Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பாதுகாப்பு எங்கே?
- ம.இலெ. தங்கப்பா|மே 2019|
Share:
தந்தி வந்தது; "தந்தைக்கு உடல் நலமில்லை; உடனே புறப்பட்டு வா" என்று.

மாணிக்கம் கண்ணம்மாவின் முகத்தைப் பார்த்தான். கண்ணம்மா திகைப்புடன் அவனை நோக்கினாள். சிறிது நேரம் அமைதியில் ஆழ்ந்தனர் இருவரும். "ஊருக்குப் போய்வர வேண்டியதுதான்" என்றான், பெருமூச்சுடன் மாணிக்கம்.

"அத்தான்!" என்றாள் கண்ணம்மா. அவள் குரலில் அச்சம், ஏக்கம், துன்பம் எல்லாம் கலந்து ஒலித்தன.

"ஏன் நடுங்குகின்றாய்?" என்றான் மாணிக்கம்.

"நீங்கள் போகவேண்டாம்; என் மனத்துள் ஏதோ ஓன்று நீங்கள் போகவேண்டாம் என்று சொல்லுகிறது" என்றாள் கண்ணம்மா.

"அப்படி ஒன்றும் அஞ்சவேண்டாம் கண்ணம்மா. நம்மைப்பற்றி இன்னும் ஒருவருக்கும் தெரியாது. நான் போய்விட்டு உடனே வந்து விடுகிறேன்"

அவள் அழுதாள்"ஏன், தந்தி பொய்த் தந்தியாகத்தான் இருக்கும். போன வாரம் தானே நீங்கள் சொன்னீர்கள், உங்கள் ஊர்க்காரரைப் பார்த்ததாக... இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கலாம். நீங்கள் போகக் கூடாது" என்று தேம்பினாள்.

மாணிக்கம் அவளைத் தேற்றினான். "அப்படியெல்லாம் இருக்காது. இருந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன். உன்னைக் கைவிடுவேனா?" என்றான்.

"உங்களை விட்டுவிட்டு என்னால் தனியாக இங்கு இருக்கவே முடியாது; நானும் உங்களுடன் வருகிறேன்" என்றாள் கண்ணம்மா.

மாணிக்கம் நடுங்கினான்! "வேண்டாம் கண்ணம்மா, இது முடியாது. என் தந்தை நம் இருவரையும் கொலையே செய்துவிடுவார். அவரது சாதிவெறி உனக்குத் தெரியாது."

அவள் அழுதாள். அவன் தேற்றினான். "இறுதியில் என்னைக் கைவிடமாட்டீர்களே!" என்றாள்.

"சீச்சீ... இது என்ன கேள்வி? நீ என் மனைவி என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறாய். நம் குழந்தையின் மீது ஆணை. போய் ஒரு வாரத்துக்குள் நான் திரும்பிவிடுவேன்" என்றான் மாணிக்கம்.

அன்று மாலை பெங்களூரிலிருந்து புறப்பட்ட புகைவண்டி அவனை ஏற்றிச் சென்றது, அவனது சொந்த ஊராகிய கல்லூருக்கு. மாணிக்கம், பெங்களூரில் ஆலைத் தொழிலாளி. தமிழன். ஆலையில்தான் கண்ணம்மாவைச் சந்தித்தான். அவளும் தமிழச்சிதான். ஆனால் இந்தப் பாழும் தமிழினத்தைப் பற்றியிருந்த சாதியெனும் பெருநோய் அவனை உயர்ந்த குலம் என்றும் அவளைத் தாழ்ந்த குலம் என்றும் பிளவு செய்தது. ஆனால் காதலின்முன் அந்தப் பிளவு ஆற்றலற்றுப் போயிற்று. கண்ணம்மாவிற்கு அன்னை மட்டும்தான் இருந்தாள். அவளுக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமே. ஆனால் மாணிக்கத்துக்குத் தெரியும், தன் ஏற்பாடு தந்தைக்குத் தெரிந்தால் பெருந்துன்பமும் தொல்லையும் விளையும் என்று. எனினும் என்ன! அறுநூறு கற்களுக்கு அப்பால் அவர் ஒரு மூலையிலே கிடக்கிறார். அந்தத் துணிவுதான் அவனுக்கு.

ஒருமுறை தந்தை பெரியார் பெங்களூருக்கு வந்திருந்தார். அவர் தலைமையில், ஆனால் மிக அமைதியான முறையில் திருமணம் நிகழ்ந்தது. திருமணம் ஆன இரு திங்கட்குள் கண்ணம்மாவின் தாய் இறந்தாள். இருவரும் தனியாக வாழலாயினர் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. மாணிக்கத்தின் வீட்டினர்க்கு இதுவரை ஒருசேதியும் தெரியாது. நாட்கள் செல்லட்டும், மெல்லச் சொல்லலாம் என்பது அவன் எண்ணம். இந்த நேரத்தில்தான் தந்தி வந்தது.

தந்தைக்கு எப்படியோ செய்தி தெரிந்துதான் தந்தி அடித்திருந்தார். மாணிக்கம் வீட்டில் நுழைந்ததுதான் தாமதம், கன்னத்திலும் முதுகிலும் அடிவிழுந்தது. சினத்தின் குமுறலிலே அறிவை இழந்தார் அவன் தந்தை. நல்ல அடி. கால் முறிந்துவிட்டது. மருத்துவ விடுதிக்குக்கொண்டு சென்றனர் மாணிக்கத்தை. அவனை எச்சரித்தார் அவன் தந்தை. "மரியாதையாக அந்தப் பெண்ணை மறந்துவிடு. வேறு திருமணம் செய்துகொண்டு வீட்டோடேயே இருந்துவிடு. என் சொல்லை மீறினால் உன்னைக் கொன்றேவிடுவேன்" என்றார்.

மாணிக்கம் அவர் சினத்தைக் கிளற விரும்பவில்லை. மறைவாகவே காரியத்தைச் சாதித்துக்கொள்ள நினைத்தான். ஆனால் எதையும் கண்ணம்மாவுக்குத் தெரிவிக்க முடியவில்லை. எழுதும் கடிதங்கள் எல்லாம் அஞ்சல் நிலையத்திலேயே கிழித்தெறியப்பட்டுவிட்டன. அவ்வளவு செல்வாக்கு அவன் தந்தைக்கு. மாணிக்கத்தின் பணமனைத்தும் பறித்துக் கொள்ளப்பட்டது. கையிலிருந்த மோதிரமும், கடிகாரமும்கூடப் பிடுங்கப்பட்டன. நண்பர்கட்கும் எச்சரிக்கை செய்துவிட்டார் அவன் தந்தை, யாரும் அவனுக்குப் பண உதவியோ பிற உதவியோ செய்யக் கூடாது என்று. அவனையும் செல்லுமிடமெல்லாம் கண்காணிக்க இரு மூன்று தடியர்கள் ஏற்படுத்தப்பட்டனர். சிறகிழந்த பறவைபோல் துடித்தான் மாணிக்கம்,
துணையிழந்த பறவைபோல் துடித்தாள் கண்ணம்மாவும். ஒரு வாரம் இரு வாரமாயிற்று; ஒரு திங்களுமாயிற்று. கண்ணம்மாவின் அச்சம் உறுதிப்பட்டுவிட்டது. கண்ணீரும் அழுகையுமாகக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு வேலையும் செய்யமுடியாமல் வீட்டிலும் இருக்கமுடியாமல் தூண்டிற்புழுவைப் போல் துடித்தாள். கணவனுக்குக் கடிதம் எழுதினாள். பதில் இல்லை. கைவிட்டுவிட்டான் என்றே உறுதியாக நம்பினாள். துணைத்தொழிலாளர், தமிழர் சிலர் அவளுக்கு ஆறுதல் கூறினர். பயன் கிட்டாமற் போகவே புகைவண்டி ஏற்றி அவளைக் கல்லூருக்கு அனுப்பிவைத்தனர்.

குழந்தையை மார்போடணைத்தபடி நீரொழுகும் விழியும் துயர் ததும்பும் உள்ளமுமாகப் புகை வண்டியிலிருந்து இறங்கினாள், கண்ணம்மா. முகவரி அவளிடமிருந்தது. ஒவ்வொருவராக உசாவியபடி அந்தப் பேதை நடந்தாள். மாணிக்கத்தின் வீட்டுக்கும்வந்து சேர்ந்தாள். மாணிக்கம் இல்லை. வயலுக்குச் சென்றிருந்தான்.

அவளையும் குழந்தையையும் கண்டதுமே அனைவர்க்கும் அவள் யார் என்று புரிந்துவிட்டது. மாணிக்கத்தின் தந்தை சீறினார். திட்டினார். போ, வெளியே என்றார். அவள் அழுது கதறினாள். "அவரை ஒரு முறையாவது நான் பார்க்கவேண்டும். அவர் எங்கே?" என்றாள். "அவன் மனம் மாறிவிட்டான். வேறு மணம் செய்துகொள்ளப் போகிறான்" என்றார்கள், எல்லோரும்.

கண்ணம்மாவின் உள்ளம் கொதித்தது, துடித்தது. "மணமா? நான் இருக்கும்போது அவர் எப்படி மணந்துகொள்ள முடியும்? அவர் தொட்டுத் தாலி கட்டிய மனைவி நான். அரசாங்கத்தில் சட்டம் சும்மாவா இயற்றியிருக்கிறார்கள், ஒருவர் இரண்டு மணம் செய்யக்கூடாது என்று?" என்றாள் கண்ணம்மா.

பெரியவர் ஒருவர் ஐம்பது ரூபாயைக்கொண்டு வந்து அவளிடம் நீட்டினார். "இதை வாங்கிக் கொண்டு பேசாமற் போய்விடு. தொல்லை பண்ணாதே! எங்கள் குடும்பத்துக்குக் களங்கம் விளைவிக்காதே. போகிறாயா வெளியே தள்ளவேண்டுமா?" என்று முழங்கினார்.

கண்ணம்மா கண்ணீர் ததும்ப, "முடியாது. அவரைக் காணாமல் ஒரு அடிகூட நகரமாட்டேன். அவரைப்பார்த்து இது உண்மையென்றால் அவர்மீது வழக்குப் போடுகிறேனா இல்லையா பாருங்கள்" என்று குமுறினாள். பேசாமல் முற்றத்தில் உட்கார்ந்து கொண்டாள். அப்போது மாணிக்கத்தின் தம்பி முத்து அங்கே வந்தான். செய்தி அறிந்தான். அவளைப் பார்த்து, "இந்தாம்மா... வழக்கு கிழக்கு என்றெல்லாம் எங்களை மிரட்டமுடியாது. உங்கள் திருமணத்தைப் பற்றி எல்லாம் அறிந்துதான் வைத்திருக்கிறோம். அது சட்டப்படி செல்லாது என்று உனக்குத் தெரியாதோ? பெரிய சீர்திருத்தத் திருமணம் செய்துவிட்டீர்கள். சீர்திருத்தத் திருமணம்! மாலை போட்டால் திருமணம் ஆகிவிடுமோ? உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் போ, போ" என்றான்.

கண்ணம்மா தன் நிலையை அப்போதுதான் உணர்ந்தாள். இந்தக் கேடுகெட்ட சமுதாயமும் அரசாங்கமும் அவளைப் பார்த்துக் கேலிச் சிரிப்புச் சிரித்தன. ஓராண்டாகத் தான் நடத்திய காதல் வாழ்வு உடைந்து துண்டு துண்டாகச் சிதறவிருப்பதையும் எண்ணினாள். அழக்கூட முடியவில்லை அவளால். பலரும் அவரவர் வேலைக்குச் சென்றுவிட்டனர். கண்ணம்மா எழுந்தாள். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மார்போடணைத்து முத்தமிட்டாள். துணியிலே சுற்றிவிட்டுத் திண்ணையில் கிடத்தினாள். புறப்பட்டு விட்டாள். யாரும் அவளை ஏன் என்று கேட்கவில்லை.

அவள் சென்று அரைமணி நேரம் இருக்கும். மாணிக்கம் வயலிலிருந்து வந்தான். வேதனை அவன் மேனி முழுவதும் பொங்கி வழிந்தது. வந்தவன் வாசலிலே குழந்தையைக் கண்டான். செய்தி புரிந்தது. குழந்தையை மார்போடணைத்துக் கொண்டான். "எங்கே என் கண்ணம்மா? எங்கே? எங்கே?" என்று அலறினான். யாரும் பதில் சொல்வாரில்லை. இறுதியில் ஒரு சிறு குழந்தை கண்ணம்மா சென்ற வழியே கையைக் காட்டிற்று. ஓடினான் மாணிக்கம். வெறிபிடித்தவன் போல் ஓடினான். இதற்குள் இவனைப் பிடிக்க இருவர் ஓடிவந்தனர். "கையிலே கத்தியிருக்கின்றது. அருகில் வராதீர்கள்; அழிந்து போவீர்கள்" என்று கூறிக்கொண்டே ஓடினான். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே ஓடினான்.

அரைக் கல் தொலைவு ஓடியிருப்பான், எதிரே மூன்று பேர் சேர்ந்து எதையோ தூக்கிக் கொண்டு வந்தனர். "யாரோ ஒருத்தி, கிணற்றில் விழுந்து இறந்துவிட்டாள்" என்று ஒருவர் கூறிக்கொண்டே வேகமாக முன்வந்தார். மாணிக்கம் ஓடிப்போய்ப் பார்த்தான். "ஐயோ! போய்விட்டாயா, கண்ணம்மா!" என்று அலறினான். அவர்கள் தூக்கிக் கொண்டு வந்தது கண்ணம்மாவின் பிணம்தான்.

ம.இலெ. தங்கப்பா
Share: 




© Copyright 2020 Tamilonline