Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
நட்சத்திரக் குழந்தைகள்
- பி. எஸ். ராமையா|செப்டம்பர் 2014|
Share:
"அப்பா... நட்சத்திரங்களுக்குக்கூட அப்பா உண்டோ?"

"உண்டு அம்மா!"

"அவர் யார் அப்பா?"

"சுவாமி."

"சுவாமியா? அப்பா! அவர்கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பாகூட அழகாத்தானே இருப்பார்?"

"ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப்போல வேறு யாருக்கும் அழகு இல்லை."

"சுவாமிகூட உன்னைப்போல நல்லவர்தானே?"

"ஆமாம்."

"ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப... ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி இருப்பார்!"

"அவர் ரொம்ப நல்லவர். நம்மையெல்லாம் விடப் பெரியவர்."

"அப்பா! நட்சத்திரம் எப்போ பிறக்கும்?"

"சாயங்காலத்தில்."

"எப்படியப்பா அது பிறக்கிறது?"

"நாம் சத்தியத்தையே பேசுவதால்; நாம் ஒவ்வொரு தடவையும் ஓர் உண்மையைச் சொல்லும்பொழுது ஒரு நட்சத்திரம் பிறக்கிறது."

"நான்கூட நிஜத்தையே சொன்னால் நட்சத்திரம் பிறக்குமா அப்பா."

"ஆமாம் அம்மா! நீ ஒவ்வொரு தடவையும் நிஜம் சொல்லும்பொழுது ஒரு நட்சத்திரம் பிறக்கிறது."

"அப்பா!"

"என்ன அம்மா!"

"நம்ம ஊரிலே அவ்வளவு பேரும் - குழந்தைகள் எல்லாம் - நிஜத்தையே பேசினா எவ்வளவு நட்சத்திரம் பிறக்கும்? நிறைய (இரண்டு கைகளையும் விரித்துக்காட்டி) இவ்வளவு நட்சத்திரம் பிறக்குமோல்லியோ?"

"ஆமாம் அம்மா!"

அதைக் கேட்டவுடன் குழந்தை ரோஹிணி வேறொன்றும் பேசாமல் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவளாய்த் திரும்பிவிட்டாள். அவள் தனது முதிரா உள்ளத்தினுள்ளே சுவாமியைப் பற்றியும், அவருடைய நட்சத்திரக் குழந்தைகளின் அழகைப்பற்றியும் மனிதர்கள் யாவரும் சத்தியத்தையே பேசுவதைப் பற்றியும் கற்பனை செய்து காண முயன்றுகொண்டே வாசலுக்குச் சென்றாள்.

குழந்தை ரோஹிணிக்கு ஆறு வயதுதான் ஆகிறது. ஆனாலும் அவளுடைய வார்த்தைகள் யாவும் மணிமணியாக இருக்கும். முத்தும் பவளமும் கோத்த ஹாரம்போல இருக்கும் அவளது பேச்சு. அவளுடைய கேள்விகள் எல்லாம் தெய்வ உலகத்துக் கேள்விகள். அவளுடைய இளம்நெஞ்சில் உதிப்பவை சுவர்க்க உலகத்து எண்ணங்கள்.

ஸ்ரீமான் சோமசுந்தரம், பி.ஏ. வரையில் படித்திருக்கிறார். ஆனாலுங்கூடக் குழந்தை ரோஹிணியின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் ஒவ்வொரு சமயம் திணறிப் போய்விடுவார்; "ஐயோ! இந்தக் குழந்தையின் மனத்தைக்கூட என்னால் திருப்தி செய்யக் கூடவில்லையே!" என்று ஏங்கி நிற்பார். ஆனால் ரோஹிணியைக் கண்டவுடன், ரோஹிணியைப்பற்றி நினைத்தவுடன், அவருடைய உள்ளத்திலெழும் கர்வம் ஒரு சக்கரவர்த்திக்குக்கூட இராது.

பட்டணத்தில் இருக்கும்பொழுது குழந்தை இயந்திர தேவதையின் குழந்தைகளைப் பற்றிப் புதிய புதிய கேள்விகளைக் கேட்பாள். கிராமத்திற்கு வந்தவுடன் அவளுடைய கேள்விகள் அதியாச்சரியமாக மாறிவிடும். இயற்கைத் தேவியின் சிறு விளையாட்டுகளின் இடையே அவளுடைய உள்ளம் சென்று கலந்துகொள்ளும். அவளுடைய எண்ணங்கள் இயற்கை அன்னையுடன் இறக்கை விரித்துப் பறப்பவையாக இருக்கும்.

சோமசுந்தரம் அப்பொழுது தபால் ஆபிஸுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். தினந்தோறும் தபால்காரன் வருவதற்குள் அங்கேயே நேரில் போய் ஏதாவது கடிதம் உண்டாவென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் அவசரம் அவசரமாகப் போவார்; கடிதம் எதுவும் வராவிட்டாலும் தினசரிப் பத்திரிகையாவது வருமே என்று போவார். அவ்வாறு அவர் புறப்பட்டுக் கொண்டிருந்த பொழுதுதான் குழந்தை நட்சத்திரங்களைப் பற்றிக் கேட்டாள்.

அதற்குமேல் ரோஹிணிக்கு அப்பொழுது தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நட்சத்திரங்களினுடைய அப்பாவைப் பற்றிக் கற்பனை செய்து கனவு காண்பதற்குத்தான் அவளுடைய சிறிய மனசில் இடம் இருந்தது.
சோமசுந்தரம் அதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டே தபால் ஆபிஸுக்குச் சென்றார்.

மாலை நேரம் வந்தது. குழந்தை ரோஹிணி அப்பொழுதுதான் குளித்துவிட்டு அம்மா செய்துவிட்ட அலங்காரங்களுடன் வாசலில் வந்தாள். அவர்கள் வீட்டுவாசலில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பாதாமரங்கள் உண்டு. அவற்றின் நடுவில் சென்று நின்றாள். சூரியன் அஸ்தமிக்கும் சமயம்; வானவீதியில் வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகை செய்து கொண்டிருந்தன. குழந்தை ரோஹிணி மேற்றிசைக் கோடியில் நடந்து கொண்டிருந்த இந்திரஜாலத்தைக் கண்டாள். அவளுடைய நிஷ்களங்க நெஞ்சத்தில் பரவசநிலை பிறந்தது.

ஆஹா! என்ன அழகு! அங்கு, அந்த வானவெளியிலே, உமை "கவிதை செய்து" கொண்டிருந்தாள். ரோஹிணியின் முகம் மலர்ந்தது. அங்கு ஒரு புதிய ஒளி தோன்றியது. அது வானவெளியில் தோன்றிய திவ்ய ஒளியின் பிரதி அல்ல. குழந்தையின் இருதய சந்திரனிலிருந்து வெளிப்பட்டு முகத்தில் வீசும் நிலவு! அவளுடைய கண்கள் சுடர்விட்டு எரியும் இரண்டு மீன்களெனப் பிரகாசித்தன. காலையிலே அதிகாலையில், சூர்யோதய காலத்தில், தாமரையொன்று மலர்வதைக் கண்டிருக்கிறீர்களா? கொஞ்சமாகத் திறந்து அது தனது காதலனைக் கண்டு இளநகையாடுவதைப் பார்த்ததுண்டா? அந்தத் தாமரையைப் போல மலர்ந்து வியப்பின், சந்தோஷத்தின், இளநகை தவழ்ந்து ஆட, ரோஹிணியின் சிறிய அழகிய வாய் சிறிது திறந்திருந்தது.

"அவள் யார்? வானத்திலே அப்படிப் படம் எழுதி விளையாடும் அந்த வானுலக ரோஹிணி எப்படி இருப்பாள்?"

குழந்தை ரோஹிணி பலகையில் சித்திரம் எழுதி விளையாடுவதுண்டு. முதலில் ஒரு படம் வரைவாள். "சீ! இது நன்றாயில்லை" என்று அதை அழித்துவிட்டு வேறு ஒன்றும் எழுதுவாள். அதையும் துடைத்துவிட்டுப் புதிய தினுசாக மற்றொன்று வரைவாள்.

வானத்து ரோஹிணியும் அவ்வாறே புதிய புதிய படங்களை எழுதுகிறாள். ஆனால் அவள் அழித்து அழித்து வரையவில்லை. மாற்றுகிறாள். எல்லாம் வர்ணப் படங்கள்! புதிய புதிய வர்ணங்கள். ஒன்றைப்போல் மற்றொன்று இல்லை. கணந்தோறும் நவநவமாய்க் களிப்புத் தோன்றுகிறது. அந்த வானுலக ரோஹிணிக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? குழந்தை ரோஹிணிக்கும் சந்தோஷந்தான் வானுலக ரோஹிணியின் சந்தோஷத்தைப் பற்றி நினைப்பதில். சந்தியா தேவி நாணத்தினால் தலை குனிந்து கீழ்த்திசை அடிவானத்தினின்றும் மெல்ல அடிவைத்து வானவீதியிலே வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய வருகை ஓர் இனிய சங்கீதத்தைப் போன்றிருக்கிறது. கல்யாணி ராகத்தின் அவரோகணம் போல. அவளுடைய சௌந்தர்யம் இனிமையானது; உள்ளம் கவர்வது. அது நாணத்தினால் ஆக்கப்பட்டது; நிமிர்ந்து பார்க்காது; ஆனாலும் மகிழ்ச்சி ஊட்டுவது. அவளுடைய நிறம் சப்தவர்ணங்களில் ஒன்றல்ல; அவற்றிற்குப் புறம்பானது; அதன் பெயர் மாலை; ஆதலால் அது மயக்கம் தருவது.

வர்ணப் படங்கள் எழுதுவது நின்றுவிட்டது. இனி வேறு வகையான சித்திரங்கள், வெள்ளை மேகத்தினால் ஆக்கப்படும் உருவங்கள். ஒளியையும் நிழலையும் கலந்து எழுதப்படும் ஓவியங்கள். அவற்றின் விளிம்புகளில் சுடர்கலந்த வெள்ளி முலாம் பூசப்பட்டிருக்கிறது. அவைகள் ஏன் இப்படி அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருக்கின்றன. ஓரிடத்தில் இருந்தால் என்ன? ஆகாசத்திற்கு இந்த நீலவர்ணம் எப்படி வந்தது? பூமி ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு வர்ணமாக இருக்கிறதே; வானம் மாத்திரம் ஏன் இப்படி ஒரே நீலமாக இருக்கிறது? நேர்மேலே இரண்டு மேக வடிவங்கள் மெதுவாக அசைந்து கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் நடுவில் நீலவர்ணம் களங்கமற்றது; ரோஹிணியின் உள்ளத்தைப் போன்றது. அந்த இடத்திலே, அந்த இரண்டு வெண்மையான மேகக் கூட்டங்களின் இடையிலுள்ள நீலப் பட்டாடையிலே, திடீரென்று ஒரு சுடர் தோன்றுகிறது! அடேயப்பா! அது எவ்வளவு துரிதமாகத் தோன்றிவிட்டது! கண் இமைக்கும் நேரத்தைவிடச் சீக்கிரமாக; மின்வெட்டும் நேரத்தில், அதுகூட அதிகம், ஒரு கணத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் அந்தச் சுடர்ப்பொறி பிறந்துவிட்டது!

"அம்மா, சுவாமிக்கு ஒரு நட்சத்திரக் குழந்தை பிறந்துவிட்டது!" என்று கூவினாள் குழந்தை ரோஹிணி. கைகளைக் கொட்டுகிறாள். அவளது கண்கள் சிரிக்கின்றன. உள்ளம் களிவெறி கொள்கிறது.

அவளுடைய தாய், வீட்டு வாசற்படியின் அருகில் நிற்கிறாள். அவளது கவனம் வீதியில் போவோர் வருவோர்மீது சென்று லயித்திருக்கிறது. அதோ போகும் பெண்ணினுடைய ஆடையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். குழந்தை ரோஹிணியின் வார்த்தைகள் அவளுடைய செவிகளில் படவில்லை. ஆனால் குழந்தையின் சந்தோஷம் மாத்திரம் அவளுடைய மனத்தில் சென்று தாக்கி அதை ரோஹிணியிடம் இழுத்துச் செல்லுகிறது. குழந்தையை அப்படியே விழுங்க விரும்புபவளைப் போலக் கரை புரண்டோடும் ஆசையுடன் அம்மாவின் கண்கள் குழந்தையைப் பார்க்கின்றன.

வானவெளியிலே இருள் பரவுகிறது. இருளும் அழகாகத்தான் இருக்கிறது. அதிலும் இனிமை இருக்கிறது; மாதாவின் சிநேகத்தைப் போன்ற இனிமை. ஒன்றன்பின் ஒன்றாக நட்சத்திரங்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன. அப்பா! எத்தனை நட்சத்திரங்கள்! குழந்தை ரோஹிணியால் அவற்றை எண்ண முடியவில்லை. அவை பிறக்கும் வேகந்தான் என்ன! அந்த வேகத்தைக் குழந்தையின் சிறிய மனம் தொடர்ந்து செல்வது சாத்தியமில்லை.

"வா கண்ணே! உள்ளே போகலாம். இருட்டிப் போய்விட்டது" என்று அம்மா அழைக்கிறாள்.

"இரு அம்மா போகலாம். மானத்தைப் பாரு. எவ்வளவு அழகாயிருக்கு!" என்று நிற்கச் சொல்லுகிறாள் குழந்தை.

"ஆமாம்; அழகாய்த்தான் இருக்கிறது. இருட்டிப் போய்விட்டதே. இனிமேல் இப்படி வாசலில் நிற்கக்கூடாது. வா அம்மா உள்ளே" என்று மறுபடி அழைக்கிறாள் அம்மா.

"அம்மா!"

"உம்."

"மானம் இப்போ எதைப்போலே இருக்கு. சொல்லட்டுமா?"

"சொல்லு."

"உன் முகத்தைப்போலே, நீ என்னை முத்தமிடுகிறாயே, அப்போ உன் முகம் இந்த மானத்தைப் போலேயே இருக்கு."

அம்மாவுக்கு அதன் பொருள் விளங்கவில்லை. அது சரியென்று தோன்றவில்லை. ஆனால் அந்த வார்த்தைகளில் இருக்கும் ஏதோ ஒன்று, "அது வாஸ்தவந்தான்" என்று சொல்லியது அவளுடைய மனத்தில்.

அம்மா சட்டென்று கீழிறங்கிச் சென்று குழந்தையை இழுத்துக் கட்டிலடங்காத காதலுடன் முத்தாடினாள். அம்மாவுக்கு வீட்டில் வேலை இருக்கிறது. மற்றொரு முறை, "உள்ளே வாடா குஞ்சு" என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று விட்டாள்.

குழந்தை ரோஹிணி "சீரவிருஞ்சுடர் மீனொரு வானத்துத் திங்களையும் சமைத்தே ஓரடியாக விழுங்கிடும் உள்ளச் செல்வம்" படைத்து அப்படியே நின்றிருந்தாள்.

வெளியே சென்றிருந்த சோமசுந்தரம் வீட்டிற்குத் திரும்பி வந்தார். வாசலில் தனியாக வானத்தின் அழகில் லயித்து நின்ற ரோஹிணியைக் கண்டார்.

"ரோஹிணிக் குஞ்சு! என்ன அம்மா பார்க்கிறாய்? உள்ளே போகலாம் வா" என்று அழைத்தார்.

குழந்தை, "இரு அப்பா! அந்த மானம் எவ்வளவு அழகாயிருக்கு! அவ்வளவு குழந்தைகளையுடைய சுவாமிக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும்! அப்பா!" என்றாள்.

அதற்குள் சோமசுந்தரத்தின் மனத்தில் வேறு ஏதோ சிந்தனை வந்துவிட்டது. குழந்தை சொல்லியது சரியாகக்கூட காதில் விழவில்லை. "உம்" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

அடுத்த வினாடி ஒரு விண்மீன் நிலை தவறிச் சுடர் வீசிக் கொண்டு வானத்தினின்று கீழே விழுந்து மறைந்தது. அதன் பிரயாணம் சில வினாடிகளே கண்ணுக்குத் தெரிந்தது.

குழந்தையின் கண்களில் கண்ணீர் பெருகியது. இரண்டு கண்களினின்றும் இரண்டு நீர் வடிவமான முத்துக்கள் கீழே உதிர்ந்தன. அந்தச் சின்னஞ் சிறு இருதயத்தில் விவரிக்க இயலாத, சுருக்கென்று தைக்கும் ஒரு வேதனை காணுகின்றது. குழந்தை விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அழுகையினிடையில் "அப்பா!?" என்று இரும்பை உருக்கும் குரலில் கூப்பிட்டுக் கொண்டே வீட்டினுள் சென்றாள்.

சோமசுந்தரம் அப்பொழுதுதான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து அருகிலிருந்த மேஜை மீதிருந்து ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். குழந்தையின் குரலைக் கேட்டவுடன் அவருடைய கையினின்றும் புத்தகம் "தொப்"பென்று கீழே விழுந்தது. அவருடைய இருதயம் ஆயிரம் சுக்கல்களாகச் சிதறி விழுந்ததுபோல் இருந்தது. உடல் பதைத்தது.

"என்னடா கண்ணே! என் ராசாத்தி அல்லவா! என் ரோஹிணிக்குஞ்சை யார் என்ன செய்தார்கள்?" என்று படபடப்புடன் கேட்டுக் கொண்டே குழந்தையை வாரித் தூக்கித் தோளின்மேல் சாத்திக்கொண்டார்.

"அப்பா! எனக்குத் தெரிஞ்சு போச்சு" என்று விக்கல்களுக்கும் விம்மல்களுக்கும் இடையில் சொன்னாள் குழந்தை.

"என்னடா கண்ணே, தெரிஞ்சுபோச்சு?"

"அப்பா நம்ப ஊரிலே, யாரோ ஒரு பொய் சொல்லிவிட்டார் அப்பா!"

விக்கல்கள், விம்மல்கள், ஹூங்காரத்துடன் ஒரு அழுகை.

"ஏன் அம்மா அப்படித் தோன்றுகிறது உனக்கு?"

"நீதானே அப்பா சொன்னே, நாம் ஒரு நிஜம் சொன்னால் ஒரு நட்சத்திரம் பிறக்கிறதுன்னு, அப்போ... ஒரு நட்சத்திரம் கீழே விழுந்தா..... யாரோ ஒரு பொய்.... சொல்லிட்டாங்கன்னுதானே........... அர்த்தம்? சுவாமியினுடைய...... மனசு....... இப்போ...... எப்படி இருக்கும் அப்பா?..... எனக்கே........... நிறைய........ அழுகை வரதே....." என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள் அந்தக் கபடமற்ற குழந்தை.

அந்தப் பச்சை உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும் அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம். அது இருதயம் இருதயத்தினொடு தனது சொந்த பாஷையில் உணர்த்த வேண்டிய புனிதமான ஒரு துக்கம்.

பி. எஸ். ராமையா
Share: 




© Copyright 2020 Tamilonline