல மனதுக்குள்..

அப்பொழுது நான் டேடாபேஸ் லேப் வாசலில் நின்று கொண்டிருந்தேன். இதே லேபில் ஏற்கனவே எத்தனையோ நாள் நானே உட்கார்ந்து ப்ரோக்ராம் போட்டு இருக்கிறேன். போன செமஸ்டர்வரை நான் பி.இ. கணினியியல் மாணவி. இன்று ஆசிரியை. இந்த லேபுக்கு நான்தான் பொறுப்பு. உள்ளே இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உட்கார்ந்து ப்ரோக்ராம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் அரைமணி நேரம்தான். அப்புறம் கிளம்பிவிடலாம். இப்போது கேம்பஸ் இன்டர்வியூவும் இல்லை, கம்பெனிகளும் ஆள் எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் வேலைக்குக் கூப்பிடுவதில்லை. நல்ல மதிப்பெண் இருந்ததால் நான் அதே கல்லூரியில் எம்.இ. சேர்ந்துவிட்டேன். வகுப்புகள் குறைவென்பதால் மீதி நேரம் ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். இதனால் கல்லூரிக் கட்டணமும் குறைகிறது. படிக்கும்போதே வேலை அனுபவமும் கிடைக்கிறது.

என் புராணம் போதும். நான் எங்கள் துறை ஆசிரியர்கள் இருக்கும் அறையைக் கடந்து அமைதியாக நகர்ந்தேன். அடுத்த மாடிக்கு ஏறிச்செல்லும் வழியில் ஒரு ஓரமாய்ச் சாய்ந்து நின்று, என் கழுத்துச் செயின் டாலரைக் கையில் பிடித்தவாறு நின்றுகொண்டு இருந்தேன். ஒரு பேராசிரியர் என்னைப் பார்த்தவாறு ஆசிரியர்கள் அறைக்குள் சென்றார்.

லேப் முடிந்து எல்லாரும் கிளம்பியதும், நான் வெளி வரும்பொழுது, அருள் நின்று கொண்டு இருந்தான். "அஞ்சு நிமிடம் எனக்காக இங்கே காத்திருக்க முடியுமா?" அருள் தயக்கமாக என்னிடம் கேட்க, நான் "நிச்சயமாக" என்று பதில் சொன்னேன். "இதோ வருகிறேன்" என்றவாறே நேரே வகுப்பறைகளை நோக்கி நடந்து சென்றான். அருளின் மூத்த சகோதரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அதற்கு என்னிடம் இருந்த சேமிப்பான 2000 ரூபாயையும் இரண்டு மாதத்திற்கு முன் அவனுக்குக் கொடுத்துவிட்டேன். என்னால் இயன்றது அதுதான். திரும்பவும் அருள் என்னிடம் பணம்தான் கேட்கப் போகிறானா?

இப்போது அருளுக்கு உதவி செய்ய என்னிடம் போதுமான பணம் இல்லை. அருள் வந்து பணம் கேட்டால் என்ன சொல்வது? வீட்டில் உண்மையைச் சொல்லிப் பணம் கேட்டுவிடலாமா? "நான் என் செயினை வேண்டுமானால் கொடுக்கிறேன், உனது தேவைக்குச் செயினை விற்றுவிடு, நான் பேருந்தில் வரும்போது செயினைத் தவறவிட்டுவிட்டதாக அம்மா, அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறேன்" என்று அருளிடம் சொல்லலாம் என்று நினைக்கையில் அருள் வந்தான்.
அருள் என்னருகில் வர, அவன் கண்களில் கண்ணீரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நான் அவனுக்கு ஆறுதல் சொல்லத் தயாரானேன். அருள் என்னைப் பார்த்து, "இதுவரை நீங்கள் எனது அக்காவுக்காக நிறைய உதவியிருக்கீர்கள்! ஆனால் இப்போது நான் கேட்கும் உதவி...." என்று சொல்லி நிறுத்த, நான் இன்னும் பண உதவி கேட்டால் என்ன செய்வது என்ற சிந்தனையுடன் பதில் சொல்லாமல் விழித்தேன்.

அருளே தொடர்ந்தான், "வர்ற வியாழக்கிழமை, அக்காவோட பிறந்தநாள். அதை எளிமையாக் கொண்டாட விரும்புறோம். யார் வராங்களோ இல்லையோ, நீங்க கண்டிப்பா வரணும்னு அக்கா சொல்லி இருக்காங்க. அதனால நீங்க வரணும்னு உங்களைக் கூப்பிட வந்தேன்!"

"கண்டிப்பா வர்றேன்"

"நீங்க மாலை ஆறு மணிக்கெல்லாம் வந்திடனும்."

"சரி வந்திடறேன்."

"ரொம்ப நன்றி! பார்க்கலாம்!". அருள் கிளம்பிவிட்டான். ஞாபகங்கள் கலைய நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது.

*****


வியாழக்கிழமை..

"என்னடி வெள்ளிகிழமை தானே ஷாம்பூ போடுவ. இன்னிக்கே ஷாம்பூ போட்டுட்ட?" அம்மா கேட்க, "இன்னிக்கு சாயங்காலம் ஒரு தோழியின் பிறந்தநாள் விழாவுக்குப் போறேன்மா," என்றேன்.

"நல்ல 'பளிச்' புடவையா கட்டிட்டுப் போ!"

சரிம்மா என்றேன் களுக்கென்ற சிரிப்புடன்.

"என்ன சிரிப்பு?"

"சும்மாதான் அம்மா!"

சாயங்காலம் அம்மாவின் முகம் எப்படி மாறப்போகுதோ!

*****


நான் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இன்னும் சிலமணி நேரந்தான். மாலையில் மருத்துவமனையை அடைந்தேன். அருளின் பெற்றோர் மிகவும் சந்தோஷமாக வரவேற்றனர். அருளின் அக்காவுக்கும் நான் போனதில் மகிழ்ச்சி என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. பிறந்த நாள் பரிசை நான் வழங்கியபோது, அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

அதைத் திறந்து பார்த்த அவர் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டார்.

அவர் தலைக்கு ஏற்றபடி பொருத்தமான 'விக்' (செயற்கை முடி) அதில் இருந்தது. அதை அவர் கையிலிருந்து வாங்கி நானே தலையில் வைத்துவிட்டேன். "புற்றுநோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட கீமொதேரபியால் முடியெல்லாம் கொட்டிவிட்டது. என் முகத்தைப் பார்க்க எனக்கே பிடிக்கவில்லை என்று நீங்கள் சொல்லி வருந்தியதாக அருள் சொன்னான். அதான் உங்களுக்காக இந்த விக்கைப் பரிசளித்தேன்."

அருளின் அக்கா மிகவும் மகிழ்ச்சியுடன் "பெண்ணின் மனம் பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது உண்மைதான். என் தேவையறிந்து பரிசளித்தீர்கள். ரொம்ப நன்றி. மிக்க மகிழ்ச்சி! அருள் மிகவும் பாக்கியசாலி!" என்றார்.

"இல்லை, இல்லை! அவனைப் போல் நல்ல சகோதரனைப் பெற்ற நீங்கள்தான் பாக்கியசாலி. நான் அவனுக்கு வகுப்பு எடுக்கும் ஓர் ஆசிரியை அவ்வளவுதான். அருள் என்னுடைய துறையில் மூன்றாமாண்டு மாணவன், சென்ற ஆண்டு என் ஜூனியர், இந்த வருடம் என் மாணவன்."

அருள் உள்ளே வந்தான். "வாங்க. என்ன, எங்கக்கா பொறாமைப்படுவாங்கன்னு உங்க நீண்ட முடியைச் சுற்றி ஸ்கார்ஃப் அணிந்து வந்திருக்கீங்களா?" அருள் என்னிடம் கேட்க, "சும்மா இரு அருள். அவங்க எனக்கே விக் வாங்கித் தந்து இருக்காங்க" என்றார் அக்கா.

"அப்படியா? அக்கா, அதுக்குப் பத்தாயிரம் வரை செலவாகும்னு சொன்னதால்தானே என்னால் இதுவரை உனக்கு வாங்க முடியவில்லை.

அக்காவுக்குத்தான் விக் இருக்கே. இப்போ அக்காவுக்கும் முடி இருக்கு. நீங்க உங்க ஸ்கார்ஃபை நீக்கலாமே" என்று அருள் சொல்ல, நான் ஸ்கார்ஃபை நீக்கினேன். முடியில்லா என் தலையைப் பார்த்து அனைவருக்கும் அதிர்ச்சி.

அருள் சுதாரித்து, "உங்க முடியில செஞ்ச விக்கா? உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல" என்றான்.

"ஆமா அருள்! அந்த விக்ல இருக்கிறது என்னோட முடிதான். தெரிஞ்ச ஒருத்தர் இலவசமா இந்த விக்கை உடனே செய்து தந்தார். ஆறு மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்து விக் செய்து தந்த அவருக்குத்தான் நன்றி சொல்லணும். அதுவும் உங்க அக்காவுக்காக இதை நான் செய்யறேன்னு சொன்னதும் முற்றிலும் இலவசமாகச் செய்து தந்திருக்கிறார். நன்றி சொல்லணும்னு நீ நினைச்சால் அவருக்குச் சொல்லு உன் நன்றியை. நான் போயிட்டு வரேன். நேரமாச்சு. அம்மா தேடுவாங்க. ஸ்கார்ஃப் இனி தேவையில்லை!"

சிறகுகள் இழந்த தேவதைக்கு சிறகு கொடுத்த தேவதையாய் அருளின் கண்ணுக்கு அவள் தெரிய கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தாள் சாரதா.

பூர்ணிமா செண்பகமூர்த்தி,
மேற்கு லஃபாயெட், இண்டியானா
More

விஜயா டீச்சர்
வீட்டுக்கு வந்த இசைக்குழு
Share: 




© Copyright 2020 Tamilonline