Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கிட்டுதல்
- இராசேந்திரசோழன்|மே 2014|
Share:
நண்பரது கடிதம் வீட்டில் இந்த அளவு பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணும் என்று இவன் எதிர்பார்க்கவில்லை.

நண்பர் தில்லிக்காரர். அடிக்கடி சென்னை வந்து போகக் கூடியவர். தமிழ் ஆர்வம் உள்ளவர். எப்போதாவது கவிதைகள் எழுதுவது, வானொலி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது என்று இருப்பவர். சமீபத்தில் வெளிவந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் ஒரு காட்சியில் அவர் மருத்துவராக நடித்திருக்கிறாராம். அநேகமாய் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் ஒளிபரப்பாகலாம். அவசியம் பார்க்கவும் என்று எழுதியிருந்தார்.

கடிதத்தைப் படித்த மனைவி "கதிரவன் தொலைக்காட்சியெல்லாம் நமக்கு எங்கங்க வருது, நமக்கு வர்றது வெறும் சன், ஜெயா, விஜய், ராஜ்தான்" என்றாள்.

"கதிரவன்னா சன் டி.விதான். அதத்தான் அப்பிடி தமிழ்ல எழுதியிருக்கிறார்" என்றான் இவன்.

"காரிக்கெழமன்னு எழுதியிருக்கறாரே, அது என்னா கெழம?"

"காரிக்கெழமன்னா சனிக்கிழம. அதுகூடத் தெரியாதா ஒனக்கு. ஒண்ணொண்ணையும் ஒனக்கு வெளக்கணம்."

"ஆமா, அவரு எல்லாருக்கும் புரியறா மாதிரி எழுத வேண்டியதானே. உங்களுக்கு மட்டும் புரியறா மாதிரி எழுதிட்டா..."

"கடிதம் எனக்குத்தான் எழுதியிருக்காரு. அதனாலதான் அப்படி எழுதியிருக்காரு."

"எல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் புரிஞ்சா போதும். மத்தவங்களுக்குப் புரிஞ்சா என்னா? புரியாட்டா என்ன?"

"இப்பிடி புதுசு புதுசா எதுனா வரும்போதுதான் எதியும் தெரிஞ்சிக்க முடியும். இப்ப புதுசா ரெண்டு வார்த்த கத்துக்ன இல்ல. இல்லாட்டா தெரியுமா..."

"சனிக்கெழமன்னா" என்று ஒரு கணம் யோசித்த மனைவி "இன்னைக்கி வியாழன் நாளன்னிக்கிதான்" என்றாள். பின்பு கடிதத்தைப் பார்த்து "நண்பகல். மத்தியானமா. ஆமா. ஏதோ ஒரு சீரியல் ஓடுதுன்னு பக்கத்து ஊட்டம்மா கூடச் சொன்னாங்க. யாரு இதல்லாம் தொடர்ந்து உக்காந்து பாத்துக்னு இருக்கிறாங்க. எப்ப என்னா ஓடுதோ அப்பப்ப எதியாவது பாத்துக்க வேண்டியது. சும்மா ஒரு பெராக்குதான். இத அவசியம் பாத்துட வேண்டியதுதான்" என்றாள்.

இவனும் தொலைக்காட்சித் தொடரெல்லாம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவன் அல்ல. ஒரு நடுத்தரக் கிராமத்தில் குடியிருந்து கொண்டு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருபவன் இவன். காலையில் எழுந்து செய்தித்தாள் பார்த்து, சிற்றுண்டி சாப்பிட்டு மதியத்துக்கும் எடுத்துக் கொண்டு ஒன்பதரை மணிவாக்கில் அலுவலகம் போனால் மாலை ஆறரை மணிக்கோ, ஏழுமணிக்கோ வீடுதிரும்பினால் சாப்பிட்டு முடித்து ஏதாவது சிற்றேடுகளையோ புத்தகங்களையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவான். இடையே செய்தி வரும்போது மட்டும் ஒரு அரைமணி நேரம். மற்றபடி தொலைக்காட்சிப் பெட்டிப் பக்கம் அதிகம் வருவதில்லை. வீட்டில் மனைவி குழந்தைகள் மட்டும், நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி வைத்து அந்தந்த நேரம் எது பிடிக்கிறதோ அதை மட்டும் பார்த்து மகிழ்வார்கள். நண்பர் இவ்வளவு தூரம் மெனக்கெட்டு எழுதிவிட்ட பிறகு அதைப் பார்க்காமல் இருந்தால் சரிப்படாது. அடுத்த சந்திப்பில் நண்பர் கேட்டு அதைப் பார்க்கவில்லை என்றுசொல்வதெல்லாம் மரியாதையாக இருக்காது. ஏதாவது சாக்கு சொல்வதற்கும் மனச்சாட்சி இடம்கொடுக்காது. குறிப்பிட்ட அந்தக் காட்சியை மட்டுமாவது பார்த்துவிடுவது என்ற முடிவு செய்து கொண்டான்.

சனிக்கிழமை வந்தது. மத்தியானமும் வந்தது. மனைவி அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் தன் கணவரின் நண்பர் இன்று மத்தியானம் தொலைக்காட்சித் தொடரில் டாக்டராக வர இருப்பதைத் தண்டோரா போடாத குறையாகச் சொல்லி அவசியம் பார்க்க வேண்டும் என்று அறிவித்திருந்தாள். தொ.கா. பெட்டி இல்லாத பக்கத்து வீட்டு அம்மாள் அவ்வப்போதைக்கு எந்த வீடு வாய்க்கிறதோ அந்தந்த வீட்டில் போய்ப் பார்த்துக் கொள்பவர். எப்போதாவது அந்த அம்மாள் சந்தர்ப்பம் தெரியாமல் உட்காந்திருப்பதைப் பார்த்து முகம் சுளிக்கும் மனைவி இன்று மத்தியானம் மட்டும் இங்கே வந்து பார்த்துக் கொள்ளும்படி சிறப்பு அனுமதி தந்திருந்தாள்.

தொடர் ஆரம்பிக்க ஒரு பத்து நிமிடம் முன்னதாகவே சமையல் கட்டிலிருந்து வெளியே வந்த மனைவி வியர்வையைத் துடைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே சொன்னாள். "எல்லா வேலையும் முடிச்சாச்சு, இன்னும் வத்தல் மட்டும் தான் பொரிக்கணம். அது சாப்டும் போது பொரிச்சிக்காலாம்னு உட்டுட்டேன். சீரியல் பாத்துட்டு அப்புறம் பாத்துக்கலாம்."

வெளி வாரந்தாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவன் "சரி சரி. நீ ஏன் இப்படிக் கெடந்து பறந்துக்னு இருக்க, வரும்போது பாக்கப் போறம். பாத்துட்டு சாப்டப் போறம். அதுக்கு நீ ஏன் இப்படி கெடந்து தம் கட்டுவ" என்றான்.

"உங்களுக்கென்னா. ஒரு காட்சின்னா எம்மாம் நேரமோ? டக்குனு வந்து, டக்குனு போயி மிஸ் ஆயிடுச்சின்னு வச்சிக்கோங்க அப்பறம் என்னா பண்றது" என்றாள். பிறகு கொஞ்சம் யோசித்து "ஏங்க அவர் கொஞ்சம் வயசானவரா தெரிய மாட்டாரு" என்றாள்.

"ஆமா. அதுக்கென்னா. வயசானா டாக்டரா வரக் கூடாதா?"

"அதுக்கில்ல. மேக்கப் எதுனா போட்டுக்னு வருவரா. இல்ல அப்படியே வருவரான்றதுக்காக கேட்டேன். ஏன்னா, மேக்கப் கீக்கப் போட்டுக்னு வந்து அடையாளம் தெரியாமப் போயிடப்போவுது."

"வயசான டாக்டர்னா அப்பிடியே வருவாரு. இல்ல இளமையான டாக்டர்னா மேக்கப் போட்டுக்னு வருவாரு. எப்படி வந்தா ஒனக்கென்னா. டாக்டர்னா டாக்டர்தான்" என்றான்.

"ஒரு டாக்டர் மட்டும் வந்தா பிரச்சின இல்ல. ரெண்டு மூணு டாக்டரா வந்துட்டாங்கன்னா இவர எப்படி அடையாளம் கண்டு புடிக்கறதுன்றதுக்காக கேட்டேன்."

"எல்லாம் கண்டு புடிச்சிக்லாம். கவலப்படாத" என்றான்.

அவள் நிறைவடையவில்லை; முன்னதாகவே பெண்ணை மடக்கிப் போட்டவள் பையனைத் தேடினாள்.

"இந்த பொடி வேற எங்க போச்சின்னே தெரியல. அப்பா ஃபிரண்டு டாக்டரா வரப்போறாராம் மத்தியானத்துக்கு இருந்து பாருடான்னேன். எங்கியோ ஓடிட்டிருக்குறான் பாருங்க ஆட்டம் போடறதுக்கு" என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் மனைவி. "சரி. அவன் வரும்போது வரட்டும் மணி ஆயிடுச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிச்சுடுவான்."

"நீ போய் உக்காந்து பாத்துக்னு இரு. ஆரம்பிக்கும் போது சொல்லு வரேன்."

போன கொஞ்ச நேரத்திலேயே மனைவி உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள் "ஏங்க. ஆரம்பிக்கப் போறான்."

இவன் புத்தகத்தை அடையாளமாக மூடி வைத்துவிட்டு உள்ளே போனான். மனைவியும் நான்காம் வகுப்பு படிக்கிற பெண்ணும், பக்கத்து வீட்டு அம்மாளும் மிகவும் பொறுப்போடு தரையில் அமர்ந்து சின்னத்திரையை நோக்கிக் கொண்டிருந்தனர்.

திரையில் எழுத்து ஓடிக்கொண்டிருந்தது.

"அவர் பேர் போடறானா பாப்பம்" என்றாள் மனைவி.

"சும்மா ஒரு காட்சி வர்ரதுக்கெல்லாம் பேர் போடமாட்டான்"

"ஏன் போடமாட்டான்? மின்ன உங்க இன்னொரு ஃபிரண்டு சேட்டு ஊட்டு வேலைக்காரன் ரோல்ல வந்து 'ஐயா ஊட்டுல இல்லீங்க. வெளிய போயிருக்காரு'ன்னு சொல்லிட்டுப் போனதுக்கே பேர் போடலியா."

"பாப்பம்.. ஒவ்வொரு இயக்குநர் ஒவ்வொரு மாதிரி. சிலர் எல்லார் பேரையும் போடனும்னு நெனைப்பாங்க. சிலர் முக்கியமான ரோல்ல வர்ரவங்க பேர மட்டும் போடுவாங்க."

தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் ஓடி முடிய அப்புறம் திடீரென்று திரைக்கதை வசனம் இயக்கம்.

"நடிகர்கள் பெயரையே போடக் காணம்" என்றான்.

"ஒரு வேள மொதல்லியே போட்டுட்டானோ என்னமோ" என்றாள் மனைவி.

"இங்கதான இருக்கற நீ பாக்கலியா..."

"ஒங்களக் கூப்டுட்டு, தோ ரசம் கடுத்துடப் போவுதுன்னு எறக்கி வச்சிட்டு வாரனே அதான். நான் வேற எங்க போனேன்."

"ஆமா. போ. எல்லாம் நீ வாயால பேசதான் லாயக்கி."

"என்னா. ரசத்த எறக்கி வச்சிட்டு வாரதுக்குள்ளவா பேரப் போடுவான்."

"இல்ல. இல்ல. நீ எறக்கி வச்சிட்டு வர்ர வரிக்கும் நிறுத்தி வச்சிருந்துட்டு அப்பறமா போடுவான்."

அதற்குள் பெண், நண்பர் பெயரைச் சொல்லி "அந்த மாதிரிப் பேரே எதுவும் போடலிங்கப்பா" என்றாள்.

"ஒரு வேள புனைபெயர்ல எதுனா நடிச்சிருக்கிறாரோ" என்றான் இவன்.

"சரி. சரி. பேசாம நாக்காலில உக்காந்து படத்த பாருங்க. பேர உட்டா மாதிரியே அவரையும் உட்டுடப் போறம். மொதல்ல எடுத்ததுமே வந்துட்டுப் பூடப் போறாரு" என்றாள் மனைவி.

"நீ சொன்னா மாதிரிதான் இருக்கும் போலருக்குது. எடுத்ததுமே பெரிய பெரிய கட்டடமா காட்டறான். ஆஸ்பத்திரி மாதிரிதான் தெரியுது. மொதல்லியே வந்துட்டார்னா பரவால்ல பாத்துட்டு போயிடலாம். பூரா சீரியலையும் பார்க்க வேண்டிய அவஸ்த இருக்காது."

"இது ஆஸ்பத்திரி இல்லிங்க. ஸ்கூலு. டீச்சரம்மா வர்றாங்க பாருங்க."

"டீச்சரம்மவா, நர்ஸா நல்லா பாரு" என்று யோசனையோடு இழுத்தவன், "ஆமா. ஸ்கூலுதான் பசங்கள்லாம் வருது" என்றான்.
தரையில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. டீச்சரம்மா வந்தார்கள். அழுகிற குழந்தையைப் பார்த்து ஏன் அழுகிறாய் என்றார்கள். வேறு ஒரு டீச்சரம்மா அடித்ததாகக் குழந்தை சொல்ல, ஏன் அடித்தார்கள் என்று இந்த டீச்சரம்மா கேட்கிறார்கள். அந்த டீச்சர் அம்மா அப்பான்னு சிலேட்டுல எழுத சொன்னாங்க டீச்சர். நான் எழுதலன்னு அடிச்சிட்டாங்க. ஏன் உனக்கு எழுதத் தெரியாதா? தெரியும் டீச்சர். ஆனா எனக்கு அம்மா அப்பா யாருமே இல்ல டீச்சர். அதனால அனாதைன்னு எழுதிட்டேன் டீச்சர் என்கிறது குழந்தை. டீச்சரின் கண்கள் கொப்பளிக்க என் கண்ணே என்று குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொள்கிறாள். இதற்கு மேல் இந்த உணர்ச்சிப் பிழம்பைக் காணப் பொறுக்காமல் 'நான் வெளிய இருக்கறேன். அந்த சீன் வரும்போது கூப்டு' என்று பழையபடியே வெளியே வந்து உட்கார்ந்து புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

தெருவில் எதிர்ப்புறம் ஒரு வீடு தள்ளியிருந்த பருத்த வேப்பமரத்து நிழலில் அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கட்டம் போட்டு சில்லு விளையாடிக் கொண்டிருந்தன. வாரம் பூராவும் வெறிச்சோடிக் கிடக்கும் வேப்பமரம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வந்தால் மட்டும் களை கட்டும். அடர்ந்து ஏங்கிக் காத்துக் கிடக்கும் அந்த நிழலுக்கே அப்போதுதான் ஒரு உயிர்ப்பு வந்தது மாதிரியிருக்கும். ஆடுபவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களுமாக இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். ரெட்டை சடை போட்டு மடித்துக் கட்டியிருந்த நாலாவது வீட்டுச் சிறுமி சடை துள்ளத்துள்ள எல்லாக் கட்டங்களிலும் சில்லு போட்டுத் தெத்தித் தெத்திக் கடந்துவிட்டு மலையேறிக் கொண்டிருந்தாள். நெற்றியில் சில்லை வைத்துக் கண்களை மூடி அண்ணாந்து கால்களைப் பரப்பி, சில்லு விழாமல், கீழே கோட்டை மிதிக்காமல் சரியா, சரியா என்று கேட்டவாறே கட்டங்களைக் கடந்து கொண்டிருந்தாள்.

உள்ளிலிருந்து திடீரென்று மனைவியின் அலறல் சத்தம் கேட்டது "ஏங்க சீக்கிரம் வாங்களேன்".

சூழ்நிலையையே மறந்தவனாகப் பதறியடித்துக் கொண்டு எழுந்தான். இவன், வெளி மூலையில் எப்போதும் அவசரத்துக்குத் தயாராய் சாற்றி வைத்திருந்த நீளத்தடியோடு உள்ளே நுழைந்து "எங்க" என்றான்.

வீடு புதியதாய்க் கட்டிய வீடு. கிராமத்தின் விரிவாக்கப் பகுதியில் இவனை மாதிரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின் வாரியப் பணியாளர்கள் எனச் சில நடுத்தரக் குடும்பங்கள் லோன் போட்டுச் சொந்தமாய் மண் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். இவன் வீடு இன்னும் பூச்சு வேலை கூட முழுமையாக முடியவில்லை. சுற்றிலும் கொல்லைமேடு. செடிகொடிகள் புதர்கள் மண்டிய கரம்புகள் என்பதால் அடிக்கடி பூச்சி பொட்டு நடமாட்டங்கள் உண்டு. கோடை முடிந்து ஆடி மழையில் உழ ஆரம்பித்துவிட்டால் நடமாட்டம் கொஞ்சம் கூட இருக்கும். நல்லது, சாரை, விரியன், நட்டுவக்களி என ஏதாவது வரும். போன வாரம்கூட பொழுதுபோன வேளையில் அம்மிக்கல் இடுக்கில் நல்லது ஒன்று இருந்து அடித்தது. அப்படித்தான் ஏதோ என்று பரபரப்போடு நுழைந்து போருக்குத் தயாரானவன் போல நின்ற இவனை மனைவி வியப்போடு பார்த்து "என்னங்க" என்றாள்.

இவன் "எங்க இருக்குது" என்றான்.

மனைவி வியப்போடு "எது" என்றாள்.

"எதுவா. எதுக்கு இப்படி கத்தன.."

"ஒரு அம்மா இருமிக்னு இருந்தாங்க. டாக்டர் வந்தாலும் வருவாருன்னுதான் கூப்புட்டேன்."

"கிழிஞ்சிது போ. அதுக்கா இப்படி கத்தன. நான் என்னுமோ ஏதோவாங்காட்டியும்னு பயந்திட்டேன்"

"ஆமா. நீங்க எப்பவும் அதியே நெனச்சிக்னு இருங்க. எதையாவது ஒண்ணை நெனச்சிக்னு எதையவாது ஒண்ணை செய்யறதுக்கு" என்றாள் மனைவி.

பொதுவாகவே அற்ப விஷயத்துக்கெல்லாம் கூட "ஏங்க... ஏங்க" என்று அலறும் சுபாவமுடையவள் மனைவி. காலையில் வழக்கமாக வரும் பேப்பர்காரப் பையன் வந்து பேப்பர் போட்டுவிட்டுப்போனால் கூட அவன் ஏதோ பெட்ரோல் பாம் வீசி விட்டுப் போனது போன்ற குரலில்தான் அதை அறிவிப்பு செய்வாள். அந்தக் கடுப்பில் இவன் "சும்மா ஒரு செத்த அசஞ்சா கூட நமக்கு என்னமோ மாதிரி இருக்குது. நீ என்னான்னா அது அதுக்கும் இப்படி ஊடே தூக்கிக்னு போறா மாதிரி அலறிக்னு இரு" என்றான்.

"ஆமா நீங்க ஒண்ணுகெடக்க ஒண்ணு ஏதாவது செய்துட்டு எல்லாத்துக்கு எளச்சவ நானுன்னு எம்மேல எகிர்றிங்களா. உங்க ஃபிரண்டு வருவாரேன்னு கூப்புட்டேன். நீங்க பாத்தா பாருங்க பாக்காட்டி போங்களேன். எனக்கென்னா. நாங்களா அவருக்கு பதில் சொல்லப் போறம்?"

"சரி. உடு. டாக்டர் வந்தாரா இல்லியா" என்றான் இவன். மனைவி பதில் சொல்லுமுன்.

"ஏங்க உங்களுக்கு ஒடம்பு சரியில்லையா எங்கிட்ட சொல்லவே இல்லியே" என்று எடுத்துப்போட்ட மாதிரியே கேட்டாள் பக்கத்து வீட்டு அம்மாள்.

"எனக்கு ஒடம்புக்கு ஒண்ணும் இல்லியே நல்லதான இருக்கறேன்" என்றாள் மனைவி.

"பின்ன எதுக்கு டாக்டர் வரச்சொல்லி இருக்கீங்க?"

"அது இல்லீங்க. நான் சொல்லல, இவரு பிரண்டு டாக்டரா நடிச்சிருக்காருன்னு அதக் கேக்கறாரு."

"அதுவா. நீங்க மருத்துவர்னுதான சொன்னீங்க மருத்துவர்ன்னுதும் நான் நாட்டு வயித்தியர்னு நெனச்சிக்னேன்."

"ரெண்டும் ஒண்ணுதாம் பாட்டி. இங்கிலீஷ்ல டாக்டர்னா தமிழ்ல மருத்துவர். நாம்ப எவ்வளவோ விஷயம் தமிழ்ல தெரிஞ்சிக்க வேண்டியிருக்குது." ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போல சொன்னாள் மனைவி.

"நானும் அதாம்மா சொல்றேன். இங்கிலீஷ் வயித்தியம் பாத்தா டாக்டரு. தமிழ் வயித்தியம் பாத்தா மருத்துவரு" என்றாள் பக்கத்து வீட்டம்மாள்.

இது வேறவா என்று முனகியவன் "நான் வெளிய இருக்கறேன். வந்தா சொல்லு!" என்று வராந்தாவுக்கு வந்தான்.

ரெட்டை சடைப் பெண் ஒரு கட்டத்தில் பழம் போட்டுக் கிழிந்திருந்தாள். பாப் வெட்டிய மற்றொரு சிறுமி சில்லு போட்டுக் கட்டங்களைக் கடந்து மலை ஏறிக்கொண்டிருந்தாள். இவளுக்கு உள்ள சங்கடம் ரெட்டைப் பின்னல் சிறுமி பழம் போட்டு கோடு கிழித்த கட்டத்தில் கால் வைக்கக் கூடாது. சில்லை நெற்றியில் ஏந்திக் கண்ணை மூடி அண்ணாந்து "ரைட்டா.. ரைட்டா.." என்று நகர அவ்வப்போது கோட்டில் கால் வைத்து "அவுட்" ஆகிக்கொண்டிருந்தாள்.

உட்புறமிருந்து நெக்ஸ்ட் கேஸ் என்கிற குரலைக் கேட்கச் சரக்கென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்தான். அதற்குள் மனைவி பதறிக் கொண்டு வெளியே வந்து நின்று "என்னங்க" என்றாள்.

"டாக்டர் வந்துட்டாரா" என்றான்.

"வந்தா சொல்ல மாட்டனா"

"இப்ப ஏதோ நெக்ஸ்ட் கேசுன்னு கொரல் கேட்டுது".

"அதுவா அது மருந்து விளம்பரம். விளம்பர டாக்டர்."

"அப்படியா அதக் கேட்டதும் நான் நம்ப டாக்டர்தான் வந்துட்டாராங்காட்டியும் நெனச்சிக்னேன்."

"அதுக்கா இப்படி நாற்காலிய டர்ர்ருனு தள்ளிக்னு எழுந்திரிப்பீங்க. நான் என்னுமோ ஏதோவாங்காட்டியும்னு பயந்துட்டேன்."

"ஆமா. நீ எப்பப் பார்த்தாலும் அதியே நெனச்சின்னு இரு."

"ம்..." என்று முறுக்கினாள் மனைவி. "இப்பிடி அமக்களம் பண்ணா யாருக்குதான் இதுவா இருக்காதாம் நான் நல்லதுதான் எதுவோ வந்துடுத்தாம் காட்டியும்னு நென்சிக்னு ஓடியாறேன்."

"சரி. சரி. நீ உள்ள போயி இரு. திடீர்னு வந்துடப் போறாரு. இவ்வளோ நேரம் காத்துக்னு இருந்துட்டு கடைசில கோட்ட உட்டுடப் போறம்."

"விளம்பரம்தான் போய்க்னு இருக்குது. வந்தா கூப்புட்றம் வாங்க" என்றாள் மனைவி. சற்று யோசித்து "இல்லண்ணா பேசாம கொஞ்ச நேரம் உள்ளதான் வந்து உக்காந்து பாத்துடுங்களேன். எதுக்கு வெளில உக்காந்துக்னு இந்த மாதிரி அமர்க்களம் பண்ணிக்னு இருக்கீங்க.."

'நாங்க அமர்க்களம் பண்றமா நீ பண்றியா.. பேசாம உள்ளபோய் உக்காந்து பாரு"

இவன் மீண்டும் புத்தகத்தைப் பிரித்து படிக்க யத்தனித்தான். மனம் லயிக்கவில்லை. சில்லு விளையாடும் குழந்தைகளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். "ரைட்டா.. ரைட்டா" என்று கேட்டபடியே கோட்டை மிதிக்காமல் மலையேறி வருகிறாள் கிராப் சிறுமி என்றாலும் பின்புறம் திரும்பிப் பார்க்காமல் எதிர்ப்பக்கம் பார்த்து அனுமானமாய் வீச, சில்லு கோட்டில் பட்டுவிடுகிறது. ஏமாற்றத்தோடும் சோர்வோடும் குனிந்து சில்லியை எடுத்துக் கொண்டு அடுத்தவளுக்கு வழிவிட்டு நிற்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் தலையை அள்ளிக் கொண்டை போட்டபடி வெளியே வந்தாள் மனைவி. கூடவே கைகளை உயரே தூக்கி திமிர்விட்டபடி பெண்ணும் "போங்கப்பா வெளயாடப் போயிருந்தாலும் போயிருப்பேன்" என்றாள்.

"என்ன ஆச்சி' என்றான்.

"முடிஞ்சி போச்சி"

"டாக்டர் வரவேயில்லியா"

"யாரோ ஒரு டாக்டரம்மாதான் வந்தாங்க. டாக்டர் வரல" என்றாள் மனைவி.

"ஒரு வேள டாக்டர் இந்த வாரம் லீவு போட்டுட்டாரோ என்னமோ."

"ஆமா உங்களுக்கு இந்த நெட்டுல ஒண்ணும் கொறச்சல இல்ல."

"வரலண்ணா உடு. அடுத்த வாரம் வரப்போறாரு பாத்துக்கலாம்."

"அடுத்த வாரம் எங்க. நாம தான் சித்ரா கல்யாணத்துக்குப் போவப்போறமே. அந்த மத்தியான நேரம் எங்க இருக்கிறமோ. பெரும்பாலும் பஸ்லே பயணத்துல இருப்பம்."

"ஆமா..." என்று அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தவன் போல இழுத்தான் அவன்.

"நானும் தொடர்ந்து பாக்கறங்க, நாம எதனா பாக்கணம்னு உக்காந்தா அன்னைக்குத்தான் சோதனையா எதுனா ஒரு வேல வரும். இல்லன்னா நிகழ்ச்சி மிஸ் ஆவும். சும்மா கெடக்கற நேரமெல்லாம் கரண்ட் இருக்கும். நாம் எதுனா பாக்கனும்னா அன்னக்கி பாத்து கரண்ட் போவும். எத்தினி புரோக்ராம் இந்த மாதிரி. அன்னைக்கு ஒரு நாள் காலையில யாரோ உங்க ஃபிரண்டு கவிஞரோட பேட்டின்னீங்களே, அன்னைக்கு அப்படித்தான் பேட்டின்னு அறிவிச்சான், பொசுக்குன்னு கரண்ட் போச்சு. அப்படியே தோண்டி தொலங்கி கரண்ட் இருந்தாலும் பாத்துக்னு இருக்கும்போதே பாதில நிக்கும். எத்தினி படம் பழைய படம் இந்த மாதிரி பாதில போயிருக்குது. இன்னைக்கி எல்லாம் இருந்தும் அவரக்காணம். அடுத்த வாரம் வர்ராறோ என்னுமோ அப்பிடியோ வந்தாலும் நாம் இருக்க மாட்டோம்."

"அதுக்கென்னா பண்றது. வாழ்க்கையில எவ்வளவோ விஷயங்கள் இந்த மாதிரி. நாம்ப நெனைக்கிறது எல்லாமேவா நெறைவேறுது. நெறைவேறின வரைக்கும் பார்த்துக்னு போவ வேண்டியதுதான்."

"அவராவது எந்த வாரம் வர்ரேன்னு கரக்டா எழுதயிருக்கலாம்"

"அவருக்கே சரியா தெரியாததுனாலதான் ரெண்டு வாரத்துல எதுனா ஒரு வாரம்னு எழுதியிருக்காரு. ஏதோ ஒரு வாய்ப்பு கெடச்சி நடிச்சி இருக்கறாரு. அத நண்பர்கள் பாக்கணும்னு விரும்பி எழுதியிருக்கறார். வாய்ப்பு இருந்தா பார்க்கப் போறம். முடியலைன்னா அதக்காக என்னா பண்றது. செவுத்திலயா போய் முட்டிக்க முடியும்..."

"அக்கம் பக்கத்துல இருக்கறவங்கள்ல்லாம் வேற எல்லாரும் கேட்பாங்க! சார் ஃபிரண்டு வருவாருன்னீங்க. வரவேயில்லியேன்னு."

"இது கவலையா ஒனக்கு? இந்த வாரம் அவரு லீவு போட்டுட்டாராம். அடுத்த வாரம் கட்டாயம் வந்துடுவாருன்னு சொல்லு."

"ஆமா எல்லாம் உங்களுக்கு கிண்டல்தான்."

"கிண்டல் என்னா கெடக்குது இதுல. சீரியசாவே தான் சொல்றேன். அடுத்த வாரம் கட்டாயம் வந்துடுவார்னு சொல்லு" என்று இவன் வேப்பமரம் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். கிராப் தலைச் சிறுமி சில்லை நெற்றியில் வைத்து அண்ணாந்து கண்களை மூடி "ரைட்டா ரைட்டா" என நம்பிக்கை இழக்காமல் நடந்து கொணடிருந்தாள்.

இராசேந்திரசோழன்
Share: 




© Copyright 2020 Tamilonline