Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
மார்ச் 2003 : வாசகர் கடிதம்
- |மார்ச் 2003|
Share:
இந்த பிப்ரவரி மாத இதழில், ஒரு எழுத்தாளர், தேவை இல்லாத, மடிந்து மக்கிப் போன விஷயத்தை, யாருக்கும் எந்தவிதமான உபயோகமுமில்லாமல் எழுதி இரண்டு பக்கங்களை வீணடித்து இருப்பதைப் பார்த்து மனம் கலங்கினேன். அதில் கண்டு இருந்த பெயர் உண்மை ஆனதா அல்லது புனைப் பெயரா என சந்தேகம் வருகிறது.

தென்றலின் ஒவ்வொரு எழுத்தும் வாசகர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். உதாரணமாக நம் நாட்டில் உள்ள சில புராதன கோவில்கள், கொண்டாடும் பண்டிகைகள், பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறு, நாட்டு மருந்துகள், மூலிகைகள் ஆகியவைகளின் உபயோகம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெரிய தொழில்கள், விளைவுகள், மக்களின் பழக்கவழக்கங்கள், தேவையான வசதிகள் இன்னும் என்னென்ன தொழில்களைத் துவக்கலாம் என்பவைகளை ஒவ்வொரு இதழிலும் குறிப்பிடலாம்.

முடிவாக இரு எழுத்தாளர்களின் விரிவான விவரங்கள் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்பதை ஆசிரியர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறேன். மேற்கொண்ட விஷயங் களை நல்ல முறையில் எடுத்துக் கொண்டு தென்றல் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

அட்லாண்டா ராஜன்

******


பிப்பிரவரி 2003 இதழ், புரட்டியபோது அதிர்ச்சி தரும் ஒரு பகுதி: "Tamil Speaking Dog" என்று! அந்தத் தலைப்பு மட்டுமே இரட்டை மனவேதனை யைக் கொடுத்தது. தமிழ்ப் பத்திரிகை யில் ஆங்கில மொழியில், ரோமன் எழுத்தில் தலைப்பு ஒரு வேதனை! நாயையும் தமிழையும் இணைத்தமை இன்னொன்று! அதையும் மீறி உள்ளே வாசிக்கத் தொடங்கினால் மொழிநடையில் அடுத்த தாக்குதல்: கொச்சை நடை, கட்டுரை முழுதும். அடுத்துப் பொருளைக் கவனித்தால் தமிழைப் போற்றும் செய்யுள் ஒன்றைக் கிண்டல் செய்து ஓர் உரையாடல். பின்னர் நன்னூல் இலக்கண நூலில் சந்தி இலக்கணம் பற்றிய சூத்திரத்தை நாயோடு இணைத்து நையாண்டி. வழக்கம்போல் தமிழ்மொழி, தமிழ் இலக்கணம், அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர் எல்லாரையும் கிண்டல் செய்யும் ஒரு தரக்குறைவான கட்டுரை (வெற்றுரை?).

அமெரிக்கத் தமிழர்களின் பண்பாட்டு முதிர்ச்சியின் அடையாளமாகக் கருதி உங்கள் தென்றலைப் போற்றும் வாசகக்குடும்பம் என்ற முறையில் எங்க ளுக்கு இது வருத்தமே. கொச்சை நடையை எழுத்துக்கோ பொதுமேடை ஒலிபரப்புப் பேச்சுக்கோ கொண்டுவரக்கூடாது என்பது நன்கு தெரிந்ததே. கி.ஆ.பெ.விசுவநாதம் "மாணவர்க்காக" என்ற நூலில் "எழுதுவதுபோல் பேசு! பேசுவதுபோல் எழுதாதே!" என்று சொல்லியுள்ளார். அவருடைய புதிய கண்டுபிடிப்பில்லை அது. தமிழ்மொழியின் ஆயிரக்கணக்கான ஆண்டுத் தொடர்ச்சிக்குக் காரணமே சிதைந்த பேச்சு வடிவில் எழுதாமையே. அதனால்தான் திருக்குறள் போன்ற பழைய நூல்கள் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கும் இயல்பாக விளங்குகிறது. செந்தமிழ்மொழி மனிதகுலத்தின் மனச்சாட்சியின் அடையாளம். சுதா ரகுநாதனின் நேர்காணலை வெளியிட்டுத் தலைசிறந்த இசைத்தமிழ்ப் புலவர்க்கு உரிய இடத்தைக் கொடுத்தமைக்குப் பாராட்டுகள். ஆனால் அதிலும் கொச்சை நடையிலும், ஆங்கிலம் கலந்த நடையை உரோமன் எழுத்திலும், அச்சிட்டது நோகடிக்கிறது. பார்ப்பதற்கே மிடுக்குக் குறைவாக இருந்தது: உங்கள் பத்திரிகைக்கும் சுதா இரகுநாதனுக்கும்! ஆங்கில மொழிக் கவிதை தமிழ்மொழிப் பத்திரிகையில் என்ன செய்கிறது என்பதுவும் மற்றொரு புதிர்! அமெரிக்காவின் "டைம்" பத்திரிகை தமிழ்மொழிக் கவிதையோ ஏன் பிரெஞ்சுக் கவிதையையோ என்றேனும் அச்சிடுமா? நாம் மட்டும் ஏன் இந்தத் தாழ்நிலைக்குச் செல்லவேண்டும்? பிறமொழிப் பெயர்கள் பயின்றாலும் அவற்றைத் தமிழ்மொழி எழுத்தில் அச்சிடுவதுதானே முறை? அகிரோ கூரோசாவா( ஆசிரியர் பக்கம்), சிகாகோ (பக்கம் 10) என்று தமிழில் எழுதலாமே? அலெக்சாண்டர், பாரிஸ் என்று நாம் காணாத புதுமை என்ன அவற்றில்?! இனியும் தென்றல் தன் உயர்ந்த நிலையினின்று பிறழாது விளங்குமென்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

பெரியண்ணன் சந்திரசேகர்,
அட்லாண்டா

******


தென்றலுக்கு ஒரு வாழ்த்துப்பா

தென்றலில் தவழ்ந்து வந்தது
என் கைகளைத் தழுவி நின்றது
தொட்டு, எடுத்து, பிரித்து
உச்சி முகர்ந்தேன்! உள்ளம் குளிர்ந்தேன்!
பிறந்து இரண்டே ஆண்டுகள் தாமாம்
பிரித்துப் படித்தேன்; உவகை இறும்பூதியது
தமிழுக்கா இத்துணை பெருமை?
கடல் கடந்தும் வெற்றிக்கொடி நாட்டிவரும்
எம் தமிழன்னைக்கா இம்மாபெரும் சிறப்பு!
பழந்தமிழ் எழுத்தாளர்களையும் - அவர்தம்
எழுத்தோவியங்களையும் கெளரவிப்பது
எத்துணை பேரானந்தம்!
எண்ணற்ற செய்திகள் கட்டுரை வடிவில்
சிறப்புமிகு சிறுகதைகள்
அகவின்மிகு கவிதைகள்; ஆலயச் சிறப்புகள்
மொத்தத்தில் 'தென்றல்'
தெள்ளுதமிழின் தேன்காவியம்.
வாழ்க தென்றல்
வளரட்டும் பல்லாண்டு
வெள்ளிவிழா, பொன்விழா, பவளவிழா கண்டு
அகிலமெங்கும் தமிழுக்குப் பெருமை சேர்க்கட்டும்!

பாக்யலட்சுமி சீனிவாசன்

******
முகப்பு அட்டையில் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களைத் தாங்கிவரும் தமிழக மாத இதழ்கள் போல் இல்லாமல், கலை அழகு ததும்பும் 2003 பிப்ரவரி திங்கள் தென்றல் அட்டைப்படம் ஓர் அற்புத படைப்பு. இப்பணி தொடர வேண்டும் என்பது எங்கள் அவா. திரு மணிவண்ணனின் இரு படைப்புகளும் பாராட்டுக்குரியவை.

பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து கருத்துமிக்க பாடல் ஒன்றினை எளியமுறையில் விளக்கி, ஓரிரு பக்க அளவில் வெளியிட்டால், இளைய தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும். 'லே-ஆப்', 'Tamil speaking Dog' போன்ற ஆங்கிலத் தலைப்புகளைக் கொண்ட கதைகளுக்குப் பதில், யாவரும் விரும்பும்வண்ணம் கருத்தும், பயனும், நகைச்சுவையும் கலந்த கதைகளையோ கட்டுரைகளையோ வெளியிடலாமே!

மு. நரேந்திரன் மற்றும் ந. துரைக்கண்,
ப்ரீமாண்ட் (ஒய்வுபெற்ற தமிழக அரசு இணை செயலர், சென்னை)
Share: 




© Copyright 2020 Tamilonline