Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
ருக்மிணிதேவி அருண்டேல்
- பா.சு. ரமணன்|மார்ச் 2014|
Share:
தமிழகத்தின் தொன்மைக் கலைகளுள் ஒன்றான பரதக்கலைக்குப் புத்துயிரூட்டி, அதன்மீது மக்களின் கவனத்தை திருப்பியவர் ருக்மிணிதேவி அருண்டேல். இவர், 1904 ஃபிப்ரவரி 29 அன்று மதுரையில் நீலகண்ட சாஸ்திரிகள்-சேஷம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தேர்ந்த நீலகண்ட சாஸ்திரிகள் பொதுப்பணித்துறைப் பொறியாளர். சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்த அவர், சிறந்த எழுத்தாளரும் கூட. தாயார் சேஷம்மாள் பாரம்பரிய இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். இருவரது ஞானமும் ருக்மிணிதேவிக்கு வாய்த்தது. தந்தையிடமிருந்து அகிம்சை, உயிர்களிடத்து அன்பு, நேர்மை, வாய்மை ஆகிய நற்குணங்களைப் பெற்றார். தாயாரிடமிருந்து இசை. தந்தை பணி நிமித்தம் ஊரூராக மாறிக் கொண்டிருந்ததால் ருக்மிணிதேவியால் நிலையாக ஓரிடத்தில் தங்கிப் பயில இயலவில்லை. அதனால் வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து கல்வி போதிக்கப்பட்டது. நீலகண்ட சாஸ்திரிகள் புதுக்கோட்டை மன்னர் அரண்மனையில் திவானாகப் பணியாற்றியபோது ருக்மிணி திருக்கோகர்ணம் டவுன் ஹைஸ்கூலில் சேர்ந்து சிலகாலம் பயின்றார். அரண்மனையில் நடக்கும் நவராத்திரி விழாவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பங்குகொள்வர். தந்தையோடு சிறுமி ருக்மிணியும் உடன் சென்று அக்கச்சேரிகளைக் காண்பாள். அதனால் சிறுவயதிலேயே இசையார்வம் சுடர்விட்டது. அறிவுக் கல்வியோடு கர்நாடக இசை, வயலின், வாய்ப்பாட்டு போன்றவற்றையும் கற்றுக்கொண்டார்.

அக்காலகட்டத்தில் அன்னி பெசண்ட் நிறுவிய தியசாஃபிகல் சொசைட்டிக்கு (பிரம்மஞான சபை) படித்தவரிடையே நல்ல வரவேற்பு இருந்தது. நீலகண்ட சாஸ்திரிகளும் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்தார். பணி ஓய்வு பெற்றபின் சென்னைக்குக் குடிபுகுந்த சாஸ்திரியார், சபைக்கு அருகிலேயே அடையாறில் சொந்தமாக ஓரிடத்தை வாங்கி அங்கு வசித்தார். ருக்மிணிதேவியின் மூத்த சகோதரரான ஸ்ரீராமும் பிரம்மஞான சபையில் சேர்ந்ததுடன் அதன் முக்கியப் பொறுப்புகள் சிலவற்றையும் ஏற்றுக்கொண்டார். சிறு பெண்ணான ருக்மிணி வீட்டருகே இருந்த தியசாஃபிகல் சொசைட்டிக்கு அடிக்கடிச் சென்று வந்தார். ஆரம்பத்தில் திருவல்ல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூலில் பயின்று வந்த ருக்மிணிதேவி, பின்னர் அன்னி பெசண்டிடம் கல்வி கற்கலானார். புரட்சிகர சிந்தனைகள் அவர் மனதில் தோன்றின.

பால்ய விவாகம் பழக்கத்தில் இருந்த காலம் அது. ருக்மிணிதேவியின் மூத்த சகோதரி சிவகாமுவும் அவ்வாறு பால்ய விவாகம் செய்யப்பட்டு இளவயதிலேயே புகுந்த வீடு சென்றுவிட்டார். இது ருக்மிணிதேவியின் மனதைப் பாதித்தது. உறவினர் சிலர் அவருக்கு பால்ய விவாகத்திற்கு ஏற்பாடு செய்தபோது ருக்மிணி அதைத் தீவிரமாக எதிர்த்தார். இந்நிலையில் தந்தை நீலகண்ட சாஸ்திரிகள் காலமாகவே குடும்பம் பாதிக்கப்பட்டது. என்றாலும் அன்னி பெசண்டின் ஆதரவால் விரைவிலேயே அந்நிலையிலிருந்து மீண்டது. அன்னிபெசண்ட், ஜே. கிருஷ்ணமூர்த்தியை உலக ஆசானாக முன்னிறுத்தியது போல உலக அன்னையாக ருக்மிணிதேவியை முன்னிறுத்த விரும்பினார். ஆனால் அதை ருக்மிணிதேவி விரும்பவில்லை. கலைகளின்மீது ஆர்வம் கொண்டு கர்நாடக இசையோடு ஹிந்துஸ்தானி இசையையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். சில கச்சேரிகளிலும் பாடினார்.

Click Here Enlargeஅருண்டேல் என்னும் மேல்நாட்டவர் பிரம்மஞான சபையின் உறுப்பினர். அவர் அன்னி பெசண்ட் நடத்திவந்த 'நியூ இந்தியா' பத்திரிக்கையின் பொறுப்பாளராக இருந்தார். அடிக்கடி அன்னி பெசண்டைப் பார்க்க வந்துசெல்லும் ருக்மிணிதேவிமீது அவருக்குக் காதல் அரும்பியது. அவரை மணம் செய்துகொள்ளும் ஆர்வத்தை வெளியிட்டார். அவருக்கு வயது 40. ருக்மிணிதேவிக்கோ 16. ஒரு பிராமணப் பெண் வெளிநாட்டவரை மணப்பதா எனக் குடும்ப உறவுகளிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. பத்திரிகைகளிலும் கூடச் சிலர் எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டனர். ஆனால் தாயார் சேஷம்மாள் இந்தத் திருமணத்தை ஆதரித்தார். சகோதரர்களும் ஒப்புதல் தந்தனர்.

அன்னிபெசண்டின் ஆசியுடன் ருக்மிணிதேவி, ருக்மிணிதேவி அருண்டேல் ஆனார். சாதி, மத, இன வழக்குகளை எதிர்த்து வெளிநாட்டு ஆண்மகனை மணந்த முதல் புரட்சிப் பெண், அந்தணப் பெண் ருக்மிணிதேவிதான். கணவரது ஆதரவு மற்றும் உறுதுணையுடன் கலை வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தத் துவங்கினார். பிரம்மஞான சபையின் உலகக் கிளைகள் பலவற்றிற்கும் இருவரும் சென்று சிறப்புரைகள் நிகழ்த்தினர். ருக்மிணிதேவி ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பாலே நடனத்தில் தேர்ந்த அன்னா பாவ்லோவாவைச் சந்தித்தார். அவர், ருக்மிணிதேவியின் நாட்டிய ஆர்வத்தைத் தூண்டியதுடன், இந்தியாவின் பாரம்பரிய நடனத்தைப் பயிலுமாறும் ஆலோசனை கூறினார். அவர் மூலம் ரஷ்யாவின் பாலே நடனத்தைப் பயின்று தேர்ந்தார் ருக்மிணி.

அக்காலத்தில் 'தேவதாசிகள்' என்ற பெயரில் ஒரு சமூகம் ஒதுக்கப்பட்டிருந்தது. 'சதிர் ஆட்டம்' என்பதை ஆடிய அவர்கள்மீது தடை விதிக்கப்பட்டு, அவை கோயில்களில் விழாக் காலத்தில் மட்டுமே ஆடப்பட வேண்டும் என்ற நியதியும் இருந்தது. ருக்மிணிதேவி அந்தத் தடையை உடைத்தெறிய முயன்றார். 'சதிர்' எனப்படும் அக்கலையை முறையாகப் பயில விரும்பினார். தேவதாசிகள் ஆடும் சதிரை உயர்குலத்துப் பெண் கற்பதா என்று அதற்கும் சமூகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றைச் சட்டை செய்யாமல் பரதத்தைக் கற்க ஆரம்பித்தார். முதலில் கௌரி அம்மாளிடம் பரதம் பயின்றவர், பின்னர் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நடனமுறையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் பரதத்தைக் கற்றுத் தேர்ந்தார். கணவர் அருண்டேலும் ருக்மிணியின் ஆர்வத்தை ஊக்குவித்தார். 1936ல் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வை நடத்தினார் ருக்மிணிதேவி. அப்போது அவருக்கு வயது 31. தியசாஃபிகல் சொசைட்டியின் வைரவிழா நிகழ்ச்சியில் அரங்கேறிய அந்த நடனம் பரதநாட்டிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இவரது நடன நிகழ்ச்சிக்கு சர். சி.பி. ராமசாமி ஐயர், ஜஸ்டிஸ் சிவசாமி ஐயர், ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி போன்றவர்கள் வந்திருந்து ஆதரவு தெரிவித்தனர்.

புராண, இதிகாசங்களாலும், இலக்கியங்களாலும் ஒருகாலத்தில் போற்றி வளர்க்கப்பட்ட பரதக்கலை, ஜமீன்தார்கள் முன்பும் கோயில் திருவிழாக்களிலும் ஆடப்படும் நிலையை எண்ணி மனம் கொதித்தார் ருக்மிணிதேவி. மக்கள் கலையை மக்களுக்கே கொண்டு செல்லவேண்டும்; அக்கலையைப் போற்றி வளர்க்க வேண்டும்; ஆர்வமுள்ள அனைவரும் அக்கலையைப் பயில வழிவகை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அருண்டேலின் ஆதரவுடன் அந்த எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுத்தார். 'ருக்மிணிதேவி இன்டர்நேஷனல் ஆர்ட் அகாடமி' என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன்மூலம் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர் பரதக்கலையைக் கற்றுத்தர முன்வந்தார். ஆனால் அதற்கும் பலவாறான எதிர்ப்புகள் கிளம்பின. இதழ்களில் சர்ச்சைக் கட்டுரைகளும் வெளியாகின. ஒரு இந்தியக் கலை நிறுவனத்திற்கு ஏன் ஆங்கிலப் பெயர் வைக்க வேண்டும் என சிலர் துண்டுப் பிரசுரம் வினியோகித்தனர். அதனால் பண்டித சுப்ரமணிய சாஸ்திரிகள் “கலைகளின் ஆலயமாக விளங்கும் இதற்கு 'கலாக்ஷேத்ரா' என்று பெயர் சூட்டலாம்” என ஆலோசனை வழங்கினார். கலாக்ஷேத்ரா உதயமானது. பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும், அவரது மருமகனான சொக்கலிங்கப் பிள்ளையும் அதில் ஆசிரியர்களாக இருந்தனர். கலாக்ஷேத்ரா, கலைகளின் க்ஷேத்திரம் ஆகித் தமிழகத்தின் நாட்டியக் கலை வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது.
கலாக்ஷேத்ராவின் புகழ் பரவி உலக அளவிலும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பரதம் கற்க முன்வந்தனர். அவர்களை முறையாகப் பயிற்றுவித்து தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாட்டிய நாடகம் என்பது உருவாக ருக்மிணிதேவியே காரணமாக அமைந்தார். தன் மாணவர் குழுவுடன் பயணம் மேற்கொண்டு பல நாட்டிய நாடகங்களை அரங்கேற்றினார். நவரசங்களும் கொண்டவைகளாக அவை விளங்கி பார்வையாளர்களைக் கவர்ந்தன. 30க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை அவர் உருவாக்கியிருக்கிறார். 'குற்றாலக் குறவஞ்சி', 'குமார சம்பவம்', 'வால்மீகி ராமாயணம்', 'கீத கோவிந்தம்', 'புத்த அவதாரம்', 'பக்த மீரா', 'சபரி மோட்சம்', 'ஆண்டாள் சரித்திரம்', 'குசேலோபாக்கியானம்' போன்ற நாடகங்கள் பலமுறை அரங்கேறி அவருக்குப் பெருமை சேர்த்தன. இன்றைக்கும் அவை அரங்கேற்றப்பட்டு வருவதிலிருந்தே அவற்றின் சிறப்பை அறியலாம். நாட்டியத்தோடு, நாட்டியத்துக்கான அரங்கு, அதற்கான ஆடைகள் என பலவற்றையும் நவீனமாக வடிவமைத்தவர் ருக்மிணிதேவிதான். 'சீதாஸ்வயம்வரம்' என்ற நாட்டிய நாடகத்தைப் பார்க்க ராஜாஜியை அழைத்தார் ருக்மிணிதேவி. சினிமா, கேளிக்கை, நாடகங்களில் ஆர்வமில்லாத ராஜாஜி அதனை ஆரம்பத்தில் ஏற்கவில்லை. பின்னர் சில நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி நாடகம் பார்க்கச் சென்றார். 'அகலிகை சாபவிமோசனம்' பகுதியைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதார். மறுநாள் அதுகுறித்து ருக்மிணிதேவிக்கு கடிதம் எழுதிப் பாராட்டினார்.

கலாக்ஷேத்ரா நாட்டியக் கலை வளர்ச்சியோடு நின்றுவிடவில்லை. பல்வேறு சமூகப் பணிகளோடும் தன்னைப் பிணைத்துக் கொண்டு செயலாற்றியது. விலங்குகள் பாதுகாப்பு, சைவநெறி போன்றவற்றுக்கும் ஆதரவு அளித்தது. 1939ல் மரியா மாண்டிசோரியை வரவழைத்து குழந்தைகளுக்கான பள்ளிகளை நிறுவவும், அவர்களுக்காகப் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கவும் வழிவகை செய்தார் ருக்மிணிதேவி. கல்வி வளர்ச்சிக்காக 'டாக்டர் அருண்டேல் பெசண்ட் உயர்நிலைப் பள்ளி' உருவாக்கப்பட்டது. சங்கரமேனன் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்கு உழைத்தார். சென்னைப் பல்கலையின் அங்கீகாரத்துடன் 'சங்கீத சிரோமணி' என்ற இசை வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. டைகர் வரதாச்சாரியார், கிருஷ்ணாமாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, வீணை சாம்பசிவ ஐயர், பாபநாசம் சிவன் உள்ளிட்ட பலர் கலாக்ஷேத்ராவில் இசை பயிற்றுவித்தனர். கலை, இசை வளர்ச்சியோடு நெசவுத்துறை வளர்ச்சிக்காக நெய்தல் துறையைத் தோற்றுவித்ததுடன், இயற்கை சாய ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தையும் நிறுவினார் ருக்மிணிதேவி. இவற்றோடு அவர் செய்த இலக்கியப் பணியும் குறிப்பிடத்தக்கது. உ.வே.சா.வின் நூல்கள், ஓலைச்சுவடிகள் அனைத்தும் ஓரிடத்தில் தொகுக்கப்படவும், உ.வே.சா. நூலகம் ஏற்படவும் ருக்மிணி தேவியே காரணமாக அமைந்தார். கலாக்ஷேத்ரா வளாகத்தில் ஒருபகுதி ஒதுக்கப்பட்டு அங்கே உ.வே.சாமிநாதையரின் நூல்கள் அனைத்தும் திரட்டிப் பாதுகாக்கப்பட்டன.

கணவர் அருண்டேல் 1945ல் காலமானார் என்றாலும் அதிலிருந்து மீண்டு தொடர்ந்து கலைகளின் மீது தம் கவனத்தைச் செலுத்தினார். பாகவத மேளா கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து பிரகலாத சரித்திரத்தை அரங்கேற்றியதுடன் அக்கலையில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் எடுத்துரைத்து அது மேலும் பரவ ஊக்குவித்தார். டி.என். ராஜரத்தினம் பிள்ளை, மைசூர் வாசுதேவாச்சார் உள்ளிட்ட பல ஜாம்பவான்களை கலாக்ஷேத்ராவிற்கு வரவழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். ருக்மிணிதேவி அருண்டேலின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு 'பத்மபூஷண்' பட்டம் வழங்கிக் கௌரவித்தது. புகழ்பெற்ற சாந்திநிகேதன் அமைப்பு 'தேசிகோத்தமா' விருதை வழங்கியது. 'சங்கீத நாடக அகாடமி' விருது, 'பிராணி மித்ரா' விருது, தமிழ்நாடு இயல் இசை மன்ற விருது, காளிதாச சம்மான் உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். ராஜ்ய சபா உறுப்பினராக இருமுறை பதவி வகித்த பெருமையும் இவருக்கு உண்டு. அக்காலத்தில் மிருகவதைத் தடுப்புச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். பிராணிகள் நலக் கழகத்தின் தலைவராகவும் சிலகாலம் பணியாற்றினார். அதன் முதல் தலைவரும் அவரே! பெனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம், கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வேய்ன் பல்கலைக்கழகம் போன்றவை இவருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியுள்ளன.

குடும்பப் பெண்கள் மேடையேறி நடனம் ஆடக்கூடாது என்ற கொள்கையைத் தகர்த்தெரிந்து, பரதக்கலைக்கு உயிர்ப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியவர் ருக்மிணிதேவி. பரத நாட்டியக் கலைஞர்களுக்கு மிகப்பெரிய கௌரவத்தைப் பெற்றுத் தந்தவர். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கும் சென்று பரதக்கலையைப் பரப்பிய முன்னோடியும் அவரே! பரதநாட்டியத்தை இந்தியப் பாரம்பரியத்தின் முக்கியமான அடையாளமாக உயர்த்தியவரும் அவர்தான். 1977ல் இவரை குடியரசுத் தலைவராக்க ஒரு முயற்சி நடந்தது. ஆனால் இவர் அதனை ஏற்கவில்லை. 'அத்தை' என்று தம் மாணவ மாணவியர் உட்படப் பலராலும் அன்போடு அழைக்கப்பட்ட ருக்மிணிதேவி அருண்டேல், ஃபிப்ரவரி 24, 1986 அன்று காலமானார். நாட்டியக் கலைக்குப் புத்துயிரூட்டி, அதன் மறு எழுச்சிக்குக் காரணமாக அமைந்த ருக்மிணிதேவி அருண்டேலின் பெயர் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline