Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
வேறுவேறு மனிதர்கள்
- பவா செல்லத்துரை|ஏப்ரல் 2013|
Share:
அவருக்கென்று ஒரு பெயர் இருந்ததே எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. வயது, அனுபவம், உருவம், தும்பைப்பூவாய் வெளுத்த தலை, அதை உதிர்த்து விழுந்த முன்பக்க வழுக்கை, எப்போதும் சலவை மணம் மணக்க உடுத்தும் வெள்ளை உடை. இவைகள்தாம் ஜேக்கப் வாத்தியாரைப் பெயர் சொல்லி யாரையும் அழைக்கவிடாமல் 'சார்', 'தலைவரே', 'அய்யா' என்றெல்லாம் அழைக்க வைத்தது. அவருடைய எஸ்.ஆர். புத்தகம், பி.எஃப்., ஆர்.டி., பென்ஷன் எல்லாம் சரிபார்த்து, கணக்கு டேலி ஆகிக்கொண்டிருந்தபோது நான் அந்த ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்தேன். அது இன்னும் ஓரிரு வருஷங்களில் அவர் ரிடையர்டு ஆவதற்கான அறிகுறிகள். மனுஷன் அப்போதே விரை வாதத்தால் ரொம்ப அவஸ்தைப்படுவார். வேஷ்டியை இழுத்து இழுத்து விடுவதற்கே இடது கை நன்கு பழகிவிட்டிருந்தது. நடக்கும்போது ரொம்ப கஷ்டப்படுவார். ஆனாலும் அதற்கான வருத்தம் எதுவும் அவருக்கிருந்ததில்லை. எப்போதும் சிரிக்கிற முகம் அவருக்கு வாய்த்திருந்தது. அவரை நினைக்கிற யாருக்குமே முதலில் வந்து நிற்பது எப்போதும் அவர் அக்குளில் வைத்துக் கொண்டிருக்கும் குடைதான்.

ஸ்கூல் கேண்டினில் நாங்கள் யார் சாப்பிடும்போதும், டீ குடிக்கும்போதும் அவர் வந்துவிட்டால் அவர் எதைச் சாப்பிட்டாலும் கணக்கு எங்கள் கணக்கில் ஏறும். அதற்காக நாங்கள் ஒருபோதும் வருந்தினதில்லை. எங்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் ரொம்பவும் பிரியமானவராக இருந்தார். வயசுக்குத் தகுந்த மாதிரி அவரைத் தாண்டி சடசடத்துப் போன காலங்கள், அவர் எங்களுக்குச் சொல்ல நிறைய கதைகள், அனுபவங்களை மீதி விட்டுவிட்டுச் சென்றிருந்தன. வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் சொல்ல அந்த ஊட்டி கதை எப்போதும் உதட்டு நுனியிலேயே இருந்தது.

இவருக்கு முதல் அப்பாயிண்ட்மென்ட் ஊட்டியில் ஒரு இங்கீலீஷ் கான்வென்ட்டாம். 'இதெல்லாம் என்ன பள்ளிக்கூடம்? இங்கே இருக்கிற ஸ்டாஃப் ரூம், அங்கே இருக்கிற கார் ஷெட்டுக்குக் கூட ஆகாது.' இந்த நேரத்தில் யாராவது வருகிறார்களா எனத் திரும்பிப் பார்த்துக் கொள்வார். அப்போதெல்லாம் கோட் போட்டு டை கட்டுவாராம். எப்போதாவது கோட்டில் ரோஜாப்பூக்கூட வச்சிருப்பாராம். கதை சொல்லும் குரலே மாறி வேறு ஒரு இதமான காதல்பூர்வமான உலகத்துக்குள் அவர் நுழைவது இந்த ரோஜாவின் சமயத்தில்தான்.

'ஹூம்' என்றொரு நீண்ட பெருமூச்சோடு 'அந்த வெள்ளைக்காரப் பொண்ணை மட்டும் கட்டிக்கினு இருந்தா இப்ப ஏன் ஒரு சிங்கிள் டீக்கு லோலுப்படறேன்' என்று கொஞ்சங்கொஞ்சமாய் அவள் நிறம்பற்றி, உடல்வாகு பற்றி, சரளமான இங்கிலீஷ் பற்றி, இவர்மீது அவள் கொண்டிருந்த அடர்த்தி மிகுந்த காதல்பற்றி எல்லாமும் இந்த முதல் அத்தியாயத்திலேயே சொல்லி முடிப்பார்.

'சரி அதெல்லாம் விடு, தலைவா, எல்லாம் முடிஞ்சிருச்சா' என்று ஒருமாதிரியான கிண்டலோடு யாராவது கேட்கும்போது லேசாக முகம் மாறும். ரொம்ப வேதனையும் துக்கமும் கலந்த ஒரு சோகம் கட்டிய முகம் திடீரென உதயமாகும்.

