Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
சோம்பேறி ராமன்
- சுப்புத் தாத்தா|நவம்பர் 2008||(1 Comment)
Share:
ஒரு ஊரில் ராமன் என்றொரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். வசதியான குடும்பம் அவனுடையது. ஆனால் 'குந்தித் தின்றால் குன்றும் மாளும்' என்பதற்கேற்ப அவனுடைய சொத்துக்கள் எல்லாம் சீக்கிரத்திலேயே கரைந்து போயின. அவன் வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் சோம்பேறி ராமனுக்கு அது பிடிக்கவில்லை. எந்த வேலையும் செய்யாமல் சுகபோக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நினைத்தான்.

அந்த ஊருக்கு அருகில் ஒரு காடு இருந்தது. அதில் பல ரிஷிகள் தவம் செய்து வந்தனர். அவர்களை தரிசித்து, வரம் பெற்றுச் சுகமாக வாழ்க்கை நடத்துவது என்று தீர்மானித்த ராமன் காட்டை நோக்கிப் புறப்பட்டான்.

அடர்ந்த காட்டின் நடுவே ஒரு முனிவரைக் கண்டான். சாந்தமே வடிவான அவர் மான்களுக்கு உணவிட்டுக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் வணங்கிய ராமன், தான் உடனடியாகப் பணக்காரன் ஆகவேண்டும் என்றும், அதற்கு அவர்தான் உதவ வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். முனிவரோ அதனை மறுத்தார். உழைத்தால் தான் உயர்வு என்று அறிவுரை கூறினார். ஆனால் ராமன் ஒப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது அவர் உதவ வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தான் மலைமீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ளப் போவதாகவும் கூறினான்.

இறுதியில் மனம் இளகிய முனிவர் தனது சக்தியின் மூலம் ஒரு மாய மோதிரத்தை வரவழைத்தார். அதை ராமனின் கையில் தந்த அவர், "அப்பா, நீ நினைப்பதை எல்லாம் நிறைவேற்றித் தரும் மாய மோதிரம் இது. ஆகவே ஜாக்கிரதையாக இதைப் பயன்படுத்து. எண்ணம் போல்தான் வாழ்வு. ஆகவே நல்லதை நினை. நல்லதே செய்" என்று அறிவுரை கூறி வழியனுப்பினார்.

மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட ராமன் உடனடியாக அதைப் பரிசோதித்துப் பார்த்து விடுவது என முடிவு செய்தான். ‘நான் என் வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என மனதுள் நினைத்தான். அடுத்த கணம் அவன் தன் வீட்டில் இருந்தான். ராமனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. இந்த ஊரிலேயே நான் பெரிய பணக்காரனாக வேண்டும். பொன்னாலும், பொருளாலும் நிரம்பி, இந்த வீடு பெரிய மாளிகை ஆக வேண்டும் என நினைத்தான். அடுத்த கணமே அதுவும் நிறைவேறியது. அவன் உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் அணிந்த செல்வந்தனாகி விட்டான். மோதிரத்தின் மகிமையால் உயர்ந்த விருந்துகளை வரவழைத்து உண்டான். கை, கால் அமுக்க வேலைக்காரர்களை வரவழைத்து ஓய்வெடுத்தான். மஞ்சத்தில் படுத்துத் தன் நிலையை எண்ணி யோசித்துக் கொண்டிருந்தான்.
திடீரென திருடர்கள் வந்து, தன்னை அடித்து, உதைத்து, மோதிரம், பணம் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு போனால் என்ன ஆவது என்று நினைத்தான். அவ்வளவுதான், அடுத்த கணம் திமுதிமுவென நுழைந்த திருடர்கள், ராமனை அடித்து உதைத்து, அவனிடமிருந்த நகை, பணம் எல்லாவற்றையும் மூட்டை கட்டினர். அவனுடைய மோதிரத்தையும் பிடுங்கிக் கொண்டதுடன், அவனை அப்படியே கட்டித் தூக்கிக் கொண்டு போய், வழியில் உள்ள ஒரு ஆற்றில் எறிந்து விட்டுப் போய் விட்டனர்.

மிகவும் கஷ்டப்பட்டு வெளிவந்தான் ராமன். அவன் உடல் முழுவதும் காயங்கள். ஆனால் அவன் இனிமேல் உழைத்துப் பிழைப்பது என்று முடிவு செய்துவிட்டான். வேலை தேடி அருகில் உள்ள நகரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சுப்புத்தாத்தா
Share: 




© Copyright 2020 Tamilonline