Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
பங்குகள் பட்ட பாடு - (பாகம் - 6)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2003|
Share:
முன் கதை:Silicon Valley - இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சட்ட வழக்கு நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவமனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் என்று தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.

கிரண் வேலை புரியும் ஹார்வி வில்கின்ஸன் பங்கு வர்த்தக நிறுவனத்தில் கம்ப்யூட்டர்களை வைத்து நடத்தப்பட்ட பல மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. நிறுவனத்தின் கம்ப்யூட்டர் பாதுகாப்புப் பிரிவினரால் யார் செய்தனர் என்று கண்டுபிடிக்க இயலவில்லை. மோசடி நடத்தியவரைப் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்துக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டு, கெட்ட பெயர் பரவிவிடும். அதனால் நிறுவன அதிபர் ஹார்வி, கிரணைத் துப்பறிய அழைத்தார். கிரண் தன்னால் கண்டுபிடிக்க எயலாது, சூர்யாவால்தான் இயலும் என்று கூறினான்.

ரிக் முதலில் தயங்கினார். ஆனால் ரிக்கைத் தவிர யாருக்கும் தெரியாத அவருடைய 'பார்க்கின்ஸன்ஸ்' நோயைப் பற்றி சூர்யா சில நொடிகளில், அறையில் பார்த்ததை வைத்தே யூகித்து விடவே ரிக் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்து சூர்யா தான் தன் சிக்கலை அவிழ்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்! நிறுவனத்தின் ஸெக்யூரிட்டி பிரிவினர் கண்டுபிடிக்க முடியாத படி, எப்படி ப்ரோக்ராம்கள் மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டது என்று கிரண் விளக்கினான். மூவரும் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் மைக் ஜான்ஸனுடன் பேசச் சென்றனர். அவரைச் சந்தித்ததும் சூர்யா அவருடைய குடும்ப விவகாரங்களை நொடி நேரத்தில் யூகித்து விடவே, மிகவும் வியப்புற்ற மைக், சூர்யாவின் உதவியை வரவேற்றார். கம்ப்யூட்டர் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களை மைக் உற்சாகத்துடன் விவரித்தார். அந்தத் தொழில் நுட்பங்களால், தற்போதைய மோசடி விவகாரத்தை, மோசடி நடக்கும் போது காட்ட முடிகிறதே ஒழிய, அதை யார் செய்தது என்று காட்ட இயலவில்லை என்று வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார்.

ஸா·ப்ட்வேர் பிரிவின் தலைவர்களான கண்ணன், சுரேஷ் இருவரும் மைக்கின் குழுவில் ஒரு முக்கிய தலைவனான ரிச்சர்டுடன் சேர்ந்து பாதுகாப்புத் திரையில் போலி ட்ரேன்ஸேக்ஷன்கள் வரும்போது எச்சரிக்கை வருமாறு செய்த விவரங்களைக் கூறினர். பணம், வெளி வங்கிக்குப் போக ஆடோமேடிக் ஒயர் ட்ரேன்ஸ்·பர் செய்திருப்பதும், கமிஷன்களைச் சேர்க்க புது ப்ரோக்கர் அக்கவுன்ட் உருவாக்கியிருப்பதும் ஸோர்ஸ் கோட் மாற்றம் போலவே ஒரு பொது அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுன்ட் பெயரில் இருந்ததால், யார் செய்தது என்று இதுவரை தெரியவில்லை என்று மைக் தெரிவித்தார். 'அவர்கள் செய்த விதத்திலேயே, அவர்கள் தங்கள் கையைக் கொஞ்சம் காட்டி விட்டார்கள்; கூடிய சீக்கிரத்திலேயே கண்டுபிடித்துவிடலாம்' என்று சூர்யா நம்பிக்கை கொடி காட்டினார்!

சிக்கலைச் சீக்கிரம் அவிழ்த்து விடமுடியும் என்று சூர்யா மிக்க நம்பிக்கையுடன் கூறியதும் ரிக், அளவில்லாத புளகாங்கிதம் அடைந்து விட்டார். தான் படிப்படியாக உருவாக்கிய நிறுவனம், சில மோசடிக்காரர்கள் செய்த காரியத்தால் உருக்குலைந்து போய்விடப் போகிறதோ, என்ற எண்ணத்தால் நிலை குலைந்து போயிருந்த அவர் மனம், 'முழ்கிக் கொண்டிருப்பவன், மிதப்பதற்கு உதவக்கூடிய சிறு கட்டையை இறுக்கிப் பிடித்துக் கொள்வது' போல சூர்யாவின் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டது!

ரிக், "நிஜமாவா சொல்றீங்க சூர்யா? மோசடிக்காரங்க ஏதாவது தவறித் தங்களைக் காட்டிக்கறா மாதிரி செஞ்சிருக்காங்களா? என்ன அது, சீக்கிரம் சொல்லுங்க!" என்றார்.

சூர்யா தலையாட்டிவிட்டு, "ஸாரி, அதை இப்ப சொல்றதுக்கில்லை ரிக். இன்னும் சில தடயங்களைப் பார்த்துட்டுத்தான் சொல்ல முடியும்." என்றார்.

இதைக் கேட்டதும் ரிக்கின் உற்சாகம் தளர்ந்து விட்டது. சூர்யா வெற்று வார்த்தை களை விட்டிருப்பாரோ என்ற சந்தேகம் உதித்து விட்டது. மைக்கும் அப்படியே எண்ணத் துவங்கினார்.

அவர்களின் எண்ண ஓட்டத்தை அவர்களின் முகங்கள் கண்ணாடி போல காட்டி விடவே சூர்யா முறுவலித்தார்! "என்னடா இவன் சும்மா கதை அளக்கிறானேன்னு நினைக்கறீங்க போலிருக்கு?! அதுனால என்ன பரவாயில்லை. நான் நினைக்கறதை அரைகுறையா சொன்னா பலனிருக்காது. கூடிய சீக்கிரம் சொல்லிடறேன்." என்றார்.

சூர்யா சொன்னதில் நம்பிக்கை ஏற்படவில்லையென்றாலும், ரிக்கும், மைக்கும் வாய் திறந்து பேசாமல் சரி என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தனர்.

சூர்யா தொடர்ந்தார். "இப்ப அந்த ஆடிட் லாக் ·பைல்களை இங்கிருந்தே பாக்க முடியுமா?"

மைக், "ஓ சுலபமா பாக்கலாமே! இதோ இந்த கான்ஸோலில போட்டுக் காட்டறேன்" என்று கீ போர்டில் தட்டினார். ஒரு சிறிய கட்டத்தில் வரிவரியாக ஆடிட் லாக் காட்டியது.

சூர்யா, கிரணைத் தனியாக அழைத்து ஏதோ கிசுகிசுத்தார். அவன் வியப்புடன் சரியென்று அங்கீகரித்து விட்டு சற்று நேரம் கழித்து அங்கிருந்து மெல்ல நழுவினான்.

சூர்யா மைக்கிடம், "இது ஒரு ஸிஸ்டத்தோட பாதுகாப்பு ஆடிட் மட்டும் போலிருக்கு. இன் னும் ரெண்டு மூணு ஸிஸ்டம் இருக்கு இல்லையா? அது எல்லாத்தையும் வேற வேற கட்டங்களில இந்தத் திரையிலயே பாக்க முடியுமா?" என்று கேட்டார்.

மைக் முடியும் என்று கூறினார். சில க்ளிக், சில கீ போர்ட் தட்டு! உடனே திரையில் இன்னும் சில கட்டங்களில் எழுத்து வரிகள் பிறந்தன.

சூர்யா அந்தக் கட்டங்களைக் கூர்ந்து பார்த்து விட்டுத் தலையசைத்தார். "இதெல்லாம் ரொம்ப சமீபத்து லாக் ரெகார்டுகள். இந்த போலி அக்கவுன்ட் என்னிக்கு உருவாக்கப்பட்டு துன்னு தெரியுமா?" என்றார்.

மைக் "ஓ! அதை அந்த அக்கவுன்ட் ரெகார்டுலயே பாக்கலாமே!" என்று வேறு ஒரு கட்டத் தில் அந்தப் போலி ப்ரோக்கர் அக்கவுன்ட்டின் விவரங்களை வரவழைத்தார்.

சூர்யா அதைப் பார்த்து விட்டு, "இது நடந்து ஒரு மாசத்துக்கு மேல ஆயிருக்கே! ரொம்ப நாட்களாகவே இது நடக்குது போலிருக்கு!" என்றார்.

ரிக் சோகமாக, "ஆமாம் சூர்யா, இதுவே அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். தற்செயலா அந்த அக்கவுன்டிங் மேனேஜர் பார்க்கலைன்னா இன்னும் இது தெரிஞ்சிருக்கக் கூட வாய்ப்பில்லை. ஆனா தெரிஞ்சதுக்கு அப்புறமும் சீக்கிரமா கண்டுபிடிச்சிடலாம், கண்டுபிடிச்சிடலாம்னுட்டு இவ்வளவு நாள் இழுத்துகிட்டே போயாச்சு." அப்போது அவரது நா தழுதழுத்தது. "நான் உங்களைத்தான் இப்ப நம்பிக்கிட்டுருக்கேன், சூர்யா! சீக்கிரமா கண்டு பிடிச்சா கம்பனி பிழைக்கும், இல்லாட்டா ..."

சூர்யா அவரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தார். "பயப்படாதீங்க ரிக். கிட்டத் தட்ட கண்டுபிடிக்கற நிலைக்கு வந்துட்டோம். இப்ப நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம்." என்றார்.

வெகு நேரம் அந்தத் திரையிலிருந்த பல லாக் ·பைல் கட்டங்களைக் கூர்ந்து கவனித்து ஏதோ க்ளிக் செய்து கொண்டேயிருந்த சூர்யா, ஒரு ஸெல் ·போன் கால் வந்ததும் சில நொடிகளே பேசி விட்டு, திடீரென்று எதையோ கண்டுபிடித்து விட்ட திருப்தியுடன் தலையாட்டிக் கொண்டார். பரபரப்புடன் சிறிது சத்தமாக, "ரிக், மைக், இங்க வந்து பாருங்க. இது ரொம்ப முக்கியம்!" என்றார்.

ரிக்கும், மைக்கும் "என்ன, என்ன" என்று ஓடி வந்தார்கள். தன்னைச் சுற்றிச் சூழ்ந்த சிறு கும்பலைக் கவனித்த சூர்யா திருப்தியுடன் புன்னகைத்தார். பிறகு திரையைக் காட்டி, "இங்க பாருங்க அட்மினிஸ்ட்ரேட்டரா லாக்-இன் பண்ணி மாத்தியிருக்கற ரெகார்ட் எல்லாம் வரா மாதிரி செஞ்சிருக்கேன்." என்றார்.

மைக்கும், ரிக்கும் அதைப் பார்த்து விட்டு ஒன்றும் விளங்காமல் விழித்தார்கள்.

சூர்யா மீண்டும் பரபரப்புடன் உரக்கப் பேசினார். "அந்த மாத்தின டைம் ஸ்டேம்ப் எல்லாம் பாருங்க. அது ரொம்ப முக்கியம்! அதுதான் குற்றத்தை நிரூபிக்க மிக முக்கியமான சாட்சியம்! இதை வச்சு இந்த மோசடியாளுங்களைப் பல வருஷம் உள்ள தள்ளிடலாம்! இது மறையறத்துக்குள்ள பத்திரமா பாதுகாக்கணும்!" என்றார்.

சூர்யா அறையைச் சுற்றிப் பார்த்தார். தான் எதிர்பார்த்த நிகழ்ச்சி நடப்பதைப் பார்த்து அவர் முகத்தில் திருப்தி குடி கொண்டது!

மைக்குக்கு இன்னும் சரியாக விளங்கவில்லை. அந்தச் சிறிய டைம் ஸ்டேம்ப் விவரத்தை வைத்து என்ன நிரூபிக்க முடியும் என்று குழம்பினார்.

ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் சூர்யா பதட்டப்பட்டு எதையோ ஒன்றைச் சாதித்து விட்டதாகக் காட்டுகிறார் என்ற சந்தேகமும் அவருக்கு எழுந்தது! இருந்தாலும் சூர்யா சொல்லும்படி செய்யாவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உடனே ஐ.டி. பிரிவினரைக் கூப்பிட்டு அந்த ·பைல்களைப் பாதுகாக்குமாறு கூறினார்.

ஆனால், அவர் பேச ஆரம்பிக்கும் முன்னரே அந்த லாக் ·பைல்களை திரையில் காட்டிக் கொண்டிருந்த கட்டங்கள் புது வரிகளைக் ஒவ்வொன்றாகக் காட்டி ஒரு வரிசை நடனம் ஆடின!

சூர்யா புன்னகையுடன் ரிக்குக்கும், மைக்குக்கும் அதைச் சுட்டிக் காட்டினார். "பாத்தீங்களா, நீங்க சொல்றத்துக்கு முன்னாலயே பலன் கிடைச்சுடுச்சு போலிருக்கே?! யாரோ ஒவ்வொரு ஸிஸ்டத்துலயா லாக்-இன் செஞ்சு முக்கியமா ஏதோ செய்யறாங்கன்னு நினைக்கறேன்!" என்றார்.

மைக் குழம்பினார். "அது எப்படி? நான் இப்ப தானே ஐ.டி. மேனேஜரோட பேசியிருக்கேன்?! அவர் யாரையாவது விட்டு அதை செய்யறத்துக்குக் கொஞ்ச நேரம் ஆகுமே! இதை வேற யாரோ வேற காரணத்துக்காக செஞ்சு கிட்டிருக்காங்க போலிரு... க் ... கு ...!" பேசிக் கொண்டேயிருந்தவரின் வார்த்தைகள் சூர்யாவின் முகத்தில் விளையாடிய ஒளியையும் புன்னகையையும் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து நின்றே விட்டன!

சூர்யா ஆமாமெனத் தலையசைத்துக் கொண்டு, "நீங்க பயப்படறது சரிதான் மைக்! இப்ப நடக்கற அட்மினிஸ்ட்ரேட்டர் வேலை சாதாரணமா, வழக்கமா நடக்கறதில்லை. அசம்பாவிதமான வேலைதான் நடக்குது! இங்க வந்து பாருங்க!" என்றார்.

மைக்கும் ரிக்கும் அவசரமாக அவர் காட்டியதைப் பார்க்க விரைந்தனர். சூர்யா ஒவ்வொரு கட்டமாக மீண்டும் காட்டுமாறு ரி·ப்ரெஷ் செய்து முன்பு டைம் ஸ்டேம்ப் காட்டிய நாளுக்குச் சென்று காட்டினார். முன்பு இருந்த வரிகளை இப்போது காணவில்லை!

மைக் மிகவும் பதற்றமடைந்தார்! "என்ன சூர்யா இது, இப்படி காஷ¤வலா ஒண்ணுமே நடக்காத மாதிரி காட்டிகிட்டிருக்கீங்க? நீங்கதானே இந்த விவரம் ரொம்ப முக்கியமான சாட்சியம், பாதுகாக்கணும்னு? இப்ப அதை யாரோ அழிச்சிட்டாங்களே? இது பெரிய இழப்பு இல்லையா? இப்பவே எதாவது செய்தாகணுமே!" என்றார்.

சூர்யா கையைத் தூக்கிக் காட்டி அவரை அமைதிப்படுத்தினார். ஆமாம், நான் அப்படித் தான் சொன்னேன். ஆனா அப்போ அதைச் சொன்னது, இப்ப கிடைச்ச இதே பிரதிபலனை ஏற்படுத்தத்தான்! நான் எதிர்பார்த்த அதே செயலை இந்த மோசடியின் சூத்திரதாரி இப்ப செஞ்சு நம்ம கிட்ட வசமா மாட்டிகிட்டான்!" என்றார்.

ரிக் ஒன்றும் விளங்காமல் "என்ன சொல்றீங்க சூர்யா? நீங்க சொல்றது என்னவோ கேட்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு, ஆனா சாட்சியம் அழிஞ்சுடுச்சுங்கறது கவலைக்குரியதா இருக்கே?!" என்றார்.

சூர்யா விளக்கினார். "கவலைப் படாதீங்க! நமக்குத் தேவையான சாட்சியம் பத்திரமா இருக்கு! அந்தப் பழைய அட்மினிஸ்ட்ரேட்டர் லாக்-இன் ரெகார்டுகளும், அதன் டைம் ஸ்டேம்பும் சாட்சியங்கள் தான். ஆனா அது நான் சொன்ன அளவுக்கு அவ்வளவு முக்கியமில்லை. இப்ப நடந்திருக்கே அட்மினிஸ்ட்ரேட்டர் லாக்-இன்னும், அந்த ரெகார்டுகளை அழிச்சதும்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்! இந்தப் புது சாட்சியம் கிடைக்கத்தான் அந்தப் பழைய விஷயத்தை நான் அளவுக்கு மேல பெரிசுபடுத்திச் சொன்னேன்!" என்றார்.

மைக்குக்கு புரிய ஆரம்பித்தது! "ஓ! மோசடிக்காரங்களைக் கையும் களவுமா பிடிக்க வலை விரிச்சீங்களா?!" என்றார்.

சூர்யா பெரிய புன்னகையுடன் ஆமோதித்தார். "கரெக்ட்! இப்ப நீங்க புரிஞ்சிகிட்டீங்க! நான் பெரிசா சொன்னதைக் கேட்டு பயந்து போய் உடனே அவசரப்பட்டு சாட்சியத்தை அழிக்க முயற்சி செஞ்சு நமக்குத் தேவையான மறுக்க முடியாத சாட்சியத்தைக் கொடுத்துட்டான்! ஆனா அந்தப் பழைய ரெகார்டுகளைப் பத்தியும் கவலை இல்லை! நான் கிரணை ரொம்ப நேரத்துக்கு முன்னமே அனுப்பி அதெல்லாத்தையும் கம்ப்யூட்டரிலிருந்தும் பழைய பேக்-அப் நாடாக்களிலிருந்தும் பிரதி எடுத்து பத்திரமா வச்சாச்சு!" என்றார்.

ரிக் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் உச்சக் குரலில் கத்தினார்! "சூர்யா, யாரந்தப் போக்கிரிப் பய?! சொல்லுங்க!"

சுற்றி இருந்த எல்லாரும் வேலையை நிறுத்தி விட்டுத் தங்களையே பார்ப்பதைக் கவனித்த சூர்யா அவரை அடக்கினார். "உஷ்! கொஞ்சம் பொறுத்துக்குங்க! நாம் ஏதாவது கான்·பரன்ஸ் இல்லன்னா அலுவலக அறைக்குள்ள போய் கொஞ்சம் அந்தரங்கமா பேசலாமே?!" என்றார்.

மைக் உடனே, "நீங்க சொல்றது சரி சூர்யா. இதோ இங்க ஒரு அறை இருக்கு வாங்க" என்று எல்லாரையும் அழைத்துச் சென்றார்.

அறைக்குள் சென்று கதவை மூடிய உடனேயே, அடக்க முடியாமல் பொறுமிக் கொண்டிருந்த ரிக் மீண்டும் வெடித்தார். "இனிமேயும் பொறுக்க முடியாது சூர்யா. சொல்லுங்க யார் அந்த !@#$*?$@ துரோகி?! எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். அவனை என் கையாலேயே ..." என்று பதிப்பிக்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கைகளை நெரித்துக் காட்டினார்.

அவர் வாய் மூடுவதற்குள், கதவை உடைத்து விடுவது போல் அவசரமாகப் படார் என்று திறந்து கொண்டு கிரண் பரவசத்துடன் உள்ளே பாய்ந்து வந்தான். "வெற்றி, வெற்றி! பாஸ், நான் வெற்றி அடைந்து விட்டேன்" என்று எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் வரும் முதல் வசனம் போல் அறைகூவி தன் கையில் இருந்த தாள்களை சூர்யாவிடம் அளித்தான்.

அந்தத் தாள்களை ஒரு முறை புரட்டிப் பார்த்த சூர்யா மிகுந்த திருப்தியுடன் தலையாட்டிக் கொண்டு ரிக் பக்கமாக அவற்றை நீட்டி ஆட்டினார். "ரிக், நேரம் வந்தாச்சு! முன்னே பேசிக்கிட்டிருந்த எல்லாரையும் உடனே வரச் சொல்லுங்க" என்றார்.

கிரண், "நான் முதல்லயே கூப்பிட்டாச்சு. இதோ வந்துட்டாங்க!" என்றான்.

அனைவரும் அமர்ந்ததும் சூர்யா விவரிக்க ஆரம்பித்தார்.

"நான் இந்த விஷயத்தைப் பத்தி முதல்ல கிரண், ரிக் கிட்ட பேசின உடனேயே சாதாரண கம்ப்யூட்டர் பாதுகாப்பு அமைப்புகளையும் கருவிகளையும் மட்டும் வச்சு இந்த மோசடி செஞ்சவங்களைப் பிடிக்க முடியாதுங்கற முடிவுக்கு வந்தேன். ஏன்னா, இப்ப இருக்கற மிகவும் சக்தி வாய்ந்த சோதனை மற்றும் பாதுகாப்பு முறைகளையும் மீறி இந்த மோசடி நடந்திருக்கு. மேலும், அது வெளி வந்த பிறகும் இவ்வளவு நாள் இந்தத் துறையில வல்லுனர்கள் எல்லாம் சேர்ந்து முயற்சி செஞ்சும் கண்டுபிடிக்க முடியலை. அதுனால வேற முறையில அவங்களைப் பிடிக்கணும்னு முடிவு செஞ்சேன். அதை நான் முதல்லயே ரிக் கிட்ட சொல்லிட்டேன்."

ரிக் ஆமோதித்தார். "ஆமாம், எனக்கும் அது ஞாபகம் இருக்கு."

சூர்யா தொடர்ந்தார். "ஸோர்ஸ் கோட் மாத்தினவங்க யாருன்னு தெரியாம மாத்தியிருக்கற விதத்தைப் பத்தி கிரண் எனக்கு விவரமா சொன்னான். மேலும் இந்த மோசடி செய்யறதுக்கு பல ஸிஸ்டங்களில் பல மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. ஒரு புது ப்ரோக்கர் அக்கவுன்ட் உருவாக்கியிருக்காங்க. ஒரு ஒயர் ட்ரேன்ஸ்·பர் அமைச்சிருக்காங்க. இது மாதிரி பல மாற்றங்கள் தேவையாயிருந்தது. அத்தனையையும் செஞ்சிருக்காங்க. ஆனா ஒவ்வொண்ணையும் எப்படி செஞ்சா உடனே கண்டுபிடிக்க முடியாதுன்னு நல்லா ஆராய்ஞ்சு தெரிஞ்சுகிட்டுத்தான் செஞ்சிருக்காங்க. மேலும் அதை எல்லாம் செய்யறதுக்கும் அவங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் லாக்-இன் தேவைப்பட்டிருக்கு.

"இந்த நிறுவனத்தோட ஐ.டி. அமைப்புகளையும் பாதுகாப்பு சாதனங்களையும் நல்லாத் தெரிஞ்ச, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமை பெறக்கூடிய ஒருத்தர் அல்லது ஒரு குழுதான் இதைச் செஞ்சிருக்க முடியும். அதுனால, இந்த பாதுகாப்புக் குழுவில இருக்கற ஒருத்தர் இதை தலைமை வகிச்சு நடத்தியிருக்கணும் இல்லன்னா குறைந்த பட்சம் இதுல ஆழமா உட்பட்டிருக்கணும்."

மைக் இடை மறித்து, "சே, சே, சூர்யா. என்னோட குழுவிலயா. இருக்கவே முடியாது. இவங்க எல்லாம் ரொம்ப நம்பிக்கையானவங்க! இந்த மோசடி தெரிஞ்ச வுடனே, எப்படி உயிரைக் குடுத்து செஞ்சவங்களைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யறாங்க தெரியுமா?!" என்றார்.

கிரண், "எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கும்னு சொல்ல முடியாது மைக்! சூர்யா சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க!" என்றான்.
சூர்யா மேலும் பேசினார், "மேலும், பல ஸிஸ்டங்களின் ஸோர்ஸ் கோடையும் மாத்தி யிருக்கறதுனால, ஒரு திறமை வாய்ந்த மென்பொருள் வல்லுனரும் அதுல சேர்ந்திருக்கணும். ஆனா முதல்ல இந்த பாதுகாப்புப் பிரிவில யாரு சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு கண்டு பிடிக்கணும்னு நினைச்சேன். அப்பதான் எனக்கு இரண்டு முக்கியமான தடயங்கள் கிடைச்சது. செய்தது யாருன்னும் ஏனுன்னும் தெரிஞ்சது!"

ரிக் குதித்தார்! "யாரு இதைச் செஞ்சது? ஏன் செஞ்சிருக்காங்க!"

மைக் ஆர்வத்துடன், "என்ன தடயங்கள்?!" என்றார்.

சூர்யா, "முதலாவது மைக் இங்க வேலைக்கு சேர்ந்த கொஞ்ச மாசத்துல இந்த மோசடி ஆரம்பிச்சது..." என்று கூறி தொடர்வதற்குள் மைக் கொதித்தெழுந்தார்!

"என்ன அபத்தம்?! என் மேலேயே குற்றம் சாட்டறீங்களா?!"

சூர்யா தலையாட்டினார். "இல்லை மைக்! அவசரப்பட்டுட்டீங்க! நீங்க சேர்ந்ததுக்கு சம்பந்தப்பட்டிருக்குன்னு சொல்ல வந்தேன் அவ்வளவுதான்! அதாவது, நீங்க சேர்ந்ததுனால யாருக்கு இழப்பு?! யாருக்கு இந்த நிறுவனத்து மேல வெறுப்பு வந்து வஞ்சமா இதைச் செய்யக் காரணமிருக்கு?!"

நிறுத்தி விட்டு சூர்யா கையைக் காட்டி உறுதியாகக் கூறினார். "சந்தேகமேயில்லை. இந்த மோசடிக் கும்பலுக்குத் தலைமை வகிச்சு இதெல்லாம் செஞ்சது... ராபர்ட் தான்!" என்றார்.

அது வரை பேசாமல் இருந்த ராபர்ட் அடக்கம் குலைந்து பதற்றமாக எழுந்து கத்தினான். "என்ன சும்மா என் தலையில கட்டப் பாக்கறீங்களா?! நான் எந்த மோசடியும் செய்யலை. வேற ஆளைத் தேடுங்க!" என்றான்.

சூர்யாவின் குற்றச்சாட்டால் அதிர்ந்து போயிருந்த ரிக்கும், "சூர்யா, என்ன சொல்றீங்க?! கம்பனி ஆரம்பத்திலேருந்து ராபர்ட் இங்க இருக்கான். ரொம்ப நம்பகமான ஆள்!" என்றார்.

சூர்யா சோகமாகத் தலையாட்டினார். "ரொம்ப நாள் இங்க நம்பகமா உழைச்சதுனால தான் ராபர்ட் இதை செஞ்சிருக்கான். இந்தப் பாதுகாப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பை அவனுக்குக் குடுக்காம மைக்கை நீங்க வரவழைச்சதுனால அவனுக்குப் பொறாமை தலைக்கேறிப் போய் இதை செஞ்சிருக்கான்."என்றார்.

ராபர்ட் சத்தமாக, "சுத்தப் பொய்! எனக்கு மைக்கை ரொம்பப் புடிச்சிருக்கு. இந்த மோசடியை கண்டுபிடிக்க நானே முன்ன நின்னு ராப்பகலா சோதனைக்கு உதவியிருக்கேன்!" என்றான்.

மைக்கும், "ஆமாம், சூர்யா, நீங்க சொல்றது நம்பும் படியில்லை!"என்றார்.

சூர்யா "ராபர்ட், நீயே செஞ்ச மோசடியை சோதனை செய்ய உதவறதுக்கு உனக்கு கசக்குமா என்ன. எந்தத் தடயமும் கிடைக்காம ஜாக்கிரதையா சோதனை நடத்த உதவி யிருக்கே! ஆனா நீ ஒரு பெரிய தவறு செஞ்சிட்டே! இந்தப் போலி ட்ரேன்ஸேக்ஷன் நடக்கறச்சே எப்படி எச்சரிக்கை வருதுன்னு கேட்டப்ப உனக்கே தெரியாம அந்தப் போலி ட்ரேன்ஸேக்ஷன்கள் ரேன்டம் நம்பரை வச்சு எப்படி நடக்குதுன்னு சொல்லிட்டே! அது உனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு நான் கிரண் மூலமா கண்ணன், சுரேஷ் கிட்ட நிச்சயப்படுத்திக்கிட்டேன்."என்றார்.

கண்ணனும் சுரேஷ¤ம் மெளனமாக தலையாட்டி ஆமோதித்தனர்.

ராபர்ட் முகத்தில் கோபம் மாறி ஏளனம் படர்ந்தது. "அவ்வளவு தானா?! இதை வச்சா என்னைக் காட்டறீங்க?! எனக்கு அது வேற வழியாத் தெரியும்!" என்றான்.

சூர்யா, "சரி ஒத்துக்கறேன். அதை மாத்தினவங்க உனக்கு சொல்லியிருக்காங்க. ஆனா அதை மட்டும் வச்சு உன்னைப் பிடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதுனால தான் உன்னைக் கையும் களவுமா பிடிக்க ஒரு பொறி வச்சேன். அந்த நாலு ஸிஸ்டம் லாக் ·பைலிலயும் இருக்கற டைம் ஸ்டேம்ப் ரொம்ப முக்கியமான சாட்சியம்னு நாடகம் ஆடினேன். நீயும் நிஜ உலக துப்பறிவாளனான நான் சொல்றது உண்மையாயிருக்கும்னு நம்பிட்டே. அந்த சாட்சியங்களை அழிச்சே. ஆனா அதுலதான் மாட்டிகிட்டே. அவசரத்துல உன் கம்ப்யூட்டர்லயே அட்மினிஸ்ட்ரேட்டரா லாக்-இன் செஞ்சு அழிக்கறச்ச அனுப்பப்பட்ட எல்லா நெட்வொர்க் பாக்கட்டுகளையும் கிரணை விட்டுப் பிடிச்சு பாதுகாப்பா வைக்கச் சொல்லிட்டேன். அதோட எழுத்து வடிவந்தான் இது!" என்று கையிலிருந்த தாள்களை ராபர்ட்டிடம் விட்டெறிந்தார்.

அதை படித்துப் பார்த்த ராபர்ட்டின் முகம் வெளுத்தது. தளர்ந்து தோல்வியைத் தழுவிய மனப்பாங்கோடு தொப்பென்று இருக்கையில் விழுந்தான்.

ரிக் கொந்தளித்து எழுந்து மேஜையின் எதிர் பக்கமிருந்த ராபர்ட்டை வெறியுடன் தாவிப் பிடிக்க முயற்சித்து "டேய், நான் உன்னை எவ்வளவு நம்பியிருந்தேன்?! கேவலம் ஒரு பதவிக்காக இப்படிப் பண்ணிட்டயே! உன்னை ..." என்று உறுமினார்.

சூர்யா அவரை இழுத்து பலவந்தமாக உட்கார வைத்துச் சமாதானப்படுத்தினார். "அவன் மேல கையை வச்சு கறை படாதீங்க ரிக். அவனுக்கு வேண்டிய தண்டனை நிச்சயமாக் கிடைக்கும் விட்டுடுங்க! ஒயர் ·ப்ராட் ஒரு ·பெடரல் குற்றம். மேல நடக்க வேண்டியதைப் பாருங்க. ராபர்ட்டுக்கு உதவிய ஸா·ப்ட்வேர் வல்லுனரையும் பிடிக்கணும். ஆனா அது இனிமே சுலபம்." என்றார்.

மைக் சூர்யாவின் கையைக் குலுக்கி, "அற்புதம்! நம்பவே முடியலை!"என்று பாராட்டினார்.

ரிக் உணர்ச்சி வசப்பட்டு, "உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை! இந்த நிறுவனத்தையே காப்பாத்தியிருக்கீங்க!" என்று சூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு நா தழுக்கப் பேசினார்.

சூர்யா சாதாரணமாக, "இந்த நிறுவனத்தை இந்த அளவுக்கு வளர்த்து இப்ப நோயோட போராடிக்கிட்டு இன்னும் நிர்வகிக்கற உங்க சாதனைக்கு முன்னால நான் செஞ்சது கடுகுக்கு சமானம். உடம்பை நல்லா கவனிச்சுக்குங்க. நான் வரேன்!" என்று கிளம்பினார்.

கிரணும் ரிக்கைத் தட்டிக் கொடுத்து விட்டு, "ஒகே பாஸ்! நான் போய் சூர்யாவை விட்டுட்டு ஒரு நல்ல டோம் பெரிஞோன் ஷேம்பேன் பாட்டிலை வாங்கிட்டு வரேன். உங்க கணக்கு!" என்று கூறி விட்டு நகர்ந்தான்!

ரிக் புன்னகையுடன், பார்க்கின்ஸன்ஸ் நோயால் நடுங்கும் கையால் கட்டை விரலை உயர்த்திக் காட்டி ஆனந்தமாக அனுமதித்தார்!

(முற்றும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline