Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
யாருக்கு நன்றி!
குற்றம் பார்க்கின்....
- பானுமதி பார்த்தசாரதி|மே 2014||(4 Comments)
Share:
பத்து வருடங்கள் கழித்து வாசு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பத்து நீண்ட வருடங்கள் கழித்து இன்றுதான் கிராமத்துக்கு வருகிறான்.

அவன் வீடு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே இருபது பேர் உட்கார்ந்து பேசலாம்போல் பெரிய திண்ணை. அதில் சுண்ணாம்புப் பட்டையும், செம்மண் பட்டையும் அடித்துப் பளிச்சென்று இருந்தது. பழைய கால வீட்டின் அழகே அழகு என்று வியந்தது வாசுவின் மனம். பக்கத்திலிருந்த காலி மனையில் புதியதாய் ஒரு வீடு எழும்பியிருந்தது. இரட்டை அடுக்குகளாய் பார்க்க மிக அழகாய் இருந்தது.

வாசுவின் வீட்டு வாசலில் 'மணி மெஸ்' என்று ஒரு போர்டு. அந்த கிராமத்தில் யாரும் வாயிற்கதவை மூட மாட்டார்கள். எனவே காலிங் பெல்லை ஒருமுறை அடித்துவிட்டு நேராக உள்ளே நுழைந்தான். உள்ளே அப்பா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தார். அம்மா பெரிய முறத்தில் இருந்த காய்களைப் பிரித்துக் கொண்டிருந்தாள். காலிங் பெல் சத்தம் கேட்டு அப்பாவும் அம்மாவும் திரும்பிப் பார்த்தார்கள். "வாப்பா" என்றார் அப்பா. அம்மா 'வா' என்று தலையசைத்ததோடு சரி, உட்காரச் சொல்லி பழைய மர நாற்காலியை நகர்த்திவிட்டு உள்ளே சென்றாள்.

"மருமகள், பேரக் குழந்தைகள் எல்லாம் சௌக்கியமா?" என்றார் அப்பா.

உள்ளேயிருந்து வந்த அம்மா, "கை, கால் கழுவிக் கொண்டு வா. டிபன், காபி எடுத்து வருகிறேன்" என்றாள். இதற்குள் அத்தையும், மாமாவும் வந்து வரவேற்றனர்.

அம்மா ஒரு தட்டில் நான்கு இட்டலியும், சட்னி, சாம்பாரும் கொண்டு வந்தாள். "சாந்தி எங்கேம்மா?" என்றான். அம்மா அவனையே உறுத்துப் பார்த்து விட்டு "வேலைக்குப் போயிருக்கிறாள்" என்றாள்.

"என்ன வேலையாக இருக்கும்? ஏதாவது பால்வாடி ஸ்கூலில் டீச்சராக இருப்பாள்" என்று நினைத்துக் கொண்டான்.

சென்னையில் நம்மோடு இருக்கும்போது வெறும் பத்தாவதுதானே முடித்திருந்தாள். பிறகு பெரிதாக என்ன படித்திருக்கப் போகிறாள். இங்கே வந்தவுடனே மாற்றுத் திறனாளியான அத்தை மகனுடன் கல்யாணம் என்று பத்திரிகை வேறு அனுப்பியிருந்தார்கள். ஒரே தங்கையின் கல்யாணத்திற்கு ஒரே அண்ணனை நேரில் வந்து அழைக்கவில்லை. அவ்வளவு கோபம். அண்ணனாக அவனும் வரவில்லை.

எல்லாம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதுதான் வந்திருக்கிறான். கொஞ்ச நேரத்தில் சாந்தியும், அவள் கணவன் சிதம்பரமும் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினர். சிதம்பரத்தின் இடது கை சிறுவயதிலேயே போலியோ தாக்கிச் சற்று மெலிந்து வளைந்து இருக்கும். அதைக் காட்டிக்கொள்ளாமல் எல்லா வேலைகளையும் செய்வான்.

நல்ல உயரம். மாநிறம்தான். சாந்தி அளவு நல்ல சிகப்பு நிறம் கிடையாது. ஆனாலும் அவளுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தான். அவர்களோடு அழகாகக் கொஞ்சும் கிளிபோல் செக்கச் செவேலென்று ஓர் அழகிய பெண் குழந்தை. மூன்று வயதிருக்கும்.

"வாங்கண்ணா" என்றாள் சாந்தி.

"வாங்க மச்சான்" என்றான் சிதம்பரம். வாசு ஓடிப்போய் கையில் குழந்தையை வாங்கிக் கொண்டான்.

"பாப்பா பேர் என்னம்மா?"

"வசுமதி அண்ணா"

"எல்லாம் உன் நினைவால்தான். உன்னைக் கூப்பிடுவதுபோல் 'வசு வசு' என்று எல்லாரும் கூப்பிடுவோம்" என்றாள் அம்மா.

"அம்மா, போதுமே உங்கள் பேத்தி புராணம். அண்ணியும் குழந்தைகளும் சௌக்கியமா அண்ணா?" என்றாள், சாந்தி சகஜமாக. எந்தத் தயக்கமும் இல்லாமல் சந்தோஷமாக.

தங்கையை ஆச்சரியத்துடன் பார்த்தான் வாசு. தன் மனைவியோடு தானும் சேர்ந்து செய்த தவறுகள் அவன் மனதை வருத்தின. எல்லாவற்றையும் மறந்து எவ்வளவு அறிவாக அன்பாகப் பேசுகிறாள் இவள் என வியப்புற்றான்.

"என்ன மச்சான் அப்படிப் பார்க்கறீங்க? சாந்தி பேசறது ஆச்சரியமாக இருக்கா? பேசிப் பேசியே எல்லாரும் அவளுக்குத் தாளம் போட வைத்து விடுவாள். என்ன இருந்தாலும் டபுள் கிராஜுவேட் அல்லவா? நம்மைப் போலவா?" என்று கண்ணைச் சிமிட்டிவிட்டுச் சிரித்தான்.

"போதுமே" என்று முழங்கையால் அவனை இடித்தாள் சாந்தி.

"டபுள் கிராஜுவேட்டா!"

"ஆமாம் மச்சான். எம்.எஸ்ஸி. மேத்ஸ். கூடவே எம்.எட்." என்றான் சிதம்பரம்.

எல்லாரும் இரவுச் சாப்பாடு முடித்த பின்னர், "மச்சான் நீங்கள் நம்ப வீட்டு மாடியில் வந்து படுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியாக இருக்கும்" என்றான் சிதம்பரம்.

"ஆமாம். அண்ணா. பக்கத்து வீடுகூட மாமாதான் வாங்கிக் கட்டியிருக்கிறார். இந்த வீட்டு ஹாலிலிருந்தே அந்த மாடிக்குப் போகலாம்."

படுக்கை அறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் வாசு. எல்லா அறைகளிலும் 2 டன் ஏஸி. மூன்று பெட்ரூமிலும் டி.வி. உள்ளேயே பாத்ரூம், கீஸர் என்று வசதி செய்திருந்தான் சிதம்பரம்.

"படுத்து ரெஸ்ட் எடுத்துக்கப்பா. எல்லாம் நாளைக் காலையில் பேசிக்கலாம்" என்றார் அப்பா.

அடுத்தநாள் காலை எட்டு மணிக்குத்தான் கண் விழித்தான். கையில் காபியோடு கதவைத் தட்டினாள் சாந்தி.

"அண்ணா... காபி சாப்பிட்டுவிட்டு இங்கேயே குளித்து விடுங்கள். கீஸர் எல்லாம் வேலை செய்யும். நான் டிபனை மேலேயே எடுத்து வந்து விடட்டுமா?" என்றாள்.

"வேண்டாம்மா. குளித்துவிட்டு நான் கீழே வருகிறேன். மாப்பிள்ளை எழுந்து விட்டாரா?"

"மாமா கொஞ்சம் அத்தைக்கும் அம்மாவிற்கும் கீழே மெஸ்ஸில் உதவி செய்துவிட்டுப் பக்கத்தில் உள்ள தன் ஒர்க்‌ஷாப்புக்குப் போயிருக்கிறார்."

"மெஸ்?" என்றான் வாசு.
"ஆமாம் அண்ணா. அம்மாவும் அத்தையும் பொழுது போகாமல்தான் அதைத் தொடங்கினார்கள். இப்போது அதில் போதுமான அளவு வருமானம் வருகிறது. மேல்வேலைக்கு மட்டும் ஒரு அம்மாவை வைத்திருக்கிறோம்."

மெஸ்ஸில் இருந்து வந்த இட்லியும் வடையும் சாப்பிட்டான். அருமையாக இருந்தது. இந்த வயதிலும் இந்த நான்கு பெரியவர்களும் சும்மா உட்கார்ந்து வீண் கதை பேசாமல் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருப்பதை வியப்புடன் பார்த்தான்.

"அண்ணா, நாம் இவர் ஒர்க்‌ஷாப் பார்த்துட்டு அப்படியே நிலத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது. போய் வரலாமா?"

சிதம்பரத்தின் ஒர்க்‌ஷாப் பெரியதாகவே இருந்தது. சுத்தமாக இருந்தது. நான்கு கார்களும் ஒரு லாரியும் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

சிதம்பரம் அப்போதுதான் ஒரு காரில் பெரியவருடன் வந்து இறங்கினான். பழுதுபார்த்தல், சர்வீஸ் சார்ஜ், உதிரி பாகங்கள் என்று விவரமாக ஏழாயிரம் ரூபாய்க்கு அவன் பில் போட்டுக் கொடுத்தான். பெரியவர் மறுபேச்சில்லாமல் செக்கைக் கொடுத்துவிட்டுப் போனார்.

"மாமா. நானும் அண்ணாவும் நம் தோட்டம் வரைக்கும் வாக் போய்ட்டு வறோம்" என்று சொல்லிவிட்டு வாசுவுடன் புறப்பட்டாள் சாந்தி.

"சரி. அப்படியே அங்கே வாட்ச்மேனிடம் நான் சொன்னதை மறக்காமல் சொல்லிவிடு" என்றான் சிதம்பரம்.

மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வாழைத் தோப்பு, நெல், கரும்பு விளைநிலம் என்று எல்லாமாக 15 ஏக்கர் நிலம் இருந்தது. நிலத்தின் ஓரமெல்லாம் பனைமரம் வேலி போல் இருந்தது. இரண்டு பெரிய கிணறுகள் நீர் நிறைந்து இருந்தன. பம்ப்செட்டில் இருந்து இறைந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக வயலின் எல்லா இடங்களுக்கும் பாய்ந்து கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க வாசுவுக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது.

சிறிது நேரத்தில் சிதம்பரம் குழந்தை வசுமதியை அழைத்துக்கொண்டு பைக்கில் வந்து இறங்கினான்.

வாசுவுக்குச் சிதம்பரத்தின் வளர்ச்சி ஆச்சரியமாக இருந்தது. வாசு குடும்பத்தோடு சென்னைக்குப் போகும்போது அப்பாவுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தையும் விற்று எடுத்துக்கொண்டு போனான். அப்போது சிதம்பரம் இருபது வயதுப் பையன். சொந்த நிலம் கிடையாது. குத்தகைக்குத் தான் சிதம்பரத்தின் அப்பா பயிர் செய்து கொண்டிருந்தார்.

வாசு வீடு வாங்கியது மட்டும்தான் மிச்சம். அதுவும் சின்ன அபார்ட்மெண்ட். பேங்கில் போட்ட மீதிப்பணம் அவன் மனைவியின் சொல்படி பிசினஸ் செய்ததில் காலி. அப்பாவும் அம்மாவும் கோபித்துக்கொண்டு பத்தாவது முடித்திருந்த சாந்தியை அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு வந்து விட்டனர்.

"மாப்பிள்ளை, இந்தப் பத்து வருடத்தில் உங்கள் வளர்ச்சி ரொம்பப் பிரமாதம்" என்று சந்தோஷமாகப் பாராட்டினான் வாசு.

"எல்லாம் சாந்தியால்தான் மச்சான்"

"அப்படியா" என்றான் வாசு, ஆச்சரியமாக.

"அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா. இவர் நல்ல உழைப்பாளி. எந்த வேலையும் செய்யத் தயங்கமாட்டார். அதோடு அப்பா, அம்மா, மாமா, அத்தை என்று பெரியவர்களைக் கலந்துதான் எல்லாம் செய்வார். சின்னச் சின்ன செலவுகூடப் பலமுறை யோசித்துத்தான் செய்வார். அதன் பலன்தான் இதெல்லாம்" என்றாள்.

"மச்சான். சென்னையில் இருந்து வந்தவுடனே இந்த சாந்தி நாங்கள் செய்த எந்த உதவியையும் வாங்க மறுத்துவிட்டாள். உங்களிடமிருந்து உதவி பெற எங்களுக்கென்ன உரிமையிருக்கிறது என்றாள். நான் அவளைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் உரிமையோடு எந்த உதவியும் செய்ய முடியும், மேலே படிக்க முடியும் என்றாள். நானோ ஒரு கை குறைபாட்டோடு இருக்கிறேனே என்றால் ஒத்துக் கொள்ளவேயில்லை. 'உடல் ஊனம் ஒன்றுமேயில்லை. மனதில்தான் ஊனம் கூடாது' என்று ஒரே வியாக்கியானம்.

"திருமணம் முடிந்தபிறகு காலேஜில் சேர்ந்தாள். பிஎஸ்ஸி, எம்.எஸ்ஸி எல்லாம் முடித்து, எம்.எட்.டையும் முடித்தாள். வேலையும் கிடைத்தது, கிடைத்த சம்பளத்தை அப்படியே என்னிடத்தில் கொடுத்துவிடுவாள். சாந்தியின் சம்பளம், என் ஒர்க் ஷாப், அப்பா, அம்மா நடத்தும் மெஸ் இவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் என்று எல்லாவற்றிலும் சிக்கனமாக இருந்துதான் இந்த நிலங்களையும் வீடுகளையும் வாங்க முடிந்தது. சாந்திக்கு நகை, நட்டு இதிலெல்லாம் ஆசையில்லை. அதனால்தான் எல்லாம் மண்மேல் போட்டுப் பொன்னாகிறது" என்று முடித்தான்.

"அண்ணா, அண்ணி எப்படி இருக்கிறாங்க? உங்கள் மகள் கீதா எப்படி இருக்கிறாள்?" என்றாள் சாந்தி.

"கீதா விஷயமாகத் தான் இங்கே வந்தேன் சாந்தி. ஆனால் அம்மா, அப்பா இருவரும் பிடி கொடுத்தே பேசமாட்டேன் என்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகாலை முதல் அந்த மெஸ்ஸில் உழைப்பதைப் பார்த்தால் எனக்கும் வாய் திறக்க முடியவில்லை."

"என்னண்ணா விஷயம்?"

"கீதாவுக்கு நல்ல வரன் வந்திருக்கிறது சாந்தி. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் கேட்பதற்கும் என் நடப்புச் சூழலுக்கும் இரண்டு, மூன்று லட்சம் குறைகிறது. அதனால் அப்பாவிடம் கடன் வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன். வீட்டின்மேல் ஏதாவது பேங்கில் கடன் வாங்கிக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன்"

"ஓ. அப்பா என்ன சொன்னார்?"

"கேட்டேன் சாந்தி. வீடு உன் பெண் வசுமதியின் பேரில் கிரயப் பத்திரம் செய்து விட்டதாகவும், ஏற்கனவே எனக்கு நிலம் விற்றுக் கொடுத்து விட்டதால் வேறு ஏதும் செய்வதற்கில்லை என்றும் கை விரித்துவிட்டார்."

சாந்தியும் சிதம்பரமும் மௌனமாகக் கொஞ்ச நேரம் நடந்தார்கள்.

"மச்சான் நான் ஒண்ணு சொல்லட்டுமா? சாந்தியிடம் கொஞ்சம் நகை இருக்குது. அதை வாங்கி கீதா கல்யாணத்துக்கு பயன்படுத்திக் கொள்ளூங்கள்" என்றான் சிதம்பரம்.

"கீதாவுக்குக் கொடுப்பதற்கென்ன? சந்தோஷமாகக் கொடுக்கிறேன். லாக்கரில் தூங்கும் நகைகள் கீதாவின் திருமணத்திற்கு உபயோகமாகும். சங்கிலியும் வளையலுமாக ஒரு பத்துப் பவுன் இருக்கும். போதும் இல்லையாண்ணா..." என்றாள் சாந்தி.

"உனக்கு எவ்ளோ பெரிய மனசு சாந்தி. நானும் உன் அண்ணியும் உங்களை நிராதரவா அனுப்பியதை இன்னும் அப்பா, அம்மாகூட மறக்கலை. உனக்கு எப்படி மன்னிக்க முடிகிறது?" என்று கண் கலங்கினானான் வாசு.

"மச்சான், பழசைக் கிளறாதீங்க. ஆக வேண்டிய வேலையப் பாருங்க. அவளுக்கு மட்டும் உங்களை விட்டா யார் இருக்கிறாங்க?"

"ஆமாம் அண்ணா. இதிலென்ன இருக்கு? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்றாள் சாந்தி.

பானுமதி பார்த்தசாரதி,
சான் ரமோன், கலிஃபோர்னியா
More

யாருக்கு நன்றி!
Share: 




© Copyright 2020 Tamilonline