Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சிறுகதை
மிகச்சிறிய தொடர்கதை
சுமங்கலி எனப்படுபவள்
- உமா|மே 2004|
Share:
இன்னும் இரண்டே நாளில் கல்யாணம். முக்கியமான உறவினர்கள் வந்து இறங்கியாகி விட்டது. நாளை சுமங்கலிப் பிரார்த்தனை. ஒன்பது கஜப்புடவை கொண்டு வரவில்லையே என்று நினைவு வந்தது லலிதாவுக்கு. பரவாயில்லை அம்மாவிடம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.

ஏதேச்சையாக திரும்பியவள், எல்லாரும் ஏதோ கிசுகிசுப்பதைக் கண்டு ஒரு கணம் தயங்கினாள். ஏதோ சொல்ல ஆரம்பித்த மன்னி இவளைப் பார்த்துவிட்டு ஏதோ தப்பு செய்தவள் போல் பேச்சை மாற்றினாள். லலிதாவுக்கு தன்னைப்பற்றித்தான் பேச்சு நடக்கிறது என்பது புரிந்தது. நிற்பதா வேண்டாமா என்று யோசிக்கையில் அம்மா அவளைச் சைகையால் அழைப்பது புரிந்தது. சாப்பாட்டு அறைக்கு அவளை அழைத்துச் சென்றவள் சற்றுத் தயக்கத்திற்குப் பின் ஆரம்பித்தாள்.

''நாள் மங்கிலிப் பெண்டுகளுக்கு உன்னையும் அழைப்பதாகத்தான் இருந்தது லலிதா, ஆனால் அத்தைப் பாட்டி, பெரியம்மா எல்லாம் சம்மதிக்கிறாற்போல இல்லை... சாஸ்திரிகளும் நீ சாப்பிடுவதை அவ்வளவு சிலாக்கியமாக நினைக்கவில்லை. நீ எதுவும் தப்பாக நினைக்காமல் கல்யாணத்திற்கு இருந்துவிட்டுப் போகணும். உன் கணவரையும் புரிந்து கொள்ள வைக்கணும்...''

தாய் வாயிலிருந்து சாம்பல் பூத்த தீக்கங்குகளாக வார்த்தைகள் விழ, லலிதாவின் மனம் துடித்தது. அவள் சுமங்கலி இல்லையா? அன்பான புருஷன் உடன் இருக்க, தங்கமான குழந்தைகளுக்குத் தாயாக, அருமைப் பேரனுக்கு பாட்டியாக இருக்கும் அவள் சுமங்கலி இல்லையா?

முன்னறையில் குழந்தைகள் ஏதோ கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கேயே ஒரு சோபாவில் லலிதா அமர்ந்து கொண்டாள். மறந்துவிட்டதாக நினைத்திருந்தும் பழைய நிகழ்ச்சிகள் மனசில் அலைமோதின.

முப்பத்தைந்து வருஷம் முன்பு கடைசி வருஷம் பி.ஏ. படிக்கையில் அவள் அப்பா அவளுக்குக் கல்யாணம் செய்வித்தார். மாப்பிள்ளை படித்து நல்ல வேலையில் இருந்தான். குடும்பம் சின்னதுதான். அவன் ஒரே அண்ணனுக்குத் திருமணமாகி சிங்கப்பூரில் இருந்தான். அப்பா ரிடையர் ஆக இன்னும் சில வருஷங்கள் இருந்தன. மாமியாரும் கல்லூரி ஆசிரியையாக இருந்தார். அவள் அதிர்ஷ்டத்தை உறவினர்கள் எல்லாம் கொண்டாடினார்கள்.

லலிதாவுக்கும் அவள் தங்கை அருணாவுக்கும் மட்டும் ஏதோ தகராறு இருப்பதாகத் தோன்றியது. கல்யாணத்தில் புது மாப்பிள்ளையின் உற்சாகமே ரவியிடம் காணப்படவில்லை. லலிதாவின் பக்கம் திரும்பிப் பார்க்க விழையவில்லை. ஒரிருமுறை கண்கள் சந்தித்த போது ஏதோ அசிரத்தையாகச் சிரித்து வைத்தான். லலிதாவின் மனதில் ஏதேதோ கவலைகள் விழுந்தன. பிள்ளைக்கு அவளைப் பிடித்ததாகத்தானே சொன்னார்கள். ஒருவேளை கல்யாணவீட்டில் சந்திப்பதற்குள் பிடிக்காமல் போயிருக்குமோ? அவன் மனம் மாறுகிறாற்போல ஏதாவது நடந்திருக்குமோ? ஏதும் புரியவில்லை.

திருமணமான மறுநாளே லலிதா புக்ககம் கிளம்பினாள். அழகான, புழங்கத் தாராளமான பங்களா, அருமையான மனிதர்கள். சங்கரனும், ருக்மணியும் அவளைச் சொந்தப் பெண் போல் நடத்தினார்கள்.

''ஏம்மா லலிதா, வீட்டில் தனியாக நாளெல்லாம் இருப்பானேன்; ஆசையிருந்தால் மேலே படிக்கலாமே'' என்று மாமியார் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

ரவியை மட்டும் அவளுக்குப் புரிபடவேயில்லை. மனைவியிடம் அவனுக்கு எந்தவித எதிர்பார்ப்புகளும் இருக்கவில்லை. வீட்டில் அவனுக்காக ஒரு பெண் காத்திருப்பதை அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. பல இரவுகள் வீட்டுக்கே வரவில்லை. ஆபீஸ் வேலையாக டூர் என்று மாதம் பத்துநாள் கிளம்பிப் போனான். இதைப் பற்றி யாரிடம் பேசுவது என்று விழித்துக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் அவள் மாமியார் ருக்மணியே பேச்செடுத்தாள்.

''என்னம்மா லலிதா, சுரத்தாகவே இல்லையே. ஏதும் பிராப்ளம் இருக்கிறதா?'' என்று அவள் வினவ, தயக்கமும் பயமுமாக நிலைமையைச் சொன்னாள் லலிதா.

சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்த ருக்மணி ''லலிதா எந்தப் பிரச்சனையானாலும் மனம்விட்டுப் பேசுவது முக்கியம் அம்மா. நீயும் ரவியும் பேசிப் பாருங்கள். உங்களால் தீர்க்க முடியாவிட்டால் பெரியவர்கள் தலையிடுகிறோம். சின்னப் பிரச்சனையானால் பெரிதாக்க வேண்டாம். நீங்களே தீர்த்துக் கொள்வது நல்லது'' என்றாள்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்ட லலிதா ஒருநாள் ரவியை எதிர்கொண்டாள். அதிசயமாக அன்று ஒன்பது மணிக்கே வீடு திரும்பியிருந்தான். சாப்பாடு பரிமாறியவள், எதிரே உட்கார்ந்து கொண்டாள்.

''உங்களிடம் நான் ஒரு விஷயம் பேசணுமே'' என்று தயங்கியவள் அவன் சிநேகிதமாக நிமிர்ந்து பார்க்க, சற்றே தைரியமாகத் தொடர்ந்தாள்.

''ரவி, நம் கல்யாணத்தின் போது யாராவது உங்களிடம் தப்பாக நடந்து கொண்டார்களா? அல்லது என்னிடம் உங்களுக்கு ஏதாவது கோபமா? நீங்கள் மனதுவிட்டுப் பேசினால் தானே எனக்குப் புரியும்'' என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ரவி அவளை ஒரு நிமிஷம் கூர்மையாகப் பார்த்தான்.

''உன்கிட்டே சில விஷயங்கள் சொல்லணும்... வேலையை முடித்துக் கொண்டு பெட்ரூமுக்கு வா'' என்றவன் கைகழுவ எழுந்தான்.

லலிதா உள்ளே நுழைந்த போது அவன் ஜன்னலருகில் சேரில் உட்கார்ந்திருந்தான். சற்றுநேரம் மெளனமாகத் தரையைப் பார்த்தவன், பேச ஆரம்பித்தான்.

''நான் இந்த வீட்டில் ஒருவனாக உணர்ந்ததேயில்லை லலிதா. அப்பா அம்மா நிறையப் படித்தவர்கள், அண்ணா சின்ன வயதிலிருந்தே எல்லாவற்றிலும் முதல்.

படிப்பில், விளையாட்டில், பாப்புலாரிட்டியில் எல்லாமே. நான் சாதாரணம்தான். சுமாராகத்தான் படித்தேன். விளையாட்டிலே ஆர்வமே கிடையாது. குடும்பத்துடன் எங்கு போனாலும் என்னைச் சற்று மட்டமாகவே உணர்ந்தேன். அதனால் பள்ளியில்கூடச் சற்று விலகியே இருப்பேன். ஒன்றிரண்டு சிநேகிதர்கள்தான். அதற்காக அப்பா, அம்மா என்னை எப்போதும் கோபித்ததில்லை.

எனக்குத் தன்னம்பிக்கை ஊட்ட நிறைய முயற்சி செய்தார்கள். ஒன்றும் பலனில்லை, அதன்பிறகு என் சுபாவம் என்றுவிட்டுவிட்டார்கள்.

இருபத்தி மூன்று வயதில் வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடன் வேலை செய்த ஒரு பெண் என்னிடம் வலிய வந்து அடிக்கடி பேச ஆரம்பித்தாள். எனக்கு அது புது அனுபவம். நாளாக, நாளாக சிநேகம் வேறு திசையில் போக ஆரம்பித்தது. நாங்கள் காதலர்களானோம். ஆமாம், நாங்கள் சேர்ந்து வாழத் தொடங்கினோம். நியாயமாக நான் உன்னை மணந்திருக்கக்கூடாது. அம்மா, அப்பாவிடம் நிஜத்தைக்கூற பயந்து சம்மதித்தேன்.

ஐ அம் சாரி லலிதா. என்னால் உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது. ஆனால் வேறு ஏதாவது விதமாகப் பரிகாரம் வேண்டுமானால் செய்கிறேன்.''

கண்கொட்டாமல் அவன் பேச்சைக்கேட்ட லலிதா ஸ்தம்பித்து நின்றாள்.

''அந்தப் பெண்ணையே மணக்கத் தோன்றவில்லையா?'' வெடுக்கென்று கேட்டாள்.

''அதுவும் நடப்பது கஷ்டம்... அவளுக்கு ஒரு போதை மருந்துக்கு அடிமையான புருஷன் இருக்கிறான். பணம் பறிக்க மட்டும் வருவான். விவாகரத்து கொடுக்க மாட்டான். மேலும் அந்தப் பெண்ணும் ஓரளவு ட்ரக் பழக்கமுள்ளவள்.''

கேட்க, கேட்கத் தலைசுற்றியது லலிதாவுக்கு.
மறுநாள் ருக்மணியிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டு உடைந்துபோனாள் ருக்மணி. "ஈசுவரா... இத்தனை தூரம் நடந்திருக்கு எனக்கு ஒருகோடிகூட காட்ட அவனுக்குத் தோணலையே?' குழந்தை, எனக்கு தெரிந்திருந்தால் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதித்திருக்கவே மாட்டேன் அம்மா... என்னை நம்புவாயா?'' என்று அழுதாள்.

மாமனாருக்குத் தெரிந்த போதோ, பிரளயம்தான். மகனிடம் சண்டையிட்டார், திட்டினார், விவாதித்தார்... ஏதும் பிரயோஜனம் இருக்கவில்லை. ''என் வாழ்க்கைப் பிரச்சனை அப்பா இது. என்னால் அவளில்லாமல் இருக்கமுடியாது. வேணுமானால் லலிதாவுக்கு விவகாரத்துக் கொடுக்கிறேன்... ஐ'ம் ஸாரி, என்னால் முடிந்தது அதுதான்" என்றான்.

ருக்மணி சங்கரன் அனுமதியுடன், பெற்றவர்களுக்கு எழுதி போட்டாள். விவகாரத்துப் பற்றி ஆலோசனை கேட்டிருந்தவளுக்கு அப்பாவின் பதில் நம்பிக்கை கொடுக்கவில்லை.

''சமூகத்தில் நாம் வாழவேண்டும்! உன் அண்ணாவுக்கும், தங்கைக்கும் திருமணமாக வேண்டும். இந்தச் சமயத்தில் விவாகரத்து விஷயம் தெரிந்தால் அவர்களுக்கு வாழ்க்கை அமைவது கஷ்டம். மேலும் உறவினர்கள் காறித்துப்புவார்கள். உன் அதிர்ஷ்டம் மாமனார், மாமியார் நல்ல மனிதர்களாக அமைந்திருக்கிறார்கள். அவர்களுக்க அனுசரணையாக நடந்து அங்கேயே இருப்பது அனைவருக்கும் நல்லது. ஒருநாள் ரவி மனது மாறி உன்னிடம் திரும்பி வரலாம். நீ புத்திசாலிப் பெண். இதற்குமேல் எதுவும் சொல்ல அவசியமில்லை...'' என்று கடிதத்தை முடித்துவிட்டார்.

ரவி மெல்ல வீட்டுக்கு வருவதையே குறைத்துக்கொண்டான். அவனும் அவ்வப் போது போதை மருந்து எடுத்துக் கொள்வதாக வதந்தி. லலிதா மேல்படிப்புக்கு கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். அடுத்த இரு வருடங்களில், அண்ணா, தங்கை கல்யாணங்கள் நடக்க மூன்றாம் மனுஷி போல் தலைகாட்டிவிட்டு வந்தாள்.

மணமாகி மூன்றாவது வருஷம். கடைசியாக இன்னொரு இடி விழுந்தது. போதை மருந்து ஓவர்டோஸில் ரவி மரணித்தான். ருக்மணியும், சங்கரனும் நடைப்பிணமானார்கள். காரியத்துக்கு வந்திருந்த லலிதாவின் பெற்றோர், காரியங்கள் முடிந்த அடுத்த நாள் ஊருக்குக் கிளம்பினார்கள். ரிடையர் ஆகி மகன் தயவில் இருந்த அவர்கள் லலிதாவை வீட்டுக்கு அழைக்கவே இல்லை. மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்றுகூட கேட்கவில்லை. அவள் மாமனார்தான் உதவிக்கரம் நீட்டினார்.

''குழந்தே... உன்னை என் வீட்டு மகாலட்சுமியாக அழைத்து வந்தேன். நான் ஒன்று நினைக்க பகவான் வேறுவிதமாக தீர்மானித்துவிட்டான். போனது போகட்டும்! இனிமேல் நீ என் மகள், நீ நிறையப் படி; அதன் பிறகு உனக்கு மறுபடி வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு எங்களுடையது'' என்று தேற்றினார்.

லலிதா படித்துப் பொறுப்பான வேலையில் அமர உதவினார். அவளுடைய மேலதிகாரியான ரமணன் அவளை மணக்க விரும்ப, லலிதா பயந்தாள். கல்யாணம் என்ற பேச்சே அவளை மிரட்டியது. அவள் தட்டிக் கழிப்பதைப் பார்த்த ரமணன், ஒருநாள் அவர்கள் வீட்டுக்கே வந்து சங்கரனைப் பார்த்தான். அவர்கள் இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த லலிதாவுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது. தப்பான வழியில் தான் போவதாக சங்கரன் நினைக்கக்கூடுமென்று பயம்;

கடைசியாக சங்கரன் லலிதாவையும், ருக்மணியையும் வரச்சொன்னார்.

''லலிதா நீ பாக்கியம் செய்தவள். இன்றைக்கு ஒரு நல்ல மனிதரை நான் சந்திக்க நீ காரணமானாய்...'' என்றவர் அவள் வாழ்க்கை பற்றிய எல்லா விவரங்களையும் ரமணனுக்குச் சொல்லி யிருந்தார். எல்லாம் கேட்டபிறகு ரமணனுக்கு லலிதாவின் மீதான மதிப்பு இன்னும் கூடியதே தவிரக் குறையவில்லை. சங்கரன், ருக்மணி பெற்றோர் அல்ல, மாமனார் மாமியார் என்று அறிந்தவனுக்கு வியப்பு மிகுந்தது.

பரிபூரணமான சந்தோஷத்துடன் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தான். சங்கரனும் அவனைப் பற்றி நாலு இடத்தில் விசாரிக்க எல்லாருமே உயர்வாகவே பேசினார்கள். ருக்மணியும் தன் பங்குக்கு லலிதாவை தைரியமூட்டி சம்மதிக்க வைத்தாள். எளிமையாகக் கோயிலில் திருமணம் முடிந்து, சந்தோஷமான இனிய வாழ்க்கை ஆரம்பித்தது.

ஒரு பெண்ணும், ஒரு பிள்ளையுமாக இரு குழந்தைகள். பிள்ளை டாக்டர், பெண் திருமணமாகி ஒரு மகனுக்குத்தாய்.

நிகழ் காலத்திற்குத் திரும்பிய லலிதாவின் முன் அவள் அண்ணன் மகள் - நாளைய கல்யாணப் பெண் லதா நின்றிருந்தாள்.

''அத்தை நான் உங்களிடம் பேச வேண்டியது இருக்கிறது வாருங்கள்'' என்று அழைத்தாள்.

கல்யாணத்திற்கு வந்திருந்த மற்ற பெண்மணிகளையும் அழைத்தாள். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, சித்தி எல்லாரையும் ஓரிடத்தில் திரட்டியவள் பேச ஆரம்பித்தாள்.

''அத்தை நான் உங்களுடன் அதிகம் பழகியதில்லை. நீங்களும் அதிகம் இங்கு வந்ததில்லை. ரெண்டு மூணு வருஷங்கள் முன்பு வரை உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. வீட்டில் எல்லோரும் உங்களை ஏதோ குற்றம் செய்தவளாக நினைப்பது எனக்குத் தெரியும். அருணா அத்தை மட்டும்தான் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அருணா அத்தைதான் ஒருமுறை லீவுக்கு அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது எல்லா உண்மையையும் எனக்கு சொன்னாள்.

அத்தை நீங்கள் சின்னவயதில் வாழ்க்கையில் வாங்கின அடி ரொம்பக் கொடுமையானது. நீங்கள் அதில் உடைந்து போகாமல் மறுபடியும் நிமிர்ந்து நின்றீர்கள். உங்கள் காலில் நிற்கப் பழகிக் கொண்டீர்கள். ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையைச் சீராக்கி கொண்டீர்கள். எல்லாமே பெருமைப்பட வேண்டிய விஷயம். அத்தை நீங்கள் கட்டாயமாக நாளை சுமங்கலிப் பிரார்த்தனையில் பங்கெடுக்க வேண்டும். நானும் உங்களைப் போல் மனதிடமும் தைரியமும் நிறைந்த பெண்ணாக வாழவேண்டும் என்று என்னை வாழ்த்த வேண்டும்'' என்ற போது லலிதாவின் கண்களில் நீர் நிறைந்தது.

''என்னடி அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறாய்...'' என்று அதட்டிய தாத்தா, பாட்டியைக் கோபத்துடன் பார்த்த லதா ''தாத்தா, பாட்டி நீங்கள் செய்த காரியம்தான் என்னைத் தலைகுனிய வைக்கிறது. அத்தை பெரிய சிக்கலில் இருந்தபோது நீங்கள் கைகொடுக்கவில்லை. மற்ற குழந்தைகளைக் காரணம் காட்டி விலகிக் கொண்டீர்கள். மறுபடியும் படுகுழியிலேயே தள்ளி விட்டீர்கள். அன்று மட்டும் அத்தையின் மாமியாரும், மாமனாரும் துணை இருக்கா விட்டால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தீர்களா?

அம்மா, அப்பா நீங்களும் தாத்தா, பாட்டி செய்த அதே குற்றம்தான் செய்தீர்கள். நான் இப்போது சொல்கிறேன். என்னுடைய பவித்ரமான அத்தை பங்கெடுக்காமல் நாளை விசேஷம் நடக்காது. என் கல்யாணமும் நடக்காது. நானும் சிவாவும் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து
கொள்கிறோம்."

லதா மடமடவென்று பேசிவிட்டு உள்ளே செல்ல எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மெளனமாக நின்றார்கள். லலிதா பெருமையுடன் மருமகள் நடந்து போவதைப் பார்த்தாள். பாரதியின் புதுமைப்பெண் இவள்தான் என்று தோன்றியது.

உமா
More

மிகச்சிறிய தொடர்கதை
Share: 




© Copyright 2020 Tamilonline