Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்
நூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
உடல் பொருள் ஆனந்தி
- ஜாவர் சீதாராமன்|ஜனவரி 2014|
Share:
(ஜாவர் சீதாராமன் எழுதிய 'உடல் பொருள்' ஆனந்தி நாவலிலிருந்து)

-2-


'டாக்டர் சண்முகசுந்தரம் மருத்துவமனை'யில் விளக்கை அணைத்துவிட்டு, தன்னுடைய அறையிலுள்ள படுக்கையில் படுத்துக்கொண்டார் டாக்டர்.

அவர் மனத்தில் திலீபன் தன்னைத் தொட்டதும், தன் உடலில் மின்சாரம்போல் ஓர் உணர்ச்சி பரவியதும் நினைவுக்கு வந்தது. திலீபனின் பார்வை, அவருடைய இதயத்தின் அடித்தளம் வரையில் பாய்ந்து, விவரிக்க முடியாத ஒரு தளர்ச்சியை ஏற்படுத்தியதும் அவர் நினைவுக்கு வந்தது. மறுநாள் காலையிலேயே அவனை ஆஸ்பத்திரியை விட்டு அப்புறப்படுத்துவதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தவராய், உடனே கண்களை மூடி, அமைதியாகத் தூங்க ஆரம்பித்தார்.

ராமநாதன் ஆஸ்பத்திரிக்குள் சப்தமில்லாமல் நுழைந்தான். நடுஹாலை நோக்கி நடந்தான். மாடிப்படிக்கட்டு வழியாக நர்ஸ் காந்தா கீழே இறங்கி வருவது தெரிந்தது. உடனே பக்கத்து அறையில் மறைந்து கொண்டான். அந்த நர்ஸ் எப்போது ஹாலை விட்டு நகருவாள், நாம் மாடிக்குப் போவோம் என்று ஆவலோடு அவன் அந்த ஹாலுக்குப் பக்கத்து அறையில் காத்திருந்தான். ஆனால் நர்ஸ் காந்தா தான் மறைந்திருக்கும் அதே அறையில் நுழைவாள் என்று ராமநாதன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஓடிப்போய் சுவருக்கும் பீரோவுக்கும் இடையே உள்ள இடைவெளியில் மறைந்து கொண்டான். 'அந்த அறையில் அவன் பதுங்கியிருப்பதைப் பார்த்து விட்டால் அவளுக்கு என்ன விளக்கம் சொல்வது?' அப்படியே மூச்சை அடக்கிக்கொண்டு நின்றான்.

அறை உள்ளே நுழைந்த நர்ஸ், ஒரு வினாடிதான் நின்றாள். பிறகு அங்கு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்து பாட்டில்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். பீரோவின் மறைவிலிருந்தபடியே ராமநாதன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனால் அடுத்த வினாடியே நிம்மதி குலைந்தது.

மருந்து பாட்டிலை எடுத்துச் செல்லும் நர்ஸ், யதேச்சையாக வெளிப்புறம் கதவைத் தாளிட்டுவிட்டுச் செல்லும் சப்தம் அவன் காதுகளுக்குத் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டவனாய் கதவை நோக்கி ஓடிவந்து, இழுத்துப் பார்த்தான். நன்றாகத் தாளிடப்பட்டிருந்தது தெரிந்தது. இரவு முழுக்க ஆஸ்பத்திரி அறையிலேயே விடியும்வரையில் பூட்டிய அறைக்குள் இருக்க வேண்டியதுதானா? ராமநாதன் மனம் அயர்ந்து, அப்படியே அங்குள்ள நாற்காலியில் உட்கார்ந்தான்.

திலீபனைச் சுட்டுக் கொல்வது ஒருவேளை ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போலும்! அதனால்தான் ஆஸ்பத்திரிக்குள் நாம் நுழைந்தும் கூட, நம்மால் திலீபன் இருக்கும் மாடி அறைக்குச் செல்லமுடியாதபடி தடை ஏற்பட்டுவிட்டது!

குரல் கொடுத்து, ஆஸ்பத்திரி ஆட்கள் யாரையாவது அழைத்து, கதவைத் திறக்கச் சொல்லி வீடு திரும்புவோமா என்றுகூட நினைத்தான். ஆனால், "'நீங்கள் இந்த அறைக்குள் இந்த இரவு வேளையில் எப்படி வந்தீர்கள்?' என்று கேள்வி கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்வது?" ராமநாதன் தத்தளித்தான். தன் கையிலிருந்த கடிதத்தை எடுத்துப் படித்தான். "நியாயம், நீதி, ரத்தபாசம் என்றெல்லாம் தயங்காதே! உடனே சென்று, ஆஸ்பத்திரியிலுள்ள அந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட நாச சக்தியைக் கொன்றுவிடு! அந்தக் கொலையே உன்னுடைய முதல் கடமை! அந்தக் கடமையைச் செய்ய ஒரு நிமிடம் தயங்கினாலும் ஆபத்து. உன் குடும்பமும் சீதாவின் வாழ்வும் அழிந்து போகும்."

ராமநாதன் திரும்பத் திரும்ப இந்த வாக்கியங்களைப் படித்தான். தாளிடப்பட்ட கதவை நோக்கினான். எப்படி வெளியேறி திலீபனைக் கொல்லுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடம் வீண்போவதும் அவனுக்கு ஒரு பெரிய ஆபத்து தன்னை நெருங்கி வருவதுபோலத் தோன்றியது. ஆனால் அது என்னவிதமான ஆபத்து என்றுதான் புரியவில்லை.

*****


திலீபன் மாடி அறையில் தன்னுடைய படுக்கையில் படுத்தபடி, விரல்களால் நிம்மதியாகச் சுவரிலே படம் வரைந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பயங்கரமான இடி இடித்துக் கட்டடத்தையே நடுங்கச் செய்தது. திலீபன் எழுந்தான்.

மின்னும் வானத்தை ஒருமுறை பார்த்தான். இடி, மின்னல், பயங்கரமான பேய்மழை! திலீபனது பயங்கரத் திட்டத்துக்குப் பொருத்தமான இரவு. இன்று மட்டும் அவன் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டால், அந்த ராமநாதனையும், அந்தச் சீதாவையும் என்ன பாடுபடுத்தலாம்!

நர்ஸ் காந்தா மருந்து பாட்டிலை எடுத்துக் கொண்டு படிக்கட்டு வழியாக மெள்ளக் கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். சிறைப்பட்டிருக்கும் தன் அறையின் கம்பிகள் வழியாக திலீபன் அவளைப் பார்த்தான்.

படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்த காந்தா திரும்பிப் பார்த்தாள்.

திலீபன் கெஞ்சும் குரலில், "நர்ஸ்! இப்படி வாருங்கள், உங்களிடம் ஒரு முக்கியமான ஒரு விஷயம் பேசவேண்டும்" என்று அழைத்தான்.

நர்ஸ் ஒரு வினாடி தயங்கினாள். திலீபனின் வேண்டுகோளுக்குக் காது கொடுக்காமலே கீழே சென்றுவிடலாம் என்று நினைத்து, கீழ்ப்படிக்கட்டில் காலை வைத்தாள். அவள்மட்டும் நினைத்தபடியே கீழே இறங்கிச் சென்றிருந்தால்.....

ஆனால் அடுத்த வினாடியே வேறு யோசனையோடு மறுபடியும் படிக்கட்டுகளில் ஏறி, திலீபன் நின்று கொண்டிருந்த கம்பி ஜன்னலை நோக்கி வந்தாள். "என்ன மிஸ்டர் திலீபன்! உங்களுக்கு என்ன வேண்டும்? தண்ணீர் வேண்டுமா? இல்லை தூக்கமருந்து வேண்டுமா? நீங்கள்தான் மற்ற பேஷண்டுகளைப் போல் மருந்து சாப்பிடுவதில்லையே!"
திலீபன் குழந்தைபோல் கனிவான குரலில், "காந்தா! நான் பேஷண்டாக இருந்தால்தானே மருந்து சாப்பிடலாம்? நான்தான் காரணமில்லாம சிறை வைக்கப்பட்டிருக்கிறேனே! நான் ஒரு பைத்தியமா? நீங்களே சொல்லுங்கள்.." என்றான்.

"நீங்கள் பைத்தியமா இல்லையா என்பதை நிர்ணயிக்க வேண்டியது டாக்டரின் பொறுப்பு. நான் ஒரு சாதாரண நர்ஸ். நர்ஸ் என்ற முறையில் உங்களுக்கு ஏதாவது உதவி தேவையானால் சொல்லுங்கள், செய்கிறேன்."

"நர்ஸ், பெண் உள்ளமே கருணை உள்ளம் என்பார்கள். தயவுசெய்து என்னை விடுதலை செய்யுங்கள்."

"மிஸ்டர் திலீபன், இந்த இடி மழையில், நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்? பொறுங்கள்... விடிந்தபின், விடுதலையைப்பற்றி டாக்டரிடம் பேசலாம்."

திலீபன் அவள் பேச்சை ஏற்றுக் கொள்ளவில்லை. "இடி! மழை! இரவு! இது மூன்றுமே எனக்கு வலிமை தரும் சூழ்நிலை! இந்தப் பயங்கரமான இரவே, நான் முடிக்க இருக்கும் திட்டத்துக்குப் பொருத்தமானது! இந்த இரவு நான் எப்படியாவது வெளியேற வேண்டும் நர்ஸ்" என்று படபடப்புடன் கெஞ்சினான்.

நர்ஸ் தயங்கினாள். "உங்கள் விருப்பப்படியே நான் உங்களை வெளியே அனுப்ப விரும்பினாலும் அது நடக்கக்கூடிய காரியமில்லை. உங்கள் அறை பூட்டப்பட்டிருக்கிறது. சாவிக்கொத்து டாக்டரிடம் இருக்கிறது. டாக்டர் இப்போது படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்."

திலீபன் முகம் ஏமாற்றத்தால் ஒரு வினாடி களை இழந்தது. பிறகு அவள் முகத்தில் ஒரு தீர்மானமும் நம்பிக்கையும் படர்ந்தன. கம்பிகள் வழியே பாய்ந்து நர்ஸின் கரங்களைப் பற்றினான்.

நர்ஸ் தேளால் தீண்டப்பட்டவள் போல் நடுநடுங்கினாள். தன்னை விடுவித்துக்கொள்ளத் திமிறினாள். ஆனால், திலீபன் அவள் கைகளை விடாமல் பிடித்தபடி, "நர்ஸ்.. என்னைப் பார்! என் கண்களைப் பார்!" என்று ரகசியமான குரலில், பாம்பு சீறுவதுபோல் வார்த்தைகளை உச்சரித்தான்.

திமிறித் தத்தளித்தபடி இருந்த நர்ஸ் காந்தாவின் உடல் விறைத்து நின்றது. அவள் கண்கள் திலீபனின் கண்களைச் சந்தித்தன. திலீபன் அவளைப் பார்த்தபடி கட்டளையிடும் குரலில், "நர்ஸ்! நான் சொல்லுகிறபடி செய்ய வேண்டும்" என்றான்.

அவள் அவனைப் பார்த்தபடியே ஒரு பொம்மைபோல் நின்றாள். அவளது சுய உணர்வு அவளை விட்டு நழுவிக் கீழே விழுவதுபோல் தோன்றியது.

திலீபன் வெற்றிப் புன்னகை புரிந்தபடி, "காந்தா, டாக்டர் படுத்திருக்கும் அறைக்குப் போய் அவருக்குத் தெரியாமல் சாவிக் கொத்தை எடுத்து வந்து இந்தக் கதவைத் திறந்து விடு" என்று உத்தரவிட்டான். காந்தா ஒரு யந்திரம்போல் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தாள். அவள் பார்வை நிலைகுத்தி நின்றது. படிக்கட்டுகளைக் கடந்து ஹாலுக்கு வந்தாள்.

ஹாலை அடுத்த அறையில் சிறைப்பட்டிருந்த ராமநாதன், ஜன்னல் வழியாகக் காந்தாவைப் பார்த்தான். அவளது பார்வையின் பாதையில் ராமநாதன் எட்டிப் பார்த்த ஜன்னல் இருந்தபோதிலும் காந்தாவின் கண்கள் ராமநாதனைக் கவனிக்கவில்லை. அவள் விழிகள் நேரே டாக்டர் சண்முகசுந்தரத்தின் அறையை நோக்கிச் சென்றன. அந்த அறையை நோக்கித் தலையை அசைக்காது விறைத்துப் பார்த்தபடி தூக்கத்தில் நடப்பவள்போல காந்தா நடக்கலானாள்.

ராமநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த வினாடியே ஆச்சரியம் மறைந்து ஒருவித பயம் தலையெடுத்தது. ஒருவேளை காந்தாவின் நிலைக்குக் காரணம் திலீபனாக இருக்குமோ? ராமநாதன் நர்ஸ் சென்ற திசையை நோக்கியபடி நடுங்கினான். நர்ஸ் காந்தா, சண்முகசுந்தரம் படுத்திருந்த அறையினுள் நுழைந்தாள்.

'திக் திக்' என்று அடித்துக் கொள்ளும் மனத்தோடு ராமநாதன் டாக்டர் அறையை நோக்கியபடியே இருந்தான். டாக்டர் அறை
யிலிருந்து நர்ஸ் வெளியே வந்தாள். எப்பக்கமும் திரும்பிப் பாராமல் நேராக நடந்தாள். அவள் கையில் சாவிக்கொத்து மின்னுவதை ராமநாதன் பார்த்தான். அவன் உடல் வியர்த்துக் கொட்டியது. அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. இன்னும் சில வினாடியில் திலீபன் சிறையைவிட்டு வெளியேறி விடுவான். உடனே வீட்டுக்குச் செல்வான். அங்கு சீதாவுக்கு என்ன ஆபத்து நேருமோ? அதைத் தடுக்க முடியாமல் இந்த அறையில் மாட்டிக்கொண்டு விட்டோமே?

ஹால் பக்கமுள்ள ஜன்னலிடம் ஓடினான். இடிகளுக்கு இடையே மழை 'சோ'வென்று கொட்டும் சப்தத்தைத் தவிர, வேறு எந்தவிதமான ஓசையும் கேட்கவில்லை. திடீரென்று இரும்புக் கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. அதைத் தொடர்ந்து படிக்கட்டுகளில் ஆள் நடந்து வரும் சப்தம். ராமநாதன் திகைப்போடு ஹாலைப் பார்த்தபடியே நின்றான்.

படிக்கட்டு வழியே நர்ஸ் இறங்கி வந்தாள். பின்னாலேயே திலீபன். இருவரும் ஹாலை அடைந்ததும் நர்ஸ் காந்தா, திலீபனைப் பார்த்தபடி நின்றாள். திலீபன் ஹாலைச் சுற்றி ஒருமுறை பார்த்தான். அவன் பார்வை டாக்டர் சண்முகசுந்தரம் படுத்திருந்த அறைமீது விழுந்ததும் ஒரு கேலிப் புன்னகை செய்தான். நர்ஸ் காந்தாவின் முகத்தைத் தடவினான். கேலியாக அவளைப் பார்த்துக்கொண்டே, "நர்ஸ் காந்தா! நீ ஒரு நல்ல நர்ஸ். சொன்னபடி செய்து விட்டாய்! நீ இனிமேல் உன் அறைக்குச் சென்று நிம்மதியாகப் படுத்துத் தூங்கம்மா" என்றான்.

காந்தா பதுமை போல், திலீபன் கட்டளையிட்டபடியே தன் அறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள். திலீபன் திருப்தியோடு ஹாலைவிட்டு வெளிப்புறம் செல்ல அடியெடுத்து வைத்தான். கட்டுண்ட நாகம் போல் திகைத்துக் கொண்டிருந்த ராமநாதனுக்கு அப்போதுதான் சுய உணர்வு வந்தது.

எப்படியாவது திலீபனை வீட்டுக்குச் செல்லாதபடி தடுக்க வேண்டுமென்ற ஒரு நோக்கத்தில் ஜன்னல் கம்பிகள் இடையே துப்பாக்கியை வைத்துக்
குறிபார்த்தான். அதற்குள் அவன் பார்வையிலிருந்து திலீபன் மறைந்துவிடவே, ராமநாதன் கதவை தடதடவென்று தட்டினான்.

தான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேர் எதிரே இருந்த கதவை திடீரென யாரோ இடிப்பதைக் கவனித்த திலீபன், உடனே சென்று கதவைத் திறந்து விட்டான். ராமநாதன் நிற்பதைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. "ராமநாதா, நீயல்லவா என்னை இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சிறை வைத்திருந்தாய். இப்பொழுது நீயும் இங்கே என்னைப் போன்று ஒரு கைதிதானா?" என்று சொல்லி அவன் சிரித்த சிரிப்பு நீடிக்கவில்லை. திடீரென நின்றது.

ராமநாதனின் கையில் துப்பாக்கி!

திலீபனின் முகத்தில் பயத்தின் நிழல் படர்ந்தது. கெட்டவர்கள் பீதியடையும்போது அவர்கள் முகம் அலங்கோலமாக மாறுவதுபோல், திலீபனின் முகம் மாறியது. அவன் உதடுகள் விரிந்து ஒரு பக்கமாக ஒதுங்கி, ஓநாய்ப் பல் போன்ற அவன் கடைவாய்ப் பல்லை வெளிப்படுத்தியது.

அந்த நிலையில் திலீபனின் முகம் மனிதத் தன்மையை இழந்து பயங்கரமாகக் காணப்பட்டது. ராமநாதனின் கையிலிருந்த துப்பாக்கியையும், ராமநாதனையும் மாறிமாறிப் பார்த்தான் திலீபன். பின் ஒரு நரியின் தந்திரத்தோடு, மிகவும் அன்போடு, "ராமநாதா! நீ உயிருக்கும் மேலாக நேசிக்கும் உன்னுடைய திலீபனையா கொல்லப் போகிறாய்?" என்று கேட்டான்.

"நான் என் உயிருக்கும் மேலாக நேசிக்கும் திலீபன் நீயல்ல!"

"என்ன.. உனக்கு உண்மை தெரிந்துவிட்டதா? நான் யார் என்று தெரிந்துவிட்டதா?" அவன் வீறிட்டலறிய குரல் விபரீதமாக ஒலித்தது.

அதே நிமிடம் ராமநாதனின் துப்பாக்கியிலிருந்து குண்டுகள் தொடர்ந்து வெளிப்பட்டன. திலீபன் அப்படியே சுருண்டு விழுந்தான். குண்டு சப்தம் கேட்டு ஆஸ்பத்திரிச் சிப்பந்திகளும், டாக்டர் சண்முகசுந்தரமும் வெளியே ஓடி வந்தனர்.

மாடி அறையில் இருக்க வேண்டிய திலீபன் தரையில் குற்றுயிராக முனகியபடி கிடப்பதையும், அவன் அருகில் ராமநாதன் புகையும் துப்பாக்கியோடு நிற்பதையும் பார்த்து டாக்டர் சண்முகசுந்தரம் கல்லாய்ச் சமைந்து நின்றார்.

"டாக்டர்! என் கடமை முடிந்துவிட்டது. திலீபனைச் சுட்டது நான்தான்! உடனே போலீஸைக் கூப்பிட்டு ரிப்போர்ட் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

ஆனால் பாவம், திலீபன் இன்னும் சாகவில்லை. குற்றுயிராகத்தான் தரையில் கிடக்கிறான் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

ஜாவர் சீதாராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline