Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
முன்னோடி
இரேனியஸ் அடிகள்
- மதுசூதனன் தெ.|ஜூன் 2005|
Share:
Click Here Enlargeதமிழ்நாட்டிற்கு கிறித்தவத்தின் வருகை சமயப் பணிகளுக்கு அப்பால் சமூக, அரசியல் மற்றும் சிந்தனை வாழ்வியல் சார்ந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது என்பது வரலாறு. கிறித்தவ வழிவந்த மரபுகள் தமிழரோடும் தமிழ் மொழியோடும் கொண்ட தொடர்பு தற்காலத் தமிழ் வரலாற்றின் ஒரு முக்கிய பங்கு எனலாம்.

ஐரோப்பியக் கிறித்தவர்கள் பலர் தமிழ்ச் சிந்தனையின் மீளுருவாக்கத்துக்கும் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளின் தோற்றுவாய்க்கும் முன்னோடிகளாக இருந்துள்ளார்கள். வீரமாமுனிவர், கால்டுவெல், போப் போன்றவர்களின் வரிசையில் வருபவர்தான் இரேனியஸ் அடிகள். இன்னொருவிதமாகக் கூறினால் கால்டுவெலுக்கும் போப்புக்கும் முன்னோடியாக விளங்கியவர் இரேனியஸ் அடிகளார்.

இரேனியஸ் 1790 நவம்பர் 5-ல் இன்றைய ஜெர்மனியின் பிரஷியாவில் பிறந்தவர். அப்போது பிரஷியாவில் லூத்தரன் திருச்சபையும் சீர்திருத்தத் திருச்சபையும் இருந்தன. இரேனியஸ் சீர்திருத்தப் பிரிவைச் சேர்ந்தவர். 1811-ல் மறைபரப்பும் திருப்பணியில் சேர உறுதி கொண்டு பெர்லின் நகரில் 15 மாதங்கள் இறையியல் கல்வியும் பயிற்சியும் பெற்றார். 1812-ல் சுவிசேஷ லூத்தரன் திருச்சபையில் குருத்துவப் பட்டம் பெற்றார்.

லண்டனிலிருந்த சர்ச் மிஷனரி சங்கம் அவரை மிஷனரியாகத் தமிழகம் அனுப்பத் தீர்மானித்தது. 1814 ஜூலை மாதம் சென்னை வந்து சேர்ந்தார். அந்த ஆண்டில் தான் ஆங்கில அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மிஷனரிகளை அனுப்ப அனுமதி தந்திருந்தது. ஆங்கிலிக்கன் சமயத் தொண்டர் யாரும் தயாராக இல்லாததால் சங்கம் இரேனியஸைத் தனது மிஷனரியாக ஏற்றுச் சென்னைக்கு அனுப்பியது. இத்தகைய தொரு ஏற்பாட்டினால் பின்னர் நடக்கவிருந்த கருத்து மோதல்களையும் மன வேதனை தரும் நிகழ்ச்சிகளையும் அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. ஐரோப்பாவின் புராட்டஸ்தாந்திய சபைப் பிரிவுகளின் பிரிவினை உணர்ச்சி அப்போதுதான் முதல் தடவையாக இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.

அடிகளார் தரங்கம்பாடியில் தங்கி ஐந்து மாதகாலம் ஊழியப் பயிற்சியும் தமிழ் மொழிப் பயிற்சியும் பெற்றுச் சென்னையில் தமது பணியைத் தொடங்கினார். சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு வாடகை வீட்டில் தங்கி தம் சமயப்பணியை ஆரம்பித்தார். 1814 ஏப்ரல் 12 முதல் அவ்வீட்டில் ஒரு சிறு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் 28 ஞாயிறு அன்று முதல் ஆராதனை நடந்தது. அதுவே ஞாயிறுப் பள்ளியாகவும் பயன் பட்டது. மேலும் அதுவே ஆராதனைத் தலமாகவும் ஓய்வு நாள் வகுப்பாகவும், சமூகக் கூடமாகவும் மாறியது. அவர் தங்கியிருந்த வீடு சமயப்பணியின் உறைவிடமாகவும் இருந்தது.

மக்களிடையே காணப்பட்ட சாதி பாராட்டும் பண்பு, தீண்டாமைக் கொடுமை மற்றும் சோம்பிக் கிடத்தல் உள்ளிட்ட யாவும் களையப்பட வேண்டியவையாக அடிகளார் இனங்கண்டார். திருச்சபை இவற்றைக் களைந்து மக்களிடையே சமுகச் சிந்தனை வளர்ந்துவரப் பாடுபட வேண்டும் என்ற கருத்துநிலையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். மக்களிடம் சமூக சமயச் செய்திகளைக் கொண்டு செல்ல சிறுசிறு துண்டறிக்கைகளைப் பயன்படுத்தினார். துண்டறிக்கை வழியாக எளிய மொழி நடையில் சாதாரண மக்களுக்குத் தன் கருத்தினைச் சொல்லும் முறையினை முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர். இரேனியஸ் அடிகளார்தாம். இந்த எண்ணத்தைச் செயலாக்க சென்னை துண்டுப்பிரசுரச் சங்கம் என்ற அமைப்பினை 1818-ல் நிறுவினார். மேலும் தாம் எழுதிய துண்டறிக்கைகளை எழுத்தறிவில்லாத மக்களுக்குப் படித்துக் காட்ட கிறிஸ்தியான் என்ற ஒரு வாசகரையும் நியமித்தார்.

அடிகளாரின் முயற்சியால் 1817 நவம்பர் 5-ல் ஒரு வேதாகமச் சங்கம் சென்னையில் நிறுவப்பட்டது. அப்பொழுது நடைமுறையில் இருந்த பெப்ரிஷயஸ் மொழிபெயர்ப்பான தமிழ் வேதாகமம் மக்கள் பேசும், புரியும் மொழியில் இல்லாததனால் 1815 நவம்பர் 15-ம் நாள் முதல் அதன் திருத்தப்பணியை ஆரம்பித்து, தம் இறுதி மூச்சுவரை அப்பணியை இரேனியஸ் செய்து வந்தார். உதவிக்கு ஒரு தமிழாசிரியரை எப்போதும் உடன் வைத்து இருந்தார்.

1815 மே மாதம் சென்னையின் முதல் பள்ளியை நிறுவினார். பின்பு கிறித்தவப் பள்ளிகள் பெருகத் தொடங்கின. கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் கிடைக்கவில்லை இதனால் சென்னையில் மதபோதகர்கள் பள்ளியான செமினரி ஒன்றைத் தொடங்கி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார். இன்றைய ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளுக்கு அன்றைய செமினரி ஒருவகையில் முன்னோடி எனலாம்.

1818 அக்டோபரில் சென்னையில் பயங்கர காலரா நோய் பரவியது. பலர் இறந்தனர். பலர் ஊரைவிட்டு ஒடினார். இந்நிலையில் இரேனியஸ் முதலுதவியைத் தைரியத்துடன் செய்தார். பல உயிர்களைக் காப்பாற்றினார். காலரா நோய்த்தடுப்பு பற்றி ஒரு துண்டறிக்கை எழுதி அச்சிட்டு மக்களுக்கு விநியோகித்தார். வாசகர்கள் சிலரை ஆங்காங்கு இருத்திப் படித்துக் காட்டவும் செய்தார்.

இரேனியசின் சென்னை ஊழியம் அரைகுறையில் நின்றது. அவர் புரிந்து கொள்ளப்படுவதில் திருச்சபைகளுக்கிடையே முரண்பாடுகள் தோன்றின. இதனால் அவர் வேறொரு இடத்துக்கு ஊழியம் செய்ய அனுப்பப்பட்டார்.

ஜெர்மனிய மிஷனரிகள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துக் கொண்டு போகவேண்டும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. இரேனியசால் அது இயலவில்லை. எனவே அவரைத் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கத் தீர்மானமாயிற்று. சென்னையைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, பிற சமயத்தவருடன் நெருங்கிப் பழகி உற்சாகமாகச் செயல்பட்டு வந்த இரேனியசுக்கு இது ஏமாற்றமாகவே இருந்தது. ஆயினும் பின்னர் அம்முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

சென்னை ஆங்கிலிக்கன் திருச்சபை தரங்கை மிஷனைப் பின்பற்றிச் சாதிபேதத்தைத் திருச்சபையில் அனுசரித்தே வந்தது. இரேனியஸ் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பள்ளியிலும் ஆலயத்திலும் சாதிபேதம் அனுசரிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர். இந்தப் போக்குத்தான் அவர் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டமைக்கான உண்மைக் காரணம்.

ஆங்கிலிக்கன் திருச்சபை கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஒத்துப்போய் விடுவதையே தனது கொள்கையாக கொண்டிருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியோ இந்தியச் சமுதாயப் பாரம்பரியங்களை அனுசரித்துப் போவதே வியாபார விவேகம் எனக் கருதிச் செயல்பட்டது சாதி ஆசாரங்களை எதிர்த்து மேல்சாதியினரைப் பகைத்துக்கொள்வது உடன்பாடல்ல. இப்படியொரு சூழ்நிலையில் இரேனியஸ் நெல்லைக்கு அகற்றப்பட்டார்.

சாதியப்படிநிலை இறுக்கமாகவும் தீண்டாமைக் கொடுமை மிக மோசமாகவும் கோலோச்சிய அக்காலத்தில் இரேனியசின் முற்போக்குச் சிந்தனை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்புலத்தில் மாற்றத்தைக் கொண்டுவரக் காரணமாயிற்று ஐரோப்பாவின் தொழில் புரட்சி சமுதாய மாற்றங்கள் விஞ்ஞான வளர்ச்சி இவற்றைக் கண்டிருந்த இரேனியஸின் கருத்துக்கள் முற்போக்காக இருந்ததில் வியப்பில்லை.

இரேனியஸ் தாழ்த்தப்பட்டவர்களையும் கிறித்தவ சமயத்தில் சேர்த்துக் கொள்வதே கிறித்துவ தர்மமாகும் என்ற கொள்கை வழிநின்று சமுக மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். திருச்சபை சாதி ஒழிப்புப் பிரச்சினையிலும் ஆர்வமும் தீவிரமும் காட்ட வேண்டுமென்ற நிலைமையை உருவாக்கியதில் இரேனியஸ் அடிகளாருக்கு முக்கியமான இடமுண்டு. அடிகளார் சென்னையை விட்டுச் சென்ற பின்னர் ஹாப்ரோ என்ற மிஷனரி அவரைப் பின்பற்றித் திருச்சபையில் சாதி ஒழிப்புப் பிரச்சனையில் தீவிரம் காட்டினார் என அறிய முடிகிறது.

1820 ஜூன் 2 ஆம் தேதி இரேனியஸ் குடும்பத்தாரோடு புறப்பட்டு திருச்சி, மதுரை முதலிய இடங்களில் தங்கி ஜூலை 7-ம் தேதி நெல்லையருகே பாளையங்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். நெல்லை வண்ணார் பேட்டையில் 1822-ல் முதல் பள்ளியைத் தொடங்கினார். திருநெல்வேலி, மேலப் பாளையம், குறிச்சி, தச்சநல்லூர் என்று பள்ளிகளும், சபைகளும், ஆலயங்களும் பெருகத் தொடங்கின.

பாளையங்கோட்டையில் நிறுவிய செமினரி பள்ளியில் சாதி வேறுபாடு கடுமையாகத் தலைதூக்கிற்று. ஆனால் சாதிவெறியை வேரோடு ஒழிப்பதில் இரேனியஸ் உறுதியாக இருந்தார். இதனால் பள்ளியை மூடினார். அதுவே இன்றைய பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆகும். 1823-ல் பெண்களுக்கு ஒரு செமினரியைத் தொடங் கினார். பல ஊர்களில் இருந்து தெரிந்தெடுத்த 39 பேர் அப்பள்ளியில் பயின்றனர்.

இரேனியஸ் நெல்லையில் வாழ்ந்த பொழுது கூடத் தொடர்ந்து திருப்பாற் கடல்நாதன் என்பாரிடம் தமிழ் பயின்றார். கடைசிவரை தமிழைக் கற்றுக் கொண்டே இருந்தார். நெல்லையில் அவர் ஊர் ஊராகச் சென்றார். கிறித்தவம் தழுவ மக்கள் திரள்திரளாக வந்தார்கள். இந்த மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் பாரபட்சம் காட்டாமல் அனைத்துச் சாதியினரையும் சமத்துவமாக நடத்துவதில் தொடக்கம் முதல் இரேனியஸ் கவனமாக இருந்தார்.

இக்காலத்தில் கிறித்துவ கிராமங்கள் பல உருவாயின. புலியூர்க் குறிச்சி கிராமத்தை 1827-ல் இரேனியஸ் வாங்கி (நிதி உதவிபெற்று) அங்கு கிறித்தவர்களைக் குடியேற்றினார். இதனால் இந்த ஊர் டோனாவூர் என்று வழங்களாயிற்று. 1834இல் 127 ஆலயங்களும், 117 சுதேசிய ஆசிரியர்களும் மற்றும் ஏறத்தாழ 20,000 கிறித்தவர்களும் இருந்தனர். சமயப் பணியுடன் இரேனியஸ் கல்வியில் விசேட கவனம் செலுத்தினார். சாதியப்படி நிலைச் சமூகத்தில் பொதுவாகக் கல்வி என்பது ஆதிக்கச் சாதியினரின் உரிமையாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. கல்வி அனைத்து மக்களுக்கும் உரியதாகும் எனக் கருதி இரேனியஸ் கல்விச் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டார்.
நெல்லையில் கிறித்தவ சமயத்தினரிடையே சாதி ஆசாரங்கள் பேணப்பட்டே வந்தன. ஆனால் பள்ளியிலும் ஆலயத்திலும் மாணவர் தங்கும் விடுதியிலும் கூடச் சகல மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் இரேனியஸ் மிகக் கண்டிப்பாக இருந்தார். இந்தச் சமூக மாற்றத்தைச் செயற்படுத்துவதில் தெளிவாகவும் உறுதியாகவும் இரேனியஸ் இருந்துள்ளார். தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்படல் வேண்டும் என்பதும் அடிகளாரின் கொள்கையாக இருந்தது. தேவைப்பட்ட நூல்களை மொழிபெயர்த்தும் பிரசுரித்தார். தமிழில் முதன் முதலாக பூகோளம், வரலாறு, பொது அறிவு நூல்கள் அடிகளால் தான் எழுதப்பட்டன.

அதே போல் உரைநடைத் தமிழை முதன் முதலாகச் சந்தி பிரித்து எளிமையாக்கியவர் இரேனியஸ் தான். சாதாரண மக்களும் கல்வியறிவு பெறத் தொடங்கியதால் உரைநடையை எளிமையாக்குவதில் அவர் சிறப்புக் கவனம் செலுத்தி வந்தார். இதற்குத் துண்டுப்பிரசுர விநியோகம் கூட உதவி செய்தது. அதாவது சாதாரண மக்களுக்கு, அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில், செய்தி தெளிவாகப் போய்ச்சேர வேண்டு மென்ற நோக்கம் அடிகளாரிடம் தெளிவாக இருந்தது. இந்தக் கண்ணோட்டம் அவர் எழுதிய நூல்களிலும் மொழிபெயர்ப்புகளிலும் அடிநாதமாக இழையோடி இருந்தது.

இரேனியஸ் பாளையங்கோட்டையில் 19 ஆண்டுகள் வாழ்ந்து அவர் படைத்த நூல்கள் பல. அவற்றுள் இரண்டை நாம் முக்கியமாகக் கருதலாம். ஒன்று 1825-ல் எழுதிய தமிழ் இலக்கணம் எனும் நூல். மற்றது 1832-ல் எழுதி வெளியிட்ட 'பூமி சாஸ்திரம்' என்னும் தமிழ் நூல்.

இரேனியஸ் அடிகள் தமிழ் நாட்டுக்கு வந்து 11 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட நூல்தான் தமிழ் இலக்கணம். இந்நூல் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக அமைந்தது. தமிழில் உதாரண வாக்கியங்களுடன் கூடியது. முடிந்த அளவு வடசொற்கள் நீக்கி எழுதப்பட்டது. இவருக்கு முன் சீகன்பால்கு, பெஸ்கி, வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூல்களில் இருந்து இரேனியஸின் இலக்கண நூல் வேறுபட்டிருந்தது. எனினும் வீரமாமுனிவர் எழுதிய 'தொன்னூல் விளக்கம்' என்ற இலக்கண நூலைப் படித்த பின்பே அந்த நூலைக் கற்க வேண்டும் என்று விரும்பினார். இரேனியஸ் இலக்கணம் கற்ற போது தொல்காப்பியம் வழக்கில் இல்லை. நன்னூலும் செய்யுளில் இருந்தது. இதற்கு உரை விளக்கம் தேவையாய் இருந்தது. ஆதலால் தமது நூல் உரைநடையில் இருக்க வேண்டுமெனக் கருதினார். இந்நூல் மூலம் கொச்சை நீக்கிய எளிமை யான தமிழ் என்ற இரேனியசின் கோட்பாடு வெளிப்பட்டது.

இரோனியசின் மற்றொரு படைப்பு 'பூமி சாஸ்திரம்' இந்நூல் 1832-ல் வெளிவந்தது. 728 பக்கங்களை உடையது இந்நூல். நூலில் முகப்புப் பக்கத்தில் தமிழருக்கு அறிவுண்டாகும்படிப் பாளையங்கோட்டையில் இருக்கும் இரேனியூசையரால் செய்யப்பட்டது என்ற குறிப்பு காணப்படுகிறது. அதாவது இந்நூல் கிறித்தவர்களுக்கு மட்டுமன்று பொதுக் கல்விக்குரிய அனைத்துச் சமய மக்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் பிறந்த புத்தறிவை ஊட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததாகும். நியூட்டன், பேக்கன் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழில் முதன் முதலாக மேலைநாட்டு மரபில் வந்த புவியியல், வரலாறு, பொது அறிவு நூல்கள் அடிகளால் தான் எழுதப்பட்டன.

இதைவிட ஆங்கிலச் சொற்களும் தமிழ் மொழி பெயர்ப்புடன் ரோமானிய எழுத்தில் தரப்பட்டுள்ளன. மேலும் நூல் முழுவதும் தமிழ்ப்புணர்ச்சி விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன. ஏராளமான கலைச் சொற்களைத் தமிழில் ஆக்கிக் காட்டியுள்ளார். தமிழில் கலைச் சொல்லாக்கம் செய்வோருக்கு வழிகாட்டியாகவும் தமிழ் மரபுக்கேற்ற அறிவியில் கண்ணோட்டத்தையும் முன்வைத்துள்ளார்.

வேதாகம மொழிபெயர்ப்புக் கொள்கைகள் குறித்து இரேனியஸ் 59 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அதில் மொழி பெயர்ப்புக் கோட்பாடுகள் சிலவற்றை சுட்டுகின்றார். தமிழில் மொழிபெயர்ப்புக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொள்வதற்கான அறிவியல் நோக்கு, சிந்தனைப்புலம் ஆகியவற்றை முன்வைத்துள்ள சிறப்பும் அவரைச் சாரும்.

தமிழில் சொல்வழி மொழிபெயர்ப்பு தவிர்க்கப்பட வேண்டும். கருத்து மொழி பெயர்ப்பாகவே வேத மொழி பெயர்ப்பை நடத்த வேண்டுமென அழுத்தமாகச் சொன்னார். மக்கள் வாசிப்பது அவர்களுக்கு விளங்க வேண்டும். இதனை இரேனியஸ் ஒரு செய்தியாகவே நமக்கு விட்டுள்ளார்கள்.

ஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் பாதிப்புகளோடு 1814-ல் சென்னை வந்து இறங்கிய இரேனியஸ் 1819 முதல் 19 ஆண்டுகள் பாளையங்கோட்டையில் வாழ்ந்து 1838 ஜூன் 5 அன்று பாளையில் காலமானர். 20க்கும் மேற்பட்ட தமிழ் உரை நடை நூல்கள் அவரால் எழுதப்பட்டன.

இரேனியசின் சமயப்பணிகள் சமூகப் பணிகள் உள்ளிட்ட தமிழ்ப்பணிகள் தமிழின் சிறப்புக்கும் தமிழரின் வாழ்வுக்கும் புதுப்பாய்ச்சலாக இருந்தது. தமிழில் ஆய்வுச் சூழலுக்கு ஓர் தொடக்கப் புள்ளியாகவும் முன்னோடியாகவும் விளங்கியுள்ளார். அவரது வாழ்வும் சிந்தனையும் நமக்கு விட்டுச் சென்றுள்ள தடங்கள் ஆழமானவை.

மதுசூதனன் தெ.
Share: 




© Copyright 2020 Tamilonline