Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
முன்னோடி
மு.சி. பூரணலிங்கம்
- மதுசூதனன் தெ.|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தான் எழுதிய 'தமிழிலக்கிய வரலாற்றின் சில மைல்கற்கள்' என்ற ஆங்கில நூலின் மீளச்சுக்கான (1895) முகவுரையில், தமிழ் அறிஞர்கள் தமது சொந்த மொழி, வரலாறு பற்றிய ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றார். மேலும் அவர்; 'அத்தகைய ஆராய்ச்சியில் இளந் தலைமுறையினரும் ஈடுபட வேண்டும்' என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கின்றார். அவர் எதிர்பார்த்த இளந் தலைமுறையினருள் ஒருவராக மு.சி.பூரணலிங்கம் பிள்ளை மேற்கிளம்புகின்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வளமான கிராமம் முந்நீர்பள்ளம். அவ்வூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர் பூரணலிங்கம். அங்கு வாழ்ந்து வந்த சிவசுப்பிரமணியம் பிள்ளை-வள்ளியம்மை தம்பதிக்கு மே 25, 1866இல் பிறந்தவர் பூரணலிங்கம் பிள்ளை. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம்தான். இவ்வூர்ச் சைவர்கள் பூரணம் என்று பெயர் வைத்துக் கொள்வது மரபாக இருந்து வந்தது.

1885ஆம் ஆண்டு ஹர்சன் பிரபுவிடம் சமஸ்கிருதத்தைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். அப்போது பரிதிமாற்கலைஞரோடு சேர்ந்து பூரணலிங்கனார் செம்மொழியாக்கும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார்.
பூரணலிங்கம் பிள்ளை செல்வப் பெருமான் வாத்தியார் வைத்திருந்த திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். தொடர்ந்து மேலப்பாளையம் பள்ளிக் கூடத்தில் கற்று, தருவைக்குச் சென்று ஆங்கிலம் பயின்றார். பின்னர் திருநெல்வேலி சிந்துபூந்துறை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அப்பொழுது இவரது புலமையும் எழுத்துத் திறனும் பலரது கவனத்தைப் பெற்றிருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தரானார். இவரது புலமையை அறிந்திருந்த, அப்போது திருநெல்வேலி இந்துக்கல்லூரி முதல்வராக இருந்த விங்கிளேர் இவரைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்படி வற்புறுத்தி அழைத்து வந்தார். பின் மேற்படிப்புக்குச் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு அனுப்பினார். கல்லூரிப் படிப்பு முடிந்தபின் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும் அடுத்து ஈரோடு உயர்நிலைப் பள்ளியிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி எட்டயபுரம் இளவரசருக்கு ஆசிரியராக இருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மேக்கேல் கல்லூரி (1900) மதுரை அமெரிக்கன் கல்லூரி (1920) திருச்சி எஸ்.பி.சி. கல்லூரி ஆகியவற்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மேலும் இவர் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தேர்வுகள் எழுதுவதற்கான கல்லூரியை நெல்லையிலும் (1906) சென்னையிலும் தொடங்கி நல்ல முறையில் நடத்தி வந்தார். 1902ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழை நீக்கிவிட்டு சமஸ்கிருதத்தையும் பாடமாக வைக்க வேண்டும் என்று சிலர் முயற்சித்தனர். அப்போது பூரணலிங்கம் இதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தார். இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நிலைத்து நிற்பதில் பூரணலிங்கத்துக்குப் பெரும் பங்குண்டு. 1885ஆம் ஆண்டு ஹர்சன் பிரபுவிடம் சமஸ்கிருதத்தைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். அப்போது பரிதிமாற்கலைஞரோடு சேர்ந்து பூரணலிங்கனார் செம்மொழியாக்கும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார்.

மனித இனத்தை ஒன்றென அன்பு கொள்ளும் நாகரிகத்தையும் இயற்கையோடு இணைந்து சிந்திக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகளையும் தனித்துவமாக எடுத்துப் பேசினார். தமிழ்மொழி நீண்ட இலக்கண இலக்கிய வளங்களைக் கொண்டு விளங்குவதையும் தொகுத்து அரசுக்கு மனு அளித்தார். தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டிய தேவையை ஊர் ஊராகச் சென்று கருத்துப் பரப்புகை செய்தார். பரிதிமாற் கலைஞர், பூரணலிங்கம் பிள்ளை போன்றோர் இந்தக் கருத்து நிலை முகிழ்ப்பில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து செயற்பட்டார்கள். இதன் விளைவாகத்தான் அவரவர் தாய்மொழியையே பாடமாக வைக்கும் ஆணையை அரசு பிறப்பித்தது.

இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றினை முதன்முதலில் எழுதியவர் பூரணலிங்கம் பிள்ளை தான். இவர் தாம் எழுதிய 'தமிழ் இலக்கிய அரிச்சுவடி' என்னும் கருத்துடைய ஆங்கில நூலுக்கான (1904) முகவுரையில், 'இந்த அரிச்சுவடி கால வரன்முறையைப் பொறுத்தவரையில் எத்துணை ஊனமுடையதாயினும் பிறநாட்டவர்க்கும், கல்லூரி வகுப்புகளிலுள்ள தமது இளைஞர்களுக்கும் காலத்தினதும் கறையானினதும், வெள்ளம், நெருப்பினதும் அந்நிய வெறுப்பினதும் சுதேசச் சோம்பலினதும் அழிபாடுகளைத் தப்பி மிஞ்சிக் கிடக்கும் தமிழ் நூல்கள் பற்றிய ஓர் எண்ணப் பதிவினை வழங்குமாயின் அதுவே இதற்கான நியாயப்பாடாகும்' என்று கூறுகிறார். இந்நூலில் பூரணலிங்கம் பிள்ளை எடுத்துக் காட்டும் இலக்கிய காலப்பகுப்பு சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. பின்னர் இந்நூலை விரித்தெழுதி 'தமிழ் இலக்கியம்' (1929) எனும் நூலாக வெளியிட்டார். இதுவே பரீட்சைத் தேவைகளை மனங்கொண்டு எழுதப்பெற்ற முதலாவது தமிழ் இலக்கிய வரலாற்று நூல் எனலாம். நூலின் பின்னிணைப்பாக இவர் தொகுத்து வழங்கியுள்ள தேர்வு வினாக்கள் முக்கியம். இது பின்னர் வந்த இவரிலும் பார்க்கச் சிறந்த வணிக நோக்குடன் தொழிற்பட்ட பேராசிரியர்கள் பலருக்கு வழிகாட்டி நூலாக அமைந்திருந்தது. பரீட்சை வழிகாட்டி நூலாக்கத்துக்கு இவரே வழி காட்டியாக அமைந்துள்ளார். இந்நூல் இலக்கிய வரலாறு என்று கொள்ளப்படுவதிலும் பார்க்கச் சமூகவரலாறு எனக் கொள்ளப்படுவதே பொருத்தமானது என்று சொல்லுவார் பேரா. கா.சிவத்தம்பி. அதாவது தமிழ்ச் சமூகத்தை அதன் இலக்கியத்தைக் கொண்டு விளக்க முனையும் முறையில் முதற்பகுதி அமைந்திருக்கிறது. இறுதி எட்டு அத்தியாயங்களும் இலக்கிய வரலாறாக மாத்திரமே, இலக்கிய வரலாற்றுத் தகவல் தொகுப்பாகவே அமைந்துள்ளன என்பார் எம். ஸ்ரீநிவாச அய்யங்கார்.

பூரணலிங்கம் பிள்ளை சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவு எனப் பல்வேறு களங்களில் இயக்கியவர். தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆழமான புலமையும் ஆய்வு நோக்கும் கொண்டவர்.
இவர் இளமையில் கற்ற தமிழ்க் கல்வியும் தமிழ்ப் புலமையாளர்களின் நட்பும்தான் இவரைத் தமிழ்ப் பற்றாளராக மாற்றின. இவருக்கு இளமையில் கற்பித்த முந்நீர்ப் பள்ளம் செல்வப் பெருமான் சிறந்த தமிழ்ப்புலமை மிக்கவர். மேலப்பாளையம் பள்ளியில் பயிலும்போது சுந்தரம் பிள்ளையிடமும் இலக்கணமும், முத்துச்சாமிப் பிள்ளையிடம் திருக்குறளும் பயின்றார். பின்னர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கோவை சிவக்கவிமணி, சுப்பிரமணியம் முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார். இவர்கள் வழிவந்த கருத்துநிலைத் திரட்சியின் தாக்கத்துக்கு உட்பட்டது மட்டுமல்ல; அந்தக்கருத்துநிலை செயல் வலுவாண்மைக்குத் தனது பங்களிப்பையும் வழங்கினார்.

ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய பண்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு, முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வர மூர்த்தியா பிள்ளை நூலுக்கு இவர் அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தமிழ் மொழியின் வளமான சிந்தனைகளைப் பிறமொழியாரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் மொழிபெயர்த்தார். இதற்கு பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். மேலும் 'Critical Studies in Kural' என்ற திருக்குறள் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் தமிழ்மொழியின் தொன்மையையும் தமிழரின் வளமான அறிவியல் சிந்தனைகளையும் தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்று ஆதாரங்களோடு 'Tamil India' என்னும் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்று இந்நூல் விளக்குகிறது. 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் ஆங்கில நூலும் பெருமதிப்பைப் பெற்றது. பத்துத் தமிழ் முனிவர்கள் என்ற நூலில் மணிவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள பத்துச்சமயச் சான்றோர்களின் வரலாற்றையும் தத்துவங்களையும் விளக்கியுள்ளார்.

பூரணலிங்கம் பிள்ளை மொத்தத்தில் தமிழில் 18 நூல்களையும் ஆங்கிலத்தில் 32 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் சில சட்ட நூல்களையும் இவர் எழுதியுள்ளார். ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய பண்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு, முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வர மூர்த்தியா பிள்ளை நூலுக்கு இவர் அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பூரணலிங்கம் பிள்ளை சுயதேடல், சுய வாசிப்பு மிக்கவராக இருந்துள்ளார். கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் தான் செரித்துக் கொண்ட விடயங்களைத் தெளிவாக எடுத்துரைப்பவராக விளங்கியுள்ளார். இதைவிடச் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றும் போது 'ஞான போதினி' என்ற மாத இதழை நடத்தினார். பின்னர் நீதிக்கட்சியின் 'ஜஸ்டிஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். தான் மதிப்பவர்களுக்கு எதிராகப் பழி சுமத்துபவர்கள் பற்றி அதிகம் அக்கறைப்பட்டார். அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் பூரணம் பிள்ளை பின்னிற்கவில்லை. பேரா. விங்கிளேர், டாக்டர் மில்லர் ஆகியோரைப் பற்றி ஷெப்பர்டு என்பவர் பழித்துப் பேசியும் எழுதியும் வந்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பூரணம்பிள்ளை ஒரு மறுப்பு நூலை எழுதினார். அதில் ஷெப்பர்டின் செயலைக் கண்டித்தும் அவருடைய குற்றங்குறைகளைத் தொகுத்தும் எழுதியிருந்தார். இந்நூலை ஷெப்பர்டுக்கு அனுப்பி, உடனே பேராசிரியர்களுக்கு எதிரான அவதூறை நிறுத்தாவிட்டால் இதில் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிடுவேன் என்று எச்சரித்தார். ஷெப்பர்டு நேரில் வந்து தன் தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஆசிரியர் பணியிலிருந்து 1926ல் ஓய்வுபெற்று முந்நீர்ப்பள்ளத்திற்கு திரும்பி வந்தார். அங்கிருந்து கொண்டு பல்வேறு கூட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கிவந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் 12வது மாநாட்டிற்கு தலைமை தாங்கி (1940) வழிநடத்தினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கிலிருந்து செங்கோட்டை அருணாசலம் பிள்ளைக்கும் திருநெல்வேலி சுதேசி வழக்கிலிருந்து இராமலிங்கம் பிள்ளைக்கும் தன்னுடைய சட்ட அறிவு நுட்பத்தால் விடுதலை பெற்றுக் கொடுக்க உதவியுள்ளார். பலதரப்பட்ட மக்களுடன் உறவு கொண்டுள்ளார். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காவும் உழைத்துள்ளார். 81 ஆண்டுகள் நிறைவான வாழ்வு வாழ்ந்து ஜூன் 16, 1947ல் பூரணலிங்கம் பிள்ளை மறைந்தார்.

தமிழரின் பண்பாட்டையும் அறிவியல் சிந்தனைகளையும் மரபுகளையும் விழுமியங்களையும் கற்றுக்கொடுக்கும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வலியுறுத்தி வந்தார். பல கட்டுரைகளையும் சொற்பொழிவுகளையும் வழங்கி வந்தார். இவற்றின் பயனாக பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு இராமநாதபுரம் மன்னர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவில் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை இடம்பெற்றிருந்தார். இம்முயற்சியின் விளைவே இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பூரணலிங்கம் பிள்ளை செம்மொழிப் போராட்டக் களத்தில் முன்னோடியாக நின்று கருத்துநிலைத் தெளிவை வழங்கி வந்தவர். தமிழ் மொழியின் தொன்மையையும் அதன் வளத்தையும் அறிவு பூர்வமாக எடுத்துக்காட்டிய பெருமை இவரைச் சாரும்.

தெ.மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline