Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறுகதை
வெங்கலமடையாளின் சாபம் (நாட்டுப்புறக் கதை)
முக்கோணங்கள்
- உமா விஸ்வநாதன்|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeகாரை அபார்ட்மெண்டுக்கு முன்னால் நிறுத்திய இந்து மேலங்கியை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள். தலைமுதல் கால்வரை மூடியிருந்தாலும் வெளியே இறங்கும்போதே சிலீர் என்று குளிர் தாக்கியது. நேற்றிரவு பெய்த பனிமழையில் தெருவெல்லாம் பனிக்கட்டி உறைந்திருக்க, கால் சறுக்காமல் நிதானமாக நடந்து கதவைத் திறந்த இந்து முதல் வேலை யாக ஹீட்டரைப் போட்டாள். கையுறை, மேலங்கி, காலணி கள், காலுறை என்று எல்லாவற்றையும் கழற்றிப் போட்டு விட்டு நேரே சமையல் அறையில் நுழைந்து காபிமேக்கரை முடுக்கிவிட்டாள். முகம் கழுவி வருவதற்குள் காபி தயார். பெரிய கோப்பை நிறையக் காபியை ஊற்றி எடுத்துக் கொண்டுவந்து குடியிருப்பின் சின்னஞ்சிறிய வரவேற் பறைக்கு வந்தாள்.

கணினியின்முன் உட்கார்ந்து அன்றைய மின்னஞ்சலில் வந்த கடிதங்களைத் தேடினாள். முதல் கடிதமே அம்மாவிட மிருந்துதான். படித்தாள். வழக்கமான புகாரில்தான் ஆரம்பம்.

இந்து

இருபத்தி ஏழு வயதாகியும் இன்னும் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே நீ தயாராக இல்லை. சென்ற வாரம் ராஜன் மாமா ஒரு வரன்பற்றி உன்னிடம் பேசினாராம். அந்தப் பையன் உன்னைச் சந்திக்க வெகு ஆவலாக இருப்பதாகவும், நீதான் பிடிகொடுத்தே பதில் சொல்லவில்லை என்றும் மிகவும் வருத்தப் பட்டார். நீ இப்படித் திருமணத்தையே ஒதுக்குவதைப் பார்க்கும்போது என் வாழ்க்கை யில் நடந்த சம்பவங்கள் உன்னை மிகக் கடுமையாகப் பாதித்திருக்கலாம் என பயமாக இருக்கிறது.

இந்து, வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அதை எதிர்கொண்டு ஜெயிக்க முற்படுவதுதான் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்க முடியும். தண்ணீரில் முழுகினால்தான் முத்தெடுக்க முடியும். உன்னைத் தைரியமான பெண்ணாக வளர்த் திருப்பதாக நினைத்தேன். நீ இப்படி வாழ்க்கையிலிருந்தே ஒதுங்கிப் போவதை நினைக்க வருத்தமாக இருக்கிறது. நான் சொல்வதைப் புரிந்துகொண்டு ஒரு நல்ல முடிவெடுப்பாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இனி உன் தங்கை விஷயத்திற்கு வருகிறேன். நாம் முன்பு குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்த நாகராஜன் மாமாவை உனக்கு நினைவிருக்கிறதா? அவர் மகன் அரவிந்தன், சரியாக உன் வயது. அடிக்கடி உன்னுடன் விளையாட வருவானே, மறந்திருக்கமாட்டாய் என்று நினைக்கிறேன்.

அவன் இப்போது தில்லியில் ஐ.ஏ.எஸ். ஆபிசராக வேலையில் இருக்கிறான். நல்ல பையன். நேற்று நாகராஜன் மாமாவும், மாமியும் வந்திருந்தார்கள். அருணாவை அரவிந்தனுக்குக் கல்யாணம் செய்துகொள்ள ஆவலாக இருக்கிறார்கள். அடுத்த வாரம் பெண்ணும், பிள்ளையும் சந்தித்து இருவருக்கும் சம்மதமானால் வருகிற மே மாதமே திருமணம் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

நல்ல சம்பந்தம். நீ என்ன நினைக்கிறாய்? அருணாவுக்கும் வயது இருபத்துநாலு ஆகிறதே! ஆனாலும் அவள் கல்யாணத்திற்கு முன்னால் உனக்குத் திருமணம் நடக்கவேண்டும் என்பது என் ஆசை. யோசித்து, பதில் எழுது.

ரகு வழக்கம்போல் கல்லூரிக்குப் போய் வருகிறான். இன்னும் ஒரு வருஷத்தில் எம்.பி.பி.எஸ். முடித்து டாக்டராகிவிடுவான். கூடிய சீக்கிரம் பதிலை எதிர்பார்க்கும்
அம்மா

கடிதத்தைப் படித்து முடித்து மறுபடி சோபாவில் உட்கார்ந்த இந்து அலையலை யாக எழுந்த பழைய ஞாபகங்களை அசைபோட ஆரம்பித்தாள்...

குழந்தைப் பருவம்! எவ்வளவு இனிமையான நாட்கள் அவை. இனிமையான, சாந்தமான சுபாவம் அம்மா ஜெயாவிற்கு. அப்பா ராகவன் மாறாக ஒரே கலகலப்பானவர். குழந்தைகளுக்கு அவரிடம் ஏகச் சலுகை. லீவு நாட்களில் அவர்களுடன் சேர்ந்து விளையாட்டும், கும்மாளமுமாக வீட்டையே கலக்குவார். டாக்டர் பணியில் அவருக்கு நேரம் அரிதாகவே கிடைக்கும். ஆனால் கிடைக்கிற நேரத்தை முழுதாகக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அவருக்கு. காலையில் எழுந்ததும், ''ஜெயா இன்றைக்கு பிக்னிக் போகிறோம். எல்லாம் ரெடி பண்ணு. பசங்களை எழுப்பு.'' என்பார். அம்மாவும் சளைக்காமல் மளமள வென்று கட்டுச்சாதம் முதல் சகலமும் தயார் செய்து, குழந்தைகளைக் கிளப்பித் தயாராக இருப்பாள். காரில் ஏறப்போகிற சமயம் திடீரென்று 'எமர்ஜென்சி கால்' வந்து எல்லாம் நின்று போகும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. அம்மா அலுத்துக் கொள்ளமாட்டாள்.

''வாங்கோ குழந்தைகளா இன்னிக்கு பிக்னிக் நம்ம தோட்டத்து மாமரத்து நிழலிலேதான்.''
சிரித்துக் கொண்டே மாமரத்தடியில் ஜமக்காளத்தை விரிக்கும் அம்மாவை அப்பா பெருமையாக தோளில் தட்டிக் கொடுப்பார்.

''என்ன இந்து, என் பெட்டர் ஹா·ப் எப்படி! நான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் பார்த்தியா..?" என்று சிரிப்பார்.

இவ்வளவு இனிமையான தாம்பத்தியத்தில் விதி விஷத்தை விதைத்த காரணம் என்னவோ தெரியவில்லை. இந்துவுக்கு அப்போது பதினாலு வயதிருக்கும். ஒருநாள் இரவில் தண்ணீர் குடிக்க எழுந்தவள் வழியில் பெற்றோரின் படுக்கை அறைக் கதவை தாண்டும்போது அம்மா விசிக்கும் சப்தம் கேட்டு ஒரு கணம் தாமதித்தாள். அப்பாவின் குரலும் கேட்டது.

''ப்ளீஸ் ஜெயா என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யேன். இப்போதும் உன்னிடமோ குழந்தைகளிடமோ எனக்கு பிரியம் குறையவில்லை. நான் பொறுப்பு எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நம் குழந்தைகளுக்கு ஒரு குறையும் வராது ஜெயா... என்னை நம்பு...''

அம்மா ஒரு வறட்டுச் சிரிப்பை உதிர்த்தாள். அவள் குரல் வேதனையுடன் ஒலித்தது.

''என் உயிரையே பறிச்சுண்ட பிறகு எனக்கு மருந்து கொடுத்து வைத்தியம் பார்க்கப் போறேளா... என்னிடம் என்ன பதில் எதிர்பார்க்கறேள்... சொல்லுங்கோ'' என்றாள்.

அப்பாவிடமிருந்து ஏதும் பதில் வர வில்லை. அவ்வளவு நேரம் ஒட்டுக்கேட்டது தப்பென்று தோன்ற இந்து குற்ற உணர்ச்சியுடன் நகர்ந்தாள். ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக உள்ளுணர்வு எச்சரிக்க, பதறும் மனதுடன் இரவெல்லாம் தூங்க முடியாது விழித்திருந்தாள்.

அடுத்து வந்த பதினைந்து நாட்கள் அப்பாவும், அம்மாவும் குழந்தைகள் முன்னால் இயல்பாக இருக்க முயற்சித் தார்கள். ஆனால் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு இறுக்கம் நிலவியதுதான் உண்மை. விவரம் தெரியாத அருணா வையும், ரகுவையும்கூட அந்த இறுக்கம் பாதித்தது. வீட்டில் விளையாட்டுப் பேச்சு, கலகலப்பான சிரிப்பு எல்லாம் மறைந்து போனதாக உணர்ந்தார்கள். அப்பா காலை உணவுக்குப் பிறகு கிளம்பிப் போனால் இரவு ஒன்பது மணிக்குத்தான் திரும்பினார். அநேகமாக வெளியே சாப்பிட்டு வந்திருப் பார். அம்மா குழந்தைகளுடன் படுத்திருக்க, அப்பா படுக்கை அறையில் படுத்தார். அரைகுறையாக விவரம் புரிந்த இந்து திடீர்திடீர் என இரவில் விழித்துக் கொண்டாள், அம்மா தூங்காமலே கண்ணைமூடிப் படுத்திருப்பதை உணர்ந்து அவள் பக்கத்தில் படுத்து ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் காலை நேரம். அப்பா சூட்கேஸில் சாமான்களை அடுக்கிக் கொண்டிருந்தார். உள்ளே வந்த ரகு, ''அப்பா ஊருக்குப் போகப் போறார். சாமான் எல்லாம் பாக் செய்யறார்'' என்று சேதி கொண்டு வந்தான்.

வெளியே வந்த அப்பா, ''எனக்கு பெங்களூருக்கு மாற்றலாகி விட்டது இந்து. இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப வேண்டும். நீங்கள் எல்லோரும் அம்மாவைப் படுத்தாமல் இருக்கணும். பத்திரமாக பார்த்துக்கணும்'' என்றார்.

''எப்போ அப்பா திரும்பி வருவீர்கள்?'' என்ற ரகு கேட்க, ஒரு கணம் தயங்கினார். ''வருவேன் கண்ணா. முடியும் போதெல்லாம் வருவேன்'' என்றவர் ரகுவையும, அருணாவையும் கன்னத்தில் முத்தமிட்டார். இந்துவை முதுகில் தட்டிக் கொடுத்தார். பிறகு யாரையும் நிமிர்ந்து பார்க்கத் துணியாதவராக பொதுவாக 'வரேன்' என்று சொல்லிக் கிளம்பினார்.

வீட்டில் அப்பா இல்லை என்பதைத் தவிர வேறு பெரிய மாற்றம் ஏதும் இல்லை. அம்மா வழக்கம் போல் அவள் ஆசிரியை பணி புரிந்த கல்லூரிக்குச் சென்று வந்தாள். சமையல் செய்தாள். குழந்தைகளைக் குறை யின்றிக் கவனித்துக் கொண்டாள். ஆனால் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி சுத்தமாக மறைந்து விட்டது. இந்துவுக்கு அவள் கண்களைப் பார்க்கையில் ஜன்னல் வழியாக இருளடைந்த அறையினுள் எட்டிப் பார்க்கிறாற்போல் தோன்றியது.

அப்பாவைப் பற்றி மற்ற விவரங்கள் இந்துவுக்கு அவள் சிநேகிதி ரம்யா மூலம்தான் தெரிந்தது. ரம்யாவின் அப்பா, இந்துவின் அப்பாவுடன் அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர். அங்கே டாக்டராகப் பணிபுரியப் புதிதாக வந்து சேர்ந்தவள் டாக்டர் நிர்மலா. கைம்பெண்ணாக அவளிடம் பரிதாபப்பட்டு அவளிடம் நட்பாக இருக்கத் தொடங்கிய இந்துவின் அப்பா ராகவன் மெல்லத் தன்னையறியாமல் அவளிடம் ஈர்க்கப் பட்டார். நிர்மலாவும் அவரிடம் மனதை இழந்தாள். இருவருமே முகிழ்த்து வந்த பந்தத்தைத் தவிர்க்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களுடைய உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் அடங்க மறுத்தன. ஒரு வருஷத்திற்குப் பிறகு இருவரும் மணம் புரியத் தீர்மானித்தார்கள். பெங்களூரில் வேறு வேலையில் சேர்ந்து கொண்டார்கள். புதிய வாழ்க்கை ஆரம்பமாயிற்று.

பெங்களூர் போன புதிதில் ராகவன் குழந்தைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சித்தார். அவர்கள் பிறந்த நாளைக்கு, தீபாவளிக்கு துணிமணி, பரிசுகளுடன் வந்தார். ஆனால் ஏற்பட்டு விட்ட இடைவெளியை யாராலும் நிரம்ப முடியவில்லை. ஏமாற்றம் தந்த மன சோர்வுடன் திரும்பிப் போனார்.

அதன்பிறகு பார்க்க வருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார். ஆனாலும் இந்து, அருணா பட்டம் வாங்குவதைப் பார்க்க வந்தார். இந்து அமெரிக்கா கிளம்பும் விஷயம் தெரிந்ததும் டிக்கெட் வாங்கிக் கொடுத்துக் கைச்செலவுக்கும் பணம் அனுப்பினார்.

ராகவனும், நிர்மலாவும் குழந்தை ஏதும் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. திடீரென்று மூன்று வருடங்களுக்கு முன் ஒருநாள் அம்மாவைப் பார்க்க வந்ததாக அம்மா எழுதியிருந்தாள். நிர்மலா அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாளாம். சிறுநீரகங்கள் பழுதடைந்து சீக்கிரத்தில் இறக்கப்போகும் நிலைமையில் இருந்தவள் அடுத்த இரண்டு மாதங்களில் இறந்துவிட்டாள். மனவேதனையும், குற்றஉணர்வுமாகப் புழுங்கியே அப்பாவும் போன வருஷம் போய்ச் சேர்ந்துவிட்டார்.

சம்பந்தப்பட்ட யாருக்குமே சந்தோஷத்தையோ, மனநிம்மதியோ தராத இந்த முரண்பட்ட பந்தங்களை நினைக்கையில் இந்துவுக்கு வாழ்க்கையே அர்த்தமற்றதாகப்பட்டது.

கடந்தகாலத்தைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவள் நிகழ்காலத்திற்கு வந்தாள். அன்று காலை ஸாம் பார்க்கர் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.

''இந்து நான் உன்னை மணக்க விரும்பு கிறேன். என்னை ஏற்றுக் கொள்வாயா?''
இந்து வேலை பார்க்கும் கம்பெனியின் மற்றொரு கிளையில்தான் ஸாம் வேலை செய்தான். ஒருநாள் ஆபீஸ் வேலையாக இந்தக் கிளைக்கு வந்தப்போது சந்தித்தார்கள். இருவரும் ஒரே பிராக்ஜட்டில் சம்பந்தப் பட்டிருந்ததால் சில சமயம் வாரக்கணக்கில் ஒரே டெஸ்க்கில் சேர்ந்து வேலைசெய்ய நேரும். பழகப்பழக இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது. அவ்வப்போது தொடர்ந்து இரவுவரை வேலை செய்யும் போது இருவரும் சேர்ந்து ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வேலையைத் தொடருவார்கள்.

தன் காதலைப் பற்றி அம்மாவிடம் சொல்வதா வேண்டாமா என்று யோசனை யில் இருந்த இந்துவிடம் இன்று ஸாம் தான் திருமணப் பேச்சை எடுத்தான். அவள் சற்றுத் தயங்குவதைப் பார்த்தவன் மேலும் தொடர்ந்தான், ''விவாகரத்துக்கான ஏற்பாடுகளை உடனே செய்கிறேன் இந்து. கிடைத்தவுடன் நம் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்'' என்றான்.

அவன் திருமணமானவன் என்பதை இந்து எதிர்பார்க்கவில்லை. திகைப்புடன் பார்த்தவள் ''ஸாம், உனக்குக் கல்யாணமான விஷயத்தை ஏன் இதுவரை என்னிடம் சொல்லவில்லை?'' என்று கேட்டாள்.

அவன் முகத்தில் வருத்தம் தெரிந்தது.

''எங்கள் திருமணம் ஆரம்பமுதலே தப்பு இந்து. கொஞ்சமும் மனப்பொருத்தம் இல்லாமல் இளமையின் மயக்கத்தில் செய்து கொண்டோம் என்று நினைக்கிறேன். மணவாழ்க்கைக்கு வேண்டிய மனப் பக்குவமோ, பொறுமையோ இருவரிடமும் இருக்கவில்லை. காலப்போக்கில் சரியாகு மென்று நினைத்தோம். நடக்கவில்லை. ஒரு குழந்தை பிறந்தால் ஒத்துப்போகமுடியு மென்று நம்பினோம். அதுவும் பொய்த்து விட்டது. விவாகரத்து பற்றி நாங்கள் தீவிரமாக யோசிக்கையில்தான் நான் உன்னைச் சந்தித்தேன். யோசித்து முடிவெடுக்க வேண்டிய மன முதிர்ச்சி நம் இருவருக்குமே இருப்பதாகப் பட்டது. ஒருவரை ஒருவர் விரும்பும் நாம் இருவரும் ஏன் வாழ்வில் இணையக் கூடாது?''

''ஸாம் உங்களுக்கு ஒரு மனைவியும், குழந்தையும் இருக்கும் விஷயம் எனக்குப் புதிது. எனக்கு ஒரு வார அவகாசம் தேவை. யோசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது'' என்று சொல்லி வீட்டுக்கு வந்தாள் இந்து.

இப்போது நினைத்துப் பார்க்கையில் அன்றைக்கு அம்மாவின் வாழ்வை பாதித்த அதே முக்கோணம் தன் வாழ்விலும் அமைவதை வியப்புடன் உணர்ந்தாள். அன்று அப்பா, அம்மா, நிர்மலா மூன்று முனைகளாக நின்றார்கள். இன்று ஸாம், அவன் மனைவி, தான். நிர்மலாவின் இடத்தில் தன்னை நினைத்துப் பார்த்தாள். சூழ்நிலை சற்றே மாறியிருக்கலாம். ஸாமின் மணவாழ்க்கை முன்பே ஆட்டம் கண்டிருக்கலாம். ஆனாலும் தன் மனதில் தோன்றக்கூடிய குற்றஉணர்வை அவளால் ஏற்றுக் கொள்ளமுடியும் என்று தோன்றவில்லை.

இந்துவின் மனதில் தெளிவான தீர்மானம் உருவாயிற்று. எழுந்து கம்ப்யூட்டருக்கு முன் அமர்ந்தவள் அம்மாவுக்குப் பதில் எழுதினாள்.

அன்புள்ள அம்மா,

உன் மின்னஞ்சல் கண்டேன். அருணாவின் திருமணச் செய்தி கேட்கச் சந்தோஷமாக இருக்கிறது.

அருணாக்குட்டி வளர்ந்து கல்யாணத்திற்கு தயாராகிவிட்டாள் என்று நம்புவதே கஷ்டமாக இருக்கிறது.

எங்கள் ஆபீஸில் இந்தியக் கிளை ஒன்று திறக்கிறார்கள். அங்கு வேலை செய்யமுடியுமா என்று சென்ற மாதமே கேட்டிருந்தார்கள். நாளை என் ஒப்புதலைத் தெரிவிக்கப் போகிறேன். அனேகமாக அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியா வந்து சேரலாம். உன் கையால் சமைத்த மைசூர் ரசமும், சேப்பங் கிழங்கு ரோஸ்ட்டும் சாப்பிடக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

என் கல்யாணம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை. என் மனதுக்கு ஏற்ற ஆண்மகனைச் சந்திக்கும்போது கட்டாயம் மணந்து கொள்வேன். உன் பெண் கோழையல்ல. சன்யாசினியும் அல்ல.

வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு ஜெயிக்கும் மன உறுதி உள்ளவள்தான்.

அன்புடன்
உன் அருமை மகள்
இந்து

உமா விஸ்வநாதன்
More

வெங்கலமடையாளின் சாபம் (நாட்டுப்புறக் கதை)
Share: 




© Copyright 2020 Tamilonline