Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம்
- சீதா துரைராஜ்|நவம்பர் 2016|
Share:
தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள திருத்தலம் திருவண்ணாமலை. தமிழகத்தின் எல்லா இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. 'அருணாசலம்' என்ற பெயரும் இத்தலத்துக்குண்டு. 'அருணன்' என்றால் சூரியன். 'அசலம்' என்றால் மலை. ஜோதிவடிவான இறைவன் மலைவடிவில் காட்சி தருவதால் அருணாசலம் என்ற பெயர் வந்தது.

"அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம்; அது பூமியின் இதயம்" என்று அருணாசல மகாத்மியத்தில் நந்தி வாக்காக ரமண மகரிஷி பாடியிருக்கிறார். நினைத்தாலே முக்தி தரும் தலம் இது. பஞ்சபூதத் தலங்களில் இது அக்னித்தலம். சமயக்குரவர் நால்வராலும் பாடல்பெற்ற தலம். அருணகிரிநாதருக்கு முருகன் குரு உபதேசம் செய்த தலம். முத்துசுவாமி தீட்சிதர் இத்தல இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இறைவன் அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார். இறைவி அபீதகுஜாம்பாள், உண்ணாமுலையம்மன், தீர்த்தம் சக்கரதீர்த்தம், அக்னிதீர்த்தம், எமதீர்த்தம், முலைப்பால் தீர்த்தம், சோணநதி, வருண தீர்த்தம், கட்க தீர்த்தம் எனப் பல தீர்த்தங்கள் மலையிலும் மலையைச் சுற்றிலும் அமைந்துள்ளன. ஆலயத்துள் இருக்கும் சிவகங்கைதீர்த்தம், பிரம்மதீர்த்தம் முதன்மையானவை ஆகும். 'கட்க தீர்த்தம்' அன்னை பார்வதி, இங்கு வந்து தவம் செய்த காலத்தில், தன் வாள்கொண்டு கீறி உருவாக்கியது. இது துர்க்கையம்மன் கோவிலில் அமைந்துள்ளது. தலவிருட்சம் மகிழமரம்.

அன்னை பார்வதி விளையாட்டாய் ஈசனின் கண்களை மூட உலகம் இருண்டது. அதனால் சிவசாபம் பெற்ற அன்னை காஞ்சிக்குச் சென்று தவம் செய்தாள். மணலால் லிங்கம் பிடித்துப் பூஜித்தாள். ஈசன் அன்னைமுன் தோன்றி அண்ணாமலைக்குச் சென்று தவம் செய்யுமாறு ஆணையிட, அன்னையும் அவ்வாறே செய்தாள். தவத்திற்கு இடையூறாக இருந்த மகிஷனை வதம் செய்தாள். பின் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று ப்ரதோஷ காலத்தில் இறைவனின் திருவுருக்காட்சி பெற்று ஈசனின் இடப்பாகம் பெற்றாள். இவ்வாறு ஈசன் தானும் சக்தியும் ஒன்று என்று உலகிற்கு நிரூபிப்பதற்காக 'அர்த்தநாரீஸ்வரர்' அவதாரம் எடுத்த தலம் அண்ணாமலை.

Click Here Enlargeஒருசமயம் அயனுக்கும் மாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற விவாதம் வந்தது. வாதம் இறுதியில் பெரும் போராக மாறியது. அப்போது அவர்கள்முன் ஓம் என்ற ஒலியுடன் பேரொளி ஒன்று தோன்றிற்று. "இந்த ஒளியின் அடியையும், முடியையும் எவர் கண்டறிகிறாரோ அவரே பெரியவர்" என்ற அசரீரியும் முழங்கிற்று. பிரம்மா அந்த ஒளியின் திருமுடியைக் காண்பதற்காக அன்னமாய் மாறி மேல்நோக்கிப் பறந்தார், விஷ்ணு அந்த ஒளியின் திருவடியைக் காண்பதற்காக வராகமாகி பூமியைக் குடைந்து பாதாளம் நோக்கிச் சென்றார்.

பிரம்மா மேலே செல்லும் வழியில் ஒரு தாழம்பூவைக் கண்டார். "நீ எங்கிருந்து வருகிறாய்" என்று அதனிடம் ஆச்சரியத்துடன் வினவினார். "நான் திருமுடியிலிருந்து நழுவிக் கீழே வந்து கொண்டிருக்கிறேன். பல யுகங்களாயிற்று. இன்னமும் கீழே செல்ல இயலவில்லை" என்றது தாழம்பூ. "அப்படியானால் நான் திருமுடியைக் கண்டதாகவும், அதை நீ பார்த்ததாகவும் கூறு" என்றார் பிரம்மா. படைப்புக் கடவுளான பிரம்மனே சாதாரண மலரான தன்னிடம் கெஞ்சுகிறானே என்ற எண்ணத்தில் தாழம்பூவும் அதற்கு உடன்பட்டது.

வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவோ பல காததூரம் பூமியைத் துளைத்தும் திருவடியைக் காண இயலாது திகைத்தார். உண்மையை உணர்ந்தார். தன் செருக்கொழிந்தார். பேரொளியின்முன் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மனோ தாம் மேலே சென்றதாகவும், திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு இந்தத் தாழம்பூவே சாட்சி என்றும் பொய் பகர்ந்தார்.

பிரம்மன் கூசாமல் பொய் கூறியதைக் கேட்டதும் பேரொளி மேலும் சிவந்தது. அனல் பறந்தது. அதிலிருந்து அளவிலாச் சீற்றத்துடன் சிவபெருமான் வெளிப்பட்டார். "பிரம்மனே! என் திருவடியைக் காணாமலேயே கண்டுவிட்டதாகப் பொய் புகன்ற உனக்கு இனி இவ்வுலகில் திருக்கோயில்களும், வழிபாடும் இல்லாமல்போகக் கடவதாக" என்று சாபம் இட்டார் ஈசன். பிரம்மனுடன் இணைந்து பொய் பகர்ந்த தாழம்பூவிடம், "நீதி தவறிய நீ, இனி என் சகலவிதமான பூஜைகளிலிருந்தும் விலக்கப்படுவாயாக! நான் உன்னை என்றும் இனிச் சூடேன்" என்று சபித்தார்.
இந்த இரண்டு புராணச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் சிவபெருமான் அடிமுடி காணமுடியாத அக்னி ஜோதியாக நின்ற தினம் கார்த்திகை தீபத் திருநாளாகும். மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. பகவான் ரமணரும் தீபதரிசனத் தத்துவத்தை "உடல் என்னும் எண்ணத்தை அழித்து மனதை ஆன்மாவில் அழித்து உள்முகத்தால் ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் தீபதரிசனம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கோயில் 24 ஏக்கர் பரப்பில், 6 பிரகாரங்கள், 9 ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ளது. ராஜகோபுரம் 217 அடி உயரம் உள்ளது. இது தென்னிந்தியாவில் இரண்டாவது உயர்ந்த கோபுரமாகும். தெற்கே திருமஞ்சன கோபுரம், மேற்கே பேய் கோபுரம், வடக்கே அம்மணி அம்மாள் கோபுரம் பிரதானமாக அமைந்துள்ளன. கம்பத்து இளையனார் சன்னிதி. ரமண மகரிஷிகள் தவம் செய்த பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பலவும் ஆலயத்துக்குள் அமைந்துள்ளன.

கருவறையின் முன்பு மிகப்பெரிய செந்தூர விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. ஆலயத்தில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முதலாம் பராந்தகன் கல்வெட்டு, மைசூரை ஆண்ட கிருஷ்ணராஜ உடையாரின் செப்பேடுகள் எனப் பல உள்ளன. கிரிவலப்பாதையில் மிகப்பழமையான இடுக்குப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இரண்டடி உயரமே உள்ள மிகவும் குறுகிய இதன் பின்வாசல் வழியாக ஒருவர் உள்ளே நுழைந்து வெளியேறினால் மீண்டும் அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லை நேராது என்றும், தலைவலி, பில்லி, சூனியம், உடல் உபாதைகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

பௌர்ணமி தோறும் அன்பர்கள் கிரிவலம் வருகிறார்கள். இங்கு சித்தர்கள் உறைவதாகவும், மலையை வலம் வரும்போது சித்தர்கள்மீது படும் காற்று நம் உடலிலும் படுவதால் தீராத நோய்கள், வினைகள், பாவங்கள், சாபங்கள் தீர்வதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. குகை நமசிவாயர், ஈசான்ய ஞான தேசிகர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமணர், யோகி ராம்சுரத்குமார் எனப் பல மகான்கள், ஞானிகளது ஜீவசமாதிகள் இத்தலத்தில் அமைந்துள்ளன. தம்மை நாடி வரும் பக்தர்களை இவர்கள் வழிநடத்துவதாக நம்பிக்கை.

அர்த்தநாரீஸ்வரர் தமது ஆலயத்திலிருந்து தீப தரிசன மண்டபத்திற்கு வந்ததும் கார்த்திகை தீபம் 2688 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்படுகிறது. தரிசனம் ஆனதும் அவர் உடனே உள்ளே சென்றுவிடுவார். அன்றுமட்டுமே அவர் வெளியே வந்து தரிசனம் கொடுப்பார் என்பது மற்றொரு சிறப்பாகும். அண்ணாமலை தீபதரிசனம் ஆன பின்னரே அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி இறைவனை வழிபடுகின்றனர்.

கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் விமரிசையாக நடக்கின்றன. கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், திருவூடல் உற்சவம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் என மிகச்சிறப்பாக விழாக்கள் நடக்கின்றன. அருணாசலேஸ்வரரே கிரிவலம் வருவது இத்தலத்தின் முக்கியமான சிறப்பு.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline