Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
வேலு ராமன்
கவிஞர் யுகபாரதி
- அரவிந்த்|டிசம்பர் 2013||(4 Comments)
Share:
மரபு, புதுக்கவிதை இரண்டிலும் தேர்ந்தவர் கவிஞர் யுகபாரதி. 'மனப்பத்தாயம்' என்னும் கவிதை நூலோடு தமிழ்க்கவிதை உலகிற்கு அறிமுகமான இவர், தமிழ்த் திரையுலகின் முன்னணி திரைப்பாடல் ஆசிரியர். "மன்மதராசா" முதல் "கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிப் பேசக்கூடாதா", "கண்டேன் கண்டேன்", "கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்", "அய்யய்யோ ஆனந்தமே...", "ஊதா கலரு ரிப்பன்", "பாக்காத பாக்காத...", "கூடைமேல கூடை வச்சு...", "அடியே என்ன ராகம்.." எனப் பல ஹிட் பாடல்களை எழுதியவர். துள்ளலிசையானாலும் சரி, மெல்லிசையனாலும் சரி, அந்தப் பாடல்களில் தனிமுத்திரை பதித்து வருபவர். சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றவர். எழுத்தாளர், பதிப்பாளர், கட்டுரையாளர். 'பஞ்சாரம்', 'தெப்பக்கட்டை', 'நொண்டிக்காவடி', 'தெருவாசகம்' போன்றவை கவிதைத் தொகுப்புகள். 'கண்ணாடி முன்', 'நேற்றைய காற்று', 'ஒன்று', 'நடுக்கடல் தனிக்கப்பல்', 'வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்', 'அதாவது', 'நானொருவன் மட்டிலும்' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த கட்டுரைத் தொகுதிகள். படப்பிடிப்பு, இசைக்கோர்ப்பு, ஒலிப்பதிவு எனப் பரபரப்பாக இயங்குகிறவர். தென்றலுக்காகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து...

கே: கவிதை ஆர்வம் முளைத்தது எப்போது?
ப: பதிமூன்றாவது வயதில் என்று மங்கலாக ஞாபகம். இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருந்த அப்பாவால் எனலாம். வீட்டில் எப்போதும் தோழர்கள் நிறைந்திருப்பார்கள். அவர்களோடு அப்பா பேசிய அரசியலும் இலக்கியமும் சமூகம் சார்ந்த உரையாடல்களும் என்னைக் கவிதையை நோக்கிப் பயணிக்க வைத்தன.

கே: 'தமிழர் கண்ணோட்டம்' என்னும் இதழில் வெளியான உங்கள் முதல் கவிதை குறித்துச் சொல்லுங்கள்.
ப: அதன் தலைப்பு 'ஈழ ஏக்கம்'. அவ்வயதில் அது மிகவும் நெகிழ்வானதொரு சூழலை ஏற்படுத்திற்று. கவிதை குறித்துத் தொடர்ந்து அறியவும் புரியவும் அந்த முதல் பிரசுரம் முக்கியப் பங்காற்றியது. அச்சில் பேர் பார்க்கும் ஆசையாகத்தான் அது இருந்தது என்றாலும் இன்றைக்கு வெள்ளித்திரையில் பேர் பார்க்கும் ஆசைவரை அது கூட்டி வந்திருக்கிறது.

கே: கவிதையின் பாடுபொருள்களாக எவற்றை நினைக்கிறீர்கள்?
ப: சமூகம் சார்ந்த விஷயங்களே என்னுடைய பாடுபொருள்கள். 'மனப்பத்தாயம்', 'பஞ்சாரம்', 'தெப்பக்கட்டை', 'தெருவாசகம்', 'நொண்டிக்காவடி' ஆகிய என் கவிதைத் தொகுப்புகளை வாசித்தவர்க்கு என் கவிதையின் திசை தெளிவாக விளங்கும்

கே: கம்பனும் பாரதியும் உங்களை எந்தெந்த விதத்தில் பாதித்திருக்கிறார்கள்?
ப: கேள்வியைச் சற்றே மாற்றிக் கேளுங்கள்: கம்பனும் பாரதியும் இல்லாவிட்டால் தமிழ்க்கவிதை என்னவாகி இருந்திருக்கும் என்று. ஒரு பெரும் மாற்றத்திற்கு கவிதையை இட்டுச் சென்றவர்களாக இவர்கள் இருவரையும் சொல்ல வேண்டும். கூடுதலாக வள்ளுவரையும் இளங்கோவையும் சொல்ல வேண்டும். இந்த நால்வரே தமிழின் மகாகவிகள். நால்வரும் தமக்குமுன் இருந்த வடிவங்களில் எழுதிப்பழகி புதிய வடிவத்தை பிரபலப்படுத்தியவர்கள். பாரதிக்கு முன் வசனகவிதை இல்லை. கம்பனுக்கு முன் விருத்தப்பாக்கள் இல்லை. வள்ளுவருக்கு முன் குறள் வெண்பா இல்லை. இல்லை என்று நான் சொல்வது வடிவத்திற்கான சரியான உதாரணங்கள் இல்லை என்பதே. பொருத்தமான வடிவத்தை மேற்கொண்டு பின்னாட்களில் அப் பாவகைகளுக்கான மேற்கோள்களாக உருவாக்கிய பெரும் மகான்கள் அவர்கள். என்னையும் பாதித்திருக்கிறார்கள். வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு தருணங்களில்.



கே: முதல் திரைப்பாடல் வாய்ப்பு, அதற்கான வரவேற்பு அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: என்னுடைய 'மனப்பத்தாயம்' கவிதைத் தொகுப்பை வாசித்த இயக்குநர் லிங்குசாமிதான் நீங்கள் ஏன் சினிமாவுக்குப் பாட்டெழுதக் கூடாது என்று என்னுள் முதல் விதையைப் போட்டார். அச்சத்தோடு மறுத்த என்னை உற்சாகமும் தைரியமும் கொடுத்து எழுதவைத்த பெருமை அவருக்குரியது. "பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..." என்ற 'ஆனந்தம்' படத்தின் பாடல் என்னுடைய சரியான முகவரியாக அமைந்தது, முதல் பாடலே பெருவெற்றிப் பாடலாக அமைந்தது கூடுதலான சந்தோசத்தைக் கொடுத்தது. நம்மாலும் திரையிசைப் பாடல்களை எழுத முடியும் என்ற நிலையை உருவாக்கித் தந்தது. அதற்கான நன்றியை லிங்குசாமிக்கும் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமாருக்கும் சொல்ல மறந்தால் நான் சுகப்பட மாட்டேன்.

கே: மெட்டுக்குப் பாட்டு; பாட்டுக்கு மெட்டு - இதில் மெட்டுக்குப் பாடல்கள் எழுதும்போது நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்குமே, எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ப: மெட்டுக்குப் பாட்டு பாட்டுக்கு மெட்டு இந்தக் கேள்விக்கான பதிலை ஓராயிரம் பாடலாசிரியர்கள் நூறாயிரம் முறை சொல்லி இருந்தாலும், கட்டாயம் கேட்க வேண்டிய கேள்விகளில் ஒன்றாக இருந்து வருகிறது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியை உணர்ந்தால் மெட்டோ, பாட்டோ இரண்டையும் செப்பமாக செய்ய இயலும். "மன்மத ராசா" எழுதி இசையமைத்த பாடல். அதேபோல கும்கியில் வந்த "கையளவு நெஞ்சத்துல" மெட்டுக்கு எழுதிய பாடல். இரண்டுமே வெற்றிப் பாடல்கள்தாம். இன்னமும் மெட்டு கவிஞனுக்கு இக்கட்டு தருகிறது என்று புலம்பிக் கொண்டிருப்பது சரியல்ல. சுதந்திரம் என்பது அவரவர் ஆற்றலையும் மனதையும் பொருத்த விஷயம். எனக்குச் சுதந்திரமும் தேவை. கிடைத்த சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தும் ஆற்றலும் தேவை.

கே: குத்துப் பாடல்கள் தேவையா? காலத்துக்கும் நிலைத்து நிற்பது மென்மையான பாடல்கள்தாம் அல்லவா?
ப: மென்மையான பாடல்கள்தான் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. துள்ளலிசைப் பாடல்கள் படத்தின் வெற்றிக்கும் வெகுஜன ரசனைக்காகவுமே செய்யப்படுகின்றன. துள்ளலிசைப் பாடல்கள் தரக்குறைவானவை என்றோ மக்களை கீழ்மைப்படுத்துகிறது என்றோ சொல்ல மாட்டேன். காரணம் நம்முடைய இசைமரபில் துள்ளலிசைப் பாடல்களே முக்கியம் பெற்றுள்ளன. குறிப்பாகக் குறவன் குறத்தி ஆட்டம் நம்முடைய மரபா இல்லையா? சாஸ்திரீய இசை எத்தனை மேன்மையானதோ அதே மேன்மை கொண்டதுதான் துள்ளலிசைப் பாடல்களும். ஆனால் அதில் இடம்பெறும் வரிகள் விவாதத்திற்குரியன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

கே: காலமாற்றத்தால் இனிவரும் திரைப்படங்களில் பாடல்களே இல்லாது போகும் நிலை வருமா? அப்படியானால் திரைக்கவிஞர்களுக்கு எந்த மாதிரியான முக்கியத்துவம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ப: எந்தக் காலமாற்றத்தாலும் திரையில் பாடல்கள் இல்லாது போகாது. ஏனென்றால், பாடல் என்பது தமிழ்ச் சூழலில் தவிர்க்க முடியாதது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்மரபு என்பதே இசைமரபு சார்ந்ததுதான். பாடலற்ற திரைப்படங்கள் வருமாயின் அது தமிழ்ப்படமாக இருக்காது. தாலாட்டுத் தொடங்கி ஒப்பாரிவரை நம்முடைய அத்தனை நிகழ்விலும் பாடல்கள் இருக்கின்ற பொழுது அது இல்லாமல் போகும் என்பது கற்பனை வாதம். மேற்கத்திய திரைப்படங்களின் பாதிப்பால் சிலர் அவ்வாறு கூறிவரலாம். ஒரு நல்ல தமிழ்ப்படமென்றால் பாடல்கள் அவசியம். பாடலற்ற படம் தமிழ்ப்படமே இல்லை என்பேன்.
கே: 'கணையாழி' பத்திரிகை அனுபவங்கள் குறித்து...
ப: என் வாழ்வில் மிக உன்னதமான தருணங்களை ஏற்படுத்தியதில் கணையாழிக்கே முக்கியப் பங்கு. தீவிர இலக்கியவாதிகளுடனான பரிச்சயமும் அவர்கள் படைப்புகளில் தென்படும் அதியற்புத நுகர்வையும் நான் கைக்கொண்டது கணையாழி காலத்தில்தான். இந்திரா பார்த்தசாரதியும் அசோகமித்திரனும் சுஜாதாவும் என்னுடன் நேரடியாக உறவாடிய பொழுது எனக்குக் கிடைத்த உத்வேகத்தை அதன்பின் வேறு எங்கேயும் பெறவில்லை. கணையாழி என்னை முழுமையாக மடைமாற்றி விட்டது. ஒரு சிற்றிதழ் என்பதிலும் பார்க்க என்னை முழு வீரியத்தோடு செயல்பட வைத்த கணையாழிக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். கணையாழியை தசரா அறக்கட்டளை வாங்கிய பிறகு அதன் வடிவமும் உள்ளடக்கமும் சற்றே மாறின. ம. ராசேந்திரன், தமன் பிரகாஷ், சுவாமிநாதன் மூவரும் கணையாழியின் நிர்வாகிகளாக அல்லாமல் என் வாழ்வை நிறைத்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்நேர்காணல் மூலம் வாழ்நாள் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கே: உங்களைக் கவர்ந்த முன்னோடி மற்றும் சமகாலக் கவிஞர்கள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் யார், யார்?
ப: கவர்ந்த முன்னோடிகள் பலர். குறிப்பாகக் கேட்டால் பாரதி. சமகாலப் பாடலாசிரியக் கவிஞர்களில் கபிலனும் தாமரையும் என் நேசத்துக்குரியவர்கள். திரைக்கு வராத கவிகளில் கல்யாண்ஜி, மகுடேஸ்வரன், மனுஷ்யபுத்திரன், சமயவேல், வித்யாஷங்கர், பசுவய்யா, பழமலய் என சொல்லிக்கொண்டே போகலாம். எழுத்தாளர்களில் என் கவனத்தை ஈர்த்தவர்கள் நிறையப் பேர். எஸ்.ரா., ஜெயமோகன், சாருநிவேதிதா என வழக்கமான பெயர்களை நானும் சொல்ல விரும்பவில்லை. இவர்களைத் தாண்டியும் பலர் இருக்கிறார்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் அவர்களைப்பற்றி விரிவாகப் பேசுவோம். இசையமைப்பாளர்களில் இளையராஜாவைத் தவிர வேறு யாரென நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

கே: எழுத்தாளர் தஞ்சை பிரகாஷுடனான உங்கள் அனுபவங்கள்...
ப: கணையாழிக்கு முன்பே என்னை சுவீகரித்த இலக்கியப் பேரொளி தஞ்சை பிரகாஷ் என்றால் மிகையில்லை. அவருடைய "பற்றி எரிந்த தென்னைமரம்" சுபமங்களா இதழில் வெளிவந்த போதுதான் அவருடைய அறிமுகம் கிடைத்தது. எனக்கும் தஞ்சையே சொந்த ஊர் என்பதால் அவருடன் ஏறக்குறைய பத்தாண்டுக்குமேல் இலக்கியத் தொடர்பு கொண்டிருந்தேன். அவருடைய கடைசிக் காலத்தில் அவருடைய படைப்புகளை அச்சுக்குக் கொண்டுவருவதில் முனைப்போடு செயல்பட்டவர்களில் ஒருவன் என்பதில் இன்றளவும் எனக்குப் பெருமிதம் உண்டு. அவர்போல நல்ல ஆசான் தஞ்சைப் பகுதி இலக்கியவாதிகளுக்குக் கிடையாது என்றே கருதுகிறேன்.

கே: அன்றைய பிரேம்குமாருக்கும் இன்றைய யுகபாரதிக்கும் என்ன வித்தியாசம்?
ப: உங்களுக்குத் தெரிந்த ஆறு வித்யாசம்தான். பிரேம்குமாரை யாருக்கும் தெரியாது. பிரேம்குமார் எழுதத் தெரியாதவன். பிரேம்குமார் பட்டயப் பொறியியல் பட்டதாரி. பிரேம்குமார் தன்னை உணராதவன். பிரேம்குமார் படித்த படிப்புக்கான வேலைக்குப் போகாதவன். பிரேம்குமார் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ளத் துடித்தவன். இவை யாவற்றுக்குமான வித்யாசத்தோடு இருப்பவன் யுகபாரதி. போதுமா?

கே: உங்கள் நேர்நிரை பதிப்பகம் குறித்து...
ப: நேர்நிரை வெறும் பதிப்பகம் அல்ல. அது என் கனவு. கணையாழி மூலம் எனக்கேற்பட்ட தீவிர இலக்கிய ஈடுபாட்டின் செயல்வடிவம். தீவிர இலக்கியத்துக்காக எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. சினிமா என்பது வணிகம்சார்ந்த ஊடகம். அதில், தீவிர இலக்கியத்துக்கான எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாத நிலை. ஈடுபாடு ஒன்றின்மீது இருக்கும்போது அதைச் செய்ய இயலாமல் இருக்கும் நிலை இருக்கிறதே அதுதான் கொடுமையிலும் கொடுமை. அதைப் போக்கிக் கொள்ளத்தான் பதிப்பகம் ஆரம்பித்தேன்.

இதுவரையில் 40 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டு இருக்கிறோம். பாடல் எழுதும் பணி அதிகமாகிவிட்டதால் இடையில் கொஞ்சம் தொய்வு. தொடர்ச்சியாகப் பாடல் எழுதவேண்டி இருப்பதால் பதிப்பகத்தைச் சரிவர கவனிக்க முடியவில்லை. அதை வியாபாரமாக முழுத் தீவிரத்தோடு செய்யும் விருப்பமில்லை. எனக்குப் பிடித்த படைப்பாளிகளின் நூல்களைக் கொண்டுவருவது, அவர்களை எனக்குக் கிடைத்திருக்கும் சொற்ப வெளிச்சத்தில் பிரகாசப்படுத்துவது என்பதே திட்டம். நிறைய ராயல்டி தரும், உயரிய மரியாதையும் பெறும் நிறுவனமாக இன்னும் சில ஆண்டுகளில் நேர்நிரை மாறும் என நினைக்கிறேன். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை!

கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: மகள் காவியாவிற்கு நான்கு வயதாகிறது. அவள் சேட்டையில் மனைவி அன்புச்செல்வியையும் அம்மா வசந்தகுமாரியையும் நான் மறந்துவிடுவதாக வீட்டில் புகார். தம்பிக்கும் தம்பி மனைவிக்கும்கூட அவள் என்றால் உயிர். அப்பாவிற்கும் இப்போது காவியாதான் நீதிபதி. ஒரு குழந்தை வந்துவிட்ட பிறகு அவளே குடும்பமாக மாறிப்போய்விட்டது. அவளிடம் கருத்துக் கேட்டால் என் பாடல்களின் லட்சணம் தெரிந்துவிடும். அவளுக்கு சமீபத்தில் பிடித்த பாடல் "ஊதா கலரு ரிப்பன்".

கே: எதிர்காலத் திட்டங்கள்...?
ப: குறைந்தபட்சம் ஒரு நல்ல பாடலாவது, ஒரு நல்ல கவிதையாவது எழுதிவிட்டுச் சாக வேண்டும். வேறொன்றும் திட்டம் இல்லை. முடிந்தவரை பிறருக்கு உதவியாக சமூகப்பற்றாளனாக இருக்க வேண்டும். தெரிந்து தீதும் கேடும் செய்யாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன். மற்றபடி திட்டமிட்ட வாழ்க்கை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நதி போகும் திசையில் நடந்தால் கடல் வரும் அவ்வளவே.

தொகுப்பு: அரவிந்த்

*****


வாசிப்பு
பள்ளிக்காலத்தில் என் வயதுக்குப் பிடிபடாத பல விஷயங்களை வாசிப்பு மூலம் எட்டிப்பிடிக்க ஆசை கொண்டவனாய் இருந்திருக்கிறேன். எழுதுவதில்கூட எனக்குச் சோர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் வாசிப்பதில் ஒருபோதும் சோர்வு ஏற்பட்டதில்லை. ஒரு நூலை வாசித்துவிட்டு அந்த நூலை வாசித்த வேறொருவரோடு விவாதிப்பதிலும் நாட்டம் உடையவனாக அலைவேன். விவாதம் மேலும் என்னைச் செம்மைப்படுத்தும் என்பதை நம்புவேன். குறிப்பிட்ட நூலில் கவனிக்கத் தவறியதை பிறர் சொல்லும்போது அதை ஏற்கவும் இதயத்தில் வாங்கிக்கொள்ளவும் ஆர்வம் காட்டுவேன். கவிதை நூல்களில் ஆரம்பத்தில் என் கவனம் முழுவதும் மரபுக் கவிதைகள் பக்கமே இருந்தது. ஓசைகளை உள்வாங்கிப் பெரும் ஆவேசத்தோடு அவற்றை உச்சரித்து எனக்குள் போதை ஏற்றிக்கொள்ளும் வெறியோடு செயல்படுவேன். நாவல்கள் என்றால் தொடக்கத்தில் ரஷ்ய நாவல்கள்தான்! அழகான அச்சில் வெளிவரும் அந்நூல்களின் விலை மிகமிக மலிவாக இருக்கும். உயர்ந்த விஷயம் மலிவாகக் கிடைக்கும் ஆச்சரியம் நூல்கள்மீது அதீத அன்பைக் கூட்டிவிடும். கிளைகிளையாக விரிந்து, என் ஆர்வச் சிறகுகள் வாசிப்பு சுகத்தை வான்வரை முட்டத் தொடங்கின! வீட்டில் உணவுக்காக மட்டுமே என் பேச்சிருக்கும்! மற்றபடி வாசிப்பு மட்டுமே என் முழுநேரத் தொழிலானது.

- கவிஞர் யுகபாரதியின் நடை வண்டி நாட்கள் கட்டுரைத் தொடரிலிருந்து. ()

*****


அப்பா என்ற ரியல் ஹீரோ
எனக்கு விவரம் தெரியத் தொடங்கிய காலத்தில் அப்பாவுக்கு உலகத்தைப் பற்றிய கவலையே அதிகம் இருந்தது. வீட்டைப்பற்றியோ வீட்டில் உள்ள நெருக்கடிகளைப் பற்றியோ அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. அக்கா, நான், தம்பி மூவரும் அப்பாவின் செயல்பாடுகளில் அதிருப்தியுறத் துவங்கினோம். நம்மை கவனிக்காமல் ஊர் வேலையே முக்கியம் என்று கருதுகிறாரே என்பதாக. எத்தனையோ பேருடைய பிரச்சனைகளைப் பற்றி ஆழமாக விவாதித்து தீர்வு சொல்லக்கூடிய ஒருவர், எங்களுடைய பிரச்சனைகளை புரிந்துகொள்ளவில்லையே எனப் பேசிக்கொள்வோம். ஆனால், அதை எல்லாம் வெளியாட்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டோம். அப்பாவுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடுவதோ கழுத்து நிரம்ப நகைகளை அணிந்துகொள்வதோ பிடிக்காது. நம்முடைய வசதி பிறரை கவலைக்கு ஆட்படுத்திவிடக் கூடாது என்பார். சலவை செய்த ஆடைகளை மட்டுமே அணிவார். வெள்ளுடையில் அவரை பார்க்க பிரமிப்பாக இருக்கும். எப்படிச் சட்டை கலையாமல் வெளியே போய்விட்டுத் திரும்புகிறார் என்பதும் அந்த வயது ஆச்சர்யங்களில் ஒன்று. தஞ்சாவூர்க்காரர்களுக்கு உரிய தவிர்க்க முடியாத பழக்கமான வெற்றிலை போடுதல் அப்பாவின் விசேஷத் தகுதிகளில் ஒன்று. சீவல் பொட்டலத்தில் இருந்து ஒரு விழுதுகூட கீழே இறையாமல் கடவாயில் சீவலை இடுக்கும் லாவகம் மற்றுமொரு பிரமிப்பு.

பாடப் புத்தகங்கள் தவிர்த்து வேறு புத்தகங்களை நான் வாசிக்க அப்பாவே முதல் காரணம். அப்போது சோவியத் யூனியன் புத்தங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். கார்க்கியும் டால்ஸ்டாயும் தாஸ்தாவஸ்கியும் குறைந்த விலையில் கிடைத்ததால்தான் தமிழ்நாட்டிலும் பிரபலமானார்கள். அந்தக் கதைகளைப் படித்துவிட்டு அப்பாவின் தோழர்கள், அதாவது வீட்டுக்கு வரும் காம்ரேடுகளிடம் நான் பேசிப்பேசியே இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டேன். அப்பா மாதிரியே தலைசீவப் பழகி பிறகு அப்பா மாதிரியே மீசையை அக்காவின் ஐபுரோ பென்சிலில் கிறுக்கிக்கொண்டதுவரை எத்தனையோ எண்ணிலடங்கா சம்பவங்கள். அப்பாமீது ஒருபுறம் அதிருப்தி இருந்தாலும் எல்லோரும் அப்பாவை மதிக்கிறார்களே அது ஏன் என்று எண்ணத் தொடங்கியபோதுதான் அப்பா சினிமா ஹீரோ அல்ல ரியல் ஹீரோ என்று புரியத் தொடங்கியது. தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சிந்திப்பவர் நல்ல அப்பா என்றால் என் அப்பா சகல பிள்ளைகளுக்கும் சிந்திப்பவர், மிக மிக நல்ல அப்பாதானே?

(கவிஞர் யுகபாரதியின் தளத்திலிருந்து)

*****


கோபம்
கோபித்துக்கொள்ள
ஒருவரும் இல்லாததைப்போல
துக்கம் வேறில்லை

கோபித்துக்கொள்ள
தெரியாத பட்சத்தில்
உங்கள் அன்பை வெளிப்படுத்த
தவறுகிறீர்கள் என்று அர்த்தம்

கோபம் தவறுகளின்
எதிர்வினையல்ல
பிரியத்தின் கூவல்

கோபமே படாதவர்
சந்தேகத்துக்குரிய நபர்
கோபம் முறுக்குறும் தருணங்களில்
காதலின் பரிபூரண வாசத்தை
யாரும் உணரலாம்

சிலம்பின் கோபம்
பத்தினியின் காதலல்லாது
வேறென்ன

கோபப்படலாம்
கோபம்தான் நம்மீது
படக்கூடாது

யுகபாரதி
More

வேலு ராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline