Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன்
கவனகர் கலை. செழியன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2012||(1 Comment)
Share:
'அவதானக் கலை' என்று அழைக்கப்படும் 'கவனகக் கலை' தமிழர்களின் தனிப்பெரும் கலைகளுள் ஒன்று. அட்டாவதானம் (எண் கவனகம்), தசாவதானம் (பதின் கவனகம்), ஷோடசாவதானம் (பதினாறு கவனகம்), சதாவதானம் (நூறு கவனகம்) என கவனகக் கலையில் பலவுண்டு. அட்டாவதானி பூவை கலியாண சுந்தர முதலியார், சதாவதானி செய்குதம்பிப் பாவலர், நா. கதிர்வேல் பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை, திருக்குறள் இராமையா எனப் பலர் கவனக நிகழ்ச்சிகளில் சாதனை படைத்துள்ளனர். அருகிவிட்ட இக்கலையை இன்று நிகழ்த்துவோரில் குறிப்பிடத்தகுந்தவர் கவனகர் கலை. செழியன். எழுபது கவனகராக அருஞ்சாதனை படைத்து வரும் செழியன், கவனகக் கலை பற்றி முதன்முதலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அழகப்பா, அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. என 1500க்கும் மேற்பட்ட இடங்களில் கவனகக் கலை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். சென்னைக் கம்பன் கழகத்தின் 'வளர் தலைமுறை பேச்சாளர்', தமிழக அரசின் 'குறள் பீடம்' உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவருடனான சந்திப்பிலிருந்து...

கே: கவனகக் கலையின் மீது உங்கள் கவனம் எப்படித் திரும்பியது?
ப: 1996ம் ஆண்டில் தமிழ்ச்சான்றோர் பேரவை கவனகர் கனகசுப்புரத்தினத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. நான் அப்போது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு 13 வயது. தந்தை என்னை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் தந்தையிடம் சொன்னேன், என்னாலும் இதுபோலச் செய்ய முடியும் என்று. அன்றைக்கு இரவே வீட்டுக்கு வந்து, ஒரு எட்டுப் பேரை நிற்க வைத்து நிகழ்ச்சியைச் செய்து காண்பித்தேன். அன்று தொடங்கியது என் கவனகப் பயணம்.

கே: கவனகத்திற்குத் தேவையான நினைவாற்றல் இயல்பாகவே உங்களுக்கு இருந்தது என்று சொல்லலாமா?
ப: ஆம். சிறுவயது முதலே வீட்டில் அந்தச் சூழல் இருந்தது. அப்பா மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவர். பல தமிழறிஞர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருப்பர். அப்பா, பள்ளிப் பாடங்களில் மனப்பாடப் பகுதியை மட்டுமல்லாமல் எல்லாச் செய்யுள்களையும் படிக்கும்படிக் கூறுவார். அதுபோல பாடங்களை கேள்வி-பதிலாகப் படிக்காமல் முழுமையாகப் படிக்கும்படி அறிவுறுத்துவார். அதன்படி பாடங்கள், செய்யுள்கள், உரைநடை என எல்லாவற்றையும் - முதல் பக்கம் முதல், கடைசிப் பக்கம் வரை படித்தோம். இது கவனகத் திறனை வளர்த்துக் கொள்ள உதவியது.

கே: கவனகக் கலைக்குத் தமிழ் இலக்கியம், இலக்கணம், கணிதம், பொது அறிவு, யோகம் எனப் பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும், அல்லவா?
ப: கவனகம் பதிமூன்றாவது வயதில்தான் அறிமுகமானது என்றாலும் அதற்கு முன்னரே செய்யுள் புனைவதில் பயிற்சி பெற்றிருந்தேன். குறிப்பாக, வெண்பா புனைவது. குறளில் நல்ல பயிற்சியும், கணிதத்தில் ஈடுபாடும் இருந்தது. அதுபோல தியானம், யோகாசனங்கள், மன ஒருமைப்பாட்டுப் பயிற்சி போன்றவை இந்தக் கலைக்கு மிக அவசியமானவை. என் தந்தை பல ஆண்டுகளாக வள்ளுவர்-வள்ளலார் தியான மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன்மூலம் இலவசமாகப் பலருக்கு தியான முறைகள், யோகாசனங்கள் பயிற்றுவித்து வருகிறார். நான் என் தந்தையின் மடியில் அமர்ந்த காலம் முதலே அவற்றைப் பயின்று வருகிறேன். தியானமும் யோகமும் கவனகக் கலைக்கு மட்டுமல்லாமல், நடைமுறை வாழ்க்கைக்கும் மிக அவசியமானவை. உங்கள் திறனாற்றலை ஒருமுகப்படுத்த உதவுபவை.

கே: உங்கள் முதல் மேடை நிகழ்ச்சி அனுபவம் எப்படி இருந்தது?
ப: முதல் நிகழ்ச்சிக்கு அப்போதைய அமைச்சர் சற்குண பாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி மற்றும் பல கவிஞர் பெருமக்கள் வந்திருந்தனர். வீட்டிலும் நண்பர்கள் முன்னும் நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும், பொது மேடையில் நடத்தும்போது சிறிது பதற்றம் இருக்கத்தான் செய்தது. மேடை பயம் என்பதில்லை. மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். கன்னிமுயற்சி என்பதனால் வரும் சிறு பதற்றம், எச்சரிக்கை உணர்வு. அதில் 'எண் கவனகம்' செய்தேன். ஈற்றடிக்கு வெண்பா இயற்றுவது போன்றவற்றை ஒரு சிறுவன் செய்கிறான் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கே: கவனகக் கலை வல்லுநராவதற்கு அடிப்படைத் தகுதி என்னென்ன?
ப: நினைவாற்றலும் படைப்பாற்றலும்தான். ஏனென்றால் நிகழ்ச்சியின் போது பல்வேறு வினாக்களை எழுப்புவார்கள். அவற்றை முதலில் உள்வாங்க வேண்டும்; பின்னர் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதே சமயம் குறும்புத்தனமாகவோ, அறிவு பூர்வமாகவோ வினாக்கள் எழுப்பப்படும்போது அவற்றிற்கு பதிலளிக்க உடனடியாகச் சிந்திக்க வேண்டும். அதற்குத் தேவை படைப்பாற்றல். இவற்றோடு ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளிலும் பயிற்சி வேண்டும். அதனுடன் தொடுதல், மணி அடித்தல், நுகர்வு போன்ற கவனகங்களை நிகழ்த்தப் புலனாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும். மாயச்சதுரம், கணக்கு, கிழமை கூறுதல் போன்றவற்றுக்கு கணிதப் புலமை வேண்டும். இவற்றோடு சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம், சீட்டாட்டம் போன்றவற்றைப் பார்வையாளர்களுடன் பேசியபடியே செய்ய வேண்டும். அந்த விளையாட்டுத் திறன், நுணுக்க அறிவு வேண்டும். எனவே அடிப்படையாக இரண்டு ஆற்றல்களைத் தகுதிகள் என முன் நிறுத்தினாலும் கவனகம் என்பது பல்வேறு ஆற்றல்களின் தொகுப்பு. இதைக் 'கலைகளின் கலை' என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.
கே: நீங்கள் என்னென்ன கவனகங்கள் செய்கிறீர்கள்? எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
ப: கவனகக் கலை என்பது இலக்கியம் கணிதத்தோடு நிற்பதல்ல. அது மிகவும் பரந்து விரிந்த களம். இக்கலைபற்றி ஆய்வு செய்தவன் என்பதால் இதுவரை யாரும் செய்யாத புதுமைகளைச் செய்ய விரும்பினேன். மரபான வழிமுறையில் முதலில் கைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்; பார்வையாளர்களுடன் பேசிக்கொண்டே, எல்லோரும் லாடச் சங்கிலியைப் பூட்டுவார்கள். நான் அதிலிருந்து மாறுபட்டு சிற்பம் செய்வதை, ஒரு வழலையில் வள்ளுவர் உருவைச் செதுக்குவதை, அறிமுகப்படுத்தினேன். யோக இருக்கையில் அமர்வதை நான்தான் முதலில் அறிமுகப்படுத்தினேன்.

கவனகம் ஒரு நயன் கலையாக மட்டுமல்லாமல் பயன் கலையாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவ கவனகத்தை அறிமுகப்படுத்தினேன். இதை நெய்வேலியில் நடந்த ஒரு மருத்துவ மாநாட்டில் அறிமுகப்படுத்தினேன். உடலின் எலும்புகள் குறித்து எந்த வினா எழுப்பினாலும், பதில் சொல்வதை கவனகத்தில் ஒன்றாக வடிவமைத்தேன். அடுத்து அறிமுகப்படுத்தியது நாட்டிய கவனகம். நிகழ்ச்சி நடக்கையில் ஒருவர் பரத நாட்டியமாடுவார். ஒரு குறிப்பிட்ட முத்திரையைப் பிடிப்பார். பின் சென்று விடுவார். நான் பிற வினாக்களுக்கு பதிலளித்துக் கொண்டே, அந்த முத்திரை என்ன, அது வேறு எந்தக் காட்சிகளை விளக்கப் பயன்படும் என்பதைத் தகவலாகச் சொல்லுவேன். அடுத்தது சட்ட கவனகம். பேராசிரியர் நாராயணப் பெருமாள் அவர்களிடம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிக் கற்றுக் கொண்டேன். சட்டம் பயின்றவன் என்பதால் அதை ஒரு கவனகமாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நூறு கவனக நிகழ்ச்சி நடத்திய சதாவதானி செய்குதம்பிப் பாவலர் கூட நுகர்வு கவனகத்தை நடத்தியதில்லை. அதை எழுபது கவனகத்தில் ஒன்றாக வைத்திருக்கிறேன். அடுத்து பொறியியல் கவனகம் போன்ற பலவற்றை நிகழ்த்தத் திட்டம் உள்ளது. நூறு கவனக நிகழ்ச்சியை நடத்தும்போது இவற்றை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளது.

கே: கவனகக் கலை, அக்கால கவனகர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைச் சரியாக ஆவணப்படுத்த நீங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளீர்களா?
ப: நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபோது கவனகர்கள் பற்றிய வரலாற்றைத் தேடினேன். எல்லா கவனகர்களுமே சிறந்த புலவர்களாக இருந்ததால் 'புலவர்கள் வரலாறு' மூலம் ஓரளவு அவர்களைப் பற்றிய செய்திகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் என்னென்ன கவனகம் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள், அவற்றின் தனித்துவம் என்ன என்பது போன்றவை சரிவரக் கிடைக்கவில்லை. அவர்களின் வாரிசுகள் யார் என்றுகூடச் சரியாகக் கண்டறிய இயலவில்லை.

ஒரு கவனகரது வரலாற்றைத் தொகுப்பதற்கு, முதலில் அவரது படைப்புகள், அவரைப் பற்றி பிறர் எழுதிய குறிப்புகள், அவர்களின் வாரிசுகள், உறவினர்கள், நண்பர்கள் சமுதாயத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் எழுத முடியும். ஆனால் தற்போது கவனகர்களின் பெயர் மட்டும்தான் அறிய முடிகிறது. பலரின் ஊர்கூடத் தெரியவரவில்லை. அதனால் அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதுவது கடினமான ஒன்று. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து கிடைத்த செய்திகளை எனது முனைவர் பட்ட ஆய்வேட்டில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் அவற்றைச் சிறு குறிப்புகளாகத்தான் தர முடிந்தது. மேலும் நேரம் அனுமதிக்கும் போது இன்னும் மிக விரிவான கள ஆய்வுகள் செய்யும் விருப்பம் உள்ளது.

கே: இந்தக் கலைக்கு மக்கள் ஆதரவு குறைந்து போனதற்குக் காரணம் என்ன?
ப: காலச் சூழல்தான் காரணம். முன்பெல்லாம் தமிழகத்தில் பல கவனக வல்லுநர்கள் இருந்திருக்கிறார்கள். அறிவுசார்ந்த பொழுதுபோக்காக அக்காலத்தில் சிற்றரசர்களும், வணிகப் பெருமக்களும் ஆதரித்திருக்கிறார்கள். நூறு கவனகம் போன்றவை அக்காலத்தில் ஒரு நாள், இருநாள் என ஐந்து நாட்கள்கூடத் தொடர்ந்து நடந்திருப்பதாக அறிய முடிகிறது. ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிப் போய்விட்டது. மக்களின் நேரத்துக்கேற்ப கவனக நிகழ்ச்சியை வடிவமைப்பவர்கள் குறைந்து போய் விட்டார்கள். அதனால் இந்தக் கலை படிப்படியாகத் தேய்வடைந்து விட்டது. இதைத் தடுத்து நிறுத்தி மீட்டெடுத்த பெருமை இராமையா பிள்ளை அவர்களையே சேரும். அவர்தான் இந்தக் கலையை மக்களுக்கு, இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு எப்படி இருந்தால் சுவைக்கும் என்பதை உணர்ந்து வடிவமைத்துத் தந்தார். அவர் வழியில் கனகசுப்புரத்தினம் வந்தார். தற்போது நான், பிரதீபா, திருமூலநாதன், எல்லப்பன், திலீபன் எனப் பலர் கவனக நிகழ்ச்சிகள் செய்கிறோம்.

கே: அரசும் பிற நிறுவனங்களும் இக்கலை வளர்ச்சிக்கு உதவுகின்றனவா?
ப: அரசு இக்கலை வளர்ச்சியில் ஆர்வம் செலுத்தினால் நல்லதுதான். அது அரசின் கடமையும் கூட. ஆனால் எல்லாவற்றுக்கும் அரசினையே எதிர்பார்ப்பது நற்பயனைத் தருமா எனத் தெரியவில்லை. தனிநபர்களும் ஆர்வமுள்ள அமைப்புகளும் இக்கலையை வளர்க்க முன்வர வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னால் 'இலக்கிய வீதி' அமைப்பு இராமையா பிள்ளை அவர்களின் திறன் மக்களுக்குப் போய்ச் சேர உதவியாக இருந்தது. தமிழகத்தில் கவனகக் கலை மீண்டும் தொடர்வதற்கான பாலம் அமைத்துக் கொடுத்ததே இலக்கிய வீதிதான். இதை என் ஆய்வேட்டிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வமைப்பு இராமையா பிள்ளையின் திறமையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அமைச்சர் பெருமக்களின் முன்பு நிகழ்ச்சிகளை நடத்தச் செய்து, அரசின் கவனத்தை அவர்மீது விழச் செய்து, அவரை அரசவைக் கலைஞராகப் பொறுப்பேற்க வைத்தது. அரசு, சதாவதானி செய்குதம்பிப் பாவலருக்கு மணிமண்டபம் கட்டி ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கிறது. பாவலர் நினைவு நூலகமும் அங்கு பராமரிக்கப்படுகிறது. இதைத் தவிர தனிப்பட்ட முறையில் அரசின் கவனம் இக்கலை மீது படவில்லை என்பது உண்மைதான்.

அதேசமயம் இக்கலையில் ஈடுபட விழைபவர்கள் இதன்மூலம் பெரிய வருவாய் கிட்டும் என்று நம்பக்கூடாது. இது பொருளீட்டுவதற்கான கலை அல்ல. அப்படி நினைப்பவர்கள் இக்கலை வளர்ச்சிக்குப் பயன்பட மாட்டார்கள். பொருளீட்டும் எண்ணமில்லாமல் தொடக்கத்தில் இக்கலை வளர்ச்சிக்கு உழைத்தால், பிற்காலத்தில் இக்கலை வளர வளரப் பொருளும் புகழும் சேருவதை யாராலும் தடுக்க இயலாது. கவனகக் கலைக்கு என்று சில மரபுகள் இருக்கின்றன. அவை அவசியம் பேணப்பட வேண்டும். அக்கலை மரபுகளைத் தெரிந்துகொண்டு, பின்னர் ஈடுபட இனிவருபவர்கள் முயல வேண்டும்.

கே: தமிழ் தவிரப் பிற மொழிகளில் கவனகக் கலை உள்ளதா?
ப: முதன் முதலில் தோன்றியது தமிழ்நாட்டில்தான் என்று உறுதிபடச் சொல்லலாம். "அவதானக் கலை" என்று வடமொழியில் பெயர் இருந்த போதும் இது தமிழர்களின் தொன்மையான கலைதான். அக்காலத்தில் தென்னாடு முழுவதும் பரவியிருந்திருக்கிறது. வடநாட்டிலும் சிறிது பரவியிருக்கிறது. குஜராத்தில் பன்னா லால் என்பவர் கவனக நிகழ்ச்சி செய்வதாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார்.

கே: இந்தக் கலை உலகளாவிய கவனம் பெற வேண்டுமென்றால் முழுக்க ஆங்கிலத்தில் செய்யப்பட வேண்டும். அப்படியொரு எண்ணம் உங்களுக்கு உண்டா?
ப: கவனகக் கலையினை தமிழின வடிவமைப்பிற்காகவும், தமிழ் மொழி அடையாளங்களைப் பதிவு செய்வதற்காகவுமே பயன்படுத்தி வருகிறோம். நாங்கள் தமிழ் சார்ந்த குடும்பம் என்பதால் தமிழ் தவிர்த்துப் பிற மொழிகளில் செய்யக் கூடாது என்றொரு எண்ணம் இருந்தது. ஆனால் டெல்லியில் செய்ய நேரிட்டபோது அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் செய்தேன். விசாகப்பட்டினத்தில் கணிதம் சார்ந்த ஒரு கவனக நிகழ்ச்சி செய்தபோது ஆங்கிலத்தில்தான் செய்தேன். உலகமயமான சூழலில், தமிழ் அறியாதவரிடத்தும் இக்கலையைக் கொண்டுசேர்க்க வேண்டுமென்றால் ஆங்கிலத்தில்தான் செய்தாக வேண்டும். அதே சமயம் தமிழ், ஆங்கிலம் தவிரப் பிற மொழிகளிலும் செய்யும் எண்ணம் உள்ளது.

கே: அக்கால யோகிகள், சித்தர்கள் செய்து காட்டிய பிறர் மனதைப் படித்தல் (Mind Reading), எண்ணத்தைப் படித்தல் (Thought Reading) ஆகியவை இக்கலையில் சாத்தியமாகுமா?
ப: நான் இதுவரை இப்பயிற்சிகளில் ஈடுபட்டதில்லை. அதேசமயம் ஆய்வு என்பது அனுபவத்திற்கும் அப்பாற்பட்டது. ஆய்வுநிலையில் பார்க்கும்போது - புறநானூறு போன்ற நூல்களைப் படிக்கும் போது - இன்றைக்குப் பல்வேறு கருவிகளின் துணைகொண்டு வானியல் உண்மைகளைக் கண்டறிவதை, அன்றைக்கு மிக எளிமையாகக் கண்டறிந்து பாடல் வடிவில் சொல்லிச் சென்றிருக்கின்றனர் நம் முன்னோர்கள். அவர்கள் எந்தக் கருவியைப் பயன்படுத்திச் சொன்னார்கள் என்பது புதிராகத்தான் உள்ளது. சான்றாக செவ்வாய்க் கோளுக்கு எப்படி அவன் எந்தக் கருவியின் துணையுமின்றி எப்படி அந்தப் பெயர் சூட்டியிருப்பான்? இன்றைக்குப் பார்த்தாலும் அது சிவப்பு நிறமாகத் தானே இருக்கிறது. அவன் அதை எப்படிக் கண்டறிந்திருப்பான்? அவன் பயன்படுத்திய ஒரே கருவி 'மனம்' ஆகத்தான் இருந்திருக்கும் என நான் கருதுகிறேன்.

புறநானூற்றில் ஒரு பாடல் வருகிறது "நாள்மீன் விராய கோள்மீன்" என்று. அதாவது ஒரு படைவீரனைச் சுற்றி எதிர்நாட்டுப் படை வீரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் அவன் போரிட வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால் "நாள்மீன் விராய கோள்மீண்" போன்று இருக்கிறது என்று உவமிக்கிறார் புலவர். "நாள்மீன்" என்பது சூரியன். "கோள்மீன்" என்பது பிற கோள்கள். அதாவது சூரியனைச் சுற்றி பிற கோள்கள் இருப்பதைப் போல அந்த வீரனைச் சுற்றி எதிரிநாட்டுப் படை வீரர்கள் சூழ்ந்துள்ளனர் என்று உவமிக்கிறார். சூரியனை மையமாக வைத்து மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதை விஞ்ஞானம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால்தான் சொன்னது. ஆனால் நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமேயே அதுபற்றி அறிந்திருந்தனர் என்பது இப்பாடல் வழி புலனாகிறது. இதனை அவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்? மனதின் ஆற்றலினை அடிப்படையாகக் கொண்டு தான். ஆக, அந்த மனதைப் படிப்பது என்பது சாத்தியமாக இருக்கக் கூடும். குறளிலேயே கூட "குறிப்பறிதல்" என்று ஓரு அதிகாரம் உள்ளது. அது என்ன சொல்கிறது என்றால் ஒருவருடைய உடல் மொழிகளை வைத்து அவரது உள்ளத்தினை அறிவதைப் பற்றிச் சொல்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உடலின் துணையில்லாமலேயே உள்ளத்தின் எண்ணத்தினை அறிவதும் சாத்தியமாக இருக்கக்கூடும். அதுபற்றிய பயிற்சி முறைகளை அறிந்து அதனை ஒருவர் முழுமையாகக் கைக்கொண்டால் அது சாத்தியமாகலாம் என்பது என் கருத்து.

கே: அடுத்த தலைமுறைக்கு கவனகக் கலை குறித்தான பயிற்சிகளை அளித்து வருகிறீர்களா?
ப: கவனகக் கலைப் பயிற்சிகளை இதுவரை கொடுக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் தற்போது நான் எழுபது கவனக நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். நூறு கவனக நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது எனது முக்கிய குறிக்கோள்களுள் ஒன்று. அதற்கான திட்டமிடல், பயிற்சி என்று எனக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. கவனகக் கலை குறித்த ஐயப்பாடுகள் இருக்குமானால் அவற்றுக்கு விளக்கம் தருகிறேன்.

கே: கவனகம் தவிர்த்து நீங்கள் செய்யும் பிற பணிகள் என்னென்ன?
ப: இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றி வருகிறேன். நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் மூலம் தொல்காப்பிய இலக்கணத் தொடர் சொற்பொழிவு நடத்தி வருகிறேன். அது ஆறாவது ஆண்டாக நடக்கிறது. மின்சாதனப் பழுது பார்ப்போர் சங்கத்தில் அரசியலமைப்புச் சட்டம் குறித்துத் தொடர் சொற்பொழிவு செய்கிறேன். மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். செம்மொழி ஆய்வு மையம் செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் என்ற திட்டத்திற்கு அனுமதி வழங்கினார்கள். அந்தத் திட்டத்தை முதுமுனைவர் இளங்குமரனார் அவர்கள் தலைமையேற்றுச் செய்தார்கள். அவரோடு இணைந்து சொல்லாய்வுப் பணியில் பணியாற்றியிருக்கிறேன். இதுதவிர நூலாக்கப் பணிகளைச் செய்து வருகிறேன்.

கே: உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி..
ப: எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே எனது வளர்ச்சிக்கு உறுதுணைதான். என் தந்தை கவனகக் கலை பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறார். ஆரம்பத்தில் வண்ணம் (Paint) தயாரித்து விற்கும் நிறுவனம் வைத்திருந்தார். தற்போது வழக்கறிஞராக இருக்கிறார். எனது மூத்த சகோதரர்கள் சோழன், திருமாறன் இருவருமே வழக்கறிஞர்கள். எனது வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். எனது கவனகக்கலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டதில் மிகப்பெரிய பங்கு என் தந்தைக்கு உண்டு. இதை வெறும் வித்தையாக மக்களுக்குக் காட்டிச் செல்லாமல், அவர்களுக்குப் பயன் தரும் வகையில் இருக்க வேண்டுமென்று, ஆய்வு செய்து அதை நடைமுறைப்படுத்தியது அவர்தான். என் தாயார், சகோதரிகள் அனைவருமே மிகுந்த உறுதுணையாக உள்ளனர்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
ப: கவனகம் என்பது தமிழர் இனம், மொழி சார்ந்த ஒரு அடையாளம்தான். இந்த கவனகத்தில் ஒரு முத்திரை பதிப்பது நூறு கவனகம் என்பது. அதற்கான தயாரிப்புகள் நடந்து வருகிறது. சமுதாயம் சார்ந்த பணிகளாகத்தான் என் எதிர்காலத் திட்டங்கள் இருக்கும்.

கே: அமெரிக்காவின் ஃபெட்னா விழாவில் கவனக நிகழ்ச்சி அளிக்க உள்ளீர்கள். அங்கே சிறப்பாக என்ன செய்யப் போகிறீர்கள்?
ப: புதிதாக மூன்று கவனகங்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அங்கே குறிப்பிட்ட நேர வரையறைக்குள் அவற்றை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று சிந்தித்துப் பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

"அமெரிக்க ஐக்கியக் குடியரசிற்குச் செல்வதற்கான நுழைமதி நேர்காணல் நாளை காலை நடக்க இருக்கிறது. அதற்கான ஆயத்தப்பணிகளில் இருக்கிறேன். தென்றலுக்கு மிக்க நன்றி" என்று தூயதமிழில் அவர் பேசுவதைக் கேட்கும் போது ஆர்வமும், ஏக்கமும் ஒரு சேர எழுகிறது. செழியனுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி விடைபெற்றோம்.
***

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

அவதானம்
இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். நடுவில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். சுற்றிப் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியில் மணி அடிக்கிறார். மற்றொருவர் முதுகில் மலர் ஒன்றால் தொடுகிறார். வேறொருவர் வெண்பா ஈற்றடி ஒன்றைக் கொடுக்கிறார். இன்னொருவரோ ஒரு தேதி, வருடம் கூறி அது என்ன கிழமை என்று கேட்கிறார். குறளின் எண்ணை, முதல் அல்லது இறுதிச் சொல்லை, அல்லது கருத்தைச் சொல்லி என்ன குறள் அது என்கிறார். மற்றொருவர் ஒரு நீண்ட எண்ணைக் கூறுகிறார். இவற்றையெல்லாம் மீறிக் கலை. செழியன் கவனகத்திலோ ஒருவர் நாட்டிய முத்திரையை வேறு காண்பிக்கிறார்.

இவற்றையெல்லாம் அவதானித்து வரும் கவனகர், இறுதியில் அதே வரிசையில் எத்தனை முறை மணி அடித்தது, மலர் தொட்டது என்ற எண்ணிக்கையைச் சொல்கிறார். ஈற்றடிக்கு வெண்பா புனைந்து கூறுகிறார். தேதிக்கான கிழமையை, திருக்குறளைக் கூறுகிறார். நீண்ட எண்ணைச் சொல்கிறார். நாட்டிய முத்திரை என்ன, அதை குறிப்பது எதை, எவ்வெப்போது பயன்படுத்தலாம் என்பதைக் கூறுகிறார். இவை ஒரு சிலவே. இப்படிச் சட்டம், மருத்துவக் கேள்வி உட்பட 70 கவனகங்களைச் செய்யும் கலை. செழியன் இதை நூறு கவனகம் அல்லது சதாவதானம் செய்ய விரும்புவது மனித அறிவின் ஆற்றலின் உச்சங்களில் ஒன்று. அறுவகை அவதானம் (சடாவதானம்) தொடங்கி இருநூறு அவதானம் வரை செய்தவர்கள் இருந்திருக்கிறார்களாம்!

*****


அயலக நிகழ்ச்சிகள்
நான் முதலில் சென்ற வெளிநாடு தாய்லாந்து. உலகத் தமிழ் மாநாடு அங்கே நடைபெற்றது. பல நாட்டு அறிஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் முன் நிகழ்ச்சியை நடத்தினேன். அவர்கள் பார்த்தார்கள்; மகிழ்ந்தார்கள்; பாராட்டினார்கள். அடுத்து நான் மேற்கொண்டது இலங்கைப் பயணம். அது எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. அங்கு மாணவர்களோடு நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு அமைந்தது. மாணவர்கள்தான் அனைத்து வினாக்களையும் கேட்டார்கள். ஈஸ்வரன் என்பவர் அந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்தார். அது ஒரு மறக்க முடியாத பயணம். பின் மலேசியா சென்றிருந்தேன். அது பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி. அங்கே ஐந்து நிகழ்ச்சிகளைச் செய்தேன்.
- கவனகர் கலை. செழியன்

*****


நினைவாற்றலை வளர்க்க முடியுமா?
ஒவ்வொருவருக்குமே நினைவாற்றல் திறன் வேறுபடுகிறதா? அப்படி வேறுபட்டால் அதனை வளர்த்துக் கொள்ளுதல் சாத்தியமா? இந்தக் கேள்விக்கு என்னுடைய பதில் என்னவென்றால் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள முடியாது. காரணம் என்னவென்றால், பிறந்திருக்கும் எல்லோருக்கும் ஒரே அளவில்தான் ஆற்றல்கள் இருக்கின்றன. ஆகவே முடியும், முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் அதனை நீங்கள் எப்படி வெளிப்படுத்தப் போகிறீர்கள் அல்லது வெளிப்படுத்துகிறீர்கள் என்பதில்தான் வேறுபாடு உள்ளது. அந்த வெளிப்படுத்தும் வழிகள் யாவை அவற்றை அதிகரிப்பது எப்படி என்ற பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். மேலை நாட்டினர் 'நினைவாற்றல் உத்திகள்' என்ற தலைப்புகளில் நிறைய நூல்கள் வெளியிட்டுள்ளனர். அவற்றிலிருக்கும் பயிற்சிகள் நமக்கு நினைவாற்றல் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்குமே தவிர, அடிப்படையில் நம் நினைவுத் திறனை அதிகரிக்கவோ வெளிக்கொண்டு வரவோ செய்யாது.
- கவனகர் கலை. செழியன்
மேலும் படங்களுக்கு
More

பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன்
Share: 




© Copyright 2020 Tamilonline