Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
துளசி
- பூரணி|ஏப்ரல் 2019|
Share:
இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராலாவது மூளை சரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா? அதிலும், காலை ஒரு ஒன்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய ஆரம்பிக்கும்போது பளிச்சென்று குளித்து சுத்தமான பாவாடை தாவணியோடு கண்ணுக்கு இதமாகத்தான் இருக்கிறது. தெருத்தெருவாகச் சுற்ற ஆரம்பித்து விடுகிறாள். சில சமயம் ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மணிக் கணக்காகப் பாடிக்கொண்டே இருப்பாள். குரல் தேன்தான். சில சமயம் நடுத்தெருவில் உட்கார்ந்து கொண்டு தெரு மண்ணையெல்லாம் மடியில் போட்டுக் கொண்டிருப்பாள். குழிகள் பறித்து சிறு சிறு கற்களைப் பொறுக்கி பல்லாங்குழி ஆடக் கிளம்பி விடுவாள். எதிரே ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவும், அவள் தப்பாட்டம் ஆடுவது போலவும் பாவித்து, ஏகமாகச் சண்டை போடுவாள். சில சமயம் அழுதல், சில சமயம் சிரித்தல், எங்காவது திண்ணையில் படுத்துத் தூங்குதல் என்று பொழுது போகும். மாநிறம்தான் என்றாலும் நல்ல அழகான தோற்றம். வயது பதினெட்டுக்குள்தான் இருக்கும்.

நான் அவளைக் கூப்பிட்டு பேச்சுக் கொடுத்துப் பார்ப்பேன். நன்றாகத் தெளிவாகப் பேசுவாள். தனக்கு தாய், தந்தை, அண்ணன் எல்லோரும் இருப்பதாக சொல்லியிருந்தாள். பக்கத்துத் தெருவில் அவள் வீடு இருப்பதாகவும் சொன்னாள். நான் அவளை ஒரு நாள் கேட்டேன். "ஏன் அம்மா, நீ இவ்வளவு தெளிவாகப் பேசுகிறாயே? பிறகு ஏன் கிறுக்குப் போல சுற்றிக் கொண்டிருக்கிறாய்?"

"எனக்கு அப்படி சுற்றினால்தான் நிம்மதியாக இருக்கிறது. என்னால் வீட்டில் இருக்கவோ, பள்ளிக்கூடம் போகவோ முடிவதில்லை. இது தெரிந்துதான் அப்பா, அம்மா என்னை என் போக்கில் விட்டுவிட்டார்கள்."

நான் குடியிருந்த வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் ஒரு கல்யாண மண்டபம் உண்டு. சிறிய மண்டபம். சாமானிய மனிதர்கள் அங்கு குறைந்த வாடகையில் கல்யாணம் போன்ற சுப காரியங்களைச் செய்து கொள்வார்கள். இந்த மாதிரியான ஒரு கல்யாண நாளில் அந்தப் பெண் மண்டபத்தின் வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருந்தாள். உள்ளே மொய் எழுதுதல் நடந்து கொண்டிருந்ததால், சத்திரத்து வாசலில் யாரும் தென்படவில்லை. அந்த நேரத்தில், மண்டபத்தினுள் இருந்து ஒரு வாலிபப் பையன் வெளியே வந்தான். பாடிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்ததும் அருகே சென்றான். நான் என் வீட்டு வாசலில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் அந்தப் பெண்ணை நெருங்கினான். அவனது பார்வையிலிருந்த ஒரு மயக்கம் எனக்குக் கலவரத்தைக் கொடுத்தது. அந்தப் பெண் அவனை நிமிர்ந்து பார்த்தது. அவள் முகத்தில் ஒரு மருட்சி. சட்டென தன் கையைப் பாவாடைக்குள் விட்டு எடுத்தது. அதன் கை நிறைய மூத்திரம். பையன் முகத்தில் வீசி அடித்தது. சிட்டாய்ப் பறந்து ஓடிப் போய்விட்டது. அந்தப் பையன் அருவருப்போடு 'தூ! தூ!' என்று துப்பியபடி மண்டபத்துக்குள் போய் விட்டான். நான் பிரமிப்பில் கல்லாய்ச் சமைந்து நின்றுவிட்டேன். அதன் பிறகு அந்தப் பெண் இந்தத் தெருப்பக்கமே வரவில்லை.

அப்பெண் வருவது நின்றபின் எனக்குக் கொஞ்சம் மனதிற்குக் கஷ்டமாகவே இருந்தது. ஏக்கமாகக்கூட இருந்தது. இரண்டொரு மாதம் சென்றிருக்கும். ஒருநாள், நான் காரணீஸ்வரர் கோயில் சென்று வரலாம் என்று எண்ணினேன். நான் அதிகமாகக் கோயில் குளம் என்று போக ஆசைப்படமாட்டேன். கடவுளை என் மனதிலும் இஷ்டதெய்வத்தின் படத்திலுமே வைத்து பக்தி செய்து கொள்ளுவேன். அன்று கோயில் பிரகாரத்தைச் சுற்றும்போது யாரோ என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது கண்டு திரும்பிப் பார்த்தேன். என் இளவயது சிநேகிதி ஜானகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். மகிழ்ச்சியோடு அவளுடன் சேர்ந்து பிரகாரம் சுற்றலானேன். அவள் என்னிடம் இரண்டொரு வார்த்தை சம்பிரதாயமாகப் பேசிவிட்டு வாய்க்குள் ஸ்தோத்திரங்களை சிரத்தையோடு முணுமுணுத்துக் கொண்டே வந்தாள். சுவாமி தரிசனம், கற்பூர ஆரத்தி எல்லாம் முடிந்த பிறகு கோயிலில் சற்று உட்கார்ந்து விட்டுத்தான் செல்லவேண்டும் என்ற வழக்கத்தை அனுசரித்து பிரகாரத்தின் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டோம்.
முதலில் அவள் என்னைப்பற்றி விசாரித்தாள். நான் சுருக்கமாகச் சொல்லிவிட்டு இப்பொழுது என் கடைசி மகனோடு வசிக்கிறேன் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் கணவர் இரண்டாவது மகன் வீட்டில் இருந்து வருகிறார். அவர்கள் எல்லாம் நகரில் மற்றொரு பகுதியில் இருக்கிறார்கள் என்று சொன்னேன். ஜானகி தான் சென்னையிலேயே பல வருடங்களாக இருப்பதாகவும், தன் கணவரும் மகனும் சேர்ந்து ஏதோ தொழில் நடத்துவதாகவும் சொன்னாள். அந்தச் சமயத்தில் புத்தி சுவாதீனமற்ற அந்தப் பெண் எங்கிருந்தோ ஓடி வந்து "அம்மா, பசிக்கிறது. ஏதாவது தின்னக் கொடு" என்று கேட்டாள். நான் "இந்தப் பெண் உன் மகளா?" என்று கேட்டேன். "ஆம். என் வயோதிக காலத்தில் அனுபவிக்க வேண்டிய விதியாக அமைந்து போனது." என்றாள் விசனத்துடன். "நான் வசிக்கும் தெருவுக்கு இந்தப் பெண் அடிக்கடி வந்து பார்த்திருக்கிறேன். பேசினால் தொடர்ச்சியாக தெளிவுடன்தான் பேசுகிறாள். டாக்டரிடம் காட்டினீர்களா? சரியான வைத்தியம் செய்தால் குணமாகி விடுவாள் என்று எனக்குத் தோன்றுகிறது" என்றேன்.

ஜானகி சொல்லத் துவங்கினாள், "இவள் இரண்டு ஆண்டு முன்பு வரையிலும் நன்றாகத்தான் இருந்தாள். பள்ளியில் படித்து வந்தாள். நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள். ஆசிரியர்கள் எல்லாம் அவள் நன்றாகப் படிக்கிறாள் என்றார்கள். சமர்த்துப் பெண் என்று சொல்லுவார்கள். என் போதாத காலம் என் தம்பி மகன் ரூபத்தில் வந்தது. அவனும் இவள்வயது உடையவன்தான். ஒரு சமயம் பள்ளி விடுமுறையில் அவன் வீட்டிற்கு வந்திருந்தான். இரண்டு பேரும் கலகலப்பாகப் பழகிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர். ஒருநாள், இருவரும் கேரம் விளையாடிக் கொண்டு இருந்தனர். எனக்கு சமையல் பொருள் ஏதோ வாங்க வேண்டிவந்தது. நான் அவர்களிடம், 'நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள், நான் கடைவரை சென்று பொருள் வாங்கி வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனேன்.

திரும்பி வந்தபோது, வீட்டுக் கதவு உள்பக்கமாகத் தாழிட்டு இருந்தது. உள்ளே 'தடதட' வென்று ஓசை கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அந்தப் பையன் இவளிடம் தப்பான நோக்கத்துடன் நெருங்கிக் கொண்டிருந்தான். இவள் சட்டென தன் மூத்திரத்தைக் கையில் ஏந்தி, அவன் முகத்தில் அடித்தாள். கோபம் கொண்ட அவன், இவளைப் பிடித்து இழுத்துத் தள்ளிய வேகத்தில் சுவற்றில் மோதிக்கொண்டு கீழே விழுந்தாள். தலையிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. கதவை நான் தட்ட முயல்வதற்குள் அவனே கதவைத் திறந்துகொண்டு வந்தான். கலவரம் தேங்கிய முகத்துடன் என்னைத் தாண்டிக்கொண்டு ஓடினான். அன்று போனவன்தான். ஆளே காணாமல் தொலைந்து போய்விட்டான். அன்றையிலிருந்து துளசி இப்படி இருக்கிறாள். நாங்களும் நிறைய வைத்தியங்கள் செய்து பார்த்துவிட்டோம். ஆனால் பலன் தெரியவில்லை. இவள் வீட்டைவிட வெளியில் சுற்றுவதையே விரும்புகிறாள். அதிலும் வீட்டுக் கதவை யாராவது மூட முயன்றால் முகம் வெளிறி அலற ஆரம்பித்து விடுகிறாள். இரவில்கூட இவள் நன்கு உறங்கிய பிறகே வீதிக் கதவைச் சாத்துகிறோம். அவள் விழிப்பதற்குள் திறந்து வைத்து விடுகிறோம். மருத்துவரோ, அவள் போக்கிலேயே விட்டுப் பிடியுங்கள். கண்டிப்பாகக் குணம் அடைவாள் என்று உறுதியாகக் கூறுகிறார். தெய்வம் விட்ட வழி" என்று சோகமாகச் சொல்லி முடித்தாள்.

பூரணி
Share: 




© Copyright 2020 Tamilonline