Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பயணம்
கொல்லிமலை (பாகம்-6)
- வற்றாயிருப்பு சுந்தர்|பிப்ரவரி 2013||(3 Comments)
Share:
கொல்லிமலை உச்சியில் அகஸ்தியர் அருவி இருக்கிறது. அறப்பளீஸ்வரருக்கும் கொல்லிப்பாவைக்கும் கோவில் இருக்கிறது. நல்ல காற்றும் நீரும் உள்ளன. நோயகற்றும் மூலிகைகள் நிரம்பியுள்ளன. நாகரிக உலகின் அரசியல்களும் ஊழல்களும் அழிவுகளும் புரியாத, அறியாத, இயற்கையுடன் இயைந்து வாழும் எளிய மக்கள் இருக்கிறார்கள். "இவனால் நமக்கு என்ன ஆகும்?" என்று எதிரிலிருப்பவனைப் பார்த்து மனக்கணக்கு போடாத, மகிழ்ச்சியுடன் விருந்தோம்பல் செய்யும், பணத்தைக் கண்டால் பறக்காது, வாங்குவதற்குக் கூச்சப்படும், பேராசையில்லாத மனிதர்கள் இருக்கின்றார்கள். ஆரோக்கியம் இருக்கிறது. அமைதி இருக்கிறது. இவையனைத்தும் அப்படியே நிரந்தரமாக இருக்கட்டும் என்றும் தூரத்தே கேட்கும் வேட்டுச்சத்தம் அம்மலையையும் மக்களையும் அணுகாதிருக்கட்டும் என்றும் கொல்லிப்பாவையை வேண்டிக்கொண்டேன். வெடிச்சத்தத்திலும் என் வேண்டுதல் அவளுக்குக் கேட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

எண்ணச் சுழல்களில் மனமும் மலையேறி இறங்கியதில் உடலும் சோர்வடைந்திருந்தன. 'நாகரிக நகர வாழ்க்கை'க்குத் திரும்பப் போகிறோம் என்ற நினைப்பில் அயர்வு எழுந்தது. சட்டென்று கடினப் பாதை முடிந்து தார்ச்சாலை தட்டுப்பட்டதும் நிமிர்ந்து பார்த்தேன். வியர்வை கண்ணை மறைத்தாலும் பழனியப்பர் கோவில் சுண்ணாம்புச் சுவரின் செம்மண் கோடுகள் தெரிந்தன. நாங்கள் வந்த வண்டியும், முகம் நிறையப் புன்னகையோடு ஓட்டுனரும் தென்பட்டார்கள். கரடுமுரடான தடத்தில் பலமணி நேரம் நடந்த கால்களுக்குத் தட்டையான தரை புதிராக இருந்தது - தத்தித் தத்தி நடந்தேன். காலையில் பார்த்த அந்தப் பெண்மணி மேல்படியில் நின்று கொண்டு எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். மெதுவாகப் படிகளில் ஏறினோம். "வாங்க. அர்ச்சகர் இருக்காரு" என்று எங்களை வழிநடத்திச் சென்றார் அவர். சுவரோரம் இருந்த குழாய்களில் சில்லெனக் கொட்டிய நீரில் கால் கை முகம் கழுவினோம். வியர்வை கலந்து லேசாக உப்புக் கரித்தது. சிறிய அக்கோவிலின் உள்ளே கர்ப்பக்கிரகத்தில் மீசை முருகன் மிதமான மஞ்சள் ஒளியில் அமைதியாக இருந்தார். இரைச்சல் இல்லாமல் அமைதியாகக் கழிந்தன தருணங்கள். அர்ச்சகர் அதிர்ந்து பேசாது காட்டிய தீபாராதனையில் முருகனின் முகத்தைச் சரியாகப் பார்க்க முயன்றேன். கோவிலைச் சுற்றிப் பிரகாரத்தில் நடந்தோம். ஓரத்தில் விறகடுப்பில் ஒரு பெண் பொங்கலோ என்னவோ வைத்திருந்தார். சிறு குழந்தையொன்று நிறையச் சந்தனம் பூசிய மொட்டைத் தலையுடன் அங்குமிங்கும் ஓடியது. எங்களைப் பார்த்ததும் விளையாட்டை நிறுத்தி, வாயில் விரல்களைப் போட்டுக்கொண்டு அம்மாவிடம் ஓடியது.

உள்ளே ஒரு சிறிய திண்ணை போன்றதில் சரிந்து படுத்துக் கண்களை மூடிக்கொண்டேன். சில நிமிடங்கள்தான். "இந்தாங்க" என்று குரல் கேட்டு விழித்துப் பார்த்தால் அந்தப் பெண்மணி ஒரு தட்டு நிறைய அப்போதுதான் உரித்த பலாச் சுளைகளையும் ஏராளமான புளியோதரையும் வைத்து நீட்டினார். கோவிலில் படிகளையொட்டிய நாலுக்குப் பத்து அறையில் தரையில் அடுப்பு வைத்துச் சமைத்த பிரசாதம் அது. கொல்லிமலைப் பலாச்சுளையில் வரிவரியாக இருப்பதை ஸ்ரீநிவாஸனும் பசுவும் சுட்டிக் காட்டினார்கள். எனக்குப் பொதுவாகவே பலாப்பழம் மிகவும் பிடிக்கும். அசுரப் பசி வேறு. நடக்க இயலாமல் போனாலும் பரவாயில்லை. உருண்டாவது படியிறங்கிக் கொள்ளலாம் என்று அவ்வளவையும் ஒரு வெட்டு வெட்டினோம். உள்ளங்கையில் அடங்கும் சிறிய டம்ளர்களில் சுடச்சுடக் காப்பி கொண்டுவந்து கொடுத்தார் அவர். அமெரிக்காவில் என்னடாவென்றால் ஸ்டார்பக்ஸிலும், டங்க்கின் டோனட்டிலும் மிகச்சிறிய சைஸ் காஃபி வாங்கினாலே அண்டா அளவு ஊற்றிக் கொடுக்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு நாட்களுக்கு வரும் அது. அணில் நம்மூர் பூனை சைஸிற்கு இருக்கிறது. எங்கள் வீட்டுப் பக்கத்திலிருக்கும் தேசியப் பூங்காவுக்குச் சென்றிருந்தபோது லாரி சைஸில் இருந்த எஸ்யூவி வாகனம் வந்து நின்று எல்லாக் கதவுகளும் திறக்க அமெரிக்கக் குடும்பமொன்று இறங்கியது. கடைசியாக இறங்கிய துருவக் கரடியொன்றை அண்ணாந்து நோக்கியதும்தான் அது நாய் என்று தெரிந்தது. அதற்காகவே அவ்வளவு பெரிய கார் வைத்திருந்தார்கள். அமெரிக்காவில் சிறிதாக என்ன இருக்கிறது என்று எவ்வளவோ யோசித்தாலும் புலப்படவில்லை. வற்றாயிருப்பின் எளிய கிராமத்து வாழ்க்கை அவ்வப்போது நினைவுக்கு வருவதுண்டு. கூரைவீட்டில் மண்தரையில் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பூச்சிகளோடு வாழ்ந்தாலும் இல்லாமையும் வறுமையும் உறக்கத்தைக் கலைத்ததில்லை. தெருவில் சாக்குவிரித்துத் தலையணையின்றி நிம்மதியாகத் தூங்கியிருக்கிறேன். வசதிகூடிய இந்நாட்களில் உறக்கம் ஏமாற்றிய இரவுகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறதோ!

விருந்தோம்பலில் நெகிழ்ந்து நன்றி சொன்னோம். "வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க" என்று வாழையிலையில் சுளைகளை நிரப்பிக் கொடுத்தார். காரில் திரும்பும்போது சாலையோரம் ஆளுக்கொன்றாக பலாப்பழம் வாங்கிக் கொண்டோம். அந்தி சூழத் தொடங்கியிருக்க வண்டி திருச்சி நோக்கி விரைந்தது. நாமக்கல் தாண்டி நெடுஞ்சாலையில்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் நிரம்பி ஓடிக்கொண்டிருந்த மணல் லாரிகளை கவனித்தேன். காவிரிப்படுகையில் மணல்குவாரிகள் அமைத்து அசுர வேகத்தில் மணலைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசைகட்டி நிற்கின்றன. பார்க்கும்போதே தாறுமாறான வேகத்தில் அபாயகரமாக முந்திச்சென்றது மணல் லாரி ஒன்று. காற்று ஒலிப்பானை உச்சப்பட்சத்தில் ஒலித்துக்கொண்டே. எங்கள் ஓட்டுனர் விபத்தைத் தவிர்க்க வேகத்தைக் குறைத்து சாலையைவிட்டு இடப்புறச்சரிவில் இறங்கி நிறுத்தினார். மணலைத் தூவிக்கொண்டே சீறிச் சென்றது அந்த லாரி.
எண்பதுகளின் இறுதியில் முசிறியில் படித்தபோது தினந்தோறும் காலையில் காவிரி்க்குக் குளிக்கச் செல்வோம். கரைதொட்டு நுரைததும்பிச் செல்வாள் காவிரி. குளித்தலை பாலத்திலிருந்து காவிரியில் சொருக்கடிப்பார்கள் சிறுவர்கள். படித்துறையில் உட்கார்ந்து ஆடிப்பெருக்கை நாள்முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வப்போது வெங்காயத்தாமரைக் கூட்டம் மிதந்து செல்லும். அதன் மீது பறவைகள் உட்கார்வதும் பறப்பதுமாக. நீரில் அமிழ்ந்திருக்கும் பாதங்களை முத்தமிடச் சூழ்ந்துகொள்ளும் மீன்கள். மீன்கடிப்பில் கலவரமடைந்து வீறிடும் குழந்தைகள். பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனிப் படித்துறை. அந்தக் காவிரி இப்போதில்லை. முட்புதரும் பாறைகளும் நின்றபடி, அமைதியாகத் தான் சுரண்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் காவிரி. நீராதாரத்தின் முதுகெலும்பான நதிகளை போண்டியாக்கி விட்டோம். மலைகளை வெட்டியெடுத்து விட்டோம். ஏரி, வயல் எல்லாவற்றிலும் 40x60 பிளாட்டுகள் போட்டு காங்க்ரீட் காடுகள் தழைத்துக் கொண்டிருக்கின்றன. கிராமங்கள் அருகி வருகின்றன.

தூர்தர்ஷனும் விவித்பாரதியும் அகில இந்திய வானொலியும் மட்டும் கேட்ட காலம் நினைவுக்கு வந்தது. வானொலியில் இனிமையாக "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை" என்று பாடியபடி வேளாண் நிகழ்ச்சிகள் தொடங்கும். உழவே தலை என்ற வள்ளுவருக்கு பிரம்மாண்டச் சிலை வைத்து விளம்பரம் தேடிக்கொண்டதற்குப் பதிலாக, சில ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தை வேளாண் நிலமாக மாற்றியிருந்தால் வள்ளுவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். வாடிய பயிரும் வறுமையின் பிடியும் தாள மாட்டாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நாம் குளிர்சாதன அறையில் கணினித் திரையில் கண்ணீர் அஞ்சலி செய்து நமது கடமையை முடித்துக் கொள்கிறோம்.

என் அமைதியைப் பார்த்துவிட்டு பசு "என்ன பேச்சையே காணோம்? அட என்ன கண்ல தண்ணி?" என்றதும் "ஒண்ணுமில்லை மணல் லாரி போச்சுல்ல? கண்ல மண்ணு விளுந்திருச்சி!" என்றேன்.

"பசு.. இவ்வளவு அனுபவங்களை வச்சுக்கிட்டு சும்மா இருக்கியே. இதை எங்கிட்டாவது பதிவு பண்ண வேண்டாமா?" என்றேன்.

"சும்மா இருக்கேனா? kollitrails.blogspot.com ல போய் பாரு" என்றான். ஸ்ரீரங்கத்திற்குப் போனதும் அதைப் போய்ப் பார்த்தேன். பிரமித்துப் போனேன். பசுபதியின் பதிவுகள் ஒரு தகவல் களஞ்சியம். மலையேற்றத்தில் ஆர்வமுடையவர்களுக்கு மிகவும் பயனுள்ள பல தகவல்கள் இருக்கின்றன. தவறவிடாதீர்கள். பாருங்கள்.

வீடு திரும்பிய மறுநாள் கால்களில் ரத்தம் கட்டிக்கொண்டு மெதுமெதுவாக நடக்கவேண்டியிருந்தது. தசைகள் சகஜ நிலைக்குத் திரும்ப ஒரு வாரமாயிற்று. கடந்த ஆறு மாதங்களில் பசுபதியும் ஸ்ரீநிவாஸனும் இன்னும் பல மலைகள் ஏறியிருக்கிறார்கள். கொல்லிமலைக்கே மறுபடியும் சென்று முள்ளிக்குறிச்சி வழியாக பூசணிக்குழிக்குச் சென்றிருக்கிறார்கள். சிக்மகளூர் அருகே முல்லையங்கிரி ஏறியிருக்கிறார்கள். பசுவிடம் அதைப்பற்றித் தொலைபேசியபோது "பொன்னியின் செல்வனில் ஆயனார் அஜந்தா வண்ண ரகசியத்தைத் தேடி அலைவாரே? அதுமாதிரி கர்நாடகாவில் நிறைய மலைகளில் இயற்கையாக வண்ணங்கள் பூசிய குகைகள் இருக்கின்றன. அங்கிருக்கும் யோகிகள் இக்குகைச்சுவர்களிலிருந்து வண்ணங்களை எடுப்பதுண்டு. அது மாதிரி கலர் சுவரோட குகையைப் பார்த்தோம்" என்றான். கர்நாடகாவில் பாபா புதன்கிரி மலை ஏறியபோது காட்டு யானை, கவனிக்காமல் இருந்த சிறுத்தைக் குட்டியை மிதித்து நசுக்கியிருந்ததை 20 நாட்கள் கழித்துப் பார்த்திருக்கிறார்கள்.

நான் தென்றலில் இந்தத் தொடர் ஆரம்பித்த முதல் சில இதழ்களை அனுப்பியிருந்தேன். அட்டைப்படத்துடன் வந்த முதல் இதழை குடும்பத்தினர் உட்படப் பார்த்து, படித்து சந்தோஷப்பட்டார்களாம். அந்த டாக்ஸி ஓட்டுநர்கூட படித்திருக்கிறார்!

அதீத சக்திவாய்ந்த மனிதர்கள் சாதாரண மனிதர்களுடன் கலந்திருப்பதை X-Men என்ற சினிமாவையும், தொலைக்காட்சித் தொடரையும் பார்த்திருப்போம். எனக்கென்னவோ பசு மாதிரி ஆட்கள் அந்த X-Men வகையைச் சேர்ந்தவர்கள் என்றுதான் தோன்றுகிறது. என் போன்ற சாதாரணர்கள் செய்யாத விஷயங்களை காலையில் எழுந்ததும் காபி குடிப்பதைப் போன்று செய்கிறார்கள். அயராது, அசுரத்தனமான விருப்பத்துடன் செய்கிறார்கள். அடுத்தமுறை விடுமுறைக்குச் செல்லும்போது அவர்களுடன் ஏதாவது ஒரு மலை ஏறுவேன். கடந்தவாரம் அவன் அனுப்பிய மின்னஞ்சலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தான்: We usually know how to complete a trek. Now you showed us how to celebrate it!

(முற்றும்)

வற்றாயிருபு சுந்தர்,
பாஸ்டன்
மேலும் படங்களுக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline