Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர்? | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
யாழினி
டின்னர்
அன்னையர் தினம்
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|மே 2008|
Share:
Click Here Enlargeசுமனாவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. குழந்தைள் வினிதா, விஷால் இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு இந்தியன் பஜாருக்கு வண்டியை ஓட்டினால், கடை திறக்கப் பதினொன்றாகும் என்று தெரிந்தது. நேரத்தை வீணாக்காமல் அருகிலிருந்த தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரத்திலிருந்து கணிசமான தொகையை எடுத்து வந்தாள். இந்தியக் கடைகளில் பெரும்பாலும் காசோலை வாங்குவதில்லை. நல்லியில் தேர்ந்தெடுக்கப் புடவை வகைகள் நிறையவே இருந்தன. ஆயினும் சுமனாவுக்குத் திருப்தி ஏற்படவில்லை. 'சுத்த மடச்சி நான்; போன மாதமே ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்திருக்க வேண்டும்' எனத் தன்னைத் தானே நொந்துகொண்டு ஒரு மாதிரியாக, மாம்பழ வண்ணத்தில் நீலக் கட்டங்களுடன் அழகிய ஜரிகை பார்டரும் முந்தானையுமாக ஒரு புடவையைத் தேர்ந் தெடுத்தாள். விலை இந்திய விலையைப் போல் ஐந்து மடங்கு. என்ன செய்வது, அவசரம் என்று வரும்பொழுது விலையைப் பார்த்தால் முடியுமா?

அருகிலிருந்த நகைக் கடைக்கு விரைந்தாள். பவழமல்லி நெக்லஸ் செய்ய வாட்டமாக பவழமும், முத்தும் வகைக்கு இரண்டு சரங்கள் வாங்கிக்கொண்டாள். அதற்குரிய விலையைக் கொடுத்து முடிக்கவும் மணி ஒன்றாகவும் சரியாக இருந்தது. சின்னவள் வினிதாவைப் பள்ளியிலிருந்து அழைத்துவர வேகமாகக் காரைச் செலுத்தினாள். பெரியவனுக்குப் பள்ளி முடிய மூன்றரை ஆகும்; அண்டை வீட்டு சூஸன் இந்த வாரம் அவனையும் அழைத்து வந்துவிடுவாள்.

இன்னும் முழுசாக ஒரு நாள் கழிய வேண்டும். சுமனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை உடனே வந்துவிடாதா என்றிருந்தது. வாங்கி வந்த பொருட்களை அலமாரியில் பதுக்கி வைத்துவிட்டு மீதி வேலைகளை கவனிக்க லானாள். தம்பியின் மனைவி சாருவிடமிருந்து 'ஞாயிறன்று மாலை அவர்கள் வீட்டுக்குச் சென்று இரவு உணவுக்குப் பின் திரும்புமாறு' தொலைபேசி அழைப்பு. அன்று தான் அங்கு வெளியிடப்போகும் ஆச்சரியங் களையும் அவற்றுக்கு அங்கு கிடைக்கப்போகும் ஆரவாரமான வரவேற்பையும் கற்பனை செய்தவண்ணம் சனிக்கிழமையைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

ஞாயிறு விடிந்ததும் மக்கள் இருவரும் தயாரித்த வாழ்த்து அட்டைகளுடன் கணவன் கார்த்திக் வாங்கிக் கொடுத்திருந்த பரிசொன்றையும் கொடுத்து அணைத்து முத்தமிட்டபின் 'ஹாப்பி மதர்ஸ் டே மம்மி' என்றுஜோடி நாயனம் வாசித்தனர். மகிழ்ச்சி யில் புளகாங்கிதமடைந்து இருவரையும் அணைத்து மகிழ்ந்தாள் சுமனா. மதிய உணவு இத்தாலிய உணவகத்தில் முடித்து வந்தபின் சமையல் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாலைக் காய்ச்சி, ஏதேதோ சேர்த்துக் கிளறித் தன் கைவண்ணத்தை முழுதும் காட்டி இனிப்பு ஒன்றைச் செய்து முடித்து அதனை அழகிய பாத்திரத்திலிட்டு எடுத்துச்செல்ல ஆயத்தம் செய்தாள். தம்பி சசிதரனும் அவன் மனைவி சாருவும் ஏற்கெனவே நெருங்கிய நண்பர்கள் நாலைந்து பேரைக் குடும்பத்துடன் அழைத்திருந்தனர். அரை டிக்கெட்டுகள் தத்தம் சினேகிதக் கூட்டத்துடன் ஐக்கியமாகி விட்டனர்.
சுமனாவின் தாய் வரலட்சுமிதான் அன்றைய சிறப்பு விருந்தாளி. சென்ற மாதம் வந்திருந்த அவருக்கு அன்னையர் தின வாழ்த்தைக் கூறிவிட்டுத் தான் கொணர்ந்திருந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து இனிப்பை எல்லோருக்கும் வழங்கி அசத்தி விட்டாள் சுமனா. அவள் தாய்க்கு மட்டுமல்ல; அவள் கணவனுக்குமே ஆச்சரியமாகத் தானிருந்தது. அவள் தாய் அளவற்ற வியப்பும் மகிழ்ச்சியு மாக, 'இத்தனை செலவு செய்து இதெல்லாம் என்னம்மா?' என்று திணறினார். அருமை யான விருந்தும் பிறகு விளையாட்டும் கேளிக்கையுமாக அந்த இடமே சந்தோஷக் கடலாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆட்ட பாட்டமெல்லாம் ஓய்ந்து குழந்தை களுடன் வீடு திரும்ப மணி பத்துக்கு மேலாகிவிட்டது. அன்றைய நிகழ்வுகளை அசை போட்டவாறே அவ்வப்பொழுது கணவனுடன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தாள் சுமனா.

பின்னால் அமர்ந்திருந்த குழந்தைகள் உரக்கத் தங்களுக்குள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். சற்று சுவாரஸ்யமாக இருக்கவே, இருவரும் காதை அந்தப்பக்கம் திருப்பினர். சின்னவள் கேட்கிறாள்: 'விஷால் அண்ணா, நம்ம மம்மிக்கு நாம் ரெண்டு பேரும் ஹாப்பி மதர்ஸ் டே சொன்னோம்; மம்மியோட மம்மி, நம்ம பாட்டிக்கு அம்மா, மாமா எல்லாரும் கி·ப்டெல்லாம் கொடுத் தாங்க. நம்ம அப்பாவோட மம்மி, தில்லலா பாட்டி (தில்லைவிளாகம் படும் பாடுதான்)க்கு ஹாப்பி மதர்ஸ் டேயெல்லாம் கிடையாதா?" அண்ணனின் பதில், 'அந்தப் பாட்டி எங்கேயோ இந்தியாவில் இருக்காங்க. அங்கேயெல்லாம் மதர்ஸ் டே ஒண்ணும் கிடையாது' என்று அறுதியாக வந்தது. கார்த்திக்குக்குக் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போலிருந்தது. தன் கண்களைத் திறந்த குழந்தைகளுக்கு மனதுக்குள் நன்றி செலுத்தியபடி வண்டியை ஓரம் கட்டிவிட்டு உடனே அம்மாவுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவிக்கத் தொலை பேசலானான்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

யாழினி
டின்னர்
Share: 




© Copyright 2020 Tamilonline