Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமிகள்
- பா.சு. ரமணன்|ஜூன் 2017|
Share:
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக்கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். சைவம் தழைக்கும் பொருட்டு அவதரித்த இம்மகான், முருகப் பெருமானின் குகப்பிரம்ம நெறிக்கும் தெய்வத் தமிழுக்கும் தமது கவித்திறத்தால் சிறப்புச் செய்தவர். தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் தெளிவுபட விளக்கிய தவசீலர். பொய்யாமையையும், கொல்லாமையையும் வலியுறுத்தி வாழ்ந்த இம்மகானின் வரலாறு என்றும் நினைந்து போற்றத்தக்கது.

தோற்றம்
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் என்ற சிற்றூரில், 1851ம் ஆண்டில் செங்கமலம் - சாத்தப்ப பிள்ளை தம்பதியினருக்கு இவர் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அப்பாவு. சிறுவயதிலேயே தந்தையிடமிருந்து தேவாரம், திருவாசகம், தமிழ்மறைகள், திருப்புகழ் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். வளர வளர இறைவனின் மீதான பற்று அதிகரித்தது. "மாணிக்கவாசகர் போல், அருணகிரிநாதர் போல் நானும் பாடல் புனையவேண்டும். உன்னைப் போற்றித் தொழவேண்டும். உள்ளம் உருகிப் பாடவேண்டும். 'வாக்கிற்கு அருணகிரி' என்பதுபோல் என் வாக்கும் முருகா, உனைப் புகழ்ந்து பாடுவதாக அமையவேண்டும். முருகா, அதற்கு உன் அருள் வேண்டும்' என்பதே அவரது பிரார்த்தனையாக இருந்தது. அந்த வேண்டுதலும் விரைவிலேயே பலித்தது.

கங்கையைச் சடையிற் பரித்துமறி மழுவங்
கரத்தில் தரித்து ருத்ரங்
காட்டுழுவை யதளசைத் தணிமன்றி லாடுகங்
காளற்கு அபின்னமாய....

என்னும் பாடல் அவரது முதற்பாடலாய் அமைந்தது. அதுமுதல் முருகன் மீதான பக்தி அதிகரித்தது. தொடர்ந்து பல்வேறு பாமாலைகளைப் புனையத் தொடங்கினார்.

மேலே கற்க குடும்பச் சூழ்நிலை இடம் தரவில்லை. தந்தையின் வியாபாரத்தில் அவருக்கு உதவியாக இருந்தார். ஓய்வுநேரத்தில் பாடல்களை எழுதுவார். அதை அவ்வப்போது கவனித்த சேவுகிரி ராயர் என்னும் அன்பர் அதுபற்றிப் பலரிடமும் தெரிவித்ததுடன், அப்பாவுவை மேலும் எழுத ஊக்குவித்தார். அப்பாடல்களைப் பார்வையிட்ட அப்பாவுவின் ஆசிரியர் முனியாண்டிப் பிள்ளையும் அவரை வெகுவாகப் பாராட்டினார்.

உபதேசம்
முருகன் அடியாரான அப்பாவுவிற்கு உபதேசம் செய்ய விரும்பினார் சேவுகிரி ராயர். நல்லதொரு நாளைத் தேர்ந்தெடுத்தவர், அப்பாவுவை அந்நாளில் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். சூரியன் உதயமாகும் விடியற் பொழுதில் அப்பாவுவின் காதில் முருகனின் சடாக்ஷர மந்திரத்தை மும்முறை ஓதி உபதேசம் செய்தார். அதுமுதல் சதா அந்த மந்திரத்தை ஜெபித்தவாறு எப்போதும் முருகனின் நினைவுடன் இருந்து வரலானார் அப்பாவு.

தமிழ், ஆங்கிலத்தோடு வடமொழியையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற வேண்டுமென அப்பாவுவிடம் குரு கட்டளையிட்டார். அதன்படி வடமொழியை ஆர்வத்துடன் பயின்று பிறர் வியக்கும்படி அதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். வடமொழி இலக்கியங்களையும், வேதம், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் போன்றவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தார்.

திருமணம்
கி.பி 1878ம் ஆண்டு, அப்பாவுவிற்கும் காளிமுத்தம்மைக்கும் ராமநாதபுரத்தில் திருமணம் நிகழ்ந்தது. இனிய இல்லறத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முருகையா, சிவஞானாம்பாள், குமரகுருதாசன் எனப் பெயர் சூட்டி அன்போடு வளர்த்தனர். நாட்கள் செல்லச் செல்ல அப்பாவுவின் உள்ளம் முருகனையே நாடுவதாயிற்று. இல்லற வாழ்வைவிட மனம் துறவறத்தையே அடிக்கடி சிந்திப்பதாயிற்று. மனைவி, குழந்தைகள், பெற்றோர் எனப் பல கடமைகள் இருந்ததால் எளிதில் துறவறம் பூண முடியவில்லை. அடிக்கடி தல யாத்திரை மேற்கொண்டு, பல ஆலயங்களுக்கும் சென்று தரிசித்தார்.

பாம்பன் சுவாமிகள்
நாளுக்கு நாள் அவரது ஆன்மிக ஆற்றல் வளர்ந்தது. மக்கள் தங்கள் குழந்தைகளை எடுத்துவந்து அவரிடம் ஆசி பெற்றனர். அவரும் நோய் முதலியன கண்டு வருந்தும் குழந்தைகளுக்கு சடாக்ஷர மந்திரம் ஓதித் திருநீறு அளிப்பார். குழந்தைகள் விரைவில் நோய்நீங்கிச் சுகம் பெறும். அதனால் மக்கள் இவரை அன்போடு 'பாம்பன் சுவாமிகள்' என்று அழைக்கலாயினர். அதன் முதல் 'அப்பாவுப் பிள்ளை', 'அப்பாவு சுவாமிகள்' என்ற பெயரெல்லாம் மறைந்து 'பாம்பன் சுவாமிகள்' என்ற பெயரே நிலைத்தது.

முருகனின் சீற்றம்
ஒருநாள், துறவற வேட்கையால் உறவில் யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் பழனிக்குப் புறப்படப் பாம்பன் சுவாமிகள் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். சுவாமிகளுக்கு எதிர்வீட்டில் அங்கமுத்துப் பிள்ளை என்பவர் வசித்தார். அவர் சுவாமிகளின் நண்பர். சுவாமிகளின் நடவடிக்கையைக் கவனிப்பவரும்கூட. அவர் சுவாமிகள் பழனிக்குச் செல்லப் போகிறார் என்பதையும், அங்கு போய்த் துறவறம் பூண முடிவு செய்திருக்கிறார் என்பதையும் அவரது செயல்பாடுகளில் இருந்து அறிந்து கொண்டார். எனவே அதுபற்றிச் சுவாமிகளிடம் விசாரித்தார்.

"தங்களின் துறவு விருப்பம் முருகனின் கட்டளைதானா?" என்று கேட்டார் அங்கமுத்துப் பிள்ளை.

சுவாமிகளும் ஏதோ ஞாபகத்தில் 'ஆம்' என்று கூறிவிட்டார்.

சுவாமிகள் ஒருபோதும் பொய் சொல்லாதவர். நேர்மையானவர். அவர் 'ஆம்' என்று கூறியதால் அங்கமுத்துப் பிள்ளை, "இவர் முருகனின் ஆணைப்படியே துறவறம் பூணுகிறார்" என நினைத்துப் பேசாமல் சென்றுவிட்டார்.

அன்று மாலை வழக்கம்போல் மாடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள். அப்போது அவரது தியானத்தில் முருகன் மிகுந்த சீற்றத்துடன் தோன்றி, "நான் அனுமதி அளித்தேன் என்று ஏன் பொய் பகன்றாய்?" என்று கேட்டதுடன், இனிமேல் தான் சொல்லும்வரை பழனிக்கு வரவே கூடாது என்றும் எச்சரித்தார். அதனால் இறுதிக்காலம் வரை பழனியம்பதிக்கு சுவாமிகளால் செல்ல இயலாமல் போயிற்று.

அவர் கூறிய சிறு பொய்க்காக 'பழனிக்கே வரக்கூடாது' என்று அவரைத் தண்டித்த அதே முருகன், தனது காஞ்சி குமரக்கோட்ட ஆலயத்தை அவர் தரிசிக்க வேண்டுமென விரும்பி, தானே ஒரு வண்டியோட்டி வடிவில் நேரில் சென்று அவரை அழைத்து வந்தான். எப்பொழுதும் அவர் உடனிருந்து, அவருக்கு ஏற்பட்ட எல்லா வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்தும் காப்பாற்றி வந்தான்.
மயான தவம்
சுவாமிகளின் துறவுநோக்கம் அதிகமாக அதிகமாகக் குடும்பப் பற்று குறைந்துகொண்டே வந்தது. திடீரென சுவாமிகளின் தந்தை காலமாகி விட்டார். அதனால் சுவாமிகளுக்கு குடும்பப் பொறுப்பு அதிகரித்தது. வியாபார மேற்பார்வை செய்வதும், கவனித்துக் கொள்வதும் அவருக்குச் சற்று கடினமாக இருந்தது. இருந்தாலும் திருத்தல யாத்திரை செல்வதை பாம்பன் சுவாமிகள் நிறுத்தவில்லை. ஒவ்வொரு திருத்தலத்திற்கும் செல்வார். சில சமயம் அங்கேயே தங்கிவிடுவார். சில சமயம் பக்கத்து ஊரில் உள்ள அன்பர்கள் வீட்டில் தங்குவார். இறைவனைத் தொழுவார். பாடல்கள் புனைவார். பின் ஊருக்குத் திரும்புவார். சில நாட்கள் வியாபாரத்தைக் கவனிப்பார். பின்னர் மீண்டும் மன எழுச்சி உண்டாகும். ஆலய தரிசனம் காணப் புறப்பட்டு விடுவார். காணும் அனைத்தையும் முருகனாகவே கண்ட அவர், சிவனோ, அம்பாளோ, விநாயகரோ யாராக இருந்தாலும் முருகனாகவே நினைத்துத் தொழலானார். முருகனாக நினைத்தே பாடல்களும் பாடினார். மறந்தும் புறந்தொழா தீவிர சைவராகச் சுவாமிகள் விளங்கினார்.

ஒருநாள் பிரப்பன் வலசை என்னும் தலத்தை அடைந்தார். அங்குள்ள ஒரு மயானத்தின் நடுவே சதுரமாகக் குழி அமைத்து, அதற்குள் தங்கியிருந்து மிகக் கடுமையான 'மயான தவம்' மேற்கொண்டார். ஊண் உறக்கமில்லாமல் பலநாள் அதே தவநிலையில் இருந்தார். கடுந்தவத்தின் இறுதியில் ஒருநாள் இரவு முருகப் பெருமான் அவருக்கு அருணகிரிநாதருடனும், அகத்தியருடனும் ஓர் இளைஞன் உருவில் காட்சியளித்தார். ரகசிய மந்திரம் ஒன்றை உபதேசித்தார். அதையே பல நாட்கள் உச்சரித்து மெய்நிலை பெற்றார் பாம்பன் சுவாமிகள். மீண்டும் பாம்பன் தலத்தை அடைந்து தன் தவ வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

துறவு
திடீரென ஒருநாள் துறவு பூண வேண்டும், இப்பாம்பன் பதியை விட்டுச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளுணர்வில் உதித்தது. முருகனின் ஆக்ஞைப்படியே அவ்வெண்ணம் தோன்றியதாய் உணர்ந்தவர்,, தனது மைந்தன் முருகையா பிள்ளையை, தன் மாணவர் சின்னசுவாமி பிள்ளை வசம் ஒப்படைத்து விட்டு, ராமேஸ்வரத்திற்குச் சென்றார். அதன்பின் பல தலங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தவர், இறுதியில் மதுரைக்குச் சென்று அங்கிருந்து ரயில்மூலம் சென்னையை அடைந்தார்.

சென்னையில் தவ வாழ்க்கை
சென்னையில் 'குமரானந்தம்' என்ற பெயர்கொண்ட அம்மையின் வீட்டில் சுவாமிகள் சிலகாலம் தங்கினார். பின்னர் மீண்டும் திருத்தல யாத்திரை புறப்பட்டவர் சிதம்பரம் தலத்திற்குச் சென்றார். அங்கே அம்பலக்கூத்தனை தரிசித்தபின் கும்பகோணம், சுவாமிமலை, திருநெல்வேலி, பாபநாசம், குற்றாலம், பொதிகைமலை, தூத்துக்குடி, மதுரை, குன்றக்குடி, விராலிமலை போன்ற தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து, மீண்டும் சென்னையை அடைந்தார்.

தான் சென்ற இடங்களில் அன்பர்களின் வீடுகளில் தங்கி 'பரிபூரணானந்த போதம்', 'தகராலய ரகசியம்', 'கந்தரொலி அந்தாதி', 'குகப்பிரம அருட்பத்து', 'திருப்பா', 'அட்டாட்ட விக்ரக லீலை' போன்ற நூல்களை இயற்றினார். பின் காசிக்குப் புறப்பட்டுச் சென்றார். விசாகப்பட்டினம், கல்கத்தா, கயை, பூரி, அயோத்தி, மதுரா, திரிவேணி சங்கமம் முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பினார். சென்னையையே தனது வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அங்கேயே வசித்து வரலானார். திருவொற்றியூர், திருவான்மியூர், திருவேட்டீஸ்வரன்பேட்டை போன்ற தலங்களுக்குச் செல்வார். இறைவனைத் தொழுவார். பின் மீண்டும் தனது அகம் திரும்புவார். இதை சுவாமிகள் தனது அன்றாட வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சுவாமிகளின் பெருமை
பாம்பன் சுவாமிகளின் தமிழ்ப்புலமையையும், பேச்சு, எழுத்தாற்றலையும், ஆன்மீக அருளாற்றலையும் உணர்ந்த பல தமிழ்ப்புலவர்களும், ஆன்மீக ஆர்வலர்களும் அவரை நாடி வருவதும், தமது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுச் செல்வதும் வழக்கமானது. திரு.வி. கலியாணசுந்தர முதலியார், சச்சிதானந்தம் பிள்ளை போன்ற பல சான்றோர்கள் சுவாமிகளின் அன்புக்கு உரியவர்களாக விளங்கினர். சுவாமிகளின் பெருமை பற்றி திரு.வி.க. தனது 'எனது வாழ்க்கைக் குறிப்புகள்' என்ற நூலில் பலவாறாக எடுத்துரைக்கின்றார். அதில், தாம் சென்னையில் இருந்த பொழுது தினமும் மாலையில் திருவல்லிக்கேணி கடற்கரைக்கு பாம்பன் சுவாமிகளுடன் சென்றதாகவும், அவர் வடமொழி நூல்கள், வேதங்கள், சித்தாந்த விளக்கங்கள் பற்றியெல்லாம் விரிவாக விளக்கம் செய்வார் என்றும், தமிழ், வடமொழி இரண்டிலுமே ஆழ்ந்து அகன்ற அறிவுடையவர் அவர் என்றும் புகழ்ந்துரைத்திருக்கிறார்.

உலகமெங்கும் சென்று, தமிழின் பெருமையையும், முருகனின் பெருமையையும், சைவநெறியையும் பரப்பிய கிருபானந்த வாரியாருக்கு வழிபடும் குருவாக ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் விளங்கினார். தனது நூல் ஒன்றில் வாரியார், "ஸ்ரீ பாம்பன் சுவாமிகளுக்குத் தெரியாத வேத, உபநிஷத்துக்களோ, சித்தாந்த சாத்திரங்களோ, இலக்கண இலக்கியங்களோ இல்லவே இல்லை. அவர் வடமொழி, தமிழ், ஆங்கிலம் அனைத்திலும் மிகச்சிறந்த புலமை மிக்கவர். அவர் பாடல்கள் அனைத்தும் இறையருள் பெற்றவை" என்று குறிப்பிட்டிருக்கிறார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை நூலாகவும் எழுதியிருக்கிறார். சுவாமிகளின் வரலாறு குறித்து உபன்யாசங்களும் செய்திருக்கிறார்.

பாலசுப்ரமண்ய பக்தஜன சபை
1915ம் ஆண்டு, ஜனவரி 31ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் சுவாமிகள் 'பாலசுப்ரமண்ய பக்தஜன சபை' என்ற அமைப்பினை நிறுவினார். முருகனடியார்களைக் கொண்ட அந்தச் சபையில் முருக வழிபாடே முக்கிய வழிபாடாக இருந்தது. அதற்கான வழிமுறைகளையும் சுவாமிகள் வகுத்திருந்தார். இப்படிப் புகழ்பெற்ற பலரும் நாடி வரும் ஆன்மீக குருவாக, முருகதாசராக பாம்பன் சுவாமிகள் விளங்கினார்.

விபத்து
சுவாமிகளுக்கு 72 வயது நடந்து கொண்டிருந்த சமயம். ஒருநாள் சென்னை தம்புசெட்டித் தெரு வழியே அவர் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென எதிரே கண்மண் தெரியாத வேகத்தில் வந்த குதிரைவண்டி ஒன்று சுவாமிகளின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. எதிர்பாராத அவ்விபத்தில் சுவாமிகளின் கால் முறிந்துபோனது. சுவாமிகள் அரசுப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் வெகு நாட்களாக உப்பு, புளி, காரம் முதலியன நீக்கிச் சாப்பிட்டு வந்ததால் கால் எலும்புகள் முற்றிலுமாகப் பலமிழந்திருந்தன. வயதானவர் ஆனதால் அறுவைசிகிச்சை செய்ய இயலாது, கால் எலும்பு முறிந்தது முறிந்ததுதான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். சுவாமிகள் முருகனையே தொழுதவாறு இருந்தார்.

மயூரவாகன சேவகம்
ஒருநாள் இரவில் சுவாமிகள் அற்புதக்காட்சி ஒன்றைக் கண்டார். மேற்குத்திசையில் இருந்து பறந்துவந்த இரண்டு அழகான மயில்கள் தங்களது தோகையை விரித்து அவருக்கு வலப்புறமும், இடப்புறமுமாக நின்று ஆடின. முருகனின் திருவருளே இது என்று உணர்ந்தார். மகிழந்தார். மற்றொரு நாள் மருத்துவமனையில் தன் அருகே ஒரு அழகான குழந்தை படுத்திருப்பதைக் கண்டார். 'முருகா' என்று அழைத்துத் தொழுதவுடன் அந்தக் குழந்தை மறைந்துவிட்டது. உடனே, வந்தது முருகன்தான் என்றும், தன் உடல் வேதனையை மாற்றவே வந்தான் என்பதையும் சுவாமிகள் உணர்ந்து மகிழ்ந்தார். முருகனின் சடாக்ஷர மந்திரத்தையும், அவன் நாம ரூபத்தையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். சில மணித்துளிகளிலேயே தனது முறிந்த கால் ஒன்றுகூடுவதையும் கால் பகுதியில் புது ரத்தம் பாய்வதையும் அவர் உணர்ந்தார்.

மறுநாள் காலை, முறிந்த காலை வந்து பரிசோதித்த தலைமை மருத்துவர், ரணம் நன்கு ஆறியிருப்பதையும் முறிந்த எலும்பு ஒன்றுகூடி இருப்பதையும் கண்டார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இது தெய்வச்செயல் என்று கூறி வியப்புற்றார் அவர். மற்ற அன்பர்களும் அதுகண்டு மகிழ்ந்து, "சுவாமிகள் உண்மையிலேயே தெய்வத்தன்மை பொருந்தியவர்தான்' என்று கூறி வணங்கிச் சென்றனர்.

சுவாமிகளின் நூல்கள்
பாம்பன் சுவாமிகள் ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். அவருடைய பாடல்கள் அனைத்தும் மந்திரசித்தி பெற்றவை. குறிப்பாக ஷண்முக கவசம், தௌத்தியம், குமாரஸ்தவம் போன்றவை மிகவும் சிறப்புப் பெற்றவை. குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்கள், நல்ல ஆரோக்கியமான குழந்தைபெறத் தினமும், காலை, மாலை இருவேளை முருகன் திருவுருமுன் பாராயணம் செய்ய வேண்டியது 'வேற்குழவி வேட்கை'. பாப நாசம், சத்துரு ஜெயம், ஆயுள் விருத்தி, முக்திப்பேறு இவற்றிற்காகப் பாராயணம் செய்ய வேண்டியது 'அட்டாட்ட விக்கிரக லீலை'. பகைவரால் ஏற்படும் தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், வம்பு வழக்கு, சச்சரவுகள், சங்கடங்கள், மனக்குழப்பம், செல்லும் வழியில் ஏற்படும் ஆபத்து போன்றவை நீங்க தினமும் சொல்லவேண்டியது 'ஷண்முக கவசம்'. சுவாமிகளால் பாடப்பட்ட ஒப்புயர்வற்ற நூல்களுள் ஒன்று 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' என்ற நூலாகும். இந்தப் பாடலை முறைப்படி பாராயணம் செய்யும் பொழுது முருகனே அங்கு எழுந்தருள்கிறான் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பாம்பன் சுவாமிகள் அருளிய முக்கியமான நூல்களில் ஒன்று 'பகை கடிதல்'. இதனை அனுதினமும் பாராயணம் செய்வதன் மூலம் பகை, எதிர்ப்புகள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் கருத்து.

சுவாமிகளின் அறிவுரைகள்
1. இரையைத் தேடுவதோடு இறையையும் தேடு
2. அனைத்து உயிர்களிடத்தும் கருணையோடு நடந்து கொள்
3. எதற்காகவும் பொய் பேசாதே
4. இறைவனை முழுவதுமாக நம்பாவிட்டால், பயன் ஏதும் விளையாது என்பதை உணர்
5. ஒருவனுக்கு எப்பற்று நீங்கினாலும் புகழ்ப் பற்று நீங்காது, எனவே வீண்பெருமை கொள்ளாமல் அனைத்தும் அவன் திருவருட் செயலே என நினைத்து அமைதியாக வாழ்தல் அவசியம்.
6. தவப்பேறு உடையார் வாக்கு சத்தியமாகலின் அதையே தலைவன் வாக்கெனக் கொள்.
7. இறைவனை முழு மனத்தோடும், ஊக்கத்தோடும் வழிபாடு செய்
8. கடவுளை என்றும் மறக்காதே
9. ஒரே தெய்வத்தையே பற்றுகோடாகக் கொண்டு என்றும் வணங்கி வா.
10. உண்மையான முருக அன்பர்களுக்கு வேலும், மயிலும் எஞ்ஞான்றும் துணைநிற்கும். அஞ்சவேண்டாம்.

மகாசமாதி
இவ்வாறு தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் அருந்தொண்டாற்றிய மகான், மே 30, 1929 அன்று மகாசமாதி அடைந்தார். அவரது உடல் அவர் விருப்பப்படியே, திருவான்மியூர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தரிசனம்
மயூரபுரம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் ஆசிரமம், திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில், கலாக்ஷேத்ரா சாலையில், கலாக்ஷேத்ரா பவுண்டேஷனுக்கு அருகில், அமைதியான இயற்கைச் சூழ்நிலையில் அமைந்துள்ளது. உள்ளே சுவாமிகளின் சீடர் சுப்ரமண்யதாசரின் சமாதி ஆலயம் உள்ளது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளின் மகாசமாதி ஆலயம் அமைந்திருக்கிறது. மயூரநாதர் சன்னிதி, தியான மண்டபம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட மகாதேஜோ மண்டல சபையைச் சேர்ந்த அன்பர்கள் வழிபாடுகள், அன்னதானம், பாராயண முறைகள் போன்றவற்றை சுவாமிகள் கட்டளைப்படியே, அவர் வகுத்துத்தந்த நெறிமுறையைச் சற்றும் மாற்றாமல் இன்றளவும் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

பாம்பன் சுவாமிகள் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற ஆன்மிக, இலக்கியச் செல்வங்கள் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline