Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சிறுகதை
பாசத்து தேசம்
முரண்பாடுகள்
- |ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeமாலை அலுவலகத்திற்கு இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டு சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினாள் வேணி. காரை கராஜில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவள் ஸ்வேதா இன்னுமா வரவில்லை என்று மேலே மாடியைப் பார்த்தாள். ஸ்வேதாவின் அறையிலிருந்து வந்த மெல்லிய தொலைக்காட்சி சப்தம் அவள் பள்ளியி லிருந்து வீட்டுக்கு வந்து விட்டதை உறுதி செய்தது.

அலுவலக உடையை மாற்றிக் கொண்ட வேணி சமையலறைக்கு வந்தாள். வந்து ·பிரிட்ஜைத் திறந்து அன்றைய விருந்து சமையலுக்கு ஏற்ற காய்கறிகள் ஏதாவது கைவசம் உள்ளதா என்று நோட்டம் விட்டாள். வெறும் முட்டைகோஸ், உருளைக் கிழங்கு, காரட் மட்டுமே இருந்தன. ம்ஹ¤ம்..., இது சரிப்பட்டு வராது. இப்பொழுதே இந்தியன் கடைக்குப் போய் ஏதாவது காய்கறிகள் கிடைக்கிறதா என்று பார்த்து வாங்கி வந்தால்தான் முடியும். நான் தான் போயாக வேண்டுமா இல்லை சேகருக்கு போன் செய்யலாமா என்று எண்ணியபடியே சமையலறையை விட்டு வெளியே வந்தாள் வேணி. வெளியே வந்தவள் வரவேற்பறையை நோட்டம் விட்டாள். சரியில்லை. இந்த நிலைமையில் தன்னுடைய தோழிகளை வீட்டிற்குள் வரவேற்க முடியாது. நேரம் வேற சென்று கொண்டே இருக்கிறது. இப்பொழுது இந்தியன் கடைக்குப் போவதா? வீட்டை சுத்தம் செய்வதா? நான் மீண்டும் உடை மாற்றிக் கொண்டு கிளம்பி கடைக்குப் போய் வருவதற்கே இரண்டு மணி நேரம் பிடிக்கும் போலிருக்கிறதே. பேசாமல் சேகரை ஆபிஸிலிருந்து வரும் வழியில் கடைக்குப் போகச் சொல்லலாம் என்றெண்ணியவளாக சேகரின் செல் நம்பரை டயல் செய்தாள்.

"ஹலோ, நான் தான் பேசறேன்"

"என்ன, சொல்லு", பதிலளித்தான் சேகர்.

"இன்னிக்கு நம்ப வீட்டுக்கு விருந்துக்கு ஏற்பாடு பண்றதுக்காக ஆபிஸிலிருந்து சீக்கிரம் வரச் சொன்னேனே. கிளம்பிட்டீங் களான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக போன் பண்ணினேன்."

"இன்னும் இல்லை. திடீர்னு ஒரு மீட்டிங் வந்து விட்டது. அதனால நான் கிளம்ப கொஞ்ச நேரமாகும். நீயே பார்த்துப்பேயில்லை?" என்றான் சேகர். அவன் ஆபிஸில் படுபயங்கர பிஸி பேர்வழி. அவனை நம்ப முடியாது என்று வேணிக்கு எற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும் அவனுக்கு போன் செய்தாள்.

"இல்லை, வீட்டில் ஒரு காய்கறி கூட இல்லை. நான் இப்ப கிளம்பி போய் வாங்கி வந்து சமையல் தயார் பண்றதுக்குள்ள நாளைக்கு ராத்திரி ஆயிடுமேன்னு பார்த்தேன். அதான் நீங்க வரும் வழியில் கொஞ்சம் சாமான்கள் வாங்கிக் கொண்டு வரச் சொல்லலாம்னு நினைத்தேன். நீங்க வாங்கிக் கொண்டு வர்ற காய்கறியை வைச்சுதான் மெனு போடனும். வீட்டை வேறு கொஞ்சம் சுத்தம் பண்ணனும். எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க வந்தீங்கன்னா கொஞ்சம் உதவியா இருக்கும்", என்றாள்.

"ஏன்? ஸ்வேதா வந்துட்டா இல்லையா? அவளை கொஞ்சம் உதவி பண்ணச் சொல்லேன். நீ ஏற்பாடு பண்ற ஒவ்வொரு விருந்துக்கும் நான் ஆபிஸிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு வரணும்னா முதலில் என்னை வேலையை விட்டு தூக்கிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க. இப்போ பார்ட்டி வேணும்னு யார் அழுதா? நீயும் ரொம்ப ஓவரா பண்ற. எல்லாத்துக்கும் ஒரு எல்லை வேணும். எப்பப் பாரு நீ யார் வீட்டுக்காவது விருந்துக்கு போகணும்னு சொல்ற. இல்லைன்னா நீ விருந்துக்கு கூப்பிடனும்னு சொல்றே. இது எங்கே போய் முடியும்னு தான் தெரியலை. என்னால இப்போ கிளம்ப முடியாது." என்றபடி போனை வைத்தான் சேகர்.

வேறு வழியில்லை. நான் தான் கடைக்குப் போயாக வேண்டும். கடைக்குப் போய்விட்டு வந்து தான் இன்றிரவு பார்ட்டி சமையலைத் தயார் செய்ய முடியும். என்ன செய்யலாம்? சாம்பார், ரசம், ஒரு காய், ஒரு கூட்டு, அப்பளம். இவை போதுமா? இன்னும் ஒரு ஸ்வீட் இருந்தால் நன்றாக இருக்குமோ? இந்த சமையலை முடிக்கவே இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் பிடிக்கப் போகிறது. சமையலுக்கு நடு நடுவே வீட்டை வேறு சுத்தம் செய்ய வேண்டும்.

வேணிக்கு தான் செய்ய வேண்டிய இத்தனை வேலைகளையும் நினைத்துப் பார்க் கவே மலைப்பாக இருந்தது. சிறிது அலுப்பும் சேர்ந்து கொண்டது. சேகர் சொன்னது சரி தானோ? இப்பொழுது இந்த விருந்தை இழுத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டாமோ?

மீண்டும் உடையை மாற்றிக் கொண்ட வேணி இந்தியன் கடைக்குக் கிளம்பினாள். கிளம்புமுன் அவளை ஒரு யோசனை தட்டியது. நான் அலுவலகத்திலிருந்து வந்ததாவது ஸ்வேதாவிற்கு தெரியுமா? இல்லை தெரிந்தும் தன் பாட்டுக்கு தன் வேலைகளில் மூழ்கி இருக்கிறாளா? சிறு வயதுகளில் அவள் அலுவலத்திலிருந்து திரும்பி வரும் வரை காத்திருந்து, வேணி கராஜ் கதவை திறக்கும் சப்தம் கேட்டவுடன், "மம்மி" என்று ஓடி வந்து கழுத்தைக் கட்டி கொண்ட ஸ்வேதாவின் நினைவு வந்தது. இப்பொழுதெல்லாம் அவள் எதையுமே கண்டு கொள்ளாமல் இருப்பது போல் பட்டது. வேணிக்கு திடீரென்று அன்றைய விருந்தை எதிர்நோக்கியிருந்த ஆர்வமெல்லாம் வடிந்தது. அலுவலத்திற்குக் கூட இரண்டு மணி நேர விடுப்பு சொல்லியிருக்க வேண்டாமோ?

இந்தியன் கடைக்குக் கிளம்பிய வேணி, மாடிக்குச் சென்று சற்றே சிறிதாக மூடியிருந்த ஸ்வேதாவின் அறைக் கதவைத் தட்டினாள். ஏதோ மூன்றாம் மனிதர் மாதிரி அவளுடைய அறைக் கதவைத் தட்டுவது போல் தோன்றியது. இவ்வளவு நாளாக இல்லாமல் இன்று ஏன் இந்த இடைவெளி தனக்கு உறைக்கிறது? என்ன ஆயிற்று எனக்கு? இன்று என்னமோ எல்லாமே புதிதாக இருப்பது போல் இருக்கிறது.

"கமின் மாம்", என்றாள் ஸ்வேதா.

அவளுடைய அறைக்கு எவ்வளவு நாட் களுக்கு ஒரு முறை நுழைகிறேன்? அவளு டைய அறைக்குள் நுழைந்த வேணி, அவளுடைய அறையை அப்பொழுதான் முதன் முதலாகப் பார்ப்பது போல், ஒரு நோட்டம் விட்டாள். அவளுடைய அறை படு சுத்தமாக இருந்தது. பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் வரிசையாக புத்தக அலமாரியில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. படுக்கை விரிப்பு படுக்கை மேல் அழகாக விரிக்கப்பட்டு, தலையணைகளை அதன் அலங்காரத் தலையணைகளுடன் சேர்த்து கலையழகுடன் வைத்து, படுக்கையில் ஒரு சுருக்கம் இல்லாமல், ஏதோ இப்பொழு தான் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது போல் காணப்பட்டது. ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த மெல்லிய திரைச் சீலைகள், வேணியின் கவனத்தை ஈர்த்தது. அதனை அழகிய சுருக்கங்களாக்கி, பக்கத்திலுள்ள ஒரு கொக்கியில் சொருகியிருந்தாள். கீழே தரையை நோக்கினாள். கார்பெட்டில் ஒரு குப்பையா, ஒரு கறையா? அறையில் ஒரு துணியா? ம்ஹ¥ம். அறை எங்கும் சுத்தம். எதிலும் சுத்தம். வேணிக்கு சிறு வயதி லிருந்தே, பள்ளிகளில் பழக்கப் படுத்தப்படும், சுத்தப் படுத்தப் படுத்தும் முறை நினைவுக்கு வந்தது. தொலைக்காட்சி பெட்டியில், ஏதோ ஒரு சோப் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்க ஸ்வேதா தன்னுடைய படிப்பு வேலைகளில் மூழ்கியிருந்தாள். வேணி ஸ்வேதாவை அப்பொழுதான் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தாள். மகள் வளர்ந்து விட்டாள். ஸ்வேதாவை சிறு குழந்தையாக இப்பொழுதான், ஆஸ்பத்திரியி லிருந்து வீட்டிற்குக் கொண்டு வந்த மாதிரி இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள், உயர் நிலை வகுப்புக்குள் நுழைந்து விட்டாள். தன்னுடைய பாடத்தில் மூழ்கியிருந்த ஸ்வேதா, அறைக்குள் நுழைந்தும் பேசாமல், தன்னையே பார்த்துக் கொண்டு மௌனமாக நின்று கொண்டிருந்த அம்மாவை நோக்கினாள்.
"மம்மி", என்றழைத்தாள்.

சட்டென்று நிகழ்காலத்திற்கு வந்தாள் வேணி.

"ஸ்வேதா, என்ன பண்ணிக் கிட்டு இருக்குற?"

ஸ்வேதாவிற்கு தமிழ் புரிகிறது. ஆனாலும் அதையே ஆங்கிலத்தில் கூறினால் இன்னும் நன்றாகப் புரிகிறது. இந்த மொழி மாற்றமே எங்களுக்குள் இடைவெளியை எற்படுத்துகிறதோ?

"எனக்கு ஒரு அஸைன்மெண்ட் முடிச்சா கனும்மா. அதான் பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் கஷ்டமான அஸைன்மெண்ட். அதான் முடிக்க கொஞ்ச நாளாவது ஆகும்னு நினைக்கிறேன்"

அது என்ன சப்ஜெக்ட்? என்ன அஸைன் மெண்ட்? என்று அப்புறம் விவரமாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தாள் வேணி. இப்படித்தான் அப்புறம் கேட்க நினைவே வருவதில்லை. யாருடனாவது ஏதாவது பேசிக் கொண்டிருக்கும் பொழுது நினைவுக்கு வருகிறது. இல்லையென்றால், அவள் அலுவலகத்தில் இருக்கும் பொழுது நினைவுக்கு வருகிறது. இப்பொழுதே கேட்கலாம் என்றால், நேரம் சிறிது கூட இல்லை.

"இன்னிக்கு இரவு, ஒரு விருந்து இருக்கு ஸ்வேதா. வீட்டில் ஒரு காய்கறி கூட இல்லை. நான் இந்தியன் கடைக்குப் போய், கொஞ்சம் காய்கறி வாங்கிக் கொண்டு வந்துடறேன். நீ கீழே கொஞ்சம் வந்து, வீட்டை சுத்தம் பண்ண உதவி பண்ண முடியுமா?"

"ஷ்யூர்", என்று தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து விட்டு சட்டென்று எழுந்த மகளைப் பார்த்த வேணிக்கு ஸ்வேதாவை அவளுடைய அஸைன் மெண்டைப் பண்ண விடாமல், தான் தன்னுடைய விருந்துக்காக அவளைத் தொந்தரவு செய்வது சரியா? என்று தோன்றியது. சேகர் மட்டும் இப்பொழுது இருந்திருந்தால், அவளை ஆமோதித்திருக் கவே மாட்டான்.

திடீரென்று நினைவுக்கு வந்தவளாக, "ஆமாம், நாளைக்கு உன்னுடைய நெருங்கிய தோழிக்கு பிறந்த நாள் பார்ட்டி. கண்டிப்பாக போகனும்னு சொன்னாயே. போகப் போகிறாயா?" என்றாள்.

"இல்லை மம்மி. எனக்கு இப்பொழுது இந்த அஸைன்மெண்டை முடிப்பது தான் முக்கியம். நான் வர முடியாதுன்னு அவளிடம் சொல்லி விட்டேன். அவள் புரிந்து கொள்வாள்." என்ற ஸ்வேதாவைப் பார்த்தாள் வேணி. தன் மகளிடம் உள்ள நிதானமும், பக்குவ மும், தெளிவும் கூட எனக்கு இல்லையோ? சட்டென்று இன்று முழுவதும் ஸ்வேதாவிடமே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் எழுந்தது. இத்தனைக்கும் ஸ்வேதா சிறு குழந்தையாக இருந்த பொழுது ‘டேகேர்’, அது, இது என்று எங்கும் அனுப்பாமல், அவளை பள்ளிக்கு அனுப்பும் வயது வரை அவளுடனேயே இருந்து, அவளின் ஒவ்வொரு அசைவுகளையும், விளையாட்டுக்களையும், அவள் செய்யும் சேட்டைகளையும் பார்த்து ரசித்தவள். எப்பொழுது வந்தது இந்த இடைவெளி? ஒரு வேளை, நான்தான் இடைவெளி இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறேனா? ஸ்வேதா அவள் பாட்டுக்கு எப்பொழுதும் போலவே தானே இருக்கிறாள்?

"நான் இதோ கீழே வருகிறேன். நீ போம்மா", என்று ஸ்வேதா கூறியும் அவளுக்காகக் காத்திருந்தாள்.

தன்னுடைய மகளுடன் சேர்ந்து கீழே இறங்கி வந்தாள் வேணி. ஸ்வேதா சுறுசுறுப்புடன் வரவேற்பறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

"ஸ்வேதா, நம்ப ரெண்டு பேருக்குமா சேர்த்து கொஞ்சம் காபி போடட்டுமா?" மகளுடன் சேர்ந்து காபி குடிக்க வேண்டும் என்ற ஆசை வேணிக்கு எழுந்தது. ஸ்வேதாவுடன் அமர்ந்து நிதானமாக காபி குடித்தது கடைசியாக எப்பொழுது என்று நினைவு படுத்திப் பார்த்தாள். ம்ஹ¤ம், நினைவு வரவில்லை. ஒரே வீட்டில் இருந்தும், தன்னுடைய நிலைமை இப்படியாகி விட்டதா? என்ன ஆகி விட்டது எனக்கு? சமீப காலத்தில் எப்பொழு தாவது அவளுடைய அறைக்குச் சென்று அமர்ந்து அவளுடன் சிறிது நேரமாவது பேசி இருப்பேனா? அவளுடைய பாடங்கள், அவளுடைய பாடப் புத்தகங்களை வாங்கிப் பார்த்திருப்பேனா? ஒன்றுமில்லை. இப்பொழுது கூட அவளுடைய அஸைன்மெண்டை விட என்னுடைய இன்றைய விருந்து தானே எனக்கு முக்கியமாகப் பட்டது? வேணிக்குத் திடீரென்று தான் தன் மகளை விட தன்னுடைய நட்பு வட்டாரத்தைப் பற்றி பெரிதும் கவலைப் படுவதாகத் தோன்றியது. ஸ்வேதாவைவிட தன்னுடைய தோழிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதாகப் பட்டது. நான் எதற்காக அலைந்து கொண்டிருக்கிறேன்? இந்த தோழிகள் எல்லாம் யார்? இதென்ன போலி வாழ்க்கை? எல்லாமே வெளிவேஷம் தானே? நான் எதற்காக விருந்து, பார்ட்டி, விழா என்று விடுமுறைகளில் மட்டுமல்ல, அலுவலக தினங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன்? நாளை எனக்கோ, என்னுடைய குடும்பத்துக்கோ ஏதாவது நிகழ்ந்தால், உண்மையாக வந்து உதவுவது யார்? யாருமில்லை. எல்லோரும் ஒரிரு போன் காலுடன் நிறுத்திக் கொண்டு, வேறொரு பார்ட்டிக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்.

வேணி பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டிலுள்ள சிறிய டவுனில். அவளுக்கு தெரிந்தவரை அவளுடைய அம்மா வீட்டை விட்டு வெளியே அவசியமில்லாமல் வந்தது இல்லை. அவளுக்கென்று தோழிகள் வட்டாரம் என்று இருந்தது இல்லை. வேணியின் வீட்டிற்கு வருகை தந்ததெல்லாம் உறவுக்கார மனிதர்கள் மட்டுமே. இந்த அமெரிக்காவில் உறவுக்காரர்கள் என்று யாரும் இல்லாததால், தோழிகள், விருந்துகள் என்று அலைந்து கொண்டிருக்கிறேனா? என்னை நானே இத்தனை நாளாக ஏமாற்றிக் கொண்டிருந் திருக்கிறேனா? ஓர் இந்தியத் தாயாக நான் தோற்றுப் போய்விட விரும்பவில்லை.

ஸ்வேதா இன்னும் ஓரிரு வருடங்களில், கல்லூரிப் படிப்பு படிக்கச் சென்று விடுவாள். கூடாது. நான் இனிமேலும் விட மாட்டேன். வேணிக்குள் ஒரு ஏமாற்றம் பரவியது. நான் இவ்வளவு வருடங்களை வீணாக்கி விட்டேன். இனிமேல், எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும், எனக்காக, என்னுடைய குடும்பத்திற்காக, என்னுடைய மகளுடன் செலவு செய்யப் போகிறேன். நான் வயதாகிப் போனால், எனக்கு இந்த நினைவுகள் தான் சொந்தம், அதை நான் இழக்க மாட்டேன்.

"மம்மி, எனக்கும் ஒரு காபி" என்ற ஸ்வேதா தன் தாயாரைக் காணாமல் எங்கே என்று தேடினாள். வேணி தொலைபேசியை எடுத்த வாறே ஸ்வேதாவிடம், "ஸ்வேதா, இன்னிக்கு விருந்து இல்லைன்னு என்னுடைய தோழி களிடம் சொல்லிட்டு வந்துடறேன். நம்ப ரெண்டு பேருக்குமா காபிக்குப் பால் அடுப்பில் வைச்சிருக்கேன். கொஞ்சம் பார்த்து இறக்கு. காபி குடிச்சிட்டு உன்னுடைய அஸைன் மெண்ட் பத்தி எனக்கும் கொஞ்சம் சொல்லு. நானும் தெரிஞ்சுக்கறேன். அப்புறம் ஏதோ கிரா·ட் பண்ணனும்னு சொன்னியே..." என்ற அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ஸ்வேதா. ஆம், இனிமேல் வேணிதான் ஸ்வேதாவின் முதல் தோழி. அவள் எப்பொழுதும் இருப்பாள் ஸ்வேதாவிற்காக.

பிருந்தா ராஜ், டெட்ராய்ட், மிச்சிகன்
More

பாசத்து தேசம்
Share: 




© Copyright 2020 Tamilonline