Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
- மதுரபாரதி, சி.கே. வெங்கட்ராமன், அர்விந்த்|மார்ச் 2014||(2 Comments)
Share:
தென்றல் குடும்பத்தின் அன்புள்ள சிநேகிதி டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரன். தென்றல் தொடங்கிய காலம் முதலே உடனிருப்பவர். எந்தப் பிரச்சனையையும் பரிவோடு அணுகி, யாரையும் புண்படுத்தாமல், பிளவு ஏற்படுத்தாமல், மனப்புண்ணுக்கு மருந்து கூறுபவர். 'அன்புள்ள சிநேகிதியே' பகுதிக்கு தினமும் வரும் கடிதங்களே அவரது கருத்துக்களை வாசகர்கள் எப்படி நேசிக்கிறார்கள் என்பதற்குச் சான்று. Electronic Media and Communication for development துறையில் தேர்ச்சி பெற்றவர். மருத்துவ சமூகத் துறை, இந்தியத் தொலைக்காட்சி, பன்னாட்டு நிறுவனங்கள் எனப் பலவற்றில் முக்கியப் பொறுப்பு வகித்துள்ளார். மகளிர் அதிகாரமடைதல் குறித்து உலகின் பலநாடுகளில் பயிற்சித் திட்ட வகுப்புகளும் பணிப் பட்டறைகளும் நடத்தியிருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார். நகைச்சுவை நாடகங்கள் எழுதி, இயக்கி, அரங்கேற்றியிருக்கிறார். கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தில் பல வருடங்கள் செயலாளராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். Art of India என்ற அமைப்பைத் தோற்றுவித்து இந்தியாவிலிருந்து பல கலைஞர்களை வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். கனெக்டிகட் ஆலயத் திருப்பணிகளில் மிகவும் ஈடுபாடு உடையவர். ஆராய்ச்சியாளர், சமூக ஆர்வலர், பயிற்றுனர், ஆலோசகர் எனச் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இவரைத் தென்றலுக்காகச் சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து...

*****


கே: உங்களை அன்புள்ள சிநேகிதியாக, அந்தரங்க ஆலோசகராக நினைப்பவர் பலர். எங்கே தொடங்கியது இந்தப் பயணம்?
ப: நான் கல்லூரிப் படிப்பை முடித்தவுடனேயே எனக்குப் பாண்டிச்சேரி ஜிப்மரில் (JIPMER) வேலை கிடைத்தது. மிகவும் இளவயதில் அந்த வேலையில் நான் சேர்ந்தேன். ஏராளமான அனுபவங்கள் அங்கே கிடைத்தன. ஒரு மத்தியதர கூட்டுக் குடும்பத்தில் இருந்த எனக்கு உண்மை வாழ்வின் அனுபவங்கள் அங்கே கிடைத்தன. மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என்று நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். மருத்துவக் கல்லூரி என்பதால் பிற கல்லூரிகளைவிட இருபாலர் நட்பு அதிகம் காணப்பட்டது. என்னுடைய தோழிகளுக்குள் எப்போது பிரச்சனை ஏற்பட்டாலும் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். நான் ரகசியத்தைக் காப்பாற்றுவேன் என்று ஒரு நம்பிக்கை. அதைக் கேட்டு என்னுடைய கருத்துக்களைச் சொல்வேன். அதனால் பலருக்கு நான் அந்தரங்கத் தோழியாகவே மாறிவிட்டேன்.

அந்த உண்மையான நட்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நண்பர்கள் இன்று எங்கெங்கோ சிதறி இருக்கிறோம். பல வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் நினைவுகள் பசுமைதான். I enjoyed counseling. நோயாளிகளும் ஆலோசனைக்கு வருவதுண்டு.

கே: அப்போது நடந்த சுவையான அனுபவம் ஏதாவது சொல்லுங்களேன்...
ப: அப்போது நான் மிக இளையவள். எனக்குப் பாலியல் கல்வி (sex education) எதுவும் கிடையாது. ஆனால் தொழில்முறை சமூக ஆலோசகர் என்ற முறையில் என்னிடம் ஒரு பிரச்சனை வந்தது. ஓர் இளைஞர் என்னிடம் வந்து தன் மனைவியுடன் மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் அதனால் உடல்நலத்துக்குக் கேடு ஏதாவது உண்டா என்றும் கேட்டார். முதலாவதாக, ஒரு ஆண் செக்ஸ் பற்றிய விஷயத்தை என்னிடம் பேசியதே மிகவும் கூச்சமாக இருந்தது. இரண்டாவது அந்த சப்ஜெக்டைப் பற்றிக் கேட்க மிகவும் அருவருப்பாக இருந்தது. 'அச்சச்சோ... இப்படியும் செய்வார்களா' என்று அதிர்ச்சியாகவும் இருந்தது. எனக்கு அதற்கு பதிலும் தெரியாது. ஆனால் அவருடைய பதட்டத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் எனக்குத் தொழில்முறையில் முக்கியமாகத் தோன்றியது. பாலியல் நோயோ அதற்கு முன்னோடியாகத் தொழுநோயோ (அப்படி வரும் என்று அக்காலத்தில் ஒரு நம்பிக்கை!) வந்துவிடுமோ என்று அவர் அஞ்சினார். நான் அவரிடம் "அதெல்லாம் கண்டிப்பாக வராது. ஆனால் இனிமேல் அதுமாதிரி உறவு கொள்ளாதீர்கள். அடுத்த வாரம் வந்து பாருங்கள்" என்று அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்து அனுப்பி விட்டேன். ஆனால் பிறகு என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.

எனக்கு ஆங்கிலோ இந்தியத் தோழி ஒருவர் இருந்தார். வெளிப்படையாகப் பேசுகிறவர். லைப்ரரியில் இருந்த பாலியல் கல்வி குறித்த ஒரு புத்தகத்தை எடுத்துத் தருமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் என்னை லைப்ரரிக்குக் கூட்டிச் சென்று அந்தப் புத்தகத்தை எடுத்து, நூலகர் முன்னிலையிலேயே, "இந்தா... ஒரு வாரமாக என்னைப் போட்டு இதற்குத்தானே பிராணனை வாங்கினாய்" என்று சொல்லியபடி கொடுத்தார். நான் அப்படியே கூனிக்குறுகிப் போனேன். அந்தக் காலகட்டத்தில் பிறர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற ஒரு உணர்வு. இப்படித்தான் ஆரம்பித்தது என்னுடைய கவுன்சலிங் பயணம்.

கே: பிறகுதான் ஆஸ்திரேலியா சென்றீர்களா?
ப: ஆமாம். அதுவும் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல் கல். என் நெருங்கிய சிநேகிதி திடீரென்று ஒருநாள் ஃபோனில் கூப்பிட்டு "நான் உனக்கு ஸ்பான்சர்ஷிப் விசா, டிக்கட் ஏற்பாடு செய்கிறேன். பிரயாணத்திற்குத் தயாராக இரு" என்று சொன்னாள். அந்தக் காலகட்டத்தில் இந்தியர்களே அங்கு அதிகம் போனதில்லை. அதுவும் திருமணமாகாத பெண். பெற்றோர்களிடமிருந்து நிறைய எதிர்ப்பு. ஆனால் என்னை அடையாளம் கண்டுகொண்டவள் நான். என்னுடைய எதிர்பார்ப்புகள், நட்பு என்ற உறவின்மீது நான் வைத்த நம்பிக்கை இவற்றால் கிளம்பிவிட்டேன். போனவுடனேயே ஒரு கல்லூரியில் லெக்சரராக வேலை கிடைத்தது. நிறைய நண்பர்கள். ஒவ்வொருநாளும் ஒரு புது அனுபவம். மகிழ்ச்சி, ஆச்சரியம், பயம் எல்லாம் கலந்திருந்தது.

இங்கே மான்கள் சாலையின் குறுக்கே ஓடுவதுபோல அங்கே கங்காருகள் வயிற்றில் குட்டியுடன் ரோடின் குறுக்கே ஓடும். இன்னொரு தமிழ் பேசும் அன்பரைக் காணச் செல்வதென்றால் 250 மைல் பயணம் செய்யவேண்டும். வாழ்க்கையின் அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்தன அந்த நாட்கள்.



கே: அங்கு நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் ஏதேனும் உள்ளதா?
ப: நிறைய உண்டு. ஒருமுறை இந்தியாவுக்குச் சில பொருட்களை அனுப்புவதற்காக போஸ்ட் ஆஃபிஸ் சென்றிருந்தேன். இனவெறியில் இரண்டாவது இடம் வகித்த நாடு ஆஸ்திரேலியா, அப்போது. நான் புடவை, நீண்ட தலைப்பின்னலுடன் பார்சலை அனுப்புவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன். என் முறை வந்ததும் அந்த போஸ்டல் கிளர்க், எனக்குப் பின்னால் இருந்தவரைப் பார்த்து "மே ஐ ஹெல்ப் யூ?" என்று கேட்டார். நான் புரியாமல் நகர்ந்து வழிவிட்டேன். ஆனால் பின்னால் இருந்த மற்றொரு பெண்மணி, "இல்லை. இவர்தான் எனக்கு முன்னால் இருந்தவர்" என்பதைக் காட்டி என்னுடைய பார்சலை வாங்க வைத்தார். அப்புறம்தான் என்னுடைய சின்ன மூளைக்கு அந்த போஸ்டல் கிளர்க் என்னை டிஸ்க்ரிமினேட் செய்திருக்கிறார் என்பது புரிந்தது. உடனே ரோஷம் வந்துவிட்டது. போகும்போது டாக்ஸியில் போனவள் திரும்பி வீட்டுக்கு விறுவிறுவென நடந்தேன்.

இனிமேல் இந்த இனவெறி பிடித்த நாட்டில் இருக்க வேண்டாம்; இப்போதே வேலையை ரிசைன் செய்துவிட்டு இந்தியா போகவேண்டும்; எப்படியெல்லாம் நம்மவர்களை நடத்துகிறார்கள் என்றெல்லாம் கோபத்தில் நினைத்துக்கொண்டே திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மற்றொரு மனது சொன்னது, "உன்னை உதாசீனம் செய்ததாக இவ்வளவு கோபம் வருகிறதே. உனக்காக மற்றொரு பெண் இங்கே குரல் கொடுத்தாளே! அவளும் ஆஸ்திரேலியர்தானே! அதை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை" என்று. பின்னர் மனது அடங்கியது.

அநியாயம் என்று ஒன்றைப் பற்றி நினைக்கும்போது எதிர்க்கும் சக்தியைப் பெருக்கிக் கொள்ளாமல் ஏன் நம்மையே எரித்துக் கொள்ளப் பார்க்கிறோம்? ஒருவர் தவறு செய்தால் ஏன் அந்தச் சமுதாயத்தையே முழுக்கக் குறை சொல்கிறோம்? எப்போதெல்லாம் யாராவது ஒருவர் நம்மை அவமானப்படுத்துவதாக நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் அதே சமுதாயத்திலிருந்து நம்மோடு நட்புப் பாராட்டவும் ஒருவர் இருக்கிறார் என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம்!

கே: சென்னைத் தொலைக்காட்சியில் பணிபுரிந்த அனுபவம் பற்றி...
ப: அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்று தொலைக்காட்சியில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி அதிகாரிதான் இருப்பார்கள். என்னுடைய ஆராய்ச்சித் துறையில் முதன்முதல் முதுநிலை பெண் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றது நான் மட்டும்தான். பல வருடங்கள் அந்த நிலை நீடித்தது. அதன்பின்னர்தான் டெல்லியிருந்து டாக்டர் திருமதி சரோஜ் என்பவர் இணைந்து கொண்டார். இந்தத் துறை என் முன்னாள் தொழில் அனுபவத்திற்குச் சம்பந்தமே இல்லாத துறை. சமூக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளை மக்கள் ரசிக்கும்படி எப்படித் தயாரிப்பது என்பது போன்ற நுணுக்கங்களைச் சொல்வது, செய்வது என் பொறுப்பில் ஒன்று.

அந்தப் பொறுப்பில் இருந்தபோது நூற்றுக்கணக்கான பழங்குடி மக்களின் குக்கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். எளிய வாழ்க்கை, அவர்கள் கொடுத்த எளிய உணவுகள் என்று எத்தனையோ நெகிழ வைக்கும் சம்பவங்கள். மனிதர்கள்மீதான அன்பைக் கூட்டிக்கொண்டுதான் போகச்செய்தது.

தொலைக்காட்சியில் வேலை பார்க்கும்போதுதான் நான் திருமதி. சாவித்ரி வைத்தி அவர்களைச் சந்தித்தேன். 200, 250 மத்தியதரக் குடும்பத்துப் பெண்களை ஒன்றிணைத்து அவர் நிறைய சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அவர் நடத்தி வந்த அந்த Monday Charity Club என்ற அமைப்பில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதேசமயம் அவர் ஆதரவற்ற முதியோருக்காக 'விச்ராந்தி' என்ற சேவை இல்லத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். அடிக்கடி தொழில்ரீதியாக நான் பயணம் செய்யும் நேரம் தவிர்த்து இதுபோன்ற சேவைப் பணிகள்தான் எனக்கு என்டர்டெயின்மெண்ட் ஆக இருந்தது. காரணம், என்னுடைய தொழிலே என்டர்டெயின்மென்ட் உலகம் ஆகிவிட்டிருந்தது. அதனால் சமூகசேவையும் எனக்கு என்டர்டெயின்மென்ட் ஆனது. அப்போதுதான் 'சௌஜன்யா' என்ற அமைப்பை உருவாக்கினோம்.

கே: 'சௌஜன்யா' என்ன செய்தது?
ப: 'சௌஜன்யா' என்றால் நல்லுறவு. 30, 40 பேர் வருவார்கள். எல்லாரும் ஒன்றிணைந்து தன்னம்பிக்கை, தன்னிரக்கம் போன்ற தலைப்புகளில் விவாதிப்போம். அதற்கு நல்ல வரவேற்பு. இங்கே (அமெரிக்கா) வந்து நிரந்தரமாகத் தங்குவது என்று முடிவெடுத்ததால் தொலைக்காட்சியிலிருந்து விலகவும், சௌஜன்யாவைக் கலைக்கவும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கே: அமெரிக்காவில் என்ன செய்தீர்கள்?
ப: Canadian International Development Agency மற்றும்ஆசியா-பசிஃபிக் பகுதிக்கு நான் ரீஜனல் கன்சல்டன்ட் ஆக மூன்றாண்டுகள் இருந்தேன். பெண்கள் அதிகாரமடைதல் (women empowerment) கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த திட்டப் பணிகளுக்காக இந்தோனேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை மற்றும் பல காமன்வெல்த் நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். குடும்பச் சூழலால் என்னால் முழுநேர வேலை எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்பின் குறுகியகாலப் பணிகள் சிலவற்றை எடுத்துக் கொண்டேன். UNDP, Asian Development Bank போன்றவற்றுக்காக வேலைகளைச் செய்தேன். எப்போது இந்தியாவுக்கு வந்தாலும் சென்னைக் கல்லூரிகளில் எலக்ட்ரானிக் & கம்யூனிகேஷன் துறையில் நிறைய கோர்ஸ்கள் நடத்தியிருக்கிறேன். நிகழ்ச்சிகளைச் தயாரித்தளித்திருக்கிறேன். பங்களாதேசம், மியான்மர், சாலமன் தீவுகள் போன்றவற்றுக்குச் சென்று வந்திருக்கிறேன். தமிழ்ச் சங்கங்கள், ஹிந்து ஆலயங்களுடன் இணைந்து நிறைய பணிகளைச் செய்திருக்கிறேன்.

கே: தென்றலுக்கு எழுத ஆரம்பித்தது எப்போது, எப்படி?
ப: பல வருடங்களுக்கு முன் - அந்த நாள் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது - சாயந்திர வேளை. அவசரமாகச் சமையல் செய்து கொண்டிருந்தேன். வெங்கட்டிடமிருந்து (தென்றல் பதிப்பாளர்) போன் வந்தது. அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தென்றலுக்கு எழுதுமாறு கேட்டுக் கொண்டார். தொலைக்காட்சி இயக்குனரும், எனது மதிப்பிற்குரிய நண்பருமான திருமதி. அகிலா சிவராமன் மூலம் அவர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். "One has to be committed to your commitment". ஆகவே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சிறிது தயங்கினேன். இருந்தாலும் அவர் தென்றலை விடாமல் அனுப்பிக் கொண்டிருந்தார்.

மூன்றாவது இதழ் கையில் கிடத்ததும் யோசித்துப் பார்த்தேன். கணவன், மனைவி இருவருமே professionals. வேலைக்குப் போகின்றவர்கள். இரண்டு குழந்தைகள். நேரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு குடும்பத்தைச் சமாளிக்கத் தத்தளிக்கும்போது இப்படி சமூக அக்கறையோடு எவ்வளவு தரமான இதழை இலவசமாகக் கொண்டு வருகிறார்! எனக்கே வெட்கமாகப் போயிற்று. பொறுப்பேற்க ஏன் தயங்கினேன் என்று நினைத்தேன். உடனே வெங்கட்டை போனில் கூப்பிட்டேன். அப்படிப் பிறந்ததுதான் தென்றலுடன் பந்தம். நாளாக ஆக இந்த பந்தம் இன்னமும் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. ஆனால் நான் முதலில் எழுதியது 'கங்கோபதேசம்' என்ற சிறுகதைதான். அந்தக் கதைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது..



கே: சொல்லுங்கள், அந்தக் கதையின் கதையை!
ப: நான் அரவிந்தாச்ரமம், ரமணாச்ரமம், சத்ய சாயி ஆச்ரமம், ஞானானந்தாச்ரமம் என்று பல ஆச்ரமங்களைச் சேர்ந்த பெரியவர்களுடைய உபதேசங்களையும், சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். என்றாலும் எனக்குக் குருவானர்கள் என்று பார்த்தால் ஒரு ஆட்டோக்காரர், பூக்காரர், எங்கோ இந்தோனேசியாவில் உள்ள ஒரு சமையல்காரர், ஒரு சமையல்காரி, மலேசியாவில் இருந்த ஒரு குடும்பத் தலைவி என்று சாதாரண மனிதர்கள்தான். அவர்களிடமிருந்துதான் நான் மானுடத்தின் மதிப்பீடுகளைக் கற்றுக் கொண்டேன்.

வெளியிடங்களில் வேலைபார்க்கும்போது ஒருசமயம் என் அம்மா வீட்டில் பல நாட்கள் இருக்க நேர்ந்தது. அப்போது தினமும் பூக்கொடுக்க ஒருவர் வருவார். நான்தான் பூ வாங்குவேன். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மட்டும் "இதை உங்க அம்மாகிட்ட குடும்மா" என்று சொல்லிக் கொஞ்சம் பூவைத் தனியாகக் கொடுப்பார். நான் ஒருமுறை அவரிடம், "அது என்ன அம்மாக்கு மட்டும் பூ கொடுக்கறீங்க? எனக்குக் கிடையாதா?" என்று கேட்டேன். உடனே அந்தப் பூக்கார அம்மாள், "உங்க அம்மாதானம்மா இந்த வீட்டு மகாலக்ஷ்மி. அவங்க நல்லா இருந்தா தானம்மா நீங்கெல்லாம் நல்லா இருப்பீங்க!" என்றார். அவர் ஒரு விதவை. 55 வயது இருக்கும். "பதிமூணு வயசில கல்யாணமாகி பதிமூணரை வயசுல தாலியறுத்தவம்மா நானு. எங்கம்மா அப்போ இந்தக் கூடைய என் கையில கொடுத்தாங்க. அதுதான் இன்னமும் சோறு போடுது" என்றார்.

அதைக் கேட்டதும் எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அந்தம்மா வாழ்க்கையில் எந்தச் சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. கல்யாண சுகம் என்பதே தெரியாது. அப்படியிருந்தும்கூட எல்லாக் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அந்தத் தன்னலமில்லாத மனதைக் கண்டு நான் நெகிழ்ந்து விட்டேன். வெளிநாடு சென்றும் அவருடன் என் தொடர்பு இருந்து கொண்டிருந்தது. பின்னர் அந்தப் பூக்காரி மறைந்து விட்டார். இன்றைக்கும் என் பிராத்தனையில் அவர் இருக்கிறார். நம் அடிப்படைப் பண்புகளை விடாமல் பாதுகாப்பவர்கள் இவர்கள்தான்.

'கங்கோபதேசம்' கதையை அந்தப் பூக்காரியின் கேரக்டர் பிரதிபலிப்பதாக எழுதியிருந்தேன். அந்தப் பூக்காரியின் பெயர்தான் கங்கம்மா. அப்புறம் தென்றலுக்குத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

கே: வேறு என்னென்ன எழுதியிருக்கிறீர்கள்?
ப: கதை, கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். அவை தவிர, 'Popping the Mustard Seeds' என்ற தென்னிந்தியச் சமையல் நூல் ஒன்று எழுதியிருக்கிறேன். கோவில்களுக்கு நிதி திரட்டுவதற்காக நிறைய நாடகங்கள் எழுதியிருக்கிறேன். எல்லாம் சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை நாடகங்கள். அமெரிக்க வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் கழித்துச் சாப்பிடுவது, மாமியார், மருமகள் பிரச்சனை, கணவர், குழந்தைகளுடனான அல்லாடல் என்று அந்த நாடகங்களில் சொல்லியிருக்கிறேன். 'குமரா சரணம்' என்ற பெயரில் பாடல்கள் எழுதி அதை CD ஆக வெளியிட்டிருக்கிறேன். ஏசுதாஸ் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். எனக்கு சங்கீதம் தெரியாது. ஆனால் பாடல் எழுதத் தெரியும். அதனால் நான் கடகடவென்று ஒரு பாடலை எழுதினேன். கனெக்டிகட் வேல்லி ஹிந்து டெம்பிளில் இருக்கும் பெருமாளைப் பற்றிய பாடல். வெங்கடேஸ்வரா நீ மலையிலும் சமுத்திரத்திலும் இருப்பவன். ஏன் வேல்லிக்கு வந்தாய் என்னும்படி அதை எழுதியிருந்தேன். ஏசுதாஸ் அதற்கு இசையமைத்து அன்று மாலை கோயில் நிகழ்ச்சியில் பாடினார்!

கே: அன்புள்ள சிநேகிதிக்கான வரவேற்பு குறித்து...
ப: தென்றல் வாசகர்கள் இந்தப் பகுதியைத் தொடர்ந்து ஆதரிப்பது மனதிற்கு மிகவும் தெம்பைக் கொடுக்கிறது. சில தெரியாதவர்கள் ஃபங்ஷனிலோ அல்லது ஃபோனிலோ வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்போது எங்கேயோ யாருக்கோ எனது கருத்து நல்லவகையில் பாதித்திருக்கிறது என்று அந்த ஒரு நொடி மனதில் மத்தாப்பூ பூக்கும். அதற்காக எல்லாரும் நான் எழுதுவதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நாம் ஒரு கருத்தை எழுதுகிறோம். ஆனால் அதை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு பத்திரிகை 20,000 பேருக்குப் போனால், ஒரு 5000 பேர் நான் எழுதியதைப் படிப்பார்கள். அதில் சிலர் பரவாயில்லை என்பார்கள். சிலர் இது தப்பு, இப்படியில்லை. இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது என்று ஒரு பட்டிமன்றம் வைப்பார்கள். ஆனால் எங்காவது ஒரு சிலருக்குத்தான் 'ஆஹா... இப்படிச் செய்து பார்க்கலாம்' என்று பொறி தட்டும். அறிவது (awareness) வேறு, உணர்வது (perception) வேறு. பின் அதிலிருந்து ஊக்கம் (motivation). அதற்குப் பின்னால் செயல்பாடு (action). உணர்ந்ததை ஏற்றால்தான் (acceptance) ஊக்கம் பிறக்கும். ஆனால் ஊக்கம் செயல் வடிவம் பெறுவது மிகவும் கடினம்.

ஏனென்றால் மனப்பான்மையை மாற்றுவது மிகமிகக் கடினமான விஷயம். ஒரு சின்னக் குழந்தைகூட 'நீ ஏன் தப்பு செய்தாய், சாரி சொல்லு' என்றால் சொல்லாது. பந்தைத் தர மாட்டேன் என்று மிரட்டினால்தான் வேண்டாவெறுப்பாகச் சொல்லும். குழந்தைகளே அப்படி என்னும்போது பெரியவர்களானால் இன்னும் கஷ்டம். மன இறுக்கத்தை நெகிழ்த்துவது ரொம்பவே கஷ்டம்.
கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: அருமையான குடும்பங்கள். அருமையான உறவுகள். எனக்கு மூன்று அம்மாக்கள். தைரியமாகச் சொல்கிறேன் என்று ஆச்சரியப்படாதீர்கள். என் அப்பா தசரதச் சக்கரவர்த்தி இல்லை. என் பெற்ற தாய் பரிமளா. என் ஆன்மீகத் தாய் சென்னைக்கு அருகே உள்ள திருமுல்லைவாயிலில் ஒரு ஆச்ரமம் அமைத்த செல்லம்மாள். இப்போது அவர் சித்தியாகி விட்டார். மூன்றாவது என்னுடைய சமூகத் தாய் சாவித்ரி வைத்தி. இந்த மூவருமே எனது அருமைத் தாய்கள். அப்பா பிஸினஸ் மேன். இப்போது இல்லை. பெரிய குடும்பம். சகோதரர்கள், சகோதரிகள், கஸின்ஸ் என்று எல்லாரும் ஒன்றாக வளர்ந்தோம். ஒரு சகோதரரின் மனைவி எங்க வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி. குடும்ப விளக்கு. நாங்கள் வளர்ந்த காலத்தில் எல்லாருடைய நண்பர்கள், சிநேகிதிகள் என்று எப்போது பார்த்தாலும் வீடு நிறைந்து கலகலவென்று இருக்கும். சொல்லிக் கொள்ளாமல் உறவினர்கள் வரும்போது தயிர் மோராகும். இன்னும் இரண்டுபேர் வந்தால் மோர், நீர் மோராகும். இன்னும் அதிகமானால் அது கல்யாண மோராகும். தண்ணீர் மட்டுமே 24/7 கிடைக்கும் வசதி. இல்லாமையின் இனிய நாட்கள் அவை.

உதாரணத்திற்குச் சொல்கிறேன். அப்போதெல்லாம் திருப்பதிதான் religious and vacation cum picnic spot. நாங்கள் போவதென்றால் தடதடவென்று நண்பர் குழாம் சேர்ந்து கொள்வார்கள். ஒரு பெரிய கம்பார்ட்மெண்ட் தேர்ட் க்ளாஸில் புக் செய்து விடுவார்கள். அம்மா ஒரு டிரம் நிறைய புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என்று மூன்று மணிக்கே எழுந்து தயார் செய்து எடுத்துக் கொள்வார். எல்லாரும் தங்குவதற்கு ஒரே ஒரு ரூம்தான் எடுத்துக் கொள்வோம். உங்களுக்கும் அந்த அனுபவம் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஒரு காபி, டீ வாங்கிச் சாப்பிடக்கூட யோசிக்க வேண்டும். அப்போது இல்லாமையைப் பங்குபோட்டுக் கொண்டு இனிமையாக இருந்த காலம்.

சிலவருடங்களுக்குப் பிறகு எல்லாருக்கும் திருமணம் ஆகி, எங்கெங்கோ செட்டில் ஆகி இதே திருப்பதிக்கு வந்தோம். ஒரு கான்வாய் போல ஏழெட்டு கார்கள். அவரவர்கள் தங்கள் குடும்பத்துடன். ஏதோ இழந்ததைப் போலத்தான் தோன்றியது, அந்தப் பயணத்தில். அந்த வெறுமையைத் தவிர்க்க யோசித்துப் பார்த்தேன். ஒரு சமூகநிலையில் ஒரு வயதில் வசதிகள் எல்லாம் ரொம்ப அவசிய தேவையாகிப் போன நிலை வந்திருந்தது. குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் எல்லாரும் ஒற்றுமையாக இருப்பதின் பலம்தான் இனிமையைக் கூட்டிய நாட்கள் என்று நினைக்கிறேன். எல்லாமே mindset தானே! இழந்ததை நினைத்து வருத்திக்கொண்டே ஏன் இருக்கின்ற வாழ்க்கையைத் தொலைக்க வேண்டும்?

கே: கணவர், குழந்தைகள் உங்களுக்குக் கொடுக்கும் ஆதரவு பற்றி...
ப: மகன் ஒரு ஜர்னலிஸ்ட், மனைவி, இரண்டு வயது மகளுடன் ஷாங்காயில் (சீனா) இருக்கிறார். மகள் எம்.பி.ஏ. கணவர், ஒரு வயதை எட்டப் போகும் மகள். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அவர்களும் வந்துவிட்டார்கள். அமெரிக்கக் கலாசாரத்தில் வளர்ந்துவிட்ட படியால் எந்த ப்ராஜெக்ட்டை எடுத்து நான் செய்தாலும் ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வார்கள். என்கரேஜிங்காகப் பேசுவார்கள். கணவர் எஞ்சினியர். ஒரு கார்ப்பரெட் நிறுவனத்தில் பெரிய பதவி வகிக்கும் எவருக்கும் இருக்கும் திறன், அவருக்கும் எனது ப்ராஜெக்டை அனலைஸ் செய்வதில் இருக்கும். அன்புள்ள சிநேகிதியே பகுதியைத் தவிர்த்து மீதி எந்த ப்ராஜெக்ட் எடுத்துக் கொண்டாலும் அவருடன் டிஸ்கஸ் செய்வேன். நான் நாடக அரங்கேற்றம் செய்யும்போதெல்லாம் அவருக்குத்தான் டைரக்டர் என்ற அங்கீகாரம் இருக்கும். எதிலும் மிகவும் இன்வால்வ்ட் ஆக இருப்பார். தேவையான உதவிகளை அந்தந்தக் காலத்தில் செய்து மிகவும் சப்போர்ட் ஆக இருப்பார். தேவைப்படும் நேரங்களில் அவர் இருப்பார்.



கே: உறவுகளில் விரிசல்கள் ஏற்படக் காரணம் என்ன, அதற்கு என்ன தீர்வு?
ப: என்னைப் பொறுத்தவரை இரட்டை அளவுகோல், (double standards) சுயநல உணர்வு. எப்போது தனக்கு ஒரு நியாயம்; அடுத்தவருக்கு ஒரு நியாயம் என்று நினைக்கிறார்களோ அப்போதே உறவில் விரிசலும் ஆரம்பித்துவிடுகிறது.

நம்மை நம்பியிருக்கும் ஒரு உறவை சுயநலம் விட்டுக்கொடுத்து விடுகிறது.

நம் எல்லாருக்கும் புரிபட்ட, புலப்பட்ட சமுதாயத்தை உரைகல்லாக வைத்துக் கொண்டு மற்றவர்களை எடை போடுகிறோம். கல்சுரல் ஷாக்ஸ் வெளியிலிருந்து வருவதைவிட குடும்பத்துக்கும் குடும்பத்துக்கும் ஏற்படும் கலாசார இடைவெளிகளில்தான் உண்டாகிறது.

நமக்கு ஒரு பாதிப்பு என்று வரும்போது நாம் உறவின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் சடாரென்று அதை முடித்துக் கொண்டு விடுகிறோம். நமது சொந்தமோ நட்போ யாராக இருந்தாலும் அவர் அப்படி ஒரு பாதிப்பை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறாரா, ஏற்படுத்தக் கூடியவரா என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை என்பது எனது அனுபவம்.

ஆனால் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையில்லை. அதுவும் திருமணமாகி மனைவி என்று வந்துவிட்டால் இருவருக்கும் இடையே அட்ஜஸ்ட்மெண்ட் ரொம்ப அவசியம். அப்புறம் குழந்தைகள் வந்தால் அது ஜாஸ்தி ஆகும். பிரச்சனை இல்லாமல் இருக்கவே முடியாது. எல்லாரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் "அவங்க மாறணும்... அவங்க மாறணும்" என்றுதான். ஆனால் 'நாம்' மாறுவதை, 'தன்னை' மாற்றிக்கொள்வதைப் பற்றி நினைப்பதில்லை. போராட்டம் நம்முடனேதான்.

அதேசமயம் யாரானாலும் நாணயம் என்பது மிகவும் முக்கியம். அது இல்லையென்றால் எந்த நட்பும், உறவும் நிலைத்து நிற்காது. பார்வையில் கோளாறு என்றால் அதற்கேற்ப +5, -5 என்று கண்ணாடி அணிந்து நம் கண்ணோட்டத்தை மாற்றி விடுகிறார்கள். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளும் அப்படித்தான். பிரச்சனைகள் மாறப் போவதில்லை. சிலவற்றுக்குத் தீர்வே கிடையாது. அப்படியென்றால் என்ன செய்வது? என் ஆலோசனை என்னவென்றால், give them those kind of the glasses - adjustment glasses - so that you can look at the problem in a different manner. அதுதான் என் அணுகுமுறை. என் ஆலோசனைதான் அது. ஆனால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லலாம். ஆனால் அதை ஏற்பது, ஏற்க வைப்பது மிகவும் கஷ்டம். ஒரு சர்ஜரி பண்ணிக் கொள்ளுங்கள் என்றால் டாக்டரை நம்பிச் செய்துகொண்டு விடுவார்கள். ஆனால் இதை மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள், இதன்படி நடவுங்கள் என்றால் ரொம்பக் கஷ்டம். அது அவர்களுக்குப் பெரிய மானப் பிரச்சனை ஆகிவிடுகிறது.

போன வாரம் ஒரு கேஸ். "மனைவி காளி மாதிரி கத்துகிறாள். என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை" என்றார் ஒருவர். இதற்கு இரண்டு தீர்வுகள்தாம் உள்ளன. முதல் தீர்வு, மனைவியிடமிருந்து விலகிவிடுவது. அது முடியாது, ஏனென்றால் உங்களுக்கு வளர்ந்த இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால், அவர் கத்துவதை இசைபோல ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றேன். தண்டவாளத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ரயில் செல்லும் சப்தம் கேட்டுக் கேட்டுப் பழகிப் போய்விடும். ஆனால் மற்றவர்களுக்கு அது எரிச்சலூட்டும். அதுபோல உங்களுக்கும் இது கேட்டுக் கேட்டு நாளடைவில் பழகிவிடும் என்று சொன்னேன். இல்லாவிட்டால் இதையெல்லாம் வெறும் ஒலியலைகளாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றேன். மனசால் குத்துவது, குதர்க்கமாகப் பேசுவது என்று எல்லாவற்றையும் வெறும் ஒலியலைகளாக மட்டும் எடுத்துக் கொண்டால் நம்முடைய பாதிப் பிரச்சனைகள் காணாமல் போய்விடும் என்றேன். எனக்கு நானே என்ன அறிவுரை சொல்லிக்கொள்வேனோ அதைத்தான் மற்றவர்களுக்குச் சொல்வேன்.

கே: இந்திய-அமெரிக்கப் பெண்கள் குறித்து....
ப: அவர்களைப் போன்ற திறமைசாலிகள் கண்டிப்பாக இல்லை. நீங்கள் இருவரும் கோபித்துக் கொள்ள வேண்டாம். உங்களைப் பற்றியும் எழுத நேரம் வரும். உலக அளவில் புலம்பெயர்ந்த பெண்களுக்கு மொழியும் வாழ்க்கை முறையும்தான் பிரச்சனைகளாக இருக்கும். ஆனால் இந்தியப் பெண்களுக்கு ஆடை, மொழி, கலாசாரம் எல்லாமே மாறுபடும். குறிப்பாக 12 வருடங்களுக்கு முன்பு புலம்பெயர்ந்த பெண்களைப் பற்றிச் சொல்கிறேன். அவர்கள் பண்டிகைகளையும் விட்டுக் கொடுப்பதில்லை. பார்ட்டிகளையும் விட்டுக் கொடுப்பதில்லை. சமையல், சங்கீதம், நடனம் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி. எதையும் புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம். கணவருக்கு ஈடாக சம்மரில் புல்லை வெட்டிக்கொண்டு, கார்டனில் இலையை வாரிக்கொண்டு, வின்டரில் ஸ்னோவைத் தள்ளிவிட்டு, ஒரு சனி, ஞாயிறு ஆனால் 700 இட்லி, பூரி என்று வகைவகையாகச் செய்து விரதாபிஷேகம் முதல் சதாபிஷேகம் வரை பிறர் வீட்டு ஃபங்ஷனுக்கு உதவி செய்து.... ஜஸ்ட் அமேசிங்.

ஆசார மாமியாரும், அனுஷ்டானங்களை விடாத மாமனாரும் பிகு செய்யும்போது கொஞ்சம் அங்கே இங்கே என்று நெருடல்கள் இருக்கத்தான் செய்யும். அதை ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு முறை அமெரிக்கப் பயணம் செய்யும் மாமியார்கள் கொஞ்சம் மாறிக் கொண்டுதான் வருகிறார்கள். இந்திய-அமெரிக்கப் பெண்களுக்குப் பிரச்சனை வருவது அமெரிக்காவின் கலாசார மோதல்களால் அல்ல. இந்தியாவிலிருந்து வருபவர்களின் எதிர்பார்ப்புகள் பெரிதாக இருந்து அதனை இங்கே உள்ளவர்களால் நிறைவேற்ற முடியாமல் போகும்போதுதான். இவர்கள் தங்களால் முடிந்தவரை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். முடியாமல் போகும்போதுதான் பிரச்சனையாகிறது.

கோவிலுக்கு ஒன்று; பார்ட்டிக்கு ஒன்று; வேலைக்கு ஒன்று என்று ஆடைகளை மாற்றிக்கொண்டு வரும் விதமென்ன! வரலக்ஷ்மி நோன்பை முடித்துவிட்டு, கான்ஃபரன்ஸ் காலுக்காக அமெரிக்கன் ஆக்ஸென்டுக்குத் தங்கள் குரலை மாற்றிக் கொள்ளும் திறனென்ன! சனிக்கிழமை சாக்கர் மாம்ஸ் என்று சொல்லி குழந்தைகளை கூட்டிக் கொண்டு ஓடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை பால விஹார், பால விகாஸ், பாட்டு, பரதம் என்று விட்டு விட்டு வருவார்கள். நம் இந்திய - குறிப்பாக தமிழ் - பெண்கள் மிகவும் ஸ்மார்ட். இந்த நேர்காணலை நான் புலம்பெயர்ந்த தமிழ்ப் பெண்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: உறவுகள் மிக முக்கியம். உறவுகளில் மன வேறுபாடு இருந்தால் உடனே ஃபோனை எடுங்கள், நீங்களாகவே மனம் விட்டுப் பேசுங்கள். ஒருமுறை செய்து பார்த்தால், நீங்களே சந்தோஷப்படுவீர்கள். சில காரணங்களால், சில சூழல்களால் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தவர்கள் பேசிக்கொள்ளாமல் போக நேரிடலாம். ஆனால் அவர்களுக்கு ஏதேனும் ஒரு trigger point கிடைத்து, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளும் சூழல் அமைந்தால், அந்தத் தருணம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். சகோதர, சகோதரி உறவுகளிலும் சொத்து, பாகப்பிரிவினை இப்படிப் பல விஷயங்களில் விரோதம் நேர்ந்து விடுகிறது. ஆனால் இதிலும் சில பிரச்சனைகள் இருக்கலாம். நாம் பேசினாலும்கூட அவர்கள் அதே மாதிரி எதிர்கொள்வார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பரவாயில்லை.

உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. நீ என்னிடம் நன்றாக இருந்தால், உன்னிடம் நான் நன்றாக இருக்கிறேன். நான் நல்லவன், நேர்மையானவன், மனந்திறந்து பேசுகிறவன்; அதற்காக உன்னிடமிருந்து அபத்தத்தை ஏற்கமுடியாது. கணவனோ, மாமனாரோ, மாமியாரோ எல்லோரிடமிருந்தும் நியாயத்தை எதிர்பார்க்கிறார்கள். எல்லாம் அப்படி நட்பு நிலையில்தான் போய்க்கொண்டிருக்கிறது.

உரையாடல்: மதுரபாரதி, சி.கே. வெங்கட்ராமன்
படங்கள்: அர்விந்த்

*****


பாண்டிச்சேரியில் வடநாட்டுத் தம்பதிகள்
ஜிப்மரில் பஞ்சாபி மருத்துவ தம்பதிகள், என்னைவிடப் பெரியவர்கள் காதல் திருமணம். இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தப் பெண்ணின் தந்தையும் ஒரு டாக்டர். எல்லாருமே அந்த கேம்பஸில்தான் வசித்தனர். அந்தப் பெண்ணுக்கு ஒரு தங்கை. அவளுக்குத் திருமணமானது. அதன்பின் அவள் வந்து தன் கணவன் தனக்களிக்கும் சுதந்திரத்தைப் பற்றி இந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறாள். அதைக் கேட்கக் கேட்க தன் கணவன் அப்படி இல்லை என்பதாக நினைத்து, சண்டை போட்டு, நாளடைவில் விஷயம் விவாகரத்துவரை போய்விட்டது.

அவள் பிரிந்து சண்டிகருக்கு தன் அம்மா வீட்டிற்குப் போய்விட்டாள். விவாகரத்துப் பேப்பரில் கையெழுத்துப் போடுவதற்காகச் சண்டிகரிலிருந்து திரும்பி வந்தாள். விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. என்னுடைய நண்பர் டாக்டர். தாஸ்குப்தா என்னிடம் வந்து இவர்களைச் சேர்த்து வைக்க ஏதாவது செய்யமுடியுமா என்று கேட்டார். "மேடம், நான் வயதில் சின்னவள். அவர்கள் சூழல் வேறுபட்டது. பஞ்சாபிகள். தொழில், அந்தஸ்து, பணம் எல்லாவற்றிலும் என்னைவிட மேலானவர்கள். நோயாளி என்றால் ஏதாவது செய்யலாம். இவர்களுக்கு ஒன்றுமே செய்யமுடியாது" என்றேன்.

இரண்டு நாள் கழித்து நான் வெளியே செல்லும்போது என் டிரைவர், "அந்த டாக்டர்ஸ் பிரிஞ்சு போறாங்க இல்லையா. நீங்க அதுக்கு ஏதாவது பண்ணணும்" என்றார். "இல்லப்பா, நான் எப்படி அதில் தலையிட முடியும்? நீ யாருன்னு அவங்க என்னைக் கேட்டா நான் என்ன சொல்வேன்?" என்றேன். அவரோ விடாப்பிடியாக, "இல்லை மேடம். உங்களால்தான் அது முடியும். வாழ்க்கையில் பஸ்ல போறோம், மார்க்கெட்டுக்குப் போறோம். யார் யாரோ எதெதுக்கெல்லாமோ திட்றாங்க. கண்டக்டர் முன்னாடி போய்யா, வழியில நிக்காத தண்டமான்னு சொல்லுவார். பூக்காரி 'பூ வாங்க வந்த மூஞ்சியப் பாரு'ன்னு திட்டுவா. அதையெல்லாம் நாம் கேட்டுக்கிட்டு பேசாமதான் போறோம். அதுமாதிரி ஒரு நல்ல காரியம்தான் நாம செய்யறோம் அப்படின்னு நினைச்சு நீங்க முயற்சி பண்ணிப் பாருங்க" என்றார்.

அவர் பெயர் குழந்தைசாமி. அவர் என்னை convince செய்தார். அவரைவிட அதிகம் படித்த டாக்டரால் என்னை ஏற்கவைக்க முடியவில்லை. நல்ல காரியந்தானே செய்யப் போறீங்க, திட்டினாத் திட்டட்டும் என்று சொன்னார் அந்த டிரைவர். என் தோழிகள்கூட "உன்னால் முடியாது, என்ன செய்தாலும் பயனில்லை" என்று என் மனந்தளரப் பேசினார்கள். என் மனதில் நல்லது செய்யத் தூண்டிய கன்வெக்‌ஷனையும் ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியவர் அந்த ட்ரைவர்தான். இதே போல் நிறையபேர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அவர் சொன்னபடி நான் ஒரு முயற்சி எடுத்தேன். சந்தர்ப்பம் அமைந்து இருவரிடமும் தனித்தனியாகப் பேசி அவர்களுக்கிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தினேன்.

அந்தப் பெண் டாக்டர், "என் தம்பி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரச் சொல்லிவிட்டான். நான் போகப் போகிறேன்" என்றார். நான், "சரி, எல்லாவற்றையும் தம்பி பார்த்துக் கொள்வார். ஆனால் குழந்தைக்கு அப்பா வேண்டுமே. தந்தைப் பாசத்தைக் கொண்டுவர முடியுமா? இல்லாவிட்டால் நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டிவரும். நீங்கள் ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டவர்களாயிற்றே, உங்கள் குழந்தைகள் நிலையை நினைத்துப் பாருங்கள்" என்று சொன்னேன். இதில் என் பங்கு ஒன்றும் பெரியதில்லை. இந்த நிலையில் இருப்பவர்களின் மனத்துக்குள்ளே ஒரு எரிமலை குமைந்து கொண்டிருக்கும். அதிலிருந்து தப்பிக்கத் துடித்துக் கொண்டிருப்பார்கள். நம்பிக்கையின் ஒரு ஒளிக்கீற்று கிடைத்தால் பிடித்துக்கொள்வார்கள். முதலில் ஒருவருக்கொருவர் ஃபோனில்கூடப் பேச மறுத்தவர்கள் பின்பு பேசினர்.

இதன்பிறகு அவர்கள் ஒன்றாகி விட்டதாக நண்பர்கள் வந்து சொன்னார்கள். நான் ஒருமுறை பார்த்தபோது அந்தப் பெண் டாக்டர், "சித்ரா, என்ன மாயம் செய்தீர்கள் நீங்கள்?" என்று கூறி வெட்கப்பட்டார். அதன்பின், "பழைய நாட்கள் மாதிரி நாங்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்று கூறினார்.

*****


யார் காரணம்?
ஒரு கணவன்-மனைவி. கணவன் குடும்பத்தினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கீழ்மத்தியதர வர்க்கக் குடும்பம். பெண் வேறு மாநிலம். குடும்பம் கொஞ்சம் வசதியானது. அவன் படிக்க வந்திருந்தான். அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். பையனின் அம்மா, அப்பா ஊரிலிருந்து வந்திருந்தனர். 'ஏன் தாலி போட்டுக் கொள்ளவில்லை? மெட்டியை ஏன் கழற்றி விட்டாய்? இன்றைக்கு நல்ல நாள் தலைக்குக் குளிக்க வேண்டாமா?" சமையலில் ஏன் இவ்வளவு எண்ணெய், காரம்... என்று ஏகப்பட்ட புகார்கள். அந்தப் பெண்ணால் தாங்க முடியவில்லை. அவள், "நாங்களே இன்னும் ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. அவன் (கணவர்) வேறு எங்கோ இருக்கிறான், நான் எங்கோ இருக்கிறேன். எங்கள் குடும்ப வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள்" என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். மகனை "அவன்" என்று மருமகள் சொல்லிவிட்டதால், மாமியாருக்கு இன்னமும் கோபம் வந்து விட்டது. "இவள் நம் குடும்பத்துக்கு ஏற்றவளில்லை. இவள் என் வீட்டுப் படியேறக் கூடாது" என்று மகனிடம் சொல்லி, அது விவாகரத்துவரை போய்விட்டது.

இதற்குக் காரணம் அந்த மாமியார் தனது கலாசாரத்திலேயே ஊறிப்போனதுதான். இப்போதெல்லாம் இங்கே இரு மதங்களைச் சார்ந்தவர்களுக்கிடையே திருமணம் சாதாரணமாகி விட்டது. ஆனால் நம் ஊரில் அத்தை, மாமா பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள மறுத்தாலே வெட்டு, குத்து என்று போகும் ஆட்கள் இருக்கிறார்கள்.

நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. தமது கலாசாரத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையும் பற்றும்தான் இதற்குக் காரணம். அது நொறுங்கும்போது அவர்களால் தாளமுடிவதில்லை; ஏற்க முடிவதில்லை. கிராமத்திலேயே அத்தை, பாட்டி, மாமா என்று வளர்வதற்கும், மும்பை, டில்லி என்று சென்று வளர்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வெளியே போனால் நமது மனது விசாலமாகிறது.

"நாமெல்லாம் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம். பின் ஏன் சண்டை நடக்கிறது?" என்று அந்த மருமகள் என்னைச் சந்தித்தபோது கேட்டாள். கண்ணோட்டம் மாறுவதுதான் காரணம். ஏற்க மனமில்லை என்பதுதான் விஷயம். அந்த நிலைமை இப்போது மெதுமெதுவாக மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் நாம் என்ன செய்தாலும் சிலர் குறை சொல்லிக்கொண்டு, எதிர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதுதான் சமூக யதார்த்தம் என்று விளக்கினேன்.

*****


நட்பும் எழுத்தும்
ஒருமுறை நானும் என் தோழி சுந்தரியும் சேர்ந்து ஒரு கதை எழுதினோம். அது ஆனந்தவிகடனில்தான் வெளிவர வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதுபோல அந்தக் கதை ஒரு புனைபெயரில் ஆனந்தவிகடனில் வெளிவந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒருமுறை வேலை நிமித்தமாக சிங்கப்பூர், மலேசியா என்று அலைந்து கொண்டிருந்தேன். Very stressful workload. அதை மறக்க கடைவீதியில் ஆனந்த விகடனைப் பார்த்து ஆசையாக வாங்கினேன். பக்கத்தைப் புரட்டினால் ஒரு பக்கத்தில் நான், தோழி சுந்தரி என எங்கள் இருவரது புகைப்படத்துடனும் அந்தக் கதை அந்த ஆண்டின் மிகச் சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த விவரம் வெளியாகி இருந்தது. அது ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்த தருணம்.

என்னுடைய புகைப்படம் எப்படி விகடனுக்குக் கிடைத்தது என்று தீவிரமாக யோசித்தேன். என் தோழி, நான் எந்த தேசத்தில் இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்கத் திண்டாடி, என் வீட்டுக்குப் பலமுறை ஃபோன் செய்து, என் புகைப்படத்தை வாங்குவதற்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள். "இது ஒரு கூட்டு முயற்சி. உங்கள் போட்டோ கிடைக்கவில்லை என்றால் என்னுடையதையும் போட வேண்டாம் என்று நான் திட்டவட்டமாக அவர்களிடம் சொல்லி விட்டேன்" என்று பல மாதங்கள் கழித்து என்னைச் சந்திக்கும்போது அவள் சொன்னாள். இதுதான் நட்பின் அடையாளம். நம்பிக்கையின் இலக்கணம். இந்தக் கதைக்குக் கிடைத்த பரிசைவிட இது போன்ற சிநேகிதி எனக்கு இருக்கிறாள் என்பதுதான் பெருமையாக இருக்கிறது.
Share: 




© Copyright 2020 Tamilonline