'ச்சீ... சீ அவளும் என்னை அது மாதிரி நெனைக்கல. நானும் அவளை அந்த மாதிரி நெனைக்கல.' அவருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிக் கடைசியாக அவளிடமிருந்து விடைபெற்ற நிகழ்ச்சியை அவர் விவரிக்கும் அழகை எப்படி எழுதுவது? 'ஐ வாண்ட் டு மேரி யு' என்று அவளைப் போலவே ஆங்கிலத்தில் பேசி, கைகளை விரித்துக் காட்டுவார். ஸ்டாஃப் ரூமில் மேசைகளைத் தட்டி நாங்கள் ஆரவாரத்தோடு விடைபெறுவோம்.

இதோடு கதை முடிந்துவிட்டதாக பலபேர் கலைந்துவிடுவார்கள். அல்லது இதற்குமேல் கதை சுவாரஸ்யமாய் இருக்காது. ஆனால் அதற்குப் பிறகுதான் அவருக்குச் சொல்வதற்கு நிறைய கதைகள் இருந்தன. ஆனால் சுவாரசியம் இல்லாத கதைகள். டெய்சி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, அவர் கல்யாணம் பண்ணிக் கொண்டது. தொடர்ந்து நாலு பெண்களும், அப்புறம் மூணு பையன்களும் பிறந்தது. ஒவ்வொரு பெண்ணைக் கட்டிக் கொடுக்கவும் அவர்பட்ட அவஸ்தை, போட்ட மேரேஜ் லோன், வாங்கின கடன், கட்டின வட்டி அப்படியும் கடைசி இரண்டு பெண்களும் மீந்து போனதை, 'ரிடையர் ஆன பணம் வந்ததும்தாம்பா எதனாச்சும் ஒரு வழி பண்ணணும்' என்று முடிப்பார்.

"என்ன சார் இது, நடக்கும்போது அசிங்கமா இருக்கு, ஒரு ஆபரேஷன் பண்ணிக்கறதுதான'' என்று ஒரு நாள் டீக்கடையில் வைத்து நான் கேட்டபோது, "எங்க தொரை.. சாண் ஏறினா மொழம் சறுக்குது. ரிடையர் ஆன பணம் வந்தப்பறம்தான் மொதக் காரியமா ஒரு ஆபரேஷன் பண்ணிக்கணும்'' என்றார்.
1989 மே 31ஆம் தேதியோடு அவருடைய ஆசிரியப் பணி முடிவடைகிறது. ஆனாலும் ஏப்ரலில் நடந்த ஆண்டு விழாவை எப்படி மறக்க முடியும்? வழக்கமாக வந்திருக்கும் விருந்தினர்களைத் திருப்திப்படுத்த பேசப்படும் புகழ் வார்த்தைகள், நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே நாம் பார்க்கிற ஓரங்க நாடகங்கள், குரூப் டேன்ஸ்கள் என்று விழாக்கள் மீதே ஒரு நெருக்கம் உண்டாக்குதலைத் தடை செய்து வைத்திருந்ததை மீறி, ஒரு நிமிஷமும் அசையாமல் நான் உட்கார்ந்திருந்ததற்குக் காரணம் நிகழ்ச்சியின் இறுதியில் ஜேக்கப் சார் கௌரவிக்கப்படுவதைப் பார்க்கத்தான்.

கலெக்டருக்குப் போட்ட மாலையில் பூ ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தது. என் நிமிஷங்களும் அப்படியே. கலெக்டர் கையால் ஜேக்கப் சாருக்கு அசோசியேஷன் சார்பில் ஒரு பவுன் மோதிரம் அளிக்கப்பட்டது.

இனி வாழ்வில் ஒருபோதும் ஜேக்கப் சாரை அந்த கம்பீரமான சிரிப்போடும், பெருமையோடும், யாரும் பார்க்க முடியாது. சுந்தரைக்கூட இதற்காகப் பாராட்டத்தான் வேண்டும். நல்ல அற்புதமான கலரில் அந்தச் சிரிப்பை அப்படியே தன் கேமராவில் சுவீகரித்திருந்தான். ஜேக்கப் சாருக்குத் தெரியாமல் எனக்கும் ஒரு பிரிண்ட் வேண்டும் என்று கேட்டு பத்து ரூபாயை நீட்டினபோது ஆச்சர்யப்பட்டான். அதற்குத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியை எப்போது நினைத்தாலும் சிரித்துக்கொள்ள முடியும். எங்கள் குழு சார்பாக அவருக்கு மேடையிலேயே ஒரு மான் மார்க் குடை வழங்கப்பட்டது. ஸ்டூடன்ஸ், டீச்சர்ஸ், கலெக்டர், கலெக்டரின் மனைவி என்று எல்லோர் சிரிப்பும் கொட்டிச் சிதறின மாலை அது. அப்போதுதான் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த அவர் மனைவியைப் பார்த்தேன். இரண்டு கைகளாலும் கன்னத்தை மூடிக்கொண்டு அவர்கள் வெட்கப்பட்ட அழகு.. சே.. இந்த சுந்தர் எங்க போயிட்டான்?

ஜூன் மாதம் பள்ளி திறக்கிறது என்பது ஒருபுறம் உற்சாகமாயிருந்தாலும், மே மாதம் முழுவதும் வீடு, ஓய்வு, நண்பர்கள், புத்தகம் என்று இருந்துவிட்டு திடீரென அதை அறுத்துக்கொண்டு பள்ளிக்குப் போய் அந்தச் சூழ்நிலையோடு ஒட்டவே ஒரு வாரம் ஆகிவிடுகிறது. அநேகமாக அந்த ஒரு வாரமும் ஜேக்கப் சாரைப் பற்றி யாருமே பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த வாரமே, ஒரு வியாழக்கிழமை மத்தியானம் வீசிக் கொண்டிருந்த காற்று அதில் பறந்த பேப்பர்கள் என்று ஒரு களேபரமான நேரம், அக்குளில் ஒரு குடையோடு அவர் ஸ்கூல் காம்பவுண்டில் நுழைவதற்கும் நான் ஒரு டீக்காக கேண்டினை நோக்கி நடப்பதற்கும் சரியாய் இருந்தது.

என்னை முந்திக்கொண்டு அவரே வணக்கம் சொன்னார். அவரிடம் வழக்கமான கிண்டலோடு பேசவே எனக்குப் பயமாயிருந்தது. ஆளின் உருவம், விரக்தி, முகத்தில் படர்ந்திருந்த கவலை எல்லாம் என் உற்சாகத்தை எச்சரித்தது.

"வாங்க சார் காப்பி சாப்பிடலாம்" என்று நிதானமாக ஆரம்பித்தேன்.

"காபியெல்லாம் இருக்கட்டும் தொரை" என்று கையில் வைத்திருந்த நடராஜா டெக்ஸ்டைல்ஸ் என எழுதப்பட்ட மஞ்சள் பையில் இருந்து நீலக்கலரில் ஒரு புத்தகத்தை எடுத்து விரித்தார்.

"இது என்னோட எஸ்.ஆர். தொரை. மொத்தம் முப்பத்தி மூன்று வருஷம் சர்வீஸ். ஆனா என்னோட ஊட்டி சர்வீசை இதுல சேக்கவே இல்லை. எனக்குப் பின்னாடி வேலைக்குச் சேர்ந்தவன்லாம் அறுநூறு ரூபாய்க்கு மேல பென்ஷன் வாங்கறான். எனக்கு நாநூற்று அம்பதே வரலை. ஏம்பா என்னய மாதிரி ஏழைங்ககிட்டயே ஜீசஸ் வெளையாடுறார்" என் இரண்டு கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டார். கண்கள் ஒரு மாதிரி அலைந்து திரிந்து நிலைகுத்தி நின்றது. நீர் அலம்பி நின்று எந்த நேரத்திலும் கீழே விழத் தயாராக நின்றது.

"கிராஜூட்டி, பென்ஷன், பி.எப். பணம் எதுவுமே கைக்கு வரலை. தப்பையெல்லாம் ரிவைஸ் பண்ண ரெண்டு மூணு வருசம் கூட ஆகுன்றாங்க.." என்றபோது அவரை மீறி இரண்டு மூன்று துளி விழுந்து விட்டது.

"அய்யய்ய, என்ன நீங்க சின்னக் கொழந்தையாட்டம் அழறீங்க.. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது .. டி.இ.ஓ. ஆபீஸ்ல நம்ப பாலுசார்கிட்ட சொல்லி சீக்கிரம் போடச் சொல்லலாம். இப்ப ஒரு காபி சாப்பிடுங்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆபீஸ் ரூமை நோக்கி நடந்தார்.

சே.. எப்படி இருந்த மனுசன். எப்போதும் கொத்துக் கொத்தாய் சிரிப்பும், பேச்சும்.. எல்லாமும் எங்கே? அவர் கையில் இருக்கும் சர்வீஸ் ரிஜிஸ்டரில் தேடிப் பார்க்க வேண்டும்.

அடுத்த வாரம் ஒரு செவ்வாய்க் கிழமை பிற்பகலில் வேறு ஒரு பிரச்சனை அடிபட்டுக்கொண்டிருந்தது. எங்கள் ஸ்டாப் ரூமில் வி.பி.சிங்கில் ஆரம்பித்து உள்ளூர் எம்.எல்.ஏ. போன வாரம் ஒரு வாத்தியார் பையன் விஷயமாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததுவரை அடிபட்டது. அப்போதுதான் திடீரென ரகோத்தமன் எதற்கோ ஜேக்கப் சாரை ஞாபகப்படுத்தினார். எதற்கு ஞாபகப்படுத்தினார் என்றாகி விட்டது.

"அவன் அவனுக்கு ஆயிரம் வேலை இருக்குன்ற விஷயமே அந்தாளுக்கு தெரியல சார்.. எப்ப பாத்தாலும் கையில எஸ்.ஆரோட வந்து இங்க தப்பா, அங்க தப்பான்னு.. போன வாரம் சண்டே ஒய்ஃபோடு சினிமாக்கு போறேன். வழியில மாட்டிக்கினேன். டிக்கட் கெடைக்காம வீட்ல செம டோஸ். "சினிமாவுக்கு போனமா வந்தமான்னு இல்லாம வழியில கண்டவன்கிட்ட நின்னு வெட்டியா பேசனா எப்படி டிக்கட் கெடைக்குன்றா."

தாங்கிக்கொள்ள முடியவில்லை. ரணரணமாய் எழுந்து வெளியேறி வேப்பமரக் காற்றுக்குத் தலைநீட்டி.. நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன்.

அந்த ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் அவர் மனைவியை எதேச்சையாய் பார்க்க நேர்ந்தது. நம்பவே முடியவில்லை அவர்களா என்று. பள்ளிக்கூட ஆண்டு விழாவில் அவருக்குக் குடை கொடுத்தபோது உடம்பிலிருக்கும் எல்லா ரத்தமும் முகத்துக்கு ஏற நாணி வெட்கப்பட்ட முகமா இது? இன்றைக்கு அவர்களைப் பார்க்கிற யாரும் பக்கத்தில் போய் துக்கம் விசாரிப்பார்கள்.

சர்ச் முடிந்து வெளியே வரும்போது என்னைப் பார்த்து ஸ்தோத்திரம் சொன்னார்கள். சொல்லும்போதே கண்கள் கலங்கிவிட்டது. தயங்கித் தயங்கி நிறைய சொன்னார்கள். அவர், இரவு பகலாய் பாக்கிற எல்லோரிடமும், 'இப்படி ஆயிடுச்சே இப்படி ஆயிடுச்சே' என்று புலம்புவதை... மகள், மருமகள், டீக்கடை என்று அந்த எண்ணிக்கை நீண்டுகொண்டே போவதை... ஒரு நடுராத்திரி இரண்டு பொண்ணுங்களையும் அருகில் அழைத்துத் தலையைக் கோதி, 'என்னை மன்னிச்சிருங்கடா.. எனக்கு இப்போதைக்கி அந்தப் பணமெல்லாம் வருமுன்னு நம்பிக்கை இல்லை. நீங்க யாரையாச்சும் லவ் பண்ணி மாலையோட வந்தாக்கூட நான் தடுக்கப்போறதில்லை' என்று அழுததை... கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பாட்டைக்கூட மறந்து 'எங்கோ தப்பு நடந்துருச்சி, எப்படி நடந்துச்சி' என்று தனியாகவே புலம்ப ஆரம்பித்ததை... நாலு நாளைக்கு முன்னாடி அவரை பாகாயம் மெண்டல் ஆஸ்பத்திரியில் வலுக்கட்டாயமாய் சேர்த்ததை... அதுக்கு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கிட்ட ரெண்டாயிரம் கடன் வாங்கினதை...

ஆஸ்பத்திரில சமயத்துல அவர் மனைவியைப் பார்த்தே 'மேடம் என் பொண்ணுங்க கல்யாணம், எனக்கு ஒரு ஆப்ரேஷன், எல்லாம் நடந்தாகணும் மேடம். கொஞ்சம் யார்கிட்டயாச்சும் சொல்லி ஒதவி பண்ணுங்க மேடம்' என்று கேட்பதை... இதைச் சொல்லும் போதுதான் அது சர்ச் வாசல் என்பதைக் கூட மறந்து வெடித்து அழுதார்கள்.

"அவருக்கு வர்ற பணம் எம் பொண்ணுங்க கல்யாணத்துக்குக் கூட வேணாம் சார். அவரு பழையபடி நல்லா நடமாட ஒதவுனாப் போதும்" என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.

அடுத்த ஆராதனைக்கு சர்ச் மணி அடித்தது.

அந்த அம்மா அவசர அவசரமாய் ஓடும்போது கவனித்தேன். எப்போதும் அவரை விட்டுப் பிரியாத நாங்கள் தந்த மான் மார்க் குடை அந்த அம்மா கையில் இருந்தது.

பவா செல்லத்துரை
Share: 




© Copyright 2020 Tamilonline