Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் 2)
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2005|
Share:
Click Here Enlargeமுன்கதை: Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, இப்போது முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். கிரணும், ஷாலினியும் துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இப்போது சூர்யாவின் நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆராய்ச்சி சாலையில் எதோ பிரச்சனை, தீர்க்க சூர்யாவின் உதவி வேண்டும் என்று கோரவே, சூர்யாவும் கிரணும் சுமிடோமாவைச் சந்திக்கப் புறப்பட்டுள்ளனர்.

கிரண் தனது புத்தம் புதிய ·பெராரியின் கூரையைக் கழட்டிவிட்டுப் பேய் வேகத்தில் ஓட்டினான். என்னதான் கலி·போர்னியா என்றாலும் தீபாவளிக் காலம் குளிரல்லவா? தமிழ்நாட்டு சூட்டில் இருபது வருடம் இதம் பெற்றிருந்த சூர்யா வின் உடல், வெடவெடத்தது. அதற்கும் மேல் கிரணின் திடீர் பிரேக்குகளும், திருப்பங்களும், லேன் மாற்றங்களும் சூர்யாவை அலைக்கழித்தன. சூர்யா தொப்பியை நன்றாக அழுத்தி விட்டுக்கொண்டு, மேல் கோட்டுத் துணியை உடம்பைச் சுற்றி இன்னும் இறுக்கிக்கொண்டு, சாலை ஓசைக்கு மேல் கிரணின் காதில் கத்தினார்.

"கிரண்! மெல்லவே போ. இது ஒண்ணும் தலைபோற அவசரமில்லை. இப்படியே ஓட்டினா, நிஜமாவே தலை போயிடும் போலிருக்கு. குளிர்ல பல்லும் விழறா மாதிரி அடிச்சுக்குது."

கிரண் வேகத்தைக் குறைத்துவிட்டுச் சரக்கென்று பக்கத்திலிருந்த ஒரு கடையின் வாகனம் நிறுத்தும் பரப்பில் நிறுத்தி, ஒரு பட்டனை அழுத்தி விர்ரென்று வண்டியின் கூரையை ஏற்றி மூடினான். அப்படியே சூர்யாவையும் கேலி செய்தான். "என்ன தாத்தா, குளிரும் வேகமும் தாங்கலையா? உக்காருங்க, காரைத் தள்ளிக்கிட்டு வரேன். நல்ல தாலாட்டா இருக்கும்."

சூர்யா முறுவலுடன், "நீ தள்ளினாலும் இறக்கத்துல 60 மைல் வேகத்துல போறா மாதிரி தள்ளிடுவேப்பா, வேண்டாம். வேணும்னா ஒரு ரோபாட் டிரைவரை வச்சுக்கறேன். நிதானமா, ஒரு சட்டத்தையும் மீறாம, ஆபத்தில்லாம கொண்டு சேத்துடும்" என்றார்.

கிரண் முகம் சுளித்தான். "என் காரை நான் ரோபாட் கிட்ட காட்டக்கூட மாட்டேம்பா. இது என்ன ட்ரக் ஓட்டற வேலையா என்ன ரோபாட் கிட்டத் தள்ளறத்துக்கு? ·பெராரி டெஸ்டரோஸ்ஸாவாக்கும்! வேற ஒருத்த ரோட நகம் கூட ஸ்டீயரிங்வீல் மேல பட விடமாட்டேன்" என்றான்.

சூர்யா புன்னகைத்தார். "அதுனால என்ன பரவாயில்லை. ரோபாட்டுக்கு நகம் கிடையாது."

கிரண் "ஆஆர்ர்ர்க்க்க்!" என்று உறுமி கழுத்தைத் தேய்த்துக் கொண்டான். "அய்யோ தாங்கலை. சரியான கடி. எங்க அப்பா அடிக்கற கடி ஜோக்கே தேவலாம்."

சூர்யா தொடர்ந்தார். "உண்மையில பாக்கப் போனா ரோபாட் டிரைவர்னா ஸ்டீயரிங்வீல் பின்னால ஒரு ரோபாட் இருக்கணுங்கறது கூட கிடையாது. காரே ரோபாட்டாகி, தானே ஓட்டிக்கறதுன்னு சொல்லலாம். கார்னகி மெல்லன் யூனிவர்ஸிடியில பரிசோதனையா செஞ்சிருக்காங்க. சில வருஷம் முன்னாலயே பென்ஸில்வேனியாவில இருக்கற லேக் ஈயரியிலிருந்து பிட்ஸ்பர்குக்கு நூறு மைல் தூரம் ஒரு காரை தானே ·ப்ரீவேல ஒரே லேன்ல வரா மாதிரி ஓட்டியிருக்காங்க. என்னோட நண்பன் ஒருத்தன் கூட அந்த குழுவில வேலை செய்யறான். நான் கூட அப்ப பிட்ஸ்பர்க்ல வேலை செஞ்சிகிட்டிருந்தேன். வீடியோ கேமராவில தெரியறதை வச்சு, காரோட எஞ்சினோட இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் காரோட சக்கரங்களை கன்ட்ரோல் செஞ்சு நேரா ஓட்டிக்கிட்டு வந்தது."

கிரண் ஆரவாரித்தான். "ஓஹோ! கம்ப்யூட்டர் ஓட்டிச்சுன்னா அது மணிக்கு 200 மைல் வேகத்துல பறந்திருக்குமே? அப்ப ரோட்டில போன மத்தவங்க என்ன செஞ்சாங்க?" என்றான்.

சூர்யா பலமாக சிரித்தார். "அந்த மாதிரி இல்லை கிரண். அதுக்கு நேர்மாறுன்னுதான் சொல்லணும். நாம இன்னும் ஆட்டோ மோபில் ரோபாட்டிக்ஸோட குழந்தைப் பருவத்துலதான் இருக்கோம். நான் சொன்ன ரோபாட் ·ப்ரீவேல லேனுக்குள்ள நேரா ஓட்ட முடியுதாங்கற முதல் பரிட்சையைத் தான் அவங்க செஞ்சாங்க. அதுவும் மிகவும் குறைஞ்ச வேகத்துலதான். அதுவுமில்லாம, ரோபாடிக் காருக்கு முன்னால, பின்னால, பக்கத்துல எல்லாம் விஞ்ஞானிகளும், காவல்துறை வண்டிகளும் பாதுகாப்பா வந்தாங்க."

கிரண் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தன் ஏமாற்றத்தைக் காட்டினான். "சே, அவ்வளவு தானா? நான் என்னமோ ஸ்டார்வார்ஸ்ல க்ரூய்ஸர் வராமாதிரி கற்பனை செஞ்சுகிட்டேன்."

சூர்யா புன்னகையுடன் தொடர்ந்தார். "நீ மட்டுமில்லை கிரண். ரோபாட்டிக்ஸ்ன உடனே நிறைய மக்களோட கற்பனை ரொம்ப பறக்குது. என்னவோ எதிர் பார்த்துட்டு, இப்போதைய இமாலய சாதனைகளையும் இவ்வளவுதானான்னு சாதாரணமா ஒதுக்கிடறாங்க. ரோபாட்டிக்ஸோட தற்போதைய முன்னேற்றத்தை சுமிடோமோ நல்லா விளக்குவார். அவரே அதைப்பத்தி மேல சொல்லட்டும். ஆனா நான் சொல்லக் கூடியதுன்னா நிச்சயமா தானே ஓட்டிக்கற கார் வரத்தான் போகுதுங்கறது. கார்னகி மெல்லன் போன்ற கல்லூரி ஆராய்ச்சியகங்கள் மட்டுமில்லாம, ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா, ஹாண்டா போன்ற நிறுவனங்களின் ஆராய்ச்சியும் அதுல முன்னேறிக்கிட்டுத்தான் வருது. இப்ப நாம க்ரூய்ஸ் கன்ட்ரோல்னு ஒரே வேகத்துல ஓடறா மாதிரி கட்டுப்படுத்தற வேலையை மட்டும் காருக்கே விட்டுடறோம். இன்னும் இருபத்தஞ்சு வருடங்களுக்குள்ள மத்த வாகனங்கள் மேல இடிக்காம லேன் கோடுகளுக்குள்ளயே தானே ஓட்டிக்கறா மாதிரியும், GPS (Global Positioning Satellite) கொடுக்கற விவரத்தை வச்சு நாம போக வேண்டிய இடத்துக்குத் தானே போய் சேந்துடறா மாதிரியும் வரக் கூடும். அப்புறம், நீ சொல்றா மாதிரி, கார் ஓட்டறதுங்கறது நமக்கே சந்தோஷத்துக்காகத்தான் இருக்கும். இந்த மாதிரி எங்கயாவது வேலையா போ
கறத்துக்கு கார் தானே ஓட்டிக்கும்."

கிரண் குதூகலித்தான். "ஹையா! அப்படின்னா ட்ரா·பிக் ஜாம்ல நான் உக்காந்து ப்ளட் பிரஷோரட கத்த வேண்டாம். காரே ஓட்டி தானே கத்திக்கும். ஒரு காரைப் பாத்து மத்த கார் தானே ஹாங்க் பண்ணிக்கும்" என்றான்.

சூர்யா தலையாட்டி மறுத்தார். "அதுக்கு அவசியம் இருக்காதுன்னுதான் நான் நினைக்கறேன். அந்த மாதிரி தன்னறிவு இருக்கற கார்கள் GPS போன்ற விவரங்களை கோர்த்துப் பாத்து வேகத்தை மட்டுப் படுத்தி, ட்ரா·பிக் நெருக்கடி நிறைய இல்லாம செய்ய முடியும். பார்க்கலாம்."

கிரண் சுட்டிக் காட்டினான். "சரி, இப்ப நாம சுமிடோமோவைப் பார்க்கலாம். அவரோட ஆய்வகத்துக்கு வந்தாச்சு" என்றான்.

அந்தக் கட்டிடம் மிக உயரமில்லா விட்டாலும், பெரிய சதுரப் பரப்பில் விஸ்தாரமாக இருந்தது. அதன் வாசலுக்கு வெளியிலிருந்த நடைபாதை மிக அழகான ஜப்பானிய தோட்டம் போல் அமைதியான, அழகிய காட்சியளித்தது. ஒரு நீளமான குளத்தின் ஒரு இறுதியில் இருந்த பாறைகளின் நடுவிலிருந்து ஓடிய ஒரு நீரோடை சலசலவென நீர் வார்த்துக் கொண்டிருந்தது. அதன் அடுத்த இறுதியில் பாறைகளின் நடுவில் கோரைப் புற்கள் வளர்ந்து அழகாகக் கத்திரிக்கப்பட்டிருந்தன. சுற்றி சிறிய ஜப்பானிய மேப்பிள் மற்றும் செர்ரி மரங்கள். இடையில் இருவர் நடக்கும் அகலத்தில் இரண்டு மரப்பலகைப் பாலங்கள். அவற்றை சிங்கச் சிலைகள் பாது காத்துக் கொண்டிருந்தன. குளத்தில் பல வண்ண கோய் மீன்கள் தமக்கே உரித்தான சோம்பலுடன் நீந்திக் கொண்டிருந்தன.

கிரண் ஆச்சர்யத்துடன், "வாவ், இதென்ன ஆய்வகமா, இல்லை, தொல் பொருள் மியூஸீயமா?" என்றான்.

சூர்யா விளக்கினார். "சுமிடோமொ அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே பல முறை ஜப்பானுக்குச் சென்று டோக்கியோவிலிருந்து சிறிது தூரத்திலிருந்த ஒரு சிறு ஊரில் வசித்த தன் தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்ததால் ஜப்பானிய கலாச்சாரத்தில் ஆழ்ந்து ஊறியவர். மேலும், அவர் கார்னகி மெல்லன் பல்கலைக் கழகத்தில் Ph.D. பெற்ற பிறகு, பல வருடங்கள் ஹாண்டாவின் ஆராய்ச்சிச்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கேதான் ஜப்பானிலேயே பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணையும் மணம் புரிந்து கொண்டார். அவருக்கு ஜப்பானியப் பண்பாட்டுப்படியே எல்லாவற்றையும் செய்வது மிகவும் முக்கியம். அவருடைய வரவேற்பறையைப் பாரு இன்னும் ரொம்ப ஆச்சர்யப்படுவே. ஊம், மறக்கறத்துக்கு முன்னால சொல்லிடறேன். அவர் ஜப்பானியர்கள் மாதிரியே அறிமுகம் செய்து கொள்வார். நான் நடந்து கொள்வது போலேயே நீயும் நடந்து கொள்ள வேண்டும்."

கிரண் கவலைப் பட்டான். "அய்யய்யோ? அப்படின்னா நான் வாயைப் பொத்திக்கிட்டு சும்மா கெளரவமாவே இருக்கணுமா? என்னால முடியாதுப்பா!"

சூர்யா சிரித்தார். "கவலைப்படாதே கிரண். சுமிடோமோவும் கலகலப்பானவர்தான். அறிமுகத்துப் பிறகு நல்லா சுமுகமாவே பழகுவார். என்ன இருந்தாலும் அவர் அமெரிக்கக் கலாச்சாரத்திலும் ஊறியவர் தானே? அவரிடம் ·புட்பால், ஹாலிவுட் பத்தியெல்லாம் கூட ஜாலியாகப் பேசலாம்" என்றார்.

உள்ளே நுழைந்தவுடன் கிரண் மலைத்தே போனான். வரவேற்பறை அவன் அதுவரை பார்த்திராதபடி வெகு வித்தியாசமாக இருந்தது. ஒரு ஜப்பானிய டீ குடிலுக்குள் புகுந்துவிட்டாற் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அறையில் முழுவதும் மூங்கிலால் செய்த இருக்கைகள் இருந்தன. அவற்றின் மேல் ஜப்பானிய வேலைப்பாடு செய்த மெத்தென்ற அமரும் துணியணைகள் இருந்தன. ஆங்காங்கு பன்ஸாய் முறையில் வளர்ந்த குட்டி மரங்களும், இகபானா முறையில் செய்த மலர் அமைப்புக்களும் இருந்தன. சுவற்றின்மேல் ஜப்பானியச் சித்திரங்கள். மற்றும் சிறிய மேஜைகள் மேல் ஸாமுராய் சிலைகள் ஜப்பானிய போர் முறைக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன.

ஜப்பானுக்கே போய்விட்டாற் போல் தோன்றியது கிரணுக்கு.

அவனை ஒரு இனிய குரல் மீண்டும் நனவுலகுக்கு இழுத்தது. "சுமிடோமோ ரோபாடிக்ஸ் உங்களை வரவேற்கிறது. நீங்கள் யாரைச் சந்திக்க வேண்டும்?" பேசுவது யார் என்று பார்க்கத் திரும்பிய கிரண் இன்னும் ஒருபடி மேலாகவே மலைத்துப் போனான். ஒரு அழகிய பட்டுக் கிமோனோ அணிந்த ஒரு ஜப்பானியப் பெண் வரவேற்பறையின் ஒரு மூலையில் இருந்த வேலைப்பாடு நிறைந்த மேஜையின் பின் அமர்ந்து புன்னகையுடன் வரவேற்றாள். ஆனால் கிரணை மலைக்கச் செய்தது அந்த கிமோனோவோ, மேஜையோ அல்ல. அந்தப் பெண்ணின் தோற்றம்தான்!

தோற்றம் என்றால் அவளது அபரிமிதமான ஜப்பானிய அழகு மட்டுமல்ல. அவள் என்னவோ பார்க்கக் கவர்ச்சியாகத்தான் தெரிந்தாள். அழகிய முகவாட்டம். கச்சிதமாகச் செதுக்கிய சிலை போன்ற உடல் கட்டு. செர்ரிப் பழம் போல் சிவந்த உதடுகள். சிறிய பாதாம் போன்ற கண்கள். இவை யெல்லாமே சேர்த்து கவர்ச்சியளித்தாலும், கிரணை மலைக்கச் செய்தது அவளது தோரணையும் அசைவுகளும் தான்.

அவளது புன்னகை முழுவதும் இயற்கையாக இல்லை. விளம்பரத்துக்குப் போஸ் கொடுக்கும் மாடல்களின் செயற்கைப் புன்னகை மாதிரிகூட இல்லை; இன்னும் செயற்கையாக உறைந்தாற் போன்றிருந்தது. அசைவுகளும் வெட்டி வெட்டி நின்றது போல் இருந்தன.

சற்று கூர்ந்து கவனித்து, அந்தப் பெண் உண்மையில் ஒரு ரோபாட் என்று கிரண் உணர்ந்து கொண்டான்.

"என்ன, ரிஸப்ஷனிஸ்ட் உண்மை அழகியில்லைன்னு ஏமாற்றமா?" என்று கலகல வென்ற சிரிப்புடன் உள்ளிருந்து நுழைந்தார் சுமிடோமோ.

சூர்யா, "கனிச்சிவா சுமிடோமோ-ஸான்!" என்று அவரை நோக்கி ஒருமுறை லேசாகக் குனிந்து வணக்கம் செலுத்தினார். சுமிடோ மோவும் மிக பவ்யமாகக் குனிந்து வணங்கினார். "கனிச்சிவா சூர்யா-ஸான், என் கோரிக்கைக்காக நீங்க வந்ததுக்கு மிகவும் நன்றி" என்று கூறிவிட்டுக் கிரண் பக்கம் திரும்பி நோக்கினார். சூர்யா புரிந்து கொண்டு, "இவன் பெயர் கிரண். இவன் இந்த மாதிரி கேஸ்களில் எனக்கு உதவி செய்கிறான்" என்று அறிமுகம் செய்தார்.

சுமிடோமோ முறைப்படி அறிமுகப்படுத்திக் கொண்டார். அதிகப்படி குனிந்து வணங்கி விட்டு "ஹஜிமே மாஷ்டே! சுமிடொமோ தெஸ¤. கொசிரா கோஸோ, தோஸோ யோரோஷிகு!" என்றார்.

கிரண் ஒன்றுமே புரியாமல் விழிக்கவும், சூர்யா முறுவலுடன் விளக்கினார். "கிரண், சுமிடோமோ-ஸான் ஜப்பானிய முறைப்படி தன் பெயரை அறிமுகப்படுத்திவிட்டு உன்னை சந்தித்ததுக்கு மகிழ்ச்சி என்கிறார் அவ்வளவுதான்." என்றார்.

கிரண் தலையாட்டிவிட்டு, பதிலுக்கு கைகூப்பி, தன் அரைகுறைத் தமிழில், "வணக்கம், என் பேர் கிரண். எனக்கும் மகிழ்ச்சி" என்றான்.

அப்போது சுமிடோமோ விழிக்க வேண்டியதாயிற்று. சூர்யா பலமாக சிரித்து விட்டு, "சுமிடோமோ-ஸான், கிரண் எங்க கலாச்சாரப்படி எங்க மொழியில் பதில் அறிமுகம் செஞ்சான் அவ்வளவுதான்" என்றார்.

சுமிடோமோவும் பலமாகச் சிரித்து விட்டு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். "வெரி குட், வெரி குட்! என் ஜப்பானிய அறிமுகத்துக்கு நல்ல பதில். ஐ லைக் யூ! என்று கிரணின் கையை இறுகப் பிடித்து வேகமாகக் குலுக்கினார். கிரண் கையை நீவி விட்டுக் கொண்டு சுமிடோமோவை ஏற இறங்கக் கவனித்தான்.

சுமிடோமோ நடுத்தர வயதானவர். சற்று குண்டாக, சற்றுக் குள்ளமாக, சற்று மஞ்சளாக ஒரு உருண்டையான உருளைக் கிழங்குக்குக் கை, கால் வைத்தது போல் காட்சியளித்தார். தலையில் முடி குறைந்து, முன் வழுக்கை விழுந்திருந்தது. வட்ட வட்டமான சிறிய கண்ணாடி. அதில் லென்ஸ் இரண்டாகப் பிரிக்கப் பட்டு கீழ்ப் பகுதி சாளேஸ்வரத்துக்காக இருந்தது. அதனால் கண்ணாடியை சப்பை மூக்கின் நுனிக்குத் தள்ளிச் சிறிது குறுகிய கண்களால் கண்ணாடியின் மேல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் எப்போதும் எதையோ ஆராய்வது போன்ற நோக்கம். மிக மெல்லிய ஆனால் நீளமான மீசையுடன் மெல்லிய குறுந்தாடி வாயைச் சுற்றி அலங்கரித்தது.

கிரணின் நோட்டத்தைக் கவனித்து விட்ட சுமிடோமோ அவனைச் சீண்டினார். "என்ன கிரண், என் ரிஸப்ஷனிஸ்ட் அளவுக்காவது நான் கவர்ச்சியா இருக்கேனா?" என்று ஒரு கவர்ச்சிக் கன்னி ஒரு துணி விளம்பரத்துக்கு மாடல் செய்வது போல் இரண்டு கைகளையும் சற்று மேல் தூக்கி விரல்களை வளைத்துக் காட்டி நின்றார்.

கிரணுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது. சில நொடிகள் சிரித்து விட்டு அடக்கிக் கொண்டு பதிலுக்குச் சீண்டினான். "உங்கக் கவர்ச்சியைக் கண்ணாடில பாத்துத் தான் உங்க ரிஸப்ஷனிஸ்ட்டுக்கும் உடல் வடிவையும் முக அழகையும் கொடுத்திருக்கீங்க போலிருக்கு. பத்திரமாக இருங்க. சூப்பர் மாடல் யாரும் சரியா இல்லைன்னு உங்களை இழுத்திட்டுப் போயிடப் போறாங்க!"

சுமிடோமோ தன் ரோபாட்டை விட்டுக் கொடுக்கவில்லை. "என்னை இழுத்துக் கிட்டு போகாட்டா என்ன? என் ரிஸப்ஷனிஸ்ட்டுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. டயட் பண்ணாமலேயே நல்லா சிக்குன்ன்னு இருக்கா. எந்தெந்த ·பேஷன் மாடலிங்குக்கு சரியா வேணுமோ அப்படியான உடல்வாகு கூட வச்சுத் தரேன். சூப்பர் மாடலே தேவையில்லாம பண்ணிடலாம்!" என்றார்.

கிரண் கேலியாகப் பதறினான். "அய்யய்யோ, அப்படியெல்லாம் வேணாம்பா. எனக்கு நட்ஸ் போல்ட்ஸ் இல்லாத மென்மையான சூப்பர் மாடல் பாத்தாத்தான் திருப்தியா இருக்கும்."

அவர்களின் சீண்டல் சண்டையை ரசித்துக் கொண்டிருந்த சூர்யா இடை மறித்தார். "சரி, சரி, சூப்பர் மாடல் பத்தின வாக்குவாதம் போதும். இப்ப நாங்க விசாரிக்க வந்த super muddle விஷயத்தைப் பத்தி பேசலாம் வாங்க." என்றார்.

கிரணுடன் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்த சுமிடோமோவின் முகம் மீண்டும் வாடியது. "ஆமாம் சூர்யா. நீங்க சொல்றது தான் சரி. உள்ளே வாங்க சொல்றேன்" என்று கூறி, வரவேற்பறையிலிருந்து ஆராய்ச்சிசாலைக்குள் வேகமாகக் குறுநடையிட்டு அழைத்துச் சென்றார்.

சூர்யா சுமிடோமோவுடன் நடந்து கொண்டே, "கங்க்ராஜுலேஷன்ஸ் சுமிடோமோ-ஸான். உங்கள் ரோபாட்டுக்கு FCC-லிருந்து EMI clearance கிடைச்சுடுச்சு போலிருக்கே? அதுவும் இன்னிக்குத்தான் வந்திருக்கு?" என்றார்.
சுமிடோமோ படக்கென்று நின்றார். அவரது வேகத்தில் ஓட்ட நடையாக வந்து கொண்டிருந்த கிரண் அவர் மேல் மோதாத குறையாக நின்று சூர்யாவைப் பிடித்துக் கொண்டு விழாமல் சமாளித்துக் கொண்டான்.

சுமிடோமோ திறந்த வாய் மூடாமல் ஆச்சர்யத்துடன் சில நொடிகள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்து விட்டு, பிறகு பெரிதாகக் கூவினார். "சூர்யா, இது என்ன மாய மந்திரமா இருக்கு? உங்களுக்கு யார் சொன்னாங்க? நான் அது வந்த கவரையே பிரிச்சுப் படிச்சு, சில நிமிஷம் கூட ஆகலையே? உங்களுக்கு FCC அலுவலகத்துல யாராவது தெரியுமா? அதுக்குள்ள விசாரிச்சுட்டீங்களா? இன்னிக்குத்தான் வந்துதுன்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?"

சூர்யா முறுவலுடன் தலையசைத்தார். "இல்லை சுமிடோமோ-ஸான். நீங்க இப்பத்தான் அதைப் பாத்தீங்கன்னு உங்க லேப் கோட் பாக்கெட் சொல்லுது" என்றார்.

சுமிடோமோ "என் கோட் பாக்கெட்டா?" என்று குழப்பத்துடன் பாக்கெட்டை பார்த்தார். அங்கு பல கடிதங்கள் செருகப்பட்டிருந்தன.

சூர்யா விளக்கினார். "சுமிடோமோ-ஸான், நீங்க வழக்கமா ரொம்ப சுத்தமா இருக்கறவர்னு எனக்குத் தெரியும். ஆனா இன்னிக்கு எங்களைச் சந்திக்கறப்ப உங்க பாக்கெட்ல பல கடிதங்கள் செருகப்பட்டிருக்கறதைக் கவனிச்சேன். எங்களை வரவேற்க வெளியில வர அவசரத்துல பாக்கெட்ல எல்லாத்தையும் செருகிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு புரிஞ்சுகிட்டேன். அதெல்லாம் இன்னிக்கு நீங்க பார்க்க ஆரம்பிச்ச கடிதங்களாத்தான் இருக்கும்னு யூகிச்சேன்."

சுமிடோமோ ஆமோதித்தார். "அது வரைக்கும் சரிதான். ஆனா EMI க்ளிய ரன்ஸ் சர்டி·பிகேட் வந்ததுன்னு எப்படி...?"

சூர்யா தொடர்ந்தார். "நான் பொருள் உற்பத்தித் துறையில வேலை செய்யறப்ப, பல பொருட்களுக்கு EMI சர்டி·பிகேட் வாங்க வேண்டிருந்தது. எந்த மாதிரிக் காகிதத்துல எந்தக் கவர்ல வரும்னு எனக்கு நல்லாத் தெரியும். அந்த மாதிரிக் கவர் உங்க பாக்கெட்ல மேலாகத் தெரியறா மாதிரி இருக்கு பாருங்க. மேலும் அதுல நீங்க அட்ரஸ் தெரியறா மாதிரி இல்லாம காகிதத்தை திருப்பி செருகியிருக்கீங்க. அதுல 'hereby approved'-ங்கற வார்த்தைகள் தெரியுது. அதை வச்சு மேலும் யூகிச்சேன் அவ்வளவுதான்."

சுமிடோமோ பலமாகக் கை தட்டி ஆராவாரித்து, சூர்யாவின் முதுகில் ஒரு ஷொட்டு விட்டார். "பிரமாதம், பிரமாதம் சூர்யா-ஸான்! சின்னச் சின்ன விஷயங்களைக் கோர்த்துப் பாத்து பெரிசா கணிச்சிட்டீங்க. உங்களால நிச்சயமா என் பிரச்சனை தீரும்னு பெரிய அளவுக்கு நம்பிக்கை வருது. வாங்க என் ஆராய்ச்சி சாலையைச் சுத்திக் காட்டறேன். பாத்துக் கிட்டே பேசலாம்" என்று கூறிவிட்டு, முன்னைவிட இன்னும் வேகமாகக் குடுகுடு வென நடந்தார். சூர்யா தன் நீளக் கால்களை வீசி அவருடன் சமமாக நடந்தார். கிரண் ஓடவே வேண்டியதாயிற்று.

சுமிடோமோ ஆராய்ச்சி சாலையின் கதவைத் திறந்து உள்புகுந்ததும் தோன்றிய இயந்திர உலகு சூர்யாவும் கிரணும் முன்னால் எப்போதும் கண்டிராத அதிசயமாகக் காட்சி அளித்தது.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline