Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தரமுடியாததை எதிர்பார்த்து
தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை
கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது!
- இ. இளவரசி|டிசம்பர் 2017|
Share:
யவீரு கடற்கரையினில் அவருக்காய் காத்திருந்தான், அவனோடு அவன் வீட்டு வேலையாட்கள் 10 பேரும், ஊர்மக்கள் மொத்தமும் அந்த மத்தியான வேளையிலேயே ஆர்வத்தோடு அவர் ஏறிவரும் படகைப் பார்த்தபடி காத்துக்கிடந்தது.

அன்று காலைதான், கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் பிரேதக் கல்லறைகள் மத்தியில் வாழ்ந்த மனம்பிசகிய, ஆவிபிடித்த, இரவும், பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் திரிந்து கூக்குரலிட்டுக் கொண்டு, கல்லுகளினாலே தன்னை கீறிக் காயப்படுத்திக் கொண்டிருந்த ஒரு மனிதனைத் தொட்டு முழுமையாய்க் குணப்படுத்தினாராம். மக்கள் மாய்ந்து, மாய்ந்து அந்த உன்னத புருஷரைப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.

யவீரு மகா பொறுமையுடனும் தீர்க்கத்துடனும் காத்திருந்தான். மகள் அன்னாவை நினைத்துக் கொண்டான். பன்னிரெண்டு வருடங்களாய் அவன் வாழ்வைச் செழிக்க வந்த வசந்தம். லில்லி புஷ்பமோ இல்லை அந்தி நிலாதான் அழகாய் அவன் மடியினில் தரை இறங்கியதோ என அவன் கொண்டாடும் செல்வமகளை நினைத்துக் கொண்டான். கண்வளர் சித்திரமாய் அவள் தவழும் பருவம் எட்டியபோது முட்டி சிராய்த்துவிடும் என்று அவன் முற்றம்வரை பட்டுத்துணி விரித்து பதவிசாய் வளர்ந்தவள். இன்று வீட்டில் கிழிந்த நாராய்க் கிடக்கிறாள். இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் பருவமெய்தி ரூபவதியாய் அவன் வீடு வளந்தர இருக்கும் அந்த வெள்ளிரதத்தை மீட்கத்தான் இங்கு கிடையாய்க் கிடக்கிறான்.

யவீருக்கு ஊரில் மதிப்பென்ன, மரியாதையென்ன! ஒரு கண்ணசைத்தால் ஓடிவந்து நிற்க, ஒரு நூறு ஆட்கள் அவனுக்குண்டு. தலைமை வேலையாளை அனுப்பி இந்த நல்லவரை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் தான். ஆனால் அவனே அழைக்க வந்திருந்தான். அதுதான் முறை.

அவன் அந்த ஊரின் பிரார்த்தனை ஆலயத் தலைவர்களில் ஒருவன். ஆசாரியர்களும் யூதர்களின் புனிதநூலாம் தோராவைக் கற்றுத் தேர்ந்தவரெல்லாம் இவர்தரும் அற்புத சுகத்தையும், நல்வழிப் படுத்தும் பிரசங்கங்களையும் குற்றப்படுத்தி வருகிறபடியால் தன்னையும் அவர்கள்போல் இவர் எண்ணிவிடக் கூடாது என நினைத்துக் கொண்டான். ஆண், பெண், யூதர், யூதரல்லாதவரென பேதம் பார்க்காத, தேவமகிமை கொண்ட இந்த மனிதர் தன்னையும் தன் வேண்டுதலையும் புறந்தள்ளார் என மனதைத் திடப்படுத்திக் கொண்டான்.

அன்னாவின் நினைவு மறுபடி அவன் இதயத்தை அறுத்தது. ஒருவாரம் முன்புவரை வெள்ளாட்டுக் குட்டிபோல் துள்ளிக் குதித்துத் திரிந்தவள், விஷக்காய்ச்சலில் விழுந்து கிடக்கிறாள், எந்த மருந்தும் குணம் தரவில்லை. மருத்துவரெல்லாம் இனி எல்லாம்வல்ல இறைவனிடம் இறைஞ்சுங்கள் எனக் கைவிரித்து விட்டனர். ஆமாம், நானும்கூட இதோ இங்கே கடவுளை வேண்டித்தான் வந்திருக்கிறேன் என உளமருகினான்.

அதோ, அவர் வந்து விட்டார்! மிக வேகமாய்ப் படகை விட்டிறங்கி அவர் நடந்து வருவதைப் பார்த்தால் அவருக்கு இங்கு வேறு முக்கியமான காரியம் எதுவும் இருக்குமோ? கூட்டம் அலை மோதுகிறதே! என்ன செய்வேன்? எப்படி என் நிலை விளக்குவேன்? இதோ நான் அருகில் வந்துவிட்டேன். என் கண்மணி மகளைக் காக்கும் வல்லமை அவருக்குண்டு, அதை நான் அறிவேன்.

அந்த முகத்தில்தான் ஒராயிரம் காலைச் சூரியன்களின் பிரகாசம். இவர் உன்னதர்தான். தாவீது வழிவந்த தச்சனின் மகன் இவர் என யார் சொல்ல முடியும்? ஆசாரியர்களும், வேதபாரகர்ளும் இவர்பால் கொண்ட பொறாமை ஏன் என இப்போதுதான் விளங்குகிறது. அருகில் வந்துவிட்டார்.

அவரைக் கண்ட மாத்திரத்தில் கூடி இருக்கும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தன் நிலை, குலம், பதவி, பட்டம் அத்தனையும் மறந்து, வெறும் அன்னாவின் தகப்பனாய் அவர் பாதம் பற்றிக்கொண்டான், அவரை நோக்கி மனம் கலங்கி "ஐயனே! என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள். அவள் ஆரோக்கியமடையும்படிக்கு தாங்கள் வந்து, அவள்மேல் உமது கைகளை வைத்தால் போதும் அவள் பிழைப்பாள்" என்று கண்ணீரோடு மிகவும் வேண்டிக் கொண்டான்.

அவர் பதில் ஒன்றும் உரைக்காது யவீருவின் விண்ணப்பத்தை புரிந்து கொண்டாற்போல் அவனோடே கூட நடக்கலானார். யவீரும் மனத்தெம்பு பெற்றவனாய் மிக வேகமாய் தன் மனையை நோக்கி அவரை அழைத்துச் சென்றான்.

திரளான ஜனங்கள் அவருக்கு முன்னும் பின்னும் சென்று அவர்களை நெருக்கினார்கள். வேறு வழியில்லை இப்படித்தான் நடந்து செல்ல வேண்டும். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மகளை எப்படியாவது குணப்படுத்த வேண்டும்.

வேக வேகமாய் சீடர்கள் சூழ நடந்து வந்தவர் சட்டென்று நின்றார். அவர் ஜனக்கூட்டத்திடம் திரும்பி: "என் வஸ்திரத்தைத் தொட்டது யார்?" என்று கேட்டார்.

ஒருகணம் அனைவரும் குழம்பியவர்களாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தாவாறு என்ன சொல்லுவது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர்.

அவர் "என்னுள் இருந்து வல்லமை புறப்பட்டதை உணர்கிறேன் சொல்லுங்கள், என் வஸ்திரத்தைத் தொட்டது யார்?" மறுபடியும் கேட்டார்.

யவீருக்கு என்ன நடக்கிறது என்றே விளங்கவில்லை. ஒவ்வொரு மணித்துளியும் மகளைக் காக்கும் ஜீவநொடி. அவருடைய சீடர்கள் மெதுவாக அவரிடம் "ஆசானே! திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள், இவர்களில் யார் உங்களை தொட்டது என்று கேட்டால் என்ன சொல்லுவது" எனக் குழப்பமாக வினவினார்கள்.

ஆனால் அவர் மறுபடியும் அந்த கேள்வியைக் கேட்டவாறு சுற்றிலும் பார்த்தார். யவீருக்கு இப்படி நேரம் ஆக, ஆகச் சங்கடமும் பதற்றமும் பற்றிக்கொண்டது. மகளைப்பற்றி மறுபடி எப்படி அவரிடம் நினைவு படுத்துவது என தவியாய்த் தவித்தான்

அப்போது ஒரு நடுத்தர வயதுப் பெண்ணானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து வீழ்ந்து வணங்கினாள் "ஐயனே! 12 வருட காலமாக பெரும்பாடு உதிரப் போக்கு கொண்டவள் நான், பண்ணாத வைத்தியம் இல்லை, காணாத மருத்துவர் இல்லை. தீட்டுடையவள் தான் ஆனாலும் உங்கள் மகிமையை அறிந்து இங்கே வந்தேன். இத்தனை மக்கள் கூட்டத்தில் உங்களிடம் தனியே எனக்கான ஆசி கிடைக்காது என அறிவேன், அதனால் தான் உங்கள் வஸ்திரத்தின் ஓரத்தைக்கூடத் தொட்டால் போதுமென எண்ணி எப்படியோ நெருக்கியடித்துத் தொட்டேன். அந்த கணமே நான் சுகம் அடைந்தை உணர்ந்தேன்" என்றுரைத்தாள்.

அவர், அவளை அன்பொழுகப் பார்த்து "மகளே, திடன் கொள்! உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கிச் சுகமாயிரு" என வாழ்த்தினார்.
அவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்து கண்ணீர் மல்க "அய்யா தங்களுடைய பிரிய குமாரத்தி மரித்துப்போனாள். வாருங்கள் போகலாம். நாம் இனியும் போதகரை அழைத்து அவரை வருத்த வேண்டாம்" என்றார்கள்.

யவீருக்குக் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. தடுமாறி விழப் போனவனைப் பிடித்துக் கொண்டார்கள்.

அப்போது அவர் யவீருவை நோக்கி: "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று சொல்லி அவருடைய முதன்மைச் சீடர்கள் பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டு யவீருவின் வீட்டைச் சடுதியில் அடைந்தார்.

அங்கே யவீருவின் மனைவியும் தாயும் தலைவிரி கோலமாய் ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு "மருதோன்றிப் பூ வளர்த்து, அது மணக்குமுன்னே உதிர்ந்து போச்சே! செவ்விளநீர் ருசி ஊற்று ஒன்று, ஊறாது வற்றிப் போச்சே!" என அழுது புலம்ப, அவர் "அழாதீர்கள், மகள் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்" என்றார்.

அதைக் கேட்டு யவீருவின் நண்பர்களும் சுற்றாத்தாரும் அவரைப் பார்த்து நகைத்தார்கள். அவரோ எதையும் சட்டை செய்யாமல் யவீருவையும், அவர் மனைவியையும் தம்மோடே வந்தவர்களையும் மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு குழந்தை படுத்திருந்த அறையில் மகளின் கையைப்பிடித்து "தலீத்தாகூமி" என்றழைத்தார்; அதற்கு, அராமிக்கில் "சிறுபெண்ணே எழுந்திரு" என்று அர்த்தமாம்.

உடனே அன்னாவும் உத்தரவு கேட்டு எழுந்தவள் போன்று கண்விழித்து எழுந்தாள். அன்னாவின் தாய் "மகளே!" என வாரியணைத்து கண்ணீர் சொரியலனாள். யவீருவோ பக்திப் பரவசமோங்க அப்பெருமகனாரின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அங்கிருந்த அனைவரும் சீடர்கள் உட்பட, அந்த அதிசயத்தைக் கண்டு வாய்பிளந்து பிரமித்தார்கள்.

அவர் எதையும் கண்டு கொள்ளாதவராய் "மகளுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்" என்றுரைத்தார்.

யவீருவின் மனைவி கண்ணீர் மல்க "ஐயனே! நீங்கள் உயிர்த்தெழச் செய்தது என் பாசமகளின் உயிரை மட்டுமல்ல, எங்கள் குடும்பம் முழுவதும் இன்று புத்துயிரடைந்தது" என அவரை வணங்கியெழுந்து வெளியே ஓடிவந்து உற்றார் உறவினரை நோக்கி "என் மகள் உயிர் பெற்றாள். இவர் தேவகுமாரன் தாம். வாருங்கள்… வந்து காணுங்கள். என் வாயின் அழுகைச் சத்ததை ஆனந்தக் களிப்பாய் அவர் மாற்றியதைக் காணுங்கள். என் மகளைத் தயவாய் திருப்பியளித்த இந்த மகானை வந்து காணுங்கள்" என அவளிட்ட ஆரவாரம் அந்தப் பட்டணத்தில் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்து அடங்கியது.

அவள் அறிவாளா அவர்தாம் ஏசாயா என்ற தீர்க்கதரிசியால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட, உலகத்தை இரட்சிக்க வந்த ஏசு கிறிஸ்து என்று! (ஏசு - மீட்பர்; கிறிஸ்து - கடவுளின் அபிஷேகம் பெற்றவர்)

இ. இளவரசி
More

தரமுடியாததை எதிர்பார்த்து
தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை
Share: 




© Copyright 2020 Tamilonline