Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: போர்புரிவதே அரச வம்சத்தின் தர்மம்
- ஹரி கிருஷ்ணன்|ஜூன் 2019|
Share:
'வனவாசம் போதும்' என்று தர்மபுத்திரரோடு வாதிட்டுக் கொண்டிருந்த பீமன் தன்னுடைய அடுத்த வாதத்தை எடுத்து வைத்தான். காட்டிலே பன்னிரண்டு வருடங்கள் வசிப்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால் ஓராண்டு யாருக்கும் தெரியாமல் எவ்வாறு மறைந்து வசிக்கப் போகிறோம்? மிக முக்கியமான காலகட்டமல்லவா இது? இந்த ஓராண்டுக் காலத்தில் நாம் ஐவரில் ஒருவரோ அல்லது பாஞ்சாலியோ கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் பன்னிரண்டு வருட வனவாசம், ஓராண்டு அக்ஞாத வாசம் என்று தொடர வேண்டுமல்லவா? மறைந்து வாழ வேண்டிய அந்தக் காலத்தை எப்படிச் செய்யப் போகிறோம்? நம்மில் யாராவது ஒருவரேனும் மக்களால் அறியப்படாதவர்களா? ஏதோ ஒரு நாட்டில் நாம் மறைந்து வாழவேண்டுமானால் அதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன தெரியுமா? "புத்தி, வீர்யம், படிப்பு, நற்குலம் இவற்றுடன் கூடின நீர் எங்களை மறைக்க விரும்புவது ஒரு பிடி புல்லினால் இமயமலையை மறைக்க விரும்புவது போலும். ஓ! பார்த்தரே! ஆகாயத்தில் சூரியனைப் போலப் பூமியில் கீர்த்திபெற்ற உம்மால் மறைந்து அக்ஞாத வாஸமானதைச் செய்ய முடியாது. அதிக ஜலமுள்ள இடத்தில் கிளைகளும் மலர்களும் இலைகளுமுள்ள பெரிய தேக்குமரம் போலவும், வெண்மையான யானை போலவும் அர்ஜுனன் அறியப்படாதவனாக எவ்விதம் சஞ்சரிப்பான்? சிங்கத்திற்கு ஒப்பானவர்களும் ஸகோதர்களும் ஒன்றுசேர்ந்தவர்களும் சிசுக்களுமான இந்த நகுல ஸஹதேவர்களும் (அறியப்படாமல்) எவ்விதம் ஸஞ்சரிப்பார்கள்? ஓ! பார்த்தரே! புண்ணிய கீர்த்தியுள்ளவளும் வீரரை ஈன்றவளும் பிரஸித்தி பெற்றவளும் ராஜபுத்திரியும துருபதபுத்ரியுமான இந்தக் கிருஷ்ணையானவள் அறியப்படாமல் எவ்விதம் ஸஞ்சரிக்கப் போகிறாள்? ஓ! அரசரே! இந்த ஜனங்கள் என்னையும் குழந்தைமுதல் நன்கு அறிவார்கள். (ஆகவே, நமது) அக்ஞாதவாஸத்தை மேருவினுடைய மறைவைப்போல எண்ணுவார்கள்." (வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வம், அத். 35, பக். 130) (பீமனுடைய இந்தப் பேச்சில் 'பார்த்தரே' என்று அழைக்கப்படுவது தர்மபுத்திரரைக் குறிக்கும். 'பார்த்தன்' எனப்படுவது பெரும்பாலும் அர்ஜுனனையே குறித்தாலும் அது ஒரு தாய்வழிப் பெயர். ஆங்கிலத்தில் இதை matronymic என்பார்கள். குந்திபோஜனுக்கு தத்து கொடுப்பதற்கு முன், சூரசேனனுடைய மகளாக இருந்தபோது குந்திக்கு ப்ருதை (Pritha) என்ற பெயர் இருந்ததைப் பார்த்தோம். ப்ருதையின் மகன் என்பதால் அவளுடைய மகன்களான தருமன், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவருக்கும் இந்தப் பெயர் பொதுவானது. இதைப்போலவே குந்தியின் மகன் என்று சொல்லுமிடங்களில் இம்மூவருக்கும் 'கௌந்தேயன்' என்ற பெயர் பொதுவானது.)

'உம்மை மறைப்பதும் சூரியனை மறைப்பதும் ஒன்றுதான். என்னை மறைப்பதும் மேருமலையை மறைப்பதும் ஒன்றுதான். அர்ஜுனனை மறைப்பதும் செழித்து வளர்ந்த தேக்கு மரத்தையும் நான்கு தந்தங்களை உடைய வெள்ளை யானையான ஐராவதத்தையும் மறைப்பதும் ஒன்றுதான். நகுல சகதேவர்களோ சிறுவர்கள். (இது அன்பினால் உரைக்கப்படும் மொழி. அவர்கள் சிறுவர்கள் அல்லர். பீமனைவிட இரண்டு வயது சிறியவர்கள். அவ்வளவுதான்.) பாஞ்சாலியோ துருபதன் மகள் என்பதாலும் ஐந்து வீரப் புதல்வர்களைப் பெற்றவள் என்பதாலும், அவளுக்குரிய நற்பெயராலும் அனைவராலும் அறியப்பட்டவள். ஆகவே நம் ஆறுபேரும் பலநாட்டு மக்களால் நன்கு அறியப்பட்டவர்கள். இதற்கு மேலே இன்னொரு சிரமம் இருக்கிறது. நாம் பல தேசத்து அரசர்களை வென்றிருக்கிறோம். அவர்களுடைய நாடுகளெல்லாம் நம்முடைய நாடுகளாகிவிட்டன. இவ்வாறு நம்மிடம் தோற்ற மன்னர்கள் எல்லோரும் துரியோதனாதியர்களிடத்திலே நெருக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். வியாச பாரதப்படி சொல்லவேண்டுமானால், "அப்படியே, நம்மால் தேசத்திலிருந்து துரத்தப்பட்ட அனேகம் அரசர்களும் அரசகுமாரர்களும் த்ருதராஷ்டிர புத்ரர்களை அனுஸரித்திருக்கிறார்கள். துரத்தப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட்டவர்களுமான அவர்களும் சமனத்தை அடையார்களன்றோ? அவனது பிரியத்தை விரும்பின அவர்களால் நமக்கு அவச்யம் அபகாரம் செய்யத்தக்கதாகும். அவர்களும் நம்மிடத்தில் மறைந்த அனேகம் ஒற்றர்களை அனுப்புவார்கள். நம்மையறிந்து, சொல்லியும் விடுவார்கள். அதிலிருந்து நமக்கு அதிக பயமுண்டாகும். (மேற்படி இடம்.) ("Besides, we have exiled many kings and the sons of kings from their kingdoms and they will now follow Dhritarashtra. Deprived and exiled by us, they will not have pacific feelings towards us. They will certainly try to injure us, so as to cause him pleasure. They will employ many spies against us. There will be a great danger that they will detect us and inform against us." The Mahabharata: Volume 2 என்பது பண்டார்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் பதிப்பான பிபேக் தேப்ராயின் மொழிபெயர்ப்பு.)
பிடிபடுவதில் இவ்வளவு சாத்தியங்கள் உள்ள இந்த அக்ஞாத வாச காலத்தை நாம் வெற்றிகரமாகக் கழிப்பது இயலாத ஒன்று. நம் அறுவரில் யார் பிடிபட்டாலும் நாம் மீண்டும் வனவாசத்தையும் அக்ஞாத வாசத்தையும் மேற்கொள்ளவேண்டும். மறுபடியும் பிடிபட்டால் மறுபடியும் பன்னிரண்டாண்டு வனவாசத்தையும் ஓராண்டு மறைவு வாழ்க்கையையும் தொடரவேண்டும். இந்தச் சுழலிலிருந்து நம்மால் விடுபடவே முடியாது. நன்கு கற்றறிந்தவர்களான பண்டிதர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு மாற்று வழி இருக்கிறது. அது என்னவென்றால், "நாம் காட்டில் பதின்மூன்று மாஸங்கள் பூர்ணமாக வஸித்துவிட்டோம். அவற்றை ஓர் அளவினால் அவ்வளவு வருஷங்களாகப் பாரும். ஸோமலதைக்குப் பூதிகங்கள் (சீந்திற்கொடி. ஒருவகை மூலிகைச் செடி. இதை சோமலதை எனப்படும் கொடிக்கு பதிலாகப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது) பிரதிநிதியாய் இருப்பது போல (வருஷத்திற்கு) மாஸம் பிரதிநிதியாக இருக்கிறதென்று வித்வான்கள் சொல்லுகின்றனர். அவ்விதம் இது செய்யப்படட்டும். அல்லது, நல்லதும், நன்கு பாரத்தைச் சுமக்கின்றதுமான காளைக்குப் (புல்லைக் கொடுத்து) த்ருப்திசெய்விப்பதால் இந்தப் பாவத்திலிருந்து விடப்படுகிறான். ஓ! அரசரே! ஆகையால் நீர் சத்ருவதத்தில் நிச்சயத்தைச் செய்வீராக. ஏனெனில், எல்லா க்ஷத்திரியருக்கும் சண்டையைவிட வேறான தர்மமில்லை' என்றான்." (மேற்படி இடம்.)

நாம் காட்டிலே பதின்மூன்று மாதங்கள் வாழ்ந்துவிட்டோம். இந்த ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு ஆண்டாகக் கருத சாத்திரத்தில் இடமிருக்கிறது. இதைப் பெரிய பண்டிதர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, நம்முடைய வனவாச, அக்ஞாத வாச காலங்கள் இத்தோடு முடிந்துவிட்டதாகக் கருத முடியும். இதனால் பாவம் உண்டாகும் என்று நீர் கருதலாம். அப்படியேதும் இல்லை. பாரம் சுமக்கின்ற, அல்லது வண்டியிழுக்கின்ற காளைக்குப் புல்லைக் கொடுத்து திருப்தி செய்துவிட்டால் அந்தப் பாவத்துக்குத் தகுந்த பரிகாரமாகும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. நாட்டுக்குப் போனபிறகு காளைக்குப் புல்லைக் கொடுத்துவிட்டால் போகிறது. பொறுத்தது போதும். இப்போதே நாடு திரும்புவோம். கௌரவர்களோடு போர்தொடுத்து இழந்த நாட்டையும் சுதந்திரத்தையும் திரும்ப அடைவோம். ஏனெனில் ஒரு க்ஷத்திரியனுக்கு உகந்த தர்மம் போர்தொடுப்பது மட்டுமே.

பீமன் பேசும் இந்த அக்ஞாதவாச காலச் சிக்கல் உண்மையிலேயே அச்சுறுத்க்கூடிய அளவுக்கு சிக்கல் நிறைந்ததுதான். பன்னிரண்டாண்டு வனவாசம் முடிந்தபிறகு, விராட நகரில் மறைந்து வாழலாம் என்று தீர்மானிக்கும் (பாஞ்சாலி உள்ளிட்ட) அறுவரும், 'இந்தக் கடினமான காலகட்டத்தை என்ன வகையில் நீ கழிக்கப் போகிறாய்' என்று பீமன் சொல்கின்ற இதே காரணங்களைக் காட்டித் தமக்குள் உரையாடிக்கொள்வதை யட்சப் பிரசன்னம் எனப்படும் நச்சுப் பொய்கைக் காட்சிக்கு அடுத்ததாக வரும் விராட பர்வத்தின் தொடக்கத்தில் காணப் போகிறோம். அதற்கெல்லாம் மேலாக ஒன்று சிந்திக்கத்தக்கது. தர்மபுத்திரரிடத்திலேயே மாற்றுவழிகளைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு 'மாமிச மலை' என்று கருதப்படும் பீமனுக்கு நுட்பமான சாத்திர ஞானம் இருந்திருக்கிறது. இந்த வழிக்கு இது மாற்று என்பதைப் பண்டிதர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்' என்று எடுத்துச் சொல்ல முடிந்த அளவுக்கு அவனுக்கு சாத்திரப் பயிற்சி இருந்திருக்கிறது என்பதுதான் அது.

அப்படியானால் இத்தனை அச்சத்தை உண்டாக்கக்கூடிய காலத்தைக் கழிப்பதற்கு பீமன் சொல்லும் உபாயத்தை ஏற்பதுதானே சிறந்த வழியாக இருக்க முடியும்? தருமன் அதற்கு உடன்படவில்லை. 'இதற்கு நான் ஏன் உடன்படமாட்டேன்' என்பதை பீமனுக்கு விளக்குகிறான். அதிலுள்ள நியாயத்தை பீமனும் ஏற்கிறான். காட்டில் ஒரு வருடத்தைக் கழித்துவிட்ட அறுவரும் மீதமுள்ள பதினோரு வருட வனவாசத்தையும் ஒருவருட அக்ஞாத வாசத்தையும் மேற்கொள்ளச் சம்மதிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வியாசர் வந்து ப்ரதிஸ்மிருதி என்ற வித்தையைத் தருமனுக்கு உபதேசித்து, அதை அர்ஜுனனுக்கு உபதேசித்து, திவ்யாஸ்திரங்களை அடைவதற்கு அனுப்பி வைக்கப் போகிறான். அர்ஜுனன் இந்திரகீல மலைக்குச் சென்று தவம் மேற்கொண்டு இந்திரனிடமிருந்து அஸ்திரங்களைப் பெறப் போகிறான். அதையடுத்து இந்திரன் சொன்னதன் பேரில் மஹாதேவரை நோக்கித் தவமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறப் போகிறான். பெற்றதன் பிறகு, இந்திரன் சொன்னதைப்போல தேவலோகத்தை அடைந்து அங்கே நிவாதகவசர்களை அழிப்பதில் இந்திரனுக்கு உதவப் போகிறான். அங்கேதான் அவனுக்கு ஊர்வசியின் சாபமும் கிடைக்கப் போகிறது. இதையெல்லாம் பார்ப்போம். அதற்கு முன்னால், பீமனை மறுத்து தருமபுத்திரர் சொன்னதன் சுருக்கத்தையும் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline