Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்
அஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
சிலிக்கான் வேல்லியில் மோதி
ஜப்பானிய கொலு
- ஜெயஸ்ரீ கிருஷ்ணன், பாஸ்கர் வேலு|அக்டோபர் 2015|
Share:
2002 கோடைக்காலம். கணவரின் பணியிட மாற்றம் காரணமாக டாலஸிலிருந்து வாஷிங்டன் போனோம். அங்கே ஒரு புதிய நட்பு மலர்ந்தது. அது ஜப்பானைச் சேர்ந்த ஷிகாரு தஷிபுவுடன். எங்கள் வாழ்வில் இருந்த ஒற்றுமைகள் எங்கள் நட்பை நெருக்கமாக்கியது.

நாட்கள் உருண்டோடின. 2003 இளவேனிற் காலம். மார்ச் 3ம் தேதி. தஷிபு ஜப்பானிய பாரம்பரிய விழாவான ஹினாமாட்சூரிக்கு என்னை அழைத்தார். இதுவொரு 'பொம்மைத் திருவிழா'. 'ஹினா' என்றால் பொம்மை 'மாட்சூரி' என்றால் விழா. ஆர்வத்துடன் தஷிபுவின் வீட்டினுள் நுழைந்தவுடன் பிரமித்துப் போனேன். சிவப்புக்கம்பளம் விரித்த அடுக்கான படிகளில் அலங்காரமாகக் குட்டி பொம்மை ராஜாங்கமே வீற்றிருந்தது. ஹினா-நீஞ்ஜ்யோ (Hina-ningyo) என்ற இந்த பொம்மைகள் வேலைப்பாடு கொண்ட, பட்டு வண்ணத்துணிகள் உடுத்தப்பட்ட மகாராஜா, மகாராணி, அரண்மனை தாதியர்கள், இசை விற்பன்னர்கள் எனப் பல்வேறு உருவங்களில் கண்ணைக் கவர்ந்தன. ஜப்பானில் முதலாம் நூற்றாண்டில் விளங்கிய ஹேயன் காலகட்டத்தை (Heian Period) ஒட்டிய அரசவைப் பண்பாடு, சமூகம், இசைவிழாவை இந்தப் பொம்மைகள் சித்திரிக்கின்றனவாம்.

இதைப் பார்த்ததும் என் மனதில் நவராத்திரி கொலுவே தோன்றியது. இரு விழாக்களிலும் பெண்களுக்குத்தான் முக்கியத்துவம். கொண்டாடும் முறை, விருந்துபசரிப்பு, கோலாகலம் எனப் பலவகை ஒற்றுமைகள்! இருவேறு நாடுகளின் கலாசாரத்தில் இப்படி ஒரு அதிசய ஒற்றுமையா எனப் பிரமித்தேன். ஹினாமாட்சூரி விழா பற்றியும் இதில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் பற்றியும் ஆர்வத்தோடு தஷிபுவைக் கேள்விகளால் துளைத்துவிட்டேன்.

ஹினாமாட்சூரி ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 3ம் தேதி ஜப்பானில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் மகளின் சுபிட்சத்துக்காக இதில் பிரார்த்திக்கின்றனர். இதற்கு 'மோமோ நோ சேகு' (Momo no Sekku) அதாவது பீச் பூங்கொத்துத் திருவிழா (Peach Blossom Festival) என்றும் ஒரு பெயர் உண்டு. பீச் மலர் பெண்மையின் பல உன்னத குணாதிசயங்களைக் கொண்டதாக ஜப்பானில் போற்றப்படுகிறது. மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் இவ்விழாவுக்கு 'மூன்றாவது மாதத் திருவிழா' என்றும் ஒரு பெயர் உள்ளது.
ஜப்பானில் பழங்காலத்தில் 'ஹினா-நாகாஷி மாட்சூரி' அல்லது 'மிதக்கும் பொம்மைத் திருவிழா' எனவும் கொண்டாடப்பட்டுள்ளது. விழா நிறைவுநாளன்று நாரினால் செய்யப்பட்ட பொம்மைகளை காகிதப் படகுகளில் வைத்து ஆற்றுநீரில் விட்டால் தீயவை அகலும், பெண்குழந்தைகளுக்குத் தீமை நேராது என்பது ஐதீகம். பெண்கள் விழாநாளன்று மிக அழகிய ஆடைகளில் வலம்வருவர். ஹீஷி மோக்கா எனப்படும் எண்கோண வடிவிலான அரிசிப் பலகாரமும், ஷீரோ ஷேக் எனப்படும் இனிப்புப் பண்டமும் பரிமாறுவார்கள். பிப்ரவரி மாத நடுவில் வெளியே எடுக்கும் பொம்மைகளை மார்ச் மாதத்தில் விழா முடிந்ததும் திரும்ப உள்ளே வைத்துவிடுவார்கள். தாமதித்தால் பெண்குழந்தைகளின் திருமணத்தில் சிரமம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையும் உண்டு.

நானும் இந்த பொம்மைகளைச் செய்ய ஆசைப்பட்டேன். பேராசிரியர் ஆகிகோ கீன் வாஷிங்டனில் நடத்திவரும் ஜப்பான் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். ஹீமகோமி, ஓஷி என்ற இருவகை பொம்மைகள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றேன். ஓஷி பொம்மை தயாரிப்புக்கான பயிற்சியை நான் டாலஸ், டெக்சஸ் பகுதிகளில் தருகிறேன். இதுபற்றி விபரம் அறிய Japanese_crafts@yahoo.com என்ற மின்னஞ்சலில் அணுகலாம். கொலுவில் சில வித்தியாசமான பொம்மைகளை வைத்துத்தான் பாருங்களேன்.

ஜெயஸ்ரீ கிருஷ்ணன்;
தமிழில்: பாஸ்கர் வேலு
More

சிலிக்கான் வேல்லியில் மோதி
Share: 




© Copyright 2020 Tamilonline