Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
அருட்செல்வப்பேரரசன்
பசுமைப் போராளி M. ரேவதி (பகுதி - 2)
- வெங்கட்ராமன் சி.கே., அரவிந்த் சுவாமிநாதன்|ஜனவரி 2017|
Share:
ரேவதி, 15 வருடங்களாக இயற்கை, பாரம்பரிய விவசாயம், புதிய வேளாண்மைத் தொழில்நுட்பம் பற்றியும், நுகர்வோர் நலம், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடு, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது பற்றியும் ஆராய்ச்சியும் களப்பணியும் செய்துவருகிறார். பதினோரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் ரசாயனமுறை விவசாயத்தைக் கைவிட்டு நிலையான இயற்கை விவசாயத்திற்கு மாற ரேவதியின் Inspire அமைப்பு வழிகாட்டியுள்ளது. சென்ற இதழ் நேர்காணல் இங்கே தொடர்கிறது....

தென்றல்: 'விதையில்லாப் பயிர்கள்' எந்த அளவுக்கு ஆபத்தானவை?
ரேவதி: 'விதை' என்பது தமிழில் பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் இருக்கிறது. 'விதை' என்றாலே உயிர். அது ஒரு genetic material. அப்படியிருக்க விதையில்லாமல் ஒரு பயிர் உருவாகிறதென்றால் அது இயற்கைக்கு, சூழலுக்கு, உண்பவர்களுக்கு ஆபத்துதான். விவசாயிகள் ஒவ்வொருமுறையும் இடுபொருள் விற்பனையாளரையே சார்ந்து வாழவேண்டியதாக இருக்கிறது. அந்த விதைகள் ஆய்வுக்கூடங்களில் மாற்றியமைக்கப் படுகின்றன. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிச் செய்தால்தான் விளைச்சலை எடுக்கமுடியும். பணமில்லை, சூழல் சரியில்லை என்று உங்களால் மாறவோ, மாற்றிக்கொள்ளவோ முடியாது. அவர்கள் சொல்வதைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். கம்பெனிகள் ராயல்டியாக நிறையப் பணத்தை எடுத்துக்கொண்டு போகின்றன. முளைக்காத விதைச் செடிகளில் அமர்ந்துவிட்டு வேறு பூக்களுக்குச் சென்று அமரும் தேனீக்கள், பூச்சிகளால் அந்தச் செடிகளும் மலடாகும் அபாயம் உண்டாகிறது. நம் சுற்றுச்சூழல் மண்டலமும் பெரும்பாதிப்பை அடைகிறது. விதையில்லாப் பயிர்கள் நமது சூழலுக்கும், விவசாயத்துக்கும் மிகப்பெரிய சவால்.

தென்றல்: சுனாமி பாதித்த நிலங்களை எப்படி மீட்டெடுத்தீர்கள்?
ரேவதி: சுனாமி வந்த நிலங்களில் உப்பின் அளவு 23% அதிகரித்திருந்தது. கடலோர மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். சுனாமி அவர்களுக்குப் பேரழிவைத் தந்தது. பயிர், விளைச்சல், வீடு, சுற்றம் என எல்லாவற்றையும் இழந்து அவர்கள் சோகத்தில் இருந்தனர். விளைநிலங்கள் கடலின் சேற்றாலும் உப்பாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அதை ஆராய்ச்சி செய்தவர்கள், "இந்த நிலம் சரியாவதற்குப் பத்தாண்டு அல்லது அதற்குமேல் ஆகலாம். அதுவரை வேறு தொழில் செய்யுங்கள். இதில் இப்போதைக்கு விளைச்சலை எதிர்பார்க்க முடியாது" என்று கூறிவிட்டனர்.

நாங்கள் அந்த மண்ணை ஆய்வு செய்தபின், ஆறு மாதத்தில் பழையபடி விவசாயம் செய்யமுடியும் என்று நம்பிக்கையூட்டினோம். அரசு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் என எல்லாரிடமும் இதைச் சொன்னோம். இயற்கை சார்ந்த இடுபொருட்களைக் கொண்டே இவற்றைச் செய்ய முடியும் என்று சொன்னோம். ஆனால், நிறுவனங்கள், சுனாமி மாதிரிப் பாதிப்புகளுக்கு இந்தமுறைகள் சரிவராது என்று நினைத்தன. அதனால் நாங்களே இறங்கி வேலை பார்த்தோம். கிழக்குக் கடற்கரையை ஒட்டிய இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்து, விவசாயிகளுடன் சேர்ந்து சுனாமி நிலமீட்புப் பணிகளை ஆரம்பித்தோம். எங்கள் தொழில்நுட்பங்களை அவர்கள் பின்பற்றினர். நான்கு மாதங்களில் உப்பு முழுமையாகப் போய்விட்டது. நிலத்தில் பசுமை திரும்பியது!

இயற்கையின் பூரண ஆசி எங்களுக்கு இருந்தது என்று சொல்லவேண்டும். ஏனென்றால் தேவையான காலத்தில் மழை பொழிந்தது. விரைவிலேயே நிலம் பழையபடி விளைச்சலைத் தருவதாக மாறியது. இந்தச் செய்தி மீடியாமூலம் பரவி, உலகளாவிய கவனம் கிடைத்தது. இந்திய ஊடகங்களும், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, பி.பி.சி. போன்ற வெளிநாட்டு ஊடகங்களும் விரிவாக அதனை வெளியிட்ட்டன. மிச்சிகன், கலிஃபோர்னியா, ஹார்வர்டு போன்றவற்றிலிருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் அங்கே வந்தன. அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவர்களும் வருகைதந்து பாராட்டினார். பலருக்கும் எடுத்துச் சொன்னார். "இதிலிருந்து வரும் வருமானத்தில் ஒரு பைசாவைக்கூட குடிப்பதற்காகச் செலவழிக்க மாட்டேன்" என்ற உறுதிமொழியை அவர் தன் கைப்பட எழுதி எடுத்து வந்திருந்தார். அங்குள்ள மக்களிடம் எடுத்துச்சொல்லி ஒப்புதலைப் பெற்றார். மறக்கமுடியாத நாட்கள் அவை.

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், சுனாமி நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் தூதுவராக வந்தார். இங்கே வருமுன்பு இலங்கை, இந்தோனேசியா எல்லாம் பார்த்துவிட்டு வந்திருந்தார். எங்கள் பணிகளைப்பற்றிக் கேள்விப்பட்டு, நாகப்பட்டினத்திற்கு வந்தபோது நாங்கள் அவரைச் சந்தித்தோம். இதை ஏன் சுனாமி பாதித்த மற்றப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லக்கூடாது என்று அவர்தான் கேட்டார். அந்த நாடுகளிலிருந்து அழைப்பு வருவதற்கும் அவர் துணைசெய்தார். நாங்கள் இந்தோனேஷியா சென்றோம். 32 தீவுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் எங்கள் பணிகளைச் செய்தோம். விரைவில் அவை சீரமைக்கப்பட்டன. பிறகு இலங்கைக்குப் போனோம். இலங்கையில் கிழக்கிலும், வடக்கிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அப்போது போர்வேறு நடந்து கொண்டிருந்தது. அங்கு மிகக் கடுமையாக நிலம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி நின்றிருந்தது. வெளியிலிருந்தும் உணவுப் பொருட்கள் வரவில்லை. ஏறக்குறைய பசி, பட்டினி, பஞ்சம் நிலவிய காலகட்டம் அது.

ஏழு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு போனோம். அவர்கள் மகத்தான வரவேற்பு அளித்தார்கள். வெளியில் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதால் இந்தத் தொழில்நுட்பத்தை அவர்கள் விரும்பி வரவேற்றார்கள். தொடர்ந்து பல நாடுகளில் உப்பால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் பணி எங்களுக்கு அமைந்தது.



தென்றல்: கடலூரில் மழை, வெள்ளம் பாதித்தவர்களுக்கு நீங்கள் நிறைய உதவியிருக்கிறீர்கள். அதைப்பற்றிச் சொல்லுங்கள்...
ரேவதி: கடலூரில் கடந்த பத்தாண்டுகளில் நான்காவது முறையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் சுனாமி வந்தது. பின்னர் 'நீலம்', 'தானே' புயல்கள். கடந்த ஆண்டில் பெருமழை வெள்ளம். அடுக்கடுக்காக ஏற்பட்ட பாதிப்பால் கடலூரின் பெருமளவு நிலப்பகுதி வெகுவாகச் சீரழிந்து போய்விட்டது. முதலில் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பின்னர் புயலால் மரங்கள் சாய்ந்தன. சமீபத்துப் பெருமழையால் நிலம் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது. காரணம், 42 நாட்கள் இங்கு தொடர்ந்து மழை பெய்தது. 8 மணி நேரத்தில், 45 செ.மீ. மழை ஒரே நாளில் பெய்திருக்கிறது. ஊர்களே வெள்ளக்காடாகி மக்கள் வெளியேறி விட்டனர். இரண்டு நாட்கள் கழித்து திரும்பிப் போய்ப் பார்த்தபோது வீடுகள் இடிந்து, பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பாதைகள் உருக்குலைந்து காட்சியளித்தன. விவசாய நிலங்களோ 15 அடி உயர மணற் குன்றுகளாகிவிட்டன. போர்வெல், மோட்டார், ஏன் வீடுகள்கூட அதற்குள் புதைந்துவிட்டன! நாங்கள் டிராக்டர் எல்லாம்கூட மணற்குன்றுக்குள் இருந்து தோண்டி எடுத்தோம். மருதநிலமாகச் செழிப்பாக இருந்த பகுதிகள் பாலைநிலமாக மாறிவிட்டன. எப்படிச் சீர்செய்வது என்பது தெரியாத விவசாயிகள், விவசாயத்தை நம்பி வாழ்ந்த ஏழைகள் வேறு வேலை தேடி கிராமத்தை விட்டுக் கூட்டம் கூட்டமாக வெளியேற ஆரம்பித்தார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தான் நாங்கள் பண்ருட்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் எங்கள் பணியைத் துவங்கினோம். அது மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் புல்டோசர் போன்ற கனரக இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் இறங்கினோம். முன் அனுபவம் இருந்ததால் அதைச் சிறப்பாகச் செய்யமுடிந்தது. ஒரு ஏக்கருக்கே 3500 ரூபாய்தான் செலவானது. மேடுகளை அகற்றி, பள்ளங்களை நிரப்பி, நிலத்தின்மேல் மண்மூடி இருந்ததை நீக்கி, எங்கள் தொழில்நுட்பத்தால் அந்த மண்ணை விளைச்சல் தரும் விளைநிலம் ஆக்கினோம்.

இந்த முயற்சியில் எங்களுக்குத் துணையிருந்தது Association for India's developement (AID) என்ற, அமெரிக்காவில் செயல்படும் தன்னார்வ அமைப்பு. இப்போது அவர்களுடைய அழைப்பின் பேரில்தான் அவர்களின் 36 கிளைகளைப் பார்ப்பதற்காக நான் அமெரிக்கா வந்திருக்கிறேன். இந்த அமைப்பு இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறது. கடலூரில் நாங்கள் செய்த பணியின்போது AID எங்களுக்குத் துணைநின்றது.

தற்போது 45 கிராமங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாக முடிந்து, நிலம் விவசாயத்திற்குத் தயாராகிவிட்டது. இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கள் பணிகளில் கடலூரில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் சேர்ந்து கொள்ளலாம். எங்கள் அலுவலகம் நெய்வேலி இந்திரா நகரில் இருக்கிறது. நேரில் அப்பணிகளைப் பார்க்கலாம். தன்னார்வலர்களாக இணைந்து உதவலாம். விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டலாம்.

இரண்டாவது கட்டத்தில் சென்னை இன்ஃபோசிஸ் விதைகளை வழங்கி உதவியது. கிட்டத்தட்ட 10 டன் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்கள்.



தென்றல்: இன்ஸ்பயர் (INSPIRE) சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் என்னென்ன செய்கிறது?
ரேவதி: எங்களுடைய முக்கியப் பணி ஆராய்ச்சி. அதனை விவசாயிகளுடன் இணைந்தும் மேற்கொள்கிறோம். அவர்களையும் விவசாய விஞ்ஞானிகளாக மாற்றியிருக்கிறோம். அவர்களுக்கு பண்ணைப் பதிவேடு கொடுத்து, தொடர்ந்து தகவல் கொடுக்கச் சொல்லுகிறோம். அதை வைத்து மேற்கொண்டு பணிகளைத் திட்டமிடுகிறோம். தொடக்கநிலையில் ஆரம்பித்து எக்ஸ்பர்ட் லெவல்வரை பலவிதப் பயிற்சிகளை வழங்குகிறோம். 32 வகையான தலைப்புகளில் வருடம் முழுக்கப் பயிற்சிகள் நடக்கின்றன. இது தவிர்த்து இயற்கைப் பேரிடர் குறித்துத் தகவல் வந்ததும் நாங்களே நேரடியாகச் சென்று, ஆலோசனை வழங்கி, நிலங்களை மீட்டுக் கொடுக்கிறோம்.

இந்தியாவில் அதிகமாக விவசாயிகளின் தற்கொலைகள் நிகழும் இடங்களுக்கு, அங்குள்ள அமைப்புகளின் அழைப்பில் சென்று, சீரான விவசாயம் செய்ய ஆலோசனை வழங்குகிறோம். இந்தியாவில் சுமார் 700 நிறுவனங்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றன. புதிய தொழில்நுட்ப முறைகளைச் சொல்லித் தருகிறோம், தைரியப்படுத்துகிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் குளம் வெட்டுகிறோம். எங்கள் பயிற்சி மையத்திலேயே நாங்கள் ஐந்து குளங்களை வெட்டியிருக்கிறோம். மழை அதிகமாகப் பெய்யும்போது நீரைச் சேகரிக்கிறோம். அதைக் கொண்டு 12 ஏக்கர் நிலத்தில் வருடம் பூராவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிர்வகைகளை விவசாயம் செய்கிறோம். இதனால் பண்ணைக்கு நிரந்தர வருமானம் கிடைக்கிறது.

இவை தவிர்த்து INSPIRE உலகம் முழுக்கப் பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாற்றம், கருத்தரங்கம், கலந்துரையாடல் எனவும் பணியாற்றுகிறது.
தென்றல்: 'இயற்கை விவாசயம்' சார்ந்த பணிகளுக்காகப் பல நாடுகளுக்கும் போகிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்...
ரேவதி: ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்திருக்கிறேன். அங்கே பில் மோரிசன், 'தெர்மோ கல்ச்சர்' என்ற கான்செப்டை உருவாக்கியவர், எங்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து தமது முறையைக் கற்றுக்கொடுத்தார். இத்தாலியில் நடந்த slow food மாநாட்டிற்கு இந்தியாவின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தேன். உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடையே கருத்துப் பரிமாற முடிந்தது. ஹாங்காங்கில் நடந்த ஒரு மாநாட்டுக்கு, அங்கிருக்கும் ஆராய்ச்சி நிறுவனம் அழைத்திருந்தது.

தென்றல்: விவசாயத்தின் மீது அரசுகள் பாராமுகமாக இருக்கின்றன என்பது உண்மையா?
ரேவதி: பாராமுகமாக இருப்பதாகச் சொல்ல முடியாது. விவசாய வளர்ச்சிக்காக அரசு நிறைய செலவழிக்கிறது. நிறையத் திட்டங்களை உருவாக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, எது இன்றைய விவசாயிக்குத் தேவை என்பது இன்னமும் அரசுக்கு எட்டாத ஒன்றாகவே உள்ளது. இதுவரை சென்ற பாதையிலேயே அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களும், நவீனத் தொழில்நுட்பங்களும், கடன்களும், கடன் தள்ளுபடிகளும் விவசாயத்தை மேம்படுத்தப் பெரிதும் உதவும் என்று அரசு நம்புகிறது. நடைமுறையில் அவை பெரிதாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இதனால் முற்றிலுமாக மாறுபட்ட ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இன்னமும் கொஞ்சகாலம் பிடிக்கும். அதனால் இது மெதுவாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

தென்றல்: விவசாயத்தின் எதிர்காலம் என்ன?
ரேவதி: இயற்கைமுறை விவசாயத்திற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. இதுதான் வருங்காலத்திற்கான விவசாயம். இதில் பல முறைகள் இருக்கின்றன. நாங்கள் கற்றுக்கொடுப்பது "உயிர்த்தெழும் பூமி" என்னும் முறை. பஞ்சபூதங்களையும் எப்படி இணைத்துப் பயன்படுத்துவது, முழுச் சூரியவொளி அறுவடை செய்வது எப்படி, உற்பத்தியில் சமரசம் செய்து கொள்ளாமல் எப்படி மண்வளத்தைப் பாதுகாத்துத் தக்கவைப்பது, எப்படி உயிரிக்கரைசல் (bio-solution) தயார் செய்வது என்றெல்லாம் கற்றுத் தருகிறோம்.



தென்றல்: உங்கள் பயணங்களில் உங்களை மிகவும் பாதித்த விஷயம் எது?
ரேவதி: நான் 2003-04ல் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றேன். இதில் நிறைய விவசாயிகள் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொண்டதை அறிந்தேன். இவர்கள் யாரும் ஊழல் செய்பவர்களோ, அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்களோ அல்ல. மிகவும் எளியவர்கள். கஷ்டப்பட்டு உழைக்கத்தான் அவர்களுக்குத் தெரியும். அவர்களால்தான் நமக்கு உணவு கிடைக்கிறது. ஆனால் அவர்கள்மீது யாருக்கும் மரியாதை இல்லை. சமூகத்திற்கு இவர்கள்மேல் அக்கறை இல்லை. எந்த மீட்டிங்கில் நான் பேசினாலும் ஏதோ விவசாயிகளின் பிரச்சனைபற்றி நான் பேசுவதாக நினைக்கிறார்கள். ஆனால் இது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல; உண்பவர்களாகிய நமது பிரச்சனையும்கூட என்பதை யாரும் உணரவில்லை.

போர்வெல்லுக்காகவும் பட்ட கடனுக்காகவும் சிறுநீரகத்தை விற்கும் விவசாயிகளை நான் பார்த்திருக்கிறேன். குடும்பமாக இறப்பதையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதற்காக நானும் என் கணவரும் அரசுப்பணியைத் துறந்துவிட்டு முழுமூச்சாக இறங்கினோம். இந்தியா முழுக்க நான்கு லட்சம் மைல் பயணம் செய்திருக்கிறோம். என் கணவர் கப்பற் படையில் இருந்தவர், 12 மொழிகள் பேசக்கூடியவர். அதனால் இந்தியாவின் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள மக்களுடன் பேச எங்களால் முடியும். அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு, தேவையானதைச் சொல்லிக்கொடுத்து, நிலைமையை மேம்படுத்திய பின்னரே ஊருக்குத் திரும்புவோம். வந்ததும் அடுத்த பயணம் காத்திருக்கும். அவர்கள் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் 'மாட்டோம்', 'முடியாது' என்று சொல்ல மனம் வருவதில்லை. உடன் கிளம்பிவிடுவோம். கடந்த வருடத்தில் 28 நாள் மட்டுமே வீட்டில் இருந்திருக்கிறோம். இந்த வருடம் அதைவிடக் குறைச்சலாகத்தான் இருக்கும்.

தென்றல்: சந்தோஷப்படுத்திய விஷயம் எது?
ரேவதி: மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் என்னும் பகுதி மக்களுக்குச் சிறிய அளவில் நிலம் கிடைத்திருக்கிறது. அங்கே அவர்கள் குட்டையை வெட்டி, அதில் மீன் வளர்த்து, நிலத்தில் நெல்லும், வரப்புகளில் காய்கறிகளும் பயிர்செய்து, தங்கள் வீட்டையும் அந்த நிலத்துக்குள்ளேயே கட்டிக்கொண்டு வசிக்கிறார்கள். இந்தத் துண்டு நிலத்தை நம்பி 6, 7 பேர் கொண்ட குடும்பம் உள்ளது. ஆனால், 'ஐலா' என்ற புயல் தாக்கி, நிலம் உவர்நிலம் ஆகிவிட்டது. 10 லட்சம் மக்கள் அங்கே வசிக்கிறார்கள். AID எங்களை அங்கே அழைத்தது. தன்னார்வலர்கள் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். நாங்கள் போனோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. சாலை வசதியும் இல்லை. மிகவும் ஏழை மக்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது "நிலத்தை மட்டும் சரி செய்து கொடுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள்.

நாங்கள் பல மாதங்கள் அங்கு தங்கி, நானூறுக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை உருவாக்கினோம். திரும்பிச் செல்லும்போது "உங்களுக்கு என்ன கட்டணம் வேண்டும்?" என்று கேட்டார்கள். நான் அதற்கு, "நீங்கள் ஒவ்வொருவரும் 10 பேருக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். நான் அடுத்தமுறை வரும்போது பயிற்சி பெற்றவர்கள் 4000 பேர் இங்கே இருக்கவேண்டும். அதுதான் ஃபீஸ்" என்றேன். அதைக் கேட்டு அழுது கதறி, "நிச்சயம் அதைவிட அதிகப் பேரை உருவாக்குவோம்" என்றார்கள்.

அடுத்தமுறை சென்றபோது பயிற்சியாளர்கள் பத்தாயிரத்துக்கு மேல் உருவாகி இருந்தார்கள். எல்லா நிலங்களிலும் என்னுடைய பெயர் எழுதப்பட்ட பலகையை வைத்திருந்தார்கள், எனக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்றைக்கு அங்கே 22,000 பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வருஷம் ஒருமுறை அங்கே செல்கிறோம், அறிவைப் புதுப்பிக்கும் பொருட்டாக. அவர்கள் நான்கு கடைகளைக் கொல்கத்தாவில் திறந்து வியாபாரம் செய்யுமளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள்!

நாம் உண்ணும் உணவு விஷமாகக் கூடாதென்றால், விவசாயி குடும்பங்களுக்கு விஷமே உணவாகிவிடக் கூடாதென்றால் உலகிற்கு இன்னும் நிறைய ரேவதிகள் வேண்டும் என்பது நம் மனதில் உறைக்கிறது. அவருடைய சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வேகம் இருப்பதை உணர்கிறோம். அவருக்கு நன்றி சொல்லக் கைகூப்பியபோது, நம் மனதும் நன்றிப்பெருக்கால் நிரம்பியிருந்தது.

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன்
உதவி: அரவிந்த் சுவாமிநாதன்

*****


பாரம்பரிய விதைகளைக் காக்க வாருங்கள்
எங்களுடைய மிக முக்கியமான பணி நம்முடைய பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பது. இதுவரைக்கும் 385 நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறோம். இன்னும் காய்கறி போன்ற பலவற்றின் விதைகளைச் சேகரித்து வருகிறோம். இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள், தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தொடர்புகொண்டு, பாரம்பரிய விதைகள் ஒரு பத்தே பத்தை ஒரு கவரில் போட்டு எங்களுக்குக் குறிப்புகளுடன் அனுப்பலாம். நாங்கள், அவர்கள் அனுப்பிய விதையின் தரத்தை உயர்த்தி, அதிக விளைச்சல் தருவதாக்கி அவர்களுக்கே திரும்ப அளிப்போம். அதற்கு ஒரு கேட்லாக்கையும் தயாரிக்கிறோம். பாரம்பரிய விதைகள் அழியாமல் பாதுகாக்கும் வேலையை நாங்கள் செய்துவருகிறோம்.

- M. ரேவதி

*****


அமெரிக்காவில் ஆர்வம்....
நான் செப்டம்பர் முதல் அமெரிக்காவில் இருக்கிறேன். (தென்றல் பேட்டி கண்ட) நவம்பர்வரை 55 பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்களுக்குச் சென்றிருக்கிறேன். 30 மாநிலங்களில் 47 நகரங்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். நேரடியாக அமெரிக்காவின் குறுவிவசாயிகள், பெரிய விவசாயிகள் எல்லோருடனும் கலந்துரையாடினேன். உலகளாவிய நிலையில் விவசாயிகள் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஏனென்றால் எங்கும் சவால்கள் ஒரேமாதிரிதான் இருக்கிறது. இயற்கை விவசாயம் அமெரிக்காவில் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆராய்ச்சி நிலையங்களும், பல்கலைக்கழகங்களும் ஆர்வம் காட்டுகின்றன. அமெரிக்காவில் இதுபற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆர்கானிக் விளைபொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இயற்கை விவசாயத்துக்கு மாறுவதில் விவசாயிகள் ஆர்வமாக இருப்பதைக் காணமுடிகிறது.

- M. ரேவதி

*****


விவசாயிகள் தற்கொலை
இன்றைக்கு இந்தியாவில் ஐந்து மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். இந்தப் பத்து வருடங்களில் இறந்து போன விவசாயிகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எண்பதாயிரம். ஒரு போரில் இறப்பதுபோல் இறந்து கொண்டிருக்கிறார்கள். போர்க்களங்களின் மிச்சங்களே இன்று இடுபொருட்களாக மாற்றப்பட்டு, விவசாயிகள் இன்றைக்கு ஓர் சந்தையாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சக்ரவியூகத்தின் உள்ளே மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதைத் தற்கொலை என்பதைவிட சமூகம் அவர்களுக்கு இழைக்கும் அநீதி என்பதுதான் சரியாக இருக்கும்.

- M. ரேவதி
More

அருட்செல்வப்பேரரசன்
Share: 




© Copyright 2020 Tamilonline