Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
முன்னோடி
வெண்கலக்குரல் கொடுமுடி கோகிலம் - கே.பி. சுந்தரம்பாள்
- மதுசூதனன் தெ.|மார்ச் 2003|
Share:
Click Here Enlargeசிலரது வாழ்க்கை அவர் வாழ்ந்த விதத்தால் வரலாறாகிவிடும். இன்னொருபுறம் அவர் வாழ்ந்த காலத்தின் சிறப்புகளில் தன்னையும் இணைத்துக் கொள்வதால் அவரது வாழ்வு மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும் அமைந்துவிடும். இந்த அனைத்துச் சிறப்புக்கும் உரியவராகவே வாழ்ந்து பேரும் புகழும் பெற்று, தமிழிசை உலகில் தனக்கென்று ஓர் தனித்த முத்திரை பதித்துச் சென்றவர் கொடுமுடி கோகிலம் என்ற கே.பி. சுந்தராம்பாள். (1908-1980).

நாடகம், அரசியல், திரைப்படம், பக்திமரபு - ஆன்மீகம் என்கிற தடங்களில் பணியாற்றி, தனது உழைப்பாலும் ஆளுமையாலும் பெண் கலைஞர் களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட கொடுமுடி கோகிலம் பாதை காட்டியுள்ளார்.

கோவை ஜில்லா கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு 26.10.1908 இல் சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்குப் பிறகு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற சகோதரர்கள் பிறந்தனர். குடும்பத் தலைவனை இழந்த காரணத்தால் பாலம்பாள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.

இருந்தாலும் பாலாம்பாளின் சகோதரர்களான சங்கமேஸ்வர்ன், மலைக்கொழுந்து, நடேசன் ஆகியவர்களின் தொடர்ந்த ஆதரவால், குழந்தை களைக் காப்பாற்ற வீட்டு வேலை செய்து கிடைத்த பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். அந்த நிலையிலும் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் ஆர்வம் பாலாம்பாளுக்கு இருந்ததால், 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் குழந்தைகளைப் படிக்க வைத்தார்.

ஆனால் சுந்தராம்பாளுக்கு படிப்பில் சரியான ஆர்வம் இல்லை. மாறாக நன்றாக பாடக்கூடிய திறமை சிறு வயதிலிருந்தே இருந்தது. யாராவது நன்றாகப் பாடினால் அதை கவனித்து அப்படியே நுட்பமாக பாடக்கூடிய திறன் வாய்க்கப் பெற்றவராக இருந்தார். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது சுந்தராம்பாள் தனது பாட்டால் அவர்களி டையே தனித்து அடையாளப்படுத்தப்பட்டார்.

கே.பி.எஸ் நன்றாகப் பாடுவார் என்ற அபிப்பிராயம் பரவலாக எங்கும் பரவத்தொடங்கியது. 1914 ஆம் ஆண்டு கரூர் தாலுகா ஆபீசுக்கு முகாம் வந்திருந்த போலீஸ் டெப்டி சூப்ரின்டென்ட் ஆர்.எஸ். கிருஷ்ணசாமி அய்யர் சிறுமி கே.பி.எஸ்ஸின் இசையைத் தற்செயலாக கேட்டார். போற்றிப் பாராட்டி ஐம்பது ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்தார். அத்துடன் ஆண்டிப்பட்டி ஜமீன்தாரிடம் சிறுமியின் திறமையை எடுத்துக்கூற, அந்த ஜமீன்தார் கே.பி.எஸ்ஸை அன்புடன் வரவேற்று பாடச் செய்தார்.

ஆறுவயதுச் சிறுமியின் அற்புதமான கானமழை பொழிவில் எல்லோரும் பிரமித்து நின்றனர். இதனால் ஜமீன்தாரது பாராட்டுக்கும் பரிசுக்கும் உரியவரானார். முறைப்படி சிறுமிக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்க விரும்பினார் அந்த ஜமீன்தார். ஆனால் சுந்தராம் பாளோ தாயாரை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஒருவாரம் மட்டும் அங்கு தங்கி இருந்து விட்டுத் திரும்பி விட்டார்.

ஜமீன்தாரிடம் பரிசு பெற்றமையால் கரூரில் கே.பி.எஸ் குடும்பத்துக்கு மதிப்பும், கெளரவமும் ஏற்பட்டது. அந்த சமயம் வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். இந்த நாடகத்தின் கதையில் வரும் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை கே.பி.எஸ்சுக்கு கொடுக்கத் தீர்மானித்தனர்.

அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று சுந்தராம்மாள் ஆண் வேடத்தில் நடித்தார். ''பசிக்குதே! வயிறு பசிக்குதே'' என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது குரல் அவருக்குப் புகழை ஈட்டிக் கொடுத்தது.

குடும்ப வறுமை காரணமாக கே.பி.எஸ் நாடகங் களில் நடித்து ஓரளவு பணம் சம்பாதித்து குடும்ப சுமையைக் குறைக்க ஆரம்பித்தார். 1917இல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார்.

இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. கே.பி.எஸ். புகழ் எங்கும் பரவியது. அவரது குரல்வளத்தை எல்லோரும் பாராட்டத் தொடங்கினர்.

இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை சென்ற வேறு ஒரு நாடகக் குழுவில் கிட்டப்பா என்ற சிறுவன் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சுந்தரம்பாள் கிட்டப்பா இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. 1920 களில் நாடு திரும்பினார்.

கே.பி.எஸ்ஸின் இனிய பாடல்கள் புகழ்பெற்று வந்தன. அக்காலகட்டத்தில் பிரபலமாக இருந்த பல நாடகக் குழுக்களில் கே.பி.எஸ். பங்கு கொண்டு நடித்து வந்தார். வள்ளி திருமணம், நந்தனார், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் கே.பி.எஸ் நடித்தார். தனது பதினைந்தாவது வயதில் ''அயன்ஸ்திரி பார்ட்'' பதவிக்கு வந்துவிட்டார். அப்போது நாடக மேடையில் இத்தகைய வாய்ப்பு வேறு யாருக்கும் குறுகிய காலத்தில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கே.பி.எஸ்.தான் இந்த கெளரவத்துக்கு சொந்தக்காரராக இருந்தார்.

கே.பி.எஸ் ராஜபார்ட்டாக ஆண் வேடம் பூண்டு நடித்த போது எம்.கே. தாயம்மா, டி.டி. ருக்குமணி சொர்ணம்பாள் போன்ற நடிகைகளும் இவரோடு கூட நடித்தனர்.

அக்காலக்கட்டத்தில் தமிழில் நாடகம் முக்கியமான முதன்மையான கலைக் கூடமாக இருந்தது. இந்தக் கலையில் புகழ்பெற்றவர்கள் சமூகத்தில் நன்மதிப்புக் குரியவராகவும் இருந்தார்கள். பல்வேறு நாடகக் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு நாடகங் களை நடத்தியதால் தமிழ்நாடகம் பல்வேறு புதிய பரிமாணங்களைப் பெற்று வளரத் தொடங்கியது.

மீண்டும் கே.பி.எஸ். 1926இல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். மாதத்திற்கு 1200 ரூபாய் சம்பளம். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அவருடன் இணையாக நடிப்பதற்கு ஒருவருமே இல்லை என்ற நிலை அப்போது இருந்தது.

இக்காலத்தில் எஸ்ஜி கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கேபிஎஸ் உடன் கிட்டப்பாவை நடிக்க வைக்க முயற்சி நடைபெற்றது. கொழும்பில் இது ஈடேறியது.

''எனக்கு அப்போ பதினைஞ்சு வயது இருக்கும். இரண்டாம்முறை நாடகங்களில் நடிக்க ஒன்றரை ஆண்டு ஒப்பந்தத்தில் இலங்கை போயிருந்தேன். நான் ஸ்தீரி பார்ட். என்னுடன் பலபேர் ராஜபார்ட்டாக நடிக்க வந்தாங்க... யாரும் இரண்டு மூணு நாடகங் களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் போயிட் டாங்க... ஒப்பந்தக்காரருக்கு வசூல் குறைஞ்சு நஷ்டம் ஏற்பட்டது. அப்போதுதான் கன்னையா கம்பெனியில் புகழுடன் நடித்துக் கொண்டிருந்த 'அவரை' ஒப்பந்தக்காரர் மிகுந்த பிரயாசைப்பட்டு இலங்கை அழைத்து வந்தாங்க'' என்று கேபிஎஸ் கூறுகிறார்.

கேபிஎஸ் கிட்டப்பா இருவரும் இணைந்து நடிப்பது தொடர்பாக பல்வேறு புரளிகள் கிளப்பப்பட்டன. கிட்டப்பா என்ற பெரும் நடிகருடன் சுந்தராம்பாள் ஈடுகொடுத்து நடிக்க முடியுமா? என்று கேபிஎஸ் காது கேட்கவே பலர் கூறியது உண்டு.

1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. பலரது பாராட்டைப் பெற்றது. இந்த ஜோடிப் பொருத்தத்தை பலரும் புகழ்ந்து தள்ளினர். தொடர்ந்து இருவரும் ஜோடி சேர்ந்த நடித்து வந்தனர். இவர்கள் நடிப்பு, குரல்வளம் பலராலும் பாராட்டப் பெற்றது.

சுந்தராம்பாள் கிட்டப்பா இருவருக்கும் இடை யிலும் ஆத்மார்த்த ஈடுபாடு, நேயம், காதல் மெதுவாக வளர்ந்து ஒருவரை ஒருவர் திருமணம் செய்து வாழும் நிலைக்கு கொண்டு சென்றது. கிட்டப்பா ஏற்கனவே திருமணம் செய்தவர். பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர். சுந்தராம்பாள் கவுண்டர் வகுப்பைச் சார்ந்தவர். இருவரது இணைவுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனாலும் கிட்டப்பாவை மணம் முடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார் சுந்தராம்பாள். அவரையே மணம் முடித்தார். கடைசிவரை அவரது நினை வாகவே வாழ்ந்தார்.

சுதந்திர வேட்கையும் காங்கிரஸ் ஈடுபாடும் கேபிஎஸ் வாழ்க்கையில் புதுப்பாதை அமைத்தது. சுதந்திர வேட்கை மிகுந்த பாடல்களைப் பாடி சாதாரண மக்கள் மத்தியில் சுதந்திர தாகம் ஏற்பட கேபிஎஸ் காரணமாக இருந்தார். பல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின. 1926 முதல் கேபிஎஸ் குரல் இசைத் தட்டுகள் மூலம் வலம் வந்தது. தமிழ் பேசும் பிரதேசங்களில் கேபிஎஸ் குரல் ஒலித்தது.

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் காங்கிரசில் தீவிர பற்றாளர்களாகவே வாழ்ந்து வந்தார்கள். ஆனாலும் இருவருக்கிடையில் அவ்வப்போது ஊடல் இருந்து வந்தது. கிட்டப்பாவின் குடும்பம் கேபிஎஸ் உடன் வாழ்வதை விரும்பவில்லை. பல நாட்கள் கிட்டப்பா வீட்டுக்கு வருவதையே தவிர்த்து வந்தார். இதனால் பல துன்பங்களை கேபிஎஸ் அனுபவித்தார். மது பழக்கத்துக்கு கிட்டப்பா அடிமையாகவே மாறி விட்டார். இதற்கு சில நடிகைகளின் சகவாசமும் காரணமாகச் சொல்லப்படுகிறது.

கிட்டப்பாவின் அநாவசியமான திட்டுக்கும் உதைக்கும் கேபிஎஸ் ஆளானார். ஒரு கட்டத்துக்கு மேல் எதிர்த்து கேள்வி எழுப்பத் தொடங்கினார். இருவருக்குமான உறவில் மேலும் மேலும் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இருவரும் தனித்தனியாக நாடகங்கள் போட்டு வந்தனர்.

1933இல் கிட்டப்பாவுக்கு உடல்நிலை மோச மாகியது. கேபிஎஸ் அவருக்கு மருத்துவ உதவி மேற்கொண்டார். ஓரளவு தேறி வந்தார். ஆனாலும் வயிற்றுவலி பெரிதாகி 1933 டிசம்பர் 2 இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25.

கடைசிக்காலங்களில் இருவருக்கும் நெருக்கம் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால் கிட்டப்பா மறைவு சுந்தராம்பாளை மிகவும் வருத்தியது. அன்றைக்கு வெள்ளை சேலைக் கட்டத் தொடங் கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதை கடைசி வரை காப்பாற்றி வந்தார்.

1927இல் கிட்டப்பாவை திருமணம் செய்த சுந்தராம்பாள் ஏழே ஆண்டுகளில் அவரை இழந்தார். இந்த ஏழு வருட வாழ்க்கையும் அவருக்கு சந்தோஷம் கொடுத்தது இல்லை. கிட்டப்பாவால் பலவித துன்பங்களுக்கு உள்ளாகி வந்தார். ஆனாலும் அவர்மீது கொண்ட காதல் அவர் இறப்பிற்கு பின்னர் ஓர் துறவு வாழ்க்கையை அவர் விரும்பி மேற் கொள்ளச் செய்தது.

நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934இல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங் களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

இதற்கிடையில் இவரை இசை கச்சேரி வழங்கும்படி முசிறி சுப்பிரமணிய ஐயர், இந்து கஸ்தூரி சீனிவாசன் போன்றோர் முயற்சி செய்தனர். மயிலாப்பூர் ஆர்.ஆர். சபாவில் முதன்முதலாக கர்நாடக இசை ரசிகர்களுக்கான இசை விருந்தை 1936களில் வழங்கினார்.

பழமையானதாக அறியப்பட்ட சங்கீத கச்சேரிகளில் இருந்து கேபிஎஸ் கச்சேரி வேறுபட்டதாயிற்று. புதிய இசை அனுபவ பகிர்வுக்கு கேபிஎஸ் அழைத்துச் சென்றார். அவரது சுத்தமான தமிழ் உச்சரிப்பு இசையின் நுணுக்க சக்தியால் கடத்தப்படுவது அதுவரை எவருக்கும் கிடைக்காத புதிய அனுபவ மாகவே இருந்தது என்றே அன்று பலரும் குறிப் பிட்டனர். நாடக மேடையில் அடைந்திருந்த புகழ் சங்கீத மேடையிலும் கேபிஎஸ்க்கு கிடைத்தது.

காங்கிரஸ் பிரச்சாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல் களையும் பாடி வந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் கேபிஎஸ் குரலும் பங்கு கொண்டது. காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி கேபிஎஸ் மீது அளவு கடந்த அன்பு பாராட்டியவர். அதுபோல் கேபிஎஸ்-ம் சத்தியமூர்த்தி மீது அன்பு பாராட்டினார்.
தேசப்பாடல்கள் விடுதலைப்பாடல்களால் கேபிஎஸ் புகழ் எங்கும் பரவிற்று. அவரது இசை அனுபவம் சாதாரண மனிதர்களிடையே காந்தசக்தி போல் பற்றிக் கொண்டது. அவரது இசை ஞானம் அவரது குரல் வளம் எவருக்குமே இல்லாத தனித்தன்மை பொருந்தி இருந்தது. கற்றவர் கல்லாதவர் என்று பாகுபாட்டிற்கு அப்பால் இசை மூலம் சமத்துவம் கண்டவர் கேபிஎஸ். அவரது கர்நாடக இசை நுணுக்கங்கள் முறையான கற்றல் மூலம் பெற்றது அல்ல. ஆனால் அவர்களுக்கு நிகராகக் கச்சேரி செய்யும் பாங்கு நுணுக்கங்களும் ஆழங்களும் கொண்டவை. அனைவரையும் பொதுஇசை அனுபவ திரட்சிக்குள் அழைத்துச் செல்லும் மகிமை கொண்டவை.

நாடகம், இசைக்கச்சேரி, இசைத்தட்டு, அரசியல் என்று இயங்கிய சுந்தராம்பாள் திரைப்படத் துறையிலும் நுழைந்து சாதனை புரிந்தார். இந்தியத் திரை உலகில் முதன்முதலாக ஒரு பெண் நடிகர் ஒரு லட்சம் ரூபாயை தனது நடிப்புக்காக பெற்றார் என்றால் அது கேபிஎஸ் ஆகத்தான் இருக்க முடியும்.

பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தவர் கேபிஎஸ். இப்படத்தில் வேதியராக நடித்தவர். சங்கீதபூபடித மகாராஜபுரம் விஸ்வ நாதய்யர். விஸ்வநாதய்யர் பிராமணர். பிராமணர் அல்லாத கேபிஎஸ் காலில் விழுந்து நடிக்கலாமா? என்று ஆதிக்க சாதியினர் உரத்துப் பேசினர். அதற்கு விஸ்வநாதய்யர் அவள் என் முன்னால் தெய்வம் போல நிற்கிறாள். எங்களுக்குள் எந்த வித்தியாசமும் கிடையாது என்று குறிப்பிட்டார்.

பக்தநந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இதில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். இந்தப் பாடல்கள் மூலம் திரையிசையில் கேபிஎஸ் தனி ஆவர்த்தனம் நடத்தத் தொடங்கினார் என்றே கூறலாம். மனம் உருகி லயித்து லயித்து இன்புறக்கூடிய உணர்வு நிலையை ஏற்படுத்தக் கூடிய பாடல்கள் அவை.

''நாளை போகாமல் இருப்பேனோ''

''வழிமறைத்திருக்குதே - தேசிகம்''

''கண்டேன் கலித் தீர்த்தேன்''


''சிதம்பரம் போகாமலிருப்பேனோ - செஞ்சுருட்டி போன்ற பாடல்கள் கேட்க கேட்க மனம் லயிக்கும் என்றே இப்படம் பார்த்த பலரும் கூறுகின்றனர். 1935ல் இப்படம் வெளிவந்தது.

பக்தநந்தனார் வெளிவந்த அடுத்த ஆண்டே மணிமேகலையில் கேபிஎஸ் நடிக்க ஒத்துக் கொண்டார். 1938இல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940இல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை கேபிஎஸ் பாடியிருந்தார்.

அவ்வப்போது இசைக்கச்சேரியும் நடத்தி வந்தார். தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (4.1.1944) கலந்து கொண்டு கேபிஎஸ் இசை வெள்ளத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். தனது இறுதிநாள் வரை தமிழிசை இயக்கத்திற்காக சாதாரண பொதுமக்களிடம் சென்று தனது முழு தமிழிசை நிகழ்ச்சியை வழங்கி வந்தார். கேபிஎஸ் புகழ் எங்கும் பரவலாகி இருந்தது.

தொடர்ந்து கேபிஎஸ் ஒளவையார் என்ற படத்தில் ஒளவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953இல் வெளிவந்தது. ஒளவையார் எப்படி இருப்பார் என்பதற்கு கேபிஎஸ்யை உருவகப்படுத்தும் நிலை தோன்றிற்று. வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றால் சிவாஜி நினைவுக்கு வருவது போல் ஒளவையார் என்றால் கேபிஎஸ் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு ஒளவையாராக வாழ்ந்து சென்றார். 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் ராகதீபமாய் பிரகாசிக்கும் வல்லமை பெற்றவை.

ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இதில் கேபிஎஸ் பாடியவை 30. இந்தப் பாடல்கள் என்றும் கேபிஎஸ் மணம் பரப்பிக் கொண்டேயிருக்கும். கேபிஎஸ் இன் இசைவெள்ளம் திரையிசையில் ஒரு புதிய சகாப்தமே படைக்கத் தொடங்கியது.

பதினொரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1964ல் பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் செளந்தியடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார். அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது/நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது என்ற வரிகளை கேபிஎஸ் குரலில் கேட்கும் போது அது ஏற்படுத்தும் மனக்கிளர்ச்சி சொல்லிமாளாது.

மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார். அந்தப் பாடல்கள் யாவும் பக்தி இசை மரபின் பிழசாறாக ஊற்றெடுத்தன. பக்தி மரபு ஆன்மீகத் தோட்டத்துக்குப் பாதை போட்டது. இப்பாதையில் கேபிஎஸ்-இன் ராகமாலிகைகள் பல பல வண்ணங்களாக இருந்தது.

திரை இசை உலகில் வந்தோம் பாடினோம் என்று போகாமல் இசையின் பல்வேறு நுணுக்கங்களின் ஆழத்தை அனுபவித்து வெளிப்படுத்திய பாங்கு அவருக்கே உரிய தனித்தன்மையாகவே அமைந்து விட்டது. அந்தக் குரல் வளம் தமிழ் உச்சரிப்பு சுந்தராம்பாளுக்கு மட்டுமே உரியதாக இருந்தது.

சுந்தராம்பாளின் இசை நிகழ்ச்சி ஆறு மணி நேரம் நடக்கும். பொதுவாகக் கூட்டம் கூடுமிடங் களில் தான் நடக்கும். மக்களுக்கும் இசைக்கும் மிக நெருங்கிய உறவைப் பின்னலாக்கி வந்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டியெங் கும் உள்ள கோவில்களில் பாடிய ஒரே கலைஞர் கேபிஎஸ்தான். கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் இசையை அனுபவிக்கக் கற்றுக் கொடுத்தவர்.

கர்நாடக இசை தெரிந்தவர்கள்தான் இசையை ரசிக்க முடியும் என்பதை மாற்றி இசை தெரியாத வர்களும் தமிழிசையைச் சுவைக்க, அனுபவிக்க, இசை ஞானம் பெற வழிவகுத்தவர் கேபிஎஸ். அவரது இசை நிகழ்ச்சியைக் கேட்டு லயித்து வந்தவர்கள் அவரது திறமையை ஆளுமையை இன்றும் பல வகையில் நினைவு கூறுவர். பல்வேறு பாராட்டுக்கும் கெளரவங்களுக்கும் உரியவராக எப்போதுமே தனித்த மரியாதையுடன் வாழ்ந்து வந்தவர்.

கணீர் என்ற வெண்கல நாதம் கேபிஎஸ்க்கு மட்டுமே சொந்த மானது. நாடகம், திரைப்படம், இசை நிகழ்ச்சி, பக்தி - ஆன்மீகம் என்று படர்ந்து பரவி மேற்கிளம்பிய குரல் அது. பறந்த இசைக்குயில் 1980 செப் 19இல் தமிழ் மனங்களில் என்றும் பாடிப் பறந்த இசைக் குயிலாகிவிட்டது.

கேபிஎஸ் மீது என்றும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது கேபிஸ் உயிர்விட்டார். எம்ஜிஆர் அரசுமரியாதையுடன் அவருக்கான கடைசி மரியாதை கிடைக்கச் செய்தார்.

நாடக மேடையை இசைக் கலையை நாட்டு விடுதலைக்கு பயன்படுத்திய வீரமிக்க கலைஞர் கேபிஎஸ். தமிழ் மொழியும் தமிழ் இசையும் என்றும் வளர்த்து புதுப்பரிமாணம் காண தனது வெண்கல குரலால் இசைவேள்வி நடத்தியவர் கேபிஎஸ் என்றால் மிகையாகாது. தமிழ்க்கலை உலகில் சாதனை புரிந்தவர்களுள் கேபிஎஸ் சாதனை தனித்தன்மை மிக்கது.

தெ.மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline