Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கலாசாரப் பாலமான 'கன்னிக்ஸ்' கன்னிகேஸ்வரன்
இசைப் பேருரைக் கலைஞர் கெளசல்யா சிவக்குமார்
- கேடிஸ்ரீ|நவம்பர் 2005|
Share:
Click Here Enlargeகெளசல்யா சிவகுமார் ஆன்மிக இசைப் பேருரை நிகழ்ச்சிகளை எளியவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்த்தி வருகிறார். ஆன்மிகமும், இசையும் வாழ்வின் இரண்டு கண்கள் என்று கூறும் கெளசல்யா ஒரு சிறந்த பாடகி. நடனக் கலைஞரும்கூட. சென்னைத் தொலைக்காட்சிக்காகப் பல்வேறு துறையினரை நேர்காணல் செய்த அனுபவமும் உண்டு. கல்லூரி நாட்களில் நாடகப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருக்கிறார். இவரைத் தென்றலுக்காகச் சந்தித்த போது கூறியவற்றிலிருந்து:

கே: உங்கள் குடும்பப் பின்னணி பற்றிக் கூறுங்கள்...

ப: என் அப்பா வழி முன்னோர்கள் புதுக்கோட்டைப் பக்கத்தைச் சேர்ந்தவர்கள். என் தாத்தாவின் தாத்தா புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு முதல்வராக இருந்தார். எங்கள் முன்னோர் சரபோஜி மன்னரின் அவையில் பணியாற்றியவர்கள். வேதங்களை எல்லோராலும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றை எளிய கவிதைகளாக வடித்து கொடுத்தார் கள் என்று சொல்வார்கள். அதனால் 'வேதகவி' என்கிற பட்டத்தை அவர்களுக்கு அளித்தனர். இந்தப் பட்டத்தை இவர்கள் சந்ததி உள்ளவரைக்கும் உபயோகித்துக் கொள்ளலாம் என்று சரபோஜி மன்னர் சாசனம் எழுதிக் கொடுத்ததால் என் தாத்தா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், அப்பா ராமச்சந்திர சாஸ்திரிகள், இப்போது எனது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி என்று எல்லோரும் 'வேதகவி' என்பதைத் தமது பெயருடன் போட்டுக் கொள்கிறார்கள்.

கே: உங்களுக்கு வடமொழியில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?

ப: அன்றைய காலத்தில் தாத்தா கிருஷ்ண மூர்த்தி நிறையப் படித்தவர். காஞ்சிப் பெரியவாளுடன் சமஸ்கிருதத்திலேயே பேசுவார். சமஸ்கிருதப் பேரவைகளில் (சதஸ்) பேசுவதற்குத் தாத்தாவைக் காஞ்சிப் பெரிவர் அழைப்பார். இத்தகைய உன்னத மான இடத்தில் இருந்தார் என் தாத்தா. அதனுடைய தாக்கமோ என்னமோ எனக்குச் சின்ன வயது முதலே சமஸ்கிருதத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. சமஸ்கிருத இலக்கியங் கள் ரொம்பக் கடினம் என்று நிறையப் பேர் என்னிடம் சொல்வார்கள். எனக்கு அப்படித் தெரியவில்லை. உச்சரிப்பு நன்றாகவே வந்தது. இந்த விஷயத்தில் பெரிதும் உதவியாக இருந்தது என் தாத்தாதான்.

கே: உங்களின் பாட்டு, நடனத் திறமை வளர்ந்தது எப்படி?

ப: நாங்கள் அப்போது சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தோம். அங்கிருந்த எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் பாட்டு, நடனம் என்பது மூச்சுவிடுவது போல. அதனால் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு ஒரு சகோதரி. இரண்டு சகோதரர் கள். சகோதரிகள் பாட்டு, நடனம் கற்றுக் கொண்டோம். அரங்கேற்றம் செய்தோம். எங்கள் நடன குரு தண்டாயுதபாணிப் பிள்ளை. அவரிடம் நடனம் கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்தோம். அரங்கேற்றத் திற்குப் பின் நாங்கள் நடன நிகழ்ச்சிகளை அளிக்கவில்லை. எங்களுக்குத் திருமணம், குடும்பம் என்று வந்துவிட்டதும் ஒரு காரணம்.

ஆறு வயதிலேயே அரியக்குடியின் சிஷ்யர் சங்கீத கலாநிதி வி. ராஜம் ஐயரிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். தொடர்ந்து அவரது இளைய சகோதரர் வி. கிருஷ்ண மூர்த்தி அவர்களிடம் பாட்டுக் கற்றுக் கொண்டேன். ஆனால் கச்சேரி செய்ய வில்லை. லேடி சிவசாமி ஐயர் பள்ளிக் கூடத்தில் நடக்கும் நாடகம் மற்றும் போட்டி களில் நான் கலந்து கொள்வேன். நாடகங் களில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டானது. ஆகையால் என்ன நாடகம் போட்டாலும் சரி, நான் ஆர்வத்துடன் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு மேடை பயம் கிடையாது.

பின்னர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டப் படிப்பு படித்தேன். அந்தச் சமயத்தில் நடந்த கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் நிறையப் பங்கேற்றேன். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனேயே எனக்குத் திருமணம் நடந்ததால் என்னால் சில காலம் நடனம், பாட்டு இவற்றைத் தொடரமுடியவில்லை. என்னுடைய புகுந்த வீட்டினரும் இவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். இதற்கிடையில் நான் சமஸ்கிருதத்தில் முதுகலை படித்தேன். பிறகு ஓய்வு நேரத்தில் சமஸ்கிருதக் கல்லூரிக்குச் சென்று சமஸ்கிருத காவியங்கள், இலக்கியங் களைப் படிக்கத் தொடங்கினேன்.

கே: சென்னை தொலைக்காட்சி நிலையத் துக்காக நீங்கள் ஆற்றிய பணிகள்...

ப: ஒருநாள் டாக்டர் ராகவன் என்னை அவரது நாடகக் குழுவினர் நடத்திய சமஸ்கிருத நாடகத்தில் நடிக்க அழைத்தார். இது எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இராமாயண நாட்டிய நாடகம். அபிநயம் நிறைய இருந்தது. நான்கு நாடகங்கள் சமஸ்கிருதக் கல்லூரியில் போட்டோம். இதைத் தொடர்ந்து மியூசிக் அகாதமியில் காலைநேரத்தில் இரண்டு மணிநேரம் வடமொழி நாடகம் போட்டோம். ரொம்ப நன்றாக வந்தது அந்த நிகழ்ச்சி.

தொலைக்காட்சியில் நிறைய இதுபோல் செய்திருக்கிறேன். முதலில் நான் சென்னைத் தொலைக்காட்சியில் பேட்டி எடுப்பவராகத் தான் இருந்தேன். மருத்துவம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான நேர்காணலைச் செய்து கொண்டிருந்தேன். ஒருமுறை தொலைக் காட்சி இயக்குநர் நடராஜன் எனக்குப் பாட்டு தெரியும் என்பதால் என்னை அழைத்து, திரூவாரூரில் நடக்கும் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப வாய்ப்புக் கொடுத்தார். சுமார் 7 நிமிடங்கள் வரும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பினேன். முதன் முதலாக 1989-ல் ஆரம்பித்தபோது இந்த நிகழ்ச்சியை நான் செய்தேன். பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்தது. குன்னக்குடி வைத்திய நாதன், டாக்டர் எல்.சுப்பிரமணியம் ஆகியோரைப் பேட்டி கண்டிருக்கிறேன். மேலட்டூர் பாகவத மேளாவைப் பற்றி தேசிய அளவில் ஒரு நிகழ்ச்சி செய்திருக்கிறேன். அதற்காக மேலட்டூருக்குச் சென்று, அங்கு தங்கி, பாகவத மேளா நடனநிகழ்ச்சியைச் சுமார் 20 நிமிடத்திற்கு வருகிற மாதிரி செய்தேன்.

கே: தொலைக்காட்சி, நாடகம் என்று இருந்த நீங்கள் எப்படி ஆன்மிக இசைப் பேருரைக்குள் நுழைந்தீர்கள்?

ப: தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கையில் மற்றொருபுறம் மேற்கொண்டு பாட்டுக் கற்றுக்கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் ஒரு ஏக்கம், ஒரு தேடல் ஏற்பட்டது. நமது புராணங்களில், ஆன்மிகத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. அவற்றைக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஏக்கம்.

ஒருநாள் என் பாட்டு வாத்தியார் வைகை ஞானஸ்கந்தன் அவர்களிடம் ''எல்லோரும் பாடுவது போல் நானும், ராகம், தானம், பல்லவி என்று பாடிக்கொண்டிருக்கிறேன். ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக் கிறேன்'' என்று சொன்னேன். அப்போது அவர் என்னிடம், ''நீங்கள்தான் சமஸ்கிருதம் மற்றும் ஆன்மிகம் நிறையப் படித்துக் கொண்டிருக்கிறீர்களே. ஏன் நீங்கள் இசைப்பேருரை நடத்தக்கூடாது? கிருபானந்த வாரியாரை முன்னோடியாகக் கொள்ளுங்கள்" என்றார். அது என்னுள் ஒரு பொறியை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில் நான் கமலாம்பாள் நவாவரண கிருதிகளைக் கற்றுக் கொண்டிருந்தேன். அதை ஒளிநாடா வாகப் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நாங்கள் ஒரு குழுவாகக் கற்றுக் கொண்டிருந்தோம். எங்கள் ஆசிரியர் டிரஸ்ட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அந்த டிரஸ்ட்டில் எம்.வி. சுப்பிரமணியம் உறுப்பினராக இருந்தார். அவர் எங்களிடம் நீங்கள் கேசட் போடுவது சரி. இப்போது எல்லோரும் கேசட் போட்டு கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் கேசட் வெளியிட்ட பிறகு இரண்டு நாள் எங்கள் சபாவில் அதைப் பற்றிய விளக்கவுரையை அளிக்க வேண்டும் என்றார். கமலாம்பாள் நவாவரண கிருதிகள் பல ஆழ்ந்த வேதாந்தத் தத்துவங்கள் அடங்கியது. சாதாரணமாக எல்லோராலும் எடுத்து அதைச் சொல்ல முடியாது. சமஸ்கிருதத்தில் 'குஹ்யம்' என்று சொல்வார்கள். அதாவது மறைமுக அர்த்தங்கள் எல்லாம் நிறைய அதில் உள்ளது.

எனக்கு ஒரே பயம் வந்துவிட்டது. என்னால் முடியுமா என்று தயங்கினேன். ஆனால் அவர் உங்கள் பெயர் போட்டு நான் அச்சுக்குக் கொடுத்துவிட்டேன். இரண்டு நாட்கள் தருகிறேன். நிதானமாக, நன்றாகப் படித்து எவ்வளவு தூரம் முடியுமோ அதை எளிமைப்படுத்திச் சொல்லுங்கள். ஆனால் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று சொன்னார். அவரது வார்த்தைதான் எனக்குத் தாரக மந்திரமாகியது என்று சொல்வேன்.

ஆன்மிகம் என்றாலே எல்லோரும் பயப்படுகிறார்கள். பக்தி என்றால் ''ஐயோ, இதை யார் கேட்பது!'' என்கிறார்கள். பகவத்கீதை என்றால் 'கர்மம் செய்' என்பதை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். மற்றப்படி என்ன இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இல்லை. நிறைய விஷயங்கள் அதில் இருக்கின்றன. எப்படி அதைக் கேட்பவர்களுக்கு அழகாகக் கொண்டு போவது என்பதுதான் முக்கியம். சிறுசிறு கதைகள் சேர்த்து, எளிமைப்படுத்தி, இளைஞர்களைச் சென்றடையும் விதத்தில் சொல்ல வேண்டும். அதற்கு கமலாம்பாள் நவாவரணம் முதல் படியாக அமைந்தது.

கே: என்னென்ன தலைப்புகளில் நீங்கள் இசைப்பேருரை நிகழ்த்தியிருக்கிறீர்கள்?

ப: கமலாம்பாள் நவாவரணம், ஆஞ்சனேய பிரபாவம், கணாபத்யம், சர்வம் சுப்ரமண்யம், கீதார்த்த சங்கிரஹம், பாலகிருஷ்ணன் என்று ஏகப்பட்ட தலைப்புகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். நான் எடுத்துக் கொண்ட கமலாம்பாள் நவாவரணத்தை படிக்கப் படிக்க எனக்கு பிரமிப்பாக இருந்தது. எவ்வளவு விஷயம் இதில் இருக்கிறது, நாம் இதுவரை இவற்றையெல்லாம் படிக்காமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டோமோ என்று தோன்றியது. திருப்பதியில் வந்து எங்களை கமலாம்பாள் நவாவரணத்தைப் பாடச் சொன்னார்கள். பாடி, விளக்கவுரை கொடுக்கச் சொன்னார்கள். தமிழ் அவர்களுக்கு புரியாது என்பதால் நான் அங்கு ஆங்கிலத்தில் விளக்கவுரை அளித்தேன்.
Click Here Enlargeகே: குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் பற்றிச் சொல்லுங்கள்...

ப: பிள்ளையார் பற்றிய நிகழ்ச்சி செய்தோம். 'இடர் கடி களிறு' என்று பெயர் கொண்டது அந்த நிகழ்ச்சி. தேவாரத்தில் வரும் 'இடர் கடி களிறு' என்கிற பெயரையே இந்நிகழ்ச்சிக்குச் சூட்டினோம். அப்போதைய அகில இந்திய வானொலி இயக்குநர் இந்த நிகழ்ச்சியைக் கேட்டுப் பாராட்டியது மட்டுமல்லாமல் அந்த வருடப் பிள்ளையார் சதுர்த்தியன்று ஒரு மணி நேர நிகழ்ச்சியாக இதைச் செய்து தர வாய்ப்புக் கொடுத்தார். நல்ல வெற்றி பெற்றது.

பகவான் கிருஷ்ணரைப்பற்றி பகவத் கீதையை வைத்து நிகழ்ச்சி ஒன்று தயாரித்தேன். கீதார்த்த சங்கிரஹம் என்ற வைணவர் களின் உயர்வான நூலைக் கொண்டு நிகழ்ச்சியைத் தயாரித்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தின் சராம்சத்தை ஒரு சுலோகத்தில் அடக்கி 18 சுலோகங்களாக ஆளவந்தார் சுவாமிகள் செய்திருக்கிறார். அதையே நிகமாந்த தேசிகன் தமிழ்ப் பாசுரங்களாகச் செய்திருக்கிறார். ஆக ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சமஸ்கிருத சுலோகம், ஒரு தமிழ்ப் பாசுரம் கொண்டதாக இருந்தது. படிக்கப் படிக்க அதில் ஆழ்ந்து போனேன். நிறையக் குறிப்புகள் எடுத்தேன்.

நாம் ஏன் இதையே எடுத்துக் கொண்டு இசையமைத்து வெளியிடக்கூடாது என்று தோன்றிற்று. ஆனால் இது எனக்குச் சவாலாகவே இருந்தது. ஏனென்றால் சமஸ்கிருத ஸ்லோகங்களுடைய அடியளவும் தமிழ்ப் பாசுரத்தின் அடியளவும் வேறு வேறாக இருக்கும். இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதற்காக நான் குருநாதரை அணுகினேன். அந்தந்த அத்தியாயத்தின் பொருளைப் பிரதிபலிக்கிற மாதிரி, அந்த பாவத்தை வெளிக்கொண்டு வருகிற மாதிரி ராகங்களைத் தேர்வு செய்தோம். யாப்புக்கு ஏற்றபடி ராகத்தைக் கொடுத்து, இரண்டையும் இணைக்கும்படி சுவரங்கள் போட்டுக் கொடுத்தார். சாதாரணமாக ஆரம்பித்த அது ஒரு கச்சேரி அளவுக்குப் போய்விட்டது. நடுவில் சிட்டஸ்வரங்கள் வரும். அப்புறம் தமிழ்ப் பாசுரம் வரும். மறுபடியும் திருப்பிப் பாடுவோம். ரொம்ப அழகாக அமைந்தது.

எனக்குத் திருவாரூர் தியாகேஸ்வரரைப் பற்றி நிகழ்ச்சி ஒன்று நடத்த வேண்டும் என்று ரொம்ப ஆசை. அவருக்கென்று ஒரு சிறப்பு வழிமுறைகள், சம்பிராதயங்கள், சடங்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு சடங்கும் அர்த்தமுள்ளதாகும். 'தியாகராஜ யோக வைபவம்' என்ற பெயர் வைத்தேன். அதே சமயத்தில் சென்னை பார்த்தசாரதி சபாவில் இருந்து என்னை அழைத்து இந்த வருடம் இசைவிழாவிற்கு ஏதாவது புதிய தாகச் செய்கிறீர்களா என்று கேட்டார்கள். உடனே எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் 'தியாக ராஜ யோக வைபவம்' என்கிற தலைப்பைக் கொடுத்துவிட்டேன்.

இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஹம்சத்வனியில் செய்தோம். சென்னை மற்றும் பம்பாய், பெங்களூர் என்று நிறைய இடங்களில் இதைச் செய்தோம். சென்ற இடமெல்லாம் நல்ல வரவேற்பு. தியாகேஸ்வேரர் குறவஞ்சி, தியாகேஸ்வரர் தாலாட்டு, தியாகேஸ்வரர் மருந்து என்று விதவிதமான பாட்டுக்கள் எங்களுக்குக் கிடைத்தன. இதற்காக நான் நிறையப் பேரைச் சந்தித்தேன். நிறையத் தகவல்களைச் சேகரித்தேன். நூலகங் களுக்குச் சென்று ஏராளமாகப் படித்தேன். ஏதாவது ஒரு தலைப்பை நான் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு நான் அந்தத் தலைப்புடனேயே வாழ்வேன்.

இதன் பிறகு சங்க காலத்திலிருந்து இன்று வரை உள்ள தமிழ் இசைவல்லுனர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதினேன்.

கே: வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைச் சொல்லுங்கள்...

ப: ஞானஸ்கந்தன் அவர்கள் எங்களிடம் ஒருமுறை ஆடிக்கிருத்திகை அன்று சுப்பிரமணியரின் அறுபடை வீடுகள் பற்றி திருப்புகழ் ஆகியவற்றைக் கொண்டு ஒரு நிகழ்ச்சி செய்யுங்கள் என்றார். ஸ்ரீ சுப்பிரமணியாய நமோஸ்துதே என்ற கிருதியை எடுத்துக் கொண்டு, பத அர்த்தங்களைப் பற்றிக் காஞ்சி பெரியவாள் கொடுத்திருந்த கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொண்டு, நிறையக் கீர்த்தனைகள், ஆறு திருப்புகழ்ப் பாடல்கள் இவற்றுடன் வேறு தமிழ்ப்பாடல்களையும் சேர்த்து நிகழ்ச்சியைத் தயாரித்தேன்.

எப்படித் தெரிந்ததோ, காஞ்சி ஸ்ரீமடத்திலிருந்து அப்போது எங்களுக்கு அழைப்பு வந்தது. குருபௌர்ணமி சமயத்தில் மடத்திற்கு வந்து இதை நடத்த வேண்டும் என்றார். அவரது அழைப்பு எங்களுக்குப் பெரிய ஆனந்தத்தைக் கொடுத்தது.

அங்கு பெரியவாள் எங்களிடம் "நீங்கள் இதைப் பொது அரங்கில் பாடப் போவ தில்லை. இங்கு எனக்காகப் பாடுங்கள்" என்று சொன்னார். அவர் அப்படிக் கூறியவுடனே இதற்கு மேல் நமக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கப்போகிறது என்ற எண்ணமே மனதில் தோன்றியது. அந்தக் காட்சி என் மனதை விட்டு இன்றும் நீங்கவில்லை. மேளாவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் பெரியவர். அவருக்குப் பக்கத்தில் நாங்கள் எல்லோரும் அமர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களைச் சுற்றி மடத்து சிப்பந்திகள். மைக் கிடையாது. சுமார் இரண்டு மணிநேரம் பாடினோம். ''இன்னொரு தரம் பாடு.. இன்னொரு தரம் சுப்பிரமணியாய நமோஸ்துதே கிருதியைப் பாடு'' என்று சொன்னார். நாங்கள் பத்துப் பேர் போயிருந்தோம். எல்லோரும் கண்ணில் நீர் ஒழுக, உருகி உருகி அவர் முன் பாடினோம். நாங்கள் பாடியதையும், பேசியதையும் ரொம்பச் சந்தோஷமாகக் கேட்டார். எங்களால் மறக்கவே முடியாத நிகழ்ச்சி அது.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் எங்களிடம் "ஏனாத்தூரில் சமஸ்கிருத நூலகம் ஒன்றை நான் அமைக்கவிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் பிரதியொன்றை இங்கு கொடுத்துவிடு. நூலகத்தில் இருக்கட்டும்" என்றார். நான் உடனே 30 பக்கங்கள் கொண்ட அந்த எழுத்துப் பிரதியை பைண்ட் செய்து அப்படியே கொடுத்து விட்டேன். இன்றும் அது ஏனாத்தூர் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து அபிராமி அந்தாதியைப் பாடி ஒலிநாடா கொடுத்தோம். அபிராமி குடிகொண்டுள்ள திருக்கடவூரில் இதனை வெளியிடுவதற்கு அழைத்தார்கள். அன்று அங்கு கும்பாபிஷேகம். அந்த நன்னாளில் தருமபுரம் ஆதீனம் அவர்கள் இந்த இசைநாடாவை வெளியிட்டார்கள். வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சுமார் 64 மடாதிபதிகள் வந்திருந்தது சிறப்பு.

கே: தமிழில் இசை நிகழ்ச்சிகள் ஏதும் நிகழ்த்தியதுண்டா?

ப: எனக்கு சமஸ்கிருதத்தில் எவ்வளவு ஈடுபாடு இருக்கிறதோ அந்த அளவிற்குத் தமிழிலும் ஈடுபாடு உண்டு. அருட்பெருஞ் ஜோதி வள்ளலார், பதினெண் சித்தர்கள் பற்றி நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். வள்ளலாரின் அருட்பாக்களைக் கொண்டு அதில் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து அவர் பிறந்த வடலூரில் செய்தோம்.

என்னுடைய இந்த நிகழ்ச்சியை கேட்ட நிறையப் பேர் என்னைச் சந்தித்தபோது ''இதில் நிறைய அத்வைத தத்துவங்கள் உள்ளன. அதனால் 'அத்வைதமும் அருட்பாவும்' என்று ஓர் ஒப்பாய்வு செய்யுங்கள் என்றனர். நான் அந்த ஆண்டு டிசம்பர் சீசனில் நாரத கான சபாவில் அதே தலைப்பில், ஆதி சங்கரரின் அத்வைத கொள்கைகளை எப்படி அருட்பாவில் வள்ளலார் எளியமுறை யில் சொல்லியிருக்கிறார் என்பதைச் சொல்லி எடுத்துச் சொன்னேன். அருட் பாவையும் மனிஷா பஞ்சகத்தையும் மாற்றி மாற்றி மேற்கோள் காட்டி ஒப்பிட்டேன். பெரிய ஞானிகள் சொல்வது எல்லாம் ஒன்றுதான். அவரவர் மொழியில், அவரவர் வழியில் சொல்லியிருக்கிறார்கள்.

அதுபோல் உலகம் எப்படி உருவானது என்பதில் ஆரம்பித்து படிப்படியாகப் போகிறது 'பதினெண் சித்தர்கள்'. அவர்கள் கையாளாதவை எதுவுமே கிடையாது. சித்தர்கள்மேல் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. திருமூலர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரைப் பற்றி நிகழ்ச்சிகள் செய்ய எண்ணம் உள்ளது. வள்ளுவரைப் பற்றி நிறைய ஆராய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. குறளை எடுத்து அதைப் பாட்டு வடிவத்தில் தரவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது.

கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள்...?

ப: நிறையத் திட்டங்கள் உள்ளன. அதாவது குழந்தைகளைத் தேடிச் சென்று சாதி மத வித்தியாசம் பார்க்காமல் இலவசமாக ஆன்மிகத்தை போதிக்க வேண்டும். அதாவது கட்டாய வகுப்பு என்று இல்லாமல், கதைகள் சொல்வது மூலம் அவர்கள் மனதில் பக்தி, அறம், நெறியை விதைக்க வேண்டும். சிறு வயதில் கட்டுப்பாடு வந்துவிட்டால், வளர்ந்து அவர்கள் பெரியவர்கள் ஆகி எவ்வளவு சுதந்திரமாக இருந்தாலும் தவறுகள் செய்ய மாட்டார்கள். வாழ்க்கையில் நெறி ரொம்பவும் முக்கியம்.

இன்னுமொரு ஆசை. ஏதாவது ஒரு கிராமத்தை சேரியை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அங்குள்ள குழந்தைகளுக்கு உள்ள தரம் பிரித்துப் பார்க்கிற தன்மை யாருக்குமே இல்லை என்பதை நான் ஆணித்தரமாகச் சொல்வேன். அது அந்தக் குழந்தைகளுக்கு ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. அந்தக் குழந்தைகளை முன்னேற்ற வழியில் நடத்த வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை.

பாரதியார் கண்ட புதுமைப் பெண்கள் பற்றிச் செய்யவிருக்கிறேன். பாரதியார் சமுதாய நன்மைக்காகச் சொல்லியவற்றைச் சொல்லவிருக்கிறேன். அதுபோல் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிக்காக விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதுபோல் கவிஞர் கண்ணதாசனின் கருத்துக்கள், தத்துவங்கள் போன்றவற்றை வைத்து ஒரு முழுநீள நிகழ்ச்சி நடத்த ஆசை. கவிதைகள் மற்றும் சினிமா பாட்டுகள் வைத்துச் செய்யவேண்டும்.

கே: உங்களது ஆன்மிக இசைப்பேருரைக்கு எந்தவிதமான வரவேற்பு இருக்கிறது?

ப: ஆன்மீகமும் இசையும் இரண்டு கண்கள். மனிதனை நல்வழிப்படுத்துவது ஆன்மிகம். துள்ளாத மனமும் துள்ள வைக்கும் இசை என்றார் கவிஞர் கண்ண தாசன். இசையோடு நம் ஆன்மிக விஷயங் களைச் சொல்கிற போது உள்ளங்களை ஈர்க்கும். இசையுடன் சுவையான கதை களைச் சேர்த்து சொல்கிறபோது சட்டென்று மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும். நீங்கள் நினைப்பதுபோல் இசைப்பேருரைகள் வயதானவர்களுக்கு மட்டும்தான் என்பது தவறு. இன்று என் நிகழ்ச்சிகளை 20 வயது இளைஞன் முதல் 80 வயது பெரியவர்கள் வரை கேட்கிறார்கள்.

இப்படிப்பட்ட விஷயங்களை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய முக்கிய மான குறிக்கோள். இன்றைய இளைஞர் களின் புத்திசாலித்தனம் எங்கேயோ இருக்கிறது. விஷயங்களைப் புரிந்துக் கொள்கிற விதமாகட்டும், அதை நடத்திச் செல்கிற விதமாகட்டும், தங்கள் எதிர் காலத்தைப் பற்றித் திட்டமிடுவதாகட்டும் எல்லாமே நன்றாக இருக்கிறது. அது சிதறிச் சின்னாபின்னமாகக்கூடாது.

இளமை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டம். அந்த வயதில் அவர்களைப் பக்குவப்படுத்தி, நல்வழிப் படுத்திவிட்டால், பிறகு அவர்கள் வெற்றியின் சிகரத்திற்கே செல்ல முடியும். இன்றைய இளம் தலைமுறையினர்தான் என்னுடைய இலக்கு. நிறைய இளைஞர்களும் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நான் பார்க்கிறேன். அது என் மனதிற்கு சந்தோஷத்தைத் தருகிறது.

சந்திப்பு : கேடிஸ்ரீ
தொகுப்பு : மதுரபாரதி
More

கலாசாரப் பாலமான 'கன்னிக்ஸ்' கன்னிகேஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